ஆன்மீக நபராக தொடர்ந்து முன்னேறுங்கள்!
“கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடந்துகொண்டிருங்கள்.”—கலா. 5:16.
1, 2. தன்னைப் பற்றி ஒரு சகோதரர் எதைப் புரிந்துகொண்டார், அதற்காக அவர் என்ன செய்தார்?
ராபர்ட், 15 வயதில் ஞானஸ்நானம் எடுத்தார். ஆனால், சத்தியம் அவருக்கு அவ்வளவு முக்கியமாக இருக்கவில்லை. “நான் எதுவும் தப்பா செய்யல, ஆனா, எல்லாத்தையும் இயந்திரத்தனமா செஞ்சிட்டு இருந்தேன். பார்க்குறதுக்கு நான் ஆன்மீக ரீதியில பலமா இருக்குற மாதிரி இருந்துச்சு. கூட்டங்களுக்கு தவறாம போனேன், வருஷத்துல சில தடவை துணைப் பயனியர் செஞ்சேன். ஆனா, ஏதோ ஒண்ணு என்கிட்ட இல்லாத மாதிரி இருந்துச்சு” என்று ராபர்ட் சொல்கிறார்.
2 அது என்னவென்று கல்யாணம் ஆனதுக்குப் பிறகுதான் ராபர்ட்டுக்குத் தெரிந்தது. சிலசமயங்களில், அவரும் அவருடைய மனைவியும் ‘பைபிள் கேம்’ விளையாடுவார்கள். அப்போது, அவருடைய மனைவி எல்லா கேள்விகளுக்கும் சுலபமாக பதில் சொல்லிவிடுவார்; ஏனென்றால், பைபிளை அவர் நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். ஆனால், ராபர்ட்டுக்கு பெரும்பாலான சமயங்களில் பதில்கள் தெரியவில்லை. அதனால், அவருக்கு தர்மசங்கடமாக இருக்கும். “எனக்கு எதுவுமே தெரியாத மாதிரி தோணுச்சு. ‘ஆன்மீக ரீதியில என் மனைவிய வழிநடத்தணும்னா, நான் ஏதாவது செஞ்சே ஆகணும்னு’ எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்” என்று அவர் சொல்கிறார். பிறகு, அதற்கான படிகளை அவர் எடுத்தார். “பைபிள நல்லா படிக்க ஆரம்பிச்சேன், நிறைய படிச்சிட்டே இருந்தேன். படிச்ச விஷயங்கள ஒண்ணோட ஒண்ணு தொடர்புபடுத்தி பார்த்தப்போ, பைபிள நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சுது. முக்கியமா, யெகோவாவோட நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்க முடிஞ்சுது” என்று ராபர்ட் சொல்கிறார்.
3. (அ) ராபர்ட்டின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் என்ன முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்?
பிலி. 3:16) மூன்று முக்கியமான கேள்விகளுக்கு இந்தக் கட்டுரையில் பதில்களைப் பார்ப்போம். (1) நாம் ஆன்மீகச் சிந்தையுள்ளவர்கள்தானா என்பதைத் தெரிந்துகொள்ள எது உதவும்? (2) நாம் எப்படி ஆன்மீக ரீதியில் பலமுள்ளவர்களாக ஆகலாம்? (3) ஆன்மீக ரீதியில் பலமுள்ளவர்களாக இருப்பது, நம் அன்றாட வாழ்க்கைக்கு எப்படி உதவியாக இருக்கும்?
3 ராபர்ட்டின் அனுபவத்திலிருந்து நாம் முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். நாம் பைபிளை ஓரளவு தெரிந்துவைத்திருக்கலாம், கூட்டங்களிலும் ஊழியத்திலும் தவறாமல் கலந்துகொள்ளலாம். ஆனால், இவை மட்டும் நம்மை ஆன்மீகச் சிந்தையுள்ளவர்களாக ஆக்கிவிடாது. ஒருவேளை, ஆன்மீகச் சிந்தையை வளர்த்துக்கொள்வதில் முன்னேறுவதற்கு நாம் ஏற்கெனவே சில படிகளை எடுத்திருக்கலாம். ஆனாலும், நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பார்க்கும்போது, இன்னும் முன்னேற வேண்டிய விஷயங்கள் இருப்பது நமக்குத் தெரியவரலாம். (நாம் ஆன்மீகச் சிந்தையுள்ளவர்கள்தானா என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
4. எபேசியர் 4:23, 24-ல் இருக்கிற ஆலோசனை யாருக்கெல்லாம் பொருந்துகிறது?
4 நாம் கடவுளுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தபோது, நிறைய மாற்றங்களைச் செய்தோம். அது நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், நாம் ஞானஸ்நானம் எடுத்ததோடு அது முடிந்துவிடவில்லை. “உங்கள் மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை புதுப்பித்துக்கொண்டே இருங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எபே. 4:23, 24) நாம் யாருமே பரிபூரணர்கள் கிடையாது; அதனால், தொடர்ந்து மாற்றங்கள் செய்வது அவசியம். நாம் யெகோவாவுக்கு நிறைய வருஷங்கள் சேவை செய்துவந்திருந்தாலும், அவரோடு இருக்கிற பந்தத்தைப் பலமாக வைத்துக்கொள்வது ரொம்ப முக்கியம்.—பிலி. 3:12, 13.
5. நாம் ஆன்மீகச் சிந்தையுள்ளவர்கள்தானா என்பதைத் தெரிந்துகொள்ள எது நமக்கு உதவும்?
5 நாம் சிறியவர்களோ பெரியவர்களோ, நம்மை நாமே நேர்மையாக சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அதற்கு இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘ஆன்மீக சிந்தைய வளர்த்துக்கிறதுல நான் முன்னேறிட்டு இருக்குறத என்னால கவனிக்க முடியுதா? கிறிஸ்து மாதிரி நான் நடந்துக்குறேனா? என்னோட மனப்பான்மை... கூட்டங்கள்ல நான் நடந்துக்குற விதம்... இதெல்லாம் என்னை பத்தி என்ன சொல்லுது? வாழ்க்கையில நான் எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேங்குறத என் பேச்சு காட்டுது? என்னோட படிப்புப் பழக்கம்... உடை உடுத்துற விதம்... சிகையலங்காரம்... ஆலோசனைக்கு நான் பிரதிபலிக்கிற விதம்... இதெல்லாம் நான் எப்படிப்பட்டவன்னு காட்டுது? தப்பு செய்றதுக்கான தூண்டுதல் வர்றப்போ நான் எப்படி நடந்துக்குறேன்? முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவனா நான் ஆகியிருக்கேனா?’ (எபே. 4:13) நாம் ஆன்மீக ரீதியில் எந்தளவு முன்னேறி இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கேள்விகள் நமக்கு உதவும்.
6. நாம் ஆன்மீகச் சிந்தையுள்ளவர்கள்தானா என்பதைத் தெரிந்துகொள்ள வேறு எதுவும் நமக்கு உதவும்?
6 நாம் ஆன்மீகச் சிந்தையுள்ளவர்கள்தானா என்பதைத் தெரிந்துகொள்ள, மற்றவர்களுடைய உதவி சில சமயங்களில் நமக்குத் தேவை. தன் வாழ்க்கை கடவுளைப் பிரியப்படுத்துவதில்லை என்பதை உலகச் சிந்தையுள்ள ஒரு நபரால் புரிந்துகொள்ள முடியாது என்று அப்போஸ்தலன் பவுல் விளக்கினார். ஆனால், ஒவ்வொரு விஷயத்தையும் கடவுள் எப்படிப் பார்க்கிறார் என்பதை ஆன்மீகச் சிந்தையுள்ள ஒரு நபரால் புரிந்துகொள்ள முடியும். பாவ ஆசைகளின்படி வாழ்வதைக் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பது ஆன்மீகச் சிந்தையுள்ள நபருக்குத் தெரியும். (1 கொ. 2:14-16; 3:1-3) மூப்பர்களுக்கு ஆன்மீகச் சிந்தை இருப்பதால், சகோதர சகோதரிகள் யாராவது உலகச் சிந்தையின்படி நடக்க ஆரம்பிக்கும்போது, உடனடியாக அதை கவனித்து, அவர்களுக்கு உதவ முயற்சி செய்கிறார்கள். மூப்பர்கள் அப்படி நமக்கு உதவும்போது, அதை நாம் ஏற்றுக்கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்வோமா? அப்படிச் செய்தால், ஆன்மீக ரீதியில் பலமுள்ளவர்களாக ஆவதற்கு நாம் ஆசைப்படுகிறோம் என்று அர்த்தம்.—பிர. 7:5, 9.
ஆன்மீக ரீதியில் பலமுள்ளவர்களாக ஆகுங்கள்
7. ஒருவருக்கு பைபிள் அறிவு இருக்கிறது என்பதற்காக, அவர் ஆன்மீகச் சிந்தையுள்ள நபர் என்று சொல்ல முடியுமா? விளக்குங்கள்.
7 ஆன்மீகச் சிந்தையுள்ளவர்களாக இருப்பதற்கு, பைபிளை நன்றாகத் தெரிந்துவைத்திருந்தால் மட்டும் போதாது. சாலொமோன் ராஜாவுக்கும்கூட யெகோவாவைப் பற்றி நிறையத் தெரிந்திருந்தது, அவருடைய ஞானமான சில வார்த்தைகள் பைபிளிலேயே இடம்பிடித்தன. ஆனால் காலங்கள் போகப்போக, யெகோவாவோடு அவருக்கு 1 ரா. 4:29, 30; 11:4-6) அப்படியானால், பைபிள் அறிவைப் பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு எதையும் செய்ய வேண்டும்? நம் விசுவாசத்தைத் தொடர்ந்து பலப்படுத்த வேண்டும்! (கொலோ. 2:6, 7) அதற்கு நாம் என்ன செய்யலாம்?
இருந்த பந்தம் பலவீனமானது, தொடர்ந்து அவர் உண்மையாக நடந்துகொள்ளவில்லை. (8, 9. (அ) விசுவாசத்தில் பலமுள்ளவர்களாக ஆவதற்கு எது உதவும்? (ஆ) நாம் என்ன குறிக்கோளோடு படிக்க வேண்டும், தியானிக்க வேண்டும்? (ஆரம்பப் படம்)
8 முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்களை “முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேற” சொல்லி பவுல் உற்சாகப்படுத்தினார். (எபி. 6:2) அந்த ஆலோசனையை இன்று நாம் எப்படிப் பின்பற்றலாம்? அதற்கு ஒரு முக்கியமான வழி, ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ என்ற புத்தகத்தைப் படிப்பது! பைபிள் நியமங்களை உங்கள் வாழ்க்கையில் எப்படிப் பொருத்துவது என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும். நீங்கள் ஏற்கெனவே இதைப் படித்து முடித்திருந்தால், உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள வேறு சில புத்தகங்களும் இருக்கின்றன. (கொலோ. 1:23) அதோடு, படித்ததைத் தியானிப்பதும், அதன்படி நடப்பதற்கு யெகோவாவின் உதவியைக் கேட்பதும் முக்கியம்.
9 படிக்கும்போதும் தியானிக்கும்போதும், நமக்கு ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அதாவது, யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டும்... அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்... என்ற உள்ளப்பூர்வமான ஆசையை வளர்த்துக்கொள்ள வேண்டும். (சங். 40:8; 119:97) ஆன்மீக ரீதியில் நாம் பலமுள்ளவர்களாக ஆவதற்குத் தடையாக இருக்கும் எல்லாவற்றையும் ஒதுக்கித்தள்ள வேண்டும்.—தீத். 2:11, 12.
10. ஆன்மீக ரீதியில் பலமுள்ளவர்களாக இருப்பதற்கு இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?
10 நீங்கள் ஒரு இளைஞரா? உங்களுக்கு ஆன்மீக இலக்குகள் இருக்கின்றனவா? பெத்தேலில் சேவை செய்கிற ஒரு சகோதரருக்கு, வட்டார மாநாடுகளின்போது, ஞானஸ்நானம் எடுக்கப்போகும் இளைஞர்களிடம் பேசுவது வழக்கம். அந்தச் சமயத்தில், ஆன்மீக இலக்குகள் பற்றி அந்த இளைஞர்களிடம் அவர் கேட்பார். அப்போது, யெகோவாவுடைய சேவையில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதில் நிறைய இளைஞர்கள் தெளிவாக இருப்பதை அவரால் பார்க்க முடிகிறது. சிலர், யெகோவாவுக்கு முழுநேர சேவை செய்ய அல்லது தேவை அதிகமுள்ள இடத்துக்குப் போக முடிவு செய்கிறார்கள். ஆனால், சில இளைஞர்களால் அவருடைய கேள்விக்குப் பதில் சொல்ல முடிவதில்லை. அப்படியென்றால், ஆன்மீக இலக்குகள் தங்களுக்குத் தேவையில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா? நீங்கள் ஒரு இளைஞராக இருந்தால், இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னோட அப்பா அம்மா சொல்றதுனால கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போறேனா? இல்ல, கடவுளுக்கும் எனக்கும் தனிப்பட்ட நட்பு இருக்கா?’ நாம் சிறியவர்களோ பெரியவர்களோ, நம் எல்லாருக்குமே ஆன்மீக இலக்குகள் தேவை. ஆன்மீக ரீதியில் பலமுள்ளவர்களாக இருப்பதற்கு இந்த இலக்குகள் நமக்கு உதவும்.—பிர. 12:1, 13.
11. (அ) ஆன்மீகச் சிந்தையுள்ளவர்களாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) யாருடைய முன்மாதிரியை நாம் பின்பற்றலாம்?
11 எதில் நாம் முன்னேற வேண்டும் என்று தெரிந்தவுடனேயே, மாற்றங்கள் செய்வது ரொம்ப முக்கியம். ஏனென்றால், நம் வாழ்வும் சாவும் அதில்தான் அடங்கியிருக்கிறது. (ரோ. 8:6-8) நாம் பரிபூரணர்களாக இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பதில்லை; தன்னுடைய சக்தியைக் கொடுத்து அவர் நமக்கு உதவுகிறார். அதேசமயத்தில், நாமும் கடினமாக உழைக்க வேண்டும். ஆளும் குழு அங்கத்தினராக இருந்த சகோதரர் ஜான் பார், ஒரு சமயம் லூக்கா 13:24-ஐப் பற்றிப் பேசியபோது இப்படிச் சொன்னார்: “கடினமாக முயற்சி செய்யாததால், நிறையப் பேரால் இடுக்கமான கதவு வழியாக நுழைய முடிவதில்லை.” நாம் யாக்கோபைப் போல இருக்க வேண்டும்; அவர் தேவதூதரோடு போராடினார், தன்னை ஆசீர்வதிக்கும்வரை அவரை விடவில்லை. (ஆதி. 32:26-28) பைபிளைப் படிப்பது சுவாரஸ்யமாக இருந்தாலும், பொழுதுபோக்குக்காகப் படிக்கும் ஒரு கதை புத்தகம் போல் அதை நினைக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, நமக்கு உதவுகிற விலைமதிப்புள்ள சத்தியங்களை பைபிளிலிருந்து கண்டுபிடிக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.
12, 13. (அ) “கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த அதே சிந்தையை” வளர்த்துக்கொள்ள எது நமக்கு உதவும்? (ஆ) பேதுருவின் அனுபவமும் ஆலோசனையும் நமக்கு எப்படி உதவும்? (இ) ஆன்மீக ரீதியில் பலமுள்ளவர்களாக ஆவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? (“ ஆன்மீக ரீதியில் பலமுள்ளவர்களாக ஆவதற்கு...” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
12 ஆன்மீக ரீதியில் வளருவதற்கு நாம் முயற்சி செய்யும்போது, நாம் யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள கடவுளுடைய சக்தி உதவும். அப்போது, படிப்படியாக, கிறிஸ்துவைப் போலவே யோசிக்க நம்மால் கற்றுக்கொள்ள முடியும். (ரோ. 15:5) கெட்ட ஆசைகளை ஒதுக்கித்தள்ளவும், கடவுளுக்குப் பிடித்த குணங்களை வளர்க்கவும் கடவுளுடைய சக்தி உதவும். (கலா. 5:16, ) நம் கவனமெல்லாம் பணம் பொருளின் மீதோ, இன்பங்களை அனுபவிப்பதன் மீதோ இருப்பது நமக்குத் தெரியவந்தால், சோர்ந்து போகக் கூடாது. சரியான விஷயத்தின் மீது கவனம் செலுத்த உதவி கேட்டு கடவுளுடைய சக்திக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்ய வேண்டும். ( 22, 23லூக். 11:13) அப்போஸ்தலன் பேதுருவைப் பற்றி யோசித்துப் பாருங்கள். எல்லா சமயத்திலும் அவர் கிறிஸ்துவைப் போலவே யோசிக்கவில்லை. (மத். 16:22, 23; லூக். 22:34, 54-62; கலா. 2:11-14) ஆனாலும் அவர் சோர்ந்துபோகவில்லை, யெகோவா அவருக்கு உதவினார். படிப்படியாக, கிறிஸ்துவைப் போலவே யோசிக்க அவர் கற்றுக்கொண்டார். அவரால் முடிந்ததென்றால், நம்மாலும் முடியும்!
13 நமக்கு உதவுகிற குறிப்பிட்ட சில குணங்களைப் பிற்பாடு பேதுரு சொன்னார். (2 பேதுரு 1:5-8-ஐ வாசியுங்கள்.) சுயக்கட்டுப்பாட்டையும், சகிப்புத்தன்மையையும், சகோதரப் பாசத்தையும், மற்ற நல்ல குணங்களையும் வளர்க்க நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘ஆன்மீக ரீதியில பலமுள்ளவனா இருக்குறதுக்கு எந்த குணத்தை வளர்க்க இன்னைக்கு நான் முயற்சி செய்யலாம்?’
அன்றாட வாழ்க்கையில் ஆன்மீகச் சிந்தையைக் காட்டுங்கள்
14. நமக்கு ஆன்மீகச் சிந்தை இருக்கிறது என்பதை நம் வாழ்க்கை எப்படிக் காட்டும்?
14 கிறிஸ்துவின் சிந்தை நமக்கு இருந்தால், அது நம் பேச்சிலும், வேலை செய்யும் இடத்தில் அல்லது பள்ளியில் நாம் நடந்துகொள்ளும் விதத்திலும், ஒவ்வொரு நாளும் நாம் எடுக்கும் தீர்மானங்களிலும் பளிச்சென்று தெரியும். நாம் கிறிஸ்துவைப் பின்பற்ற முயற்சி செய்கிறோம் என்பதை அந்தத் தீர்மானங்கள் காட்டும். நாம் ஆன்மீகச் சிந்தையுள்ளவர்களாக இருப்பதால், யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்தில் வேறு எதுவுமே விரிசல் ஏற்படுத்திவிடக் கூடாது என்று விரும்புகிறோம். தவறு செய்வதற்கான தூண்டுதல் வரும்போது, அதை எதிர்த்து நிற்க நம்முடைய ஆன்மீகச் சிந்தை உதவும். தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்பு, ‘எந்த பைபிள் நியமம் எனக்கு உதவும்? என்னோட இடத்துல கிறிஸ்து இருந்தார்னா, என்ன செய்வாரு? என்ன செஞ்சா யெகோவாவுக்கு பிடிக்கும்?’ என்று நம்மையே நாம் கேட்டுக்கொள்வோம். இப்படி யோசிப்பதை நாம் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். சில சூழ்நிலைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம். ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஞானமான தீர்மானம் எடுப்பதற்கு எந்த பைபிள் நியமங்கள் உதவும் என்றும் பார்க்கலாம்.
15, 16. இந்த விஷயங்களில் தீர்மானம் எடுக்க கிறிஸ்துவின் சிந்தை எப்படி உதவும்: (அ) துணையைத் தேர்ந்தெடுப்பது, (ஆ) நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது.
15 துணையைத் தேர்ந்தெடுப்பது. இதற்கான நியமம் 2 கொரிந்தியர் 6:14, 15-ல் இருக்கிறது. (வாசியுங்கள்.) ஆன்மீகச் சிந்தையுள்ள நபர்கள், உலகச் சிந்தையுள்ள நபர்களைப் போல யோசிப்பதில்லை என்று பவுல் இந்த வசனங்களில் தெளிவுபடுத்துகிறார். துணையைத் தேர்ந்தெடுக்க இந்த நியமம் உங்களுக்கு எப்படி உதவும்?
16 நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது. இதற்கான நியமம் 1 கொரிந்தியர் 15:33-ல் இருக்கிறது. (வாசியுங்கள்.) ஆன்மீகச் சிந்தையுள்ள நபர், தன்னுடைய விசுவாசத்தை பலவீனப்படுத்துகிற ஆட்களோடு நட்பு வைத்துக்கொள்ள மாட்டார். வெவ்வேறு சூழ்நிலைகளில் இந்த நியமத்தை எப்படிப் பின்பற்றலாம் என்று யோசித்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி தீர்மானம் எடுக்க இது எப்படி உதவும்? யாரென்றே தெரியாத ஆட்களோடு சேர்ந்து இன்டர்நெட்டில் விளையாடுவதைப் பற்றி தீர்மானம் எடுக்க இது எப்படி உதவும்?
17-19. ஆன்மீகச் சிந்தையுள்ளவர்களாக இருப்பது இந்த விஷயங்களில் எப்படி உதவும்: (அ) வீணான காரியங்களை ஒதுக்கித்தள்ளுவதில்? (ஆ) நல்ல இலக்குகள் வைப்பதில்? (இ) கருத்து வேறுபாடுகளைக் கையாளுவதில்?
17 ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்குத் தடையாக இருக்கும் விஷயங்கள். எபிரெயர் 6:1-ல் முக்கியமான ஒரு எச்சரிக்கை இருக்கிறது. (வாசியுங்கள்.) நாம் தவிர்க்க வேண்டிய ‘வீணான செயல்கள்’ எவை? ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு எந்த விதத்திலும் உதவாத, பிரயோஜனமில்லாத காரியங்கள்தான் அவை. வீணான செயல்களைப் பற்றிய எச்சரிக்கை, இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் கண்டுபிடிக்க நமக்கு உதவும்: ‘நான் செய்ற இந்த வேலையில ஏதாவது பிரயோஜனம் இருக்கா? பணம் சம்பாதிக்கிற திட்டங்கள்ல நான் கண்டிப்பா சேரணுமா? உலக நிலைமைகள மாத்தறேன்னு சொல்ற ஆட்களோட நான் ஏன் சேரக் கூடாது?’
18 ஆன்மீக இலக்குகள். தன்னுடைய மலைப் பிரசங்கத்தில், நல்ல இலக்குகள் வைப்பதைப் பற்றி இயேசு அறிவுரை கொடுத்தார். (மத். 6:33) ஆன்மீகச் சிந்தையுள்ளவர், கடவுளுடைய அரசாங்கத்தை முதலிடத்தில் வைப்பார். இந்த வசனத்தில் இருக்கிற நியமம், இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் கண்டுபிடிக்க நமக்கு உதவும்: ‘அடிப்படை கல்வி முடிச்சவுடனே நான் உயர் கல்வி படிக்கணுமா? நான் இந்த வேலையில சேரணுமா?’
19 கருத்து வேறுபாடுகள். மற்றவர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள, ரோமர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த ஆலோசனை நமக்கு உதவும். (ரோ. 12:18) நாம் கிறிஸ்துவைப் பின்பற்றுவதால், ‘எல்லாரோடும் சமாதானமாக இருக்க’ முயற்சி செய்கிறோம். மற்றவர்களோடு நமக்குக் கருத்து வேறுபாடு வரும்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம்? இன்னொருவரின் கருத்தை ஏற்றுக்கொள்வது எனக்குக் கஷ்டமாக இருக்கிறதா? நாம் சமாதானம் பண்ணுகிறவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கிறதா?—யாக். 3:18.
20. ஆன்மீக நபராக தொடர்ந்து முன்னேற நீங்கள் ஏன் ஆசைப்படுகிறீர்கள்?
20 நாம் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுகிறோம் என்பதை நிரூபிக்கும் விதத்தில் தீர்மானம் எடுப்பதற்கு பைபிள் நியமங்கள் எப்படி உதவும் என்பதை மேலே சொல்லப்பட்ட உதாரணங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். நாம் ஆன்மீகச் சிந்தையுள்ளவர்களாக இருந்தால், நம் வாழ்க்கை சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கும். நாம் ஏற்கெனவே பார்த்த ராபர்ட் இப்படிச் சொல்கிறார்: “யெகோவாகிட்ட உண்மையான பந்தத்த வளர்த்துக்கிட்டதுக்கு அப்புறம்தான் நான் ஒரு நல்ல கணவனா, நல்ல அப்பாவா ஆனேன். எனக்குத் திருப்தியும் சந்தோஷமும் கிடைச்சுது.” ஆன்மீக நபராகத் தொடர்ந்து முன்னேறுவதற்கு நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்யும்போது, நமக்கு ஏராளமான பலன்களும் கிடைக்கும். நாம் இப்போதும் சந்தோஷமாக இருக்கலாம், எதிர்காலத்திலும் “உண்மையான வாழ்வை” அனுபவிக்கலாம்.—1 தீ. 6:19.