படிப்புக் கட்டுரை 6
யெகோவா எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்வார் என்று நம்புகிறீர்களா?
“அவர் கற்பாறை போன்றவர், அவருடைய செயல்கள் குறை இல்லாதவை. அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை. அவர் நம்பகமான கடவுள், அநியாயமே செய்யாதவர். அவர் நீதியும் நேர்மையும் உள்ளவர்.”—உபா. 32:4.
பாட்டு 3 எம் பலமும் நம்பிக்கையும் நீரே!
இந்தக் கட்டுரையில்... *
1-2. (அ) அதிகாரத்தில் இருப்பவர்களை நம்புவது ஏன் இன்றைக்கு நிறையப் பேருக்குக் கஷ்டமாக இருக்கிறது? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
இன்றைக்கு நிறையப் பேருக்கு அதிகாரத்தில் இருப்பவர்களை நம்புவது கஷ்டமாக இருக்கிறது. ஏனென்றால், அரசாங்கமும் சட்டமும், பண பலமும் செல்வாக்கும் இருப்பவர்களுக்குச் சாதகமாக இருப்பதையும் பாவப்பட்ட மக்களை அநியாயமாக நடத்துவதையும் அவர்கள் பார்க்கிறார்கள். “மனுஷனை மனுஷன் அடக்கி ஆண்டிருப்பதால் அவனுக்குக் கேடுதான் வந்திருக்கிறது” என்று பைபிளும் சரியாகத்தான் சொல்கிறது. (பிர. 8:9) அதோடு, சில மதத் தலைவர்கள் அநியாயமாக நடந்துகொள்வதால் மக்களுக்கு கடவுள்மேல் இருந்த நம்பிக்கையே போய்விட்டது. அதனால், நம்மோடு பைபிள் படிக்கிறவர்களுக்கு யெகோவாமீதும் பூமியில் தன்னுடைய மக்களை வழிநடத்த அவர் பயன்படுத்துபவர்கள்மீதும் நம்பிக்கையை வளர்ப்பது கஷ்டமாக இருக்கலாம். ஆனால், நாம்தான் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
2 யெகோவாமீதும் அவருடைய அமைப்புமீதும் நம்பிக்கை வைக்கக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் புதிதாக பைபிள் படிக்கிறவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் இருக்கிறது. சத்தியத்தில் ரொம்ப வருஷங்களாக இருக்கிறவர்களும் யெகோவா எதைச் செய்தாலும் சரியாகத்தான் செய்வார் என்ற நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், சில விஷயங்கள் யெகோவாமேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை அசைத்துப்பார்க்கலாம். நம்முடைய நம்பிக்கையை அசைத்துப்பார்க்கிற மூன்று சூழ்நிலைகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்: (1) சில பைபிள் பதிவுகளைப் படிக்கும்போது, (2) யெகோவாவின் அமைப்பிலிருந்து நமக்கு வழிநடத்துதல் கிடைக்கும்போது, (3) வரப்போகிற சவால்களைச் சமாளிக்கும்போது.
பைபிளைப் படிக்கும்போது யெகோவாவை நம்புங்கள்
3. யெகோவாமேல் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை சில பைபிள் பதிவுகள் எப்படி அசைத்துப்பார்க்கலாம்?
3 பைபிளைப் படிக்கும்போது, யெகோவா ஏன் சிலரிடம் மட்டும் இப்படி நடந்துகொண்டார், ஏன் அந்தத் தீர்மானத்தை எடுத்தார் என்றெல்லாம் நாம் யோசிக்கலாம். உதாரணமாக, ஓய்வுநாளில் விறகு பொறுக்கிய ஓர் இஸ்ரவேலனை கொலை செய்ய வேண்டும் என்று எண்ணாகமம் புத்தகத்தில் யெகோவா சொன்னார். ஆனால், பல வருஷங்களுக்குப் பின்பு, தாவீது ராஜா ஒழுக்கக்கேடாக நடந்தபோதும் கொலை செய்தபோதும் யெகோவா அவரை மன்னித்ததாக இரண்டு சாமுவேல் புத்தகத்தில் படிக்கிறோம். (எண். 15:32, 35; 2 சா. 12:9, 13) ‘தாவீது ஒழுக்கக்கேடா நடந்துக்கிட்டாரு, கொலையும் செஞ்சாரு, அதோட ஒப்பிடும்போது, ஓய்வுநாள்ல விறகு பொறுக்க போனது பெரிய பாவம் இல்லையே? இவனுக்கு மரண தண்டனை கொடுத்த யெகோவா தாவீதை ஏன் மன்னிச்சாரு?’ என்று நாம் யோசிக்கலாம். இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்வதற்கு முன்பு பைபிள் படிக்கும்போது நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய மூன்று விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
4. யெகோவாவின் தீர்ப்புகள் சரியானவை என்று நம்புவதற்கு ஆதியாகமம் 18:20, 21-ம் உபாகமம் 10:17-ம் எப்படி உதவுகின்றன?
4 ஒரு பதிவைப் பற்றிய எல்லா விவரங்களையும் எல்லா சமயத்திலும் பைபிள் சொல்வது கிடையாது. உதாரணமாக, தான் செய்த தவறை நினைத்து தாவீது உண்மையிலேயே வருத்தப்பட்டார் என்று நமக்குத் தெரியும். (சங். 51:2-4) ஆனால், ஓய்வுநாள் சட்டத்தை மீறிய அந்த நபர் எப்படிப்பட்டவர்? தான் செய்த தவறை நினைத்து அவர் உண்மையிலேயே வருத்தப்பட்டாரா? இதற்கு முன்பு அவர் யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் போயிருக்கிறாரா? ஏற்கெனவே கொடுத்த எச்சரிப்புகளை அவர் கண்டுகொள்ளாமல் விட்டாரா? இவற்றைப் பற்றி பைபிள் எதுவும் சொல்லவில்லை. ஆனால், ஒரு விஷயத்தில் நாம் உறுதியாக இருக்கலாம். யெகோவா, “அநியாயமே செய்யாதவர்.” (உபா. 32:4) யெகோவா மனிதர்களைப் போல் கிடையாது. மனிதர்கள், மற்றவர்கள் சொல்வதைக் கேட்டோ தங்களுடைய சொந்த அபிப்பிராயங்களின் அடிப்படையிலோ தீர்ப்பு கொடுக்கிறார்கள். அதனால், அது சரியாக இருப்பதில்லை. ஆனால், யெகோவா உண்மைகளின் அடிப்படையில் தீர்ப்புக் கொடுக்கிறார். அதனால்தான், அது சரியாக இருக்கிறது. (ஆதியாகமம் 18:20, 21-யும் உபாகமம் 10:17-யும் வாசியுங்கள்.) யெகோவாவையும் அவருடைய நெறிகளையும் பற்றி எந்தளவுக்குத் தெரிந்துகொள்கிறோமோ அந்தளவுக்கு அவருடைய தீர்ப்புகளெல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புவோம். பைபிளைப் படிக்கும்போது நமக்கு வருகிற கேள்விகளுக்கு உடனே பதில் கிடைக்காமல் போகலாம். ஆனால், ‘யெகோவா எப்போதும் நீதியானதைச் செய்வார்’ என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.—சங். 145:17.
5. நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் நம்மால் சரியாக நியாயந்தீர்க்க முடியாது என்று ஏன் சொல்கிறோம்? (“ நம் பார்வையிலிருந்து நீதியை மறைக்கும் பாவம்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
5 நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், நம்மால் சரியாக நியாயந்தீர்க்க முடியாது. கடவுள் தன்னுடைய சாயலில் நம்மையும் படைத்திருப்பதால்தான், யாருக்கும் அநியாயம் நடக்கக் கூடாது என்று நாம் நினைக்கிறோம். (ஆதி. 1:26) ஆனால், நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் நமக்கு எல்லா உண்மைகளும் தெரிந்தாலும், நாம் தவறாக நியாயந்தீர்க்க வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, நினிவே மக்களுக்கு இரக்கம் காட்ட யெகோவா எடுத்த முடிவு யோனாவுக்குப் பிடிக்கவே இல்லை. (யோனா 3:10–4:1) ஆனால், யெகோவா இரக்கம் காட்டியதால்தான், 1,20,000-க்கும் அதிகமான நினிவே மக்களுடைய உயிர் காப்பாற்றப்பட்டது. இங்கே சரியாக நியாயந்தீர்க்காதது யார்? யெகோவாவா? இல்லை, யோனாதான்.
6. தான் எடுக்கிற தீர்மானங்களைப் பற்றி யெகோவா ஏன் நம்மிடம் விளக்க வேண்டிய அவசியமில்லை?
6 தான் எடுக்கிற தீர்மானங்களுக்கான காரணத்தை மனிதர்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் யெகோவாவுக்கு இல்லை. பைபிள் காலத்தில், யெகோவா ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன்போ எடுத்த பின்போ அதைப் பற்றித் தன்னுடைய ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்டிருக்கிறார். (ஆதி. 18:25; யோனா 4:2, 3) சிலசமயம், தான் ஒரு தீர்மானத்தை எடுத்ததற்கான காரணத்தை யெகோவா அவர்களுக்கு விளக்கிச் சொல்லியிருக்கிறார். (யோனா 4:10, 11) ஆனால், அப்படி எல்லாவற்றையும் நம்மிடம் சொல்ல வேண்டிய அவசியம் யெகோவாவுக்கு இல்லை. அவர்தான் நம்மைப் படைத்தவர். அதனால், எதையுமே நம்மிடம் கேட்டுவிட்டு செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.—ஏசா. 40:13, 14; 55:9.
வழிநடத்துதல் கிடைக்கும்போது யெகோவாவை நம்புங்கள்
7. எது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம், ஏன்?
7 யெகோவா எப்போதும் சரியானதைத்தான் செய்வார் என்று நம்புவதில் நமக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. ஆனால், அவர் நியமித்திருக்கிற ஆட்களை நம்புவதுதான் நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். யெகோவாவின் அமைப்பில் பொறுப்பில் இருக்கிறவர்கள் எல்லாவற்றையும் அவர் சொன்னபடிதான் செய்கிறார்களா? அல்லது தங்கள் சொந்த இஷ்டத்துக்கு செய்கிறார்களா? என்று நாம் சிலசமயம் யோசிக்கலாம். பைபிள் காலத்தில் வாழ்ந்தவர்களும் இப்படி யோசித்திருக்கலாம். 3-வது பாராவில் பார்த்த சம்பவங்களைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். ஓய்வுநாளில் விறகு பொறுக்கப் போனவனுடைய சொந்தக்காரர், ‘மோசே மரண தண்டனை குடுக்கறதுக்கு முன்னாடி யெகோவாகிட்ட கேட்டுதான் செஞ்சாரா?’ என்று ஒருவேளை யோசித்திருக்கலாம். தாவீதும் உரியாவின் மனைவியும் ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டதைக் கேள்விப்பட்ட உரியாவின் நண்பர் ஒருவர், ‘ஒருவேளை ராஜாங்கற பதவிய பயன்படுத்திதான் தாவீது தனக்கு கிடைக்க வேண்டிய தண்டனையில இருந்து தப்பிச்சிட்டாரோ?’ என்று யோசித்திருக்கலாம். உண்மை என்னவென்றால், தன்னுடைய மக்களை வழிநடத்த யெகோவா பூமியில் சிலரை நியமித்திருக்கிறார். அவர்களை யெகோவா நம்புகிறார். அவர்களை நாம் நம்பாமல் யெகோவாவை நம்புகிறோம் என்று சொல்லவே முடியாது.
8. அப்போஸ்தலர் 16:4, 5 சொல்வதற்கும் இன்றைக்கு கிறிஸ்தவ சபை செயல்படுவதற்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது?
8 இன்றைக்கு யெகோவா தன்னுடைய அமைப்பை வழிநடத்த ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ பயன்படுத்துகிறார். (மத். 24:45) முதல் நூற்றாண்டிலிருந்த ஆளும் குழுவைப் போலவே இந்த அடிமையும் உலகம் முழுவதும் இருக்கிற கடவுளுடைய மக்களை கவனித்துக்கொள்கிறார்கள். சபையில் இருக்கிற மூப்பர்களுக்குத் தேவையான வழிநடத்துதலைக் கொடுக்கிறார்கள். (அப்போஸ்தலர் 16:4, 5-ஐ வாசியுங்கள்.) அதன்படிதான் மூப்பர்கள் சபையை வழிநடத்துகிறார்கள். அமைப்பும் மூப்பர்களும் கொடுக்கிற ஆலோசனைகளின்படி நடக்கும்போது, யெகோவா எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்வார் என்று நாம் நம்புகிறோம் என்பதைக் காட்ட முடியும்.
9. மூப்பர்கள் எடுக்கிற தீர்மானத்துக்குக் கீழ்ப்படிவது நமக்கு எப்போது கஷ்டமாக இருக்கலாம், ஏன்?
9 சிலநேரம் மூப்பர்கள் எடுக்கிற தீர்மானத்துக்குக் கீழ்ப்படிவது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். உதாரணமாக, கடந்த சில வருஷங்களாக சில சபைகள் இணைக்கப்பட்டிருப்பதால் அந்த வட்டாரங்களிலும் மாற்றங்கள் வந்திருக்கின்றன. இன்னும் சில இடங்களில், ராஜ்ய மன்றத்தில் இருக்கைகள் காலியாக இருப்பதால் அந்தச் சபைக்கு மாறிப்போய் உதவும்படி மூப்பர்கள் சில பிரஸ்தாபிகளிடம் சொல்கிறார்கள். ஒருவேளை, நம்மிடம் அப்படிச் சொன்னால், நம்முடைய நண்பர்களையும் குடும்பத்தையும் விட்டுவிட்டு போவது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். எந்த பிரஸ்தாபியை எங்கே அனுப்ப வேண்டும் என்று மூப்பர்களுக்கு ஏதாவது வெளிப்படுத்துதல் கிடைக்கிறதா? இல்லை. இதனால், மூப்பர்கள் சொல்வதைக் கேட்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். யெகோவா மூப்பர்களை நம்புகிறார். அதனால்தான், தீர்மானிக்கிற பொறுப்பை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அப்படியென்றால், நாமும் அவர்களை நம்ப வேண்டும். *
10. எபிரெயர் 13:17 சொல்கிறபடி, நாம் ஏன் மூப்பர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்?
10 நாம் ஆசைப்பட்ட விதமாக மூப்பர்கள் தீர்மானம் எடுக்காவிட்டாலும் மூப்பர்கள் எடுத்த தீர்மானத்துக்கு நாம் ஏன் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்? அப்போதுதான், யெகோவாவின் மக்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்க நம்மால் உதவ முடியும். (எபே. 4:2, 3) மூப்பர் குழு எடுக்கிற தீர்மானத்துக்கு நாம் மனத்தாழ்மையோடு கீழ்ப்படிய வேண்டும், அது சபையின் வளர்ச்சிக்கு உதவும். (எபிரெயர் 13:17-ஐ வாசியுங்கள்.) மிக முக்கியமாக, நம்மைக் கவனித்துக்கொள்வதற்காக யெகோவா நியமித்திருக்கிறவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்போது நாம் யெகோவாவை முழுமையாக நம்புகிறோம் என்பதைக் காட்ட முடியும்.—அப். 20:28.
11. மூப்பர்கள் கொடுக்கிற ஆலோசனை சரியாகத்தான் இருக்கும் என்று நாம் எதை வைத்து நம்பலாம்?
11 மூப்பர்கள் கொடுக்கிற ஆலோசனை சரியாகத்தான் இருக்கும் என்று நம்புவதற்கு நாம் எவற்றையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ளலாம்? மூப்பர்கள் சபைக்காகத் தீர்மானம் எடுக்கும்போது கடவுளுடைய சக்தியைக் கேட்டு ஜெபம் செய்கிறார்கள். அது சம்பந்தமாக அமைப்பு கொடுக்கிற வழிநடத்துதலையும் பைபிள் நியமங்களையும் கவனமாகப் படிக்கிறார்கள். அவர்களுடைய ஆசையே யெகோவாவின் மக்களை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், யெகோவாவைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதுதான். தன்னுடைய மக்களை மூப்பர்கள் எப்படிப் பார்த்துக்கொள்கிறார்கள் என்பதை யெகோவா கவனிக்கிறார். அதற்கு அவர்களிடம் கணக்கும் கேட்பார். இது மூப்பர்களுக்கு நன்றாகத் தெரியும். (1 பே. 5:2, 3) இதை யோசித்துப்பாருங்கள்: இன்றைக்கு உலகத்தில் இருக்கிற மக்கள் இனம், மதம், அரசியல் என்ற பெயரில் பிரிந்திருக்கிறார்கள். ஆனால், யெகோவாவின் மக்கள் மட்டும்தான் ஒற்றுமையாக இருக்கிறார்கள், ஒன்றாகச் சேர்ந்து யெகோவாவை வணங்குகிறார்கள். யெகோவாவின் ஆசீர்வாதம் அவருடைய அமைப்பின்மேல் இருப்பதுதான் இதற்குக் காரணம்.
12. ஒரு நபர் உண்மையிலேயே மனம் திருந்தியிருக்கிறாரா என்பதை மூப்பர்கள் எதை வைத்து முடிவு செய்கிறார்கள்?
12 சபையைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் முக்கியமான பொறுப்பை யெகோவா மூப்பர்களுக்குக் கொடுத்திருக்கிறார். சபையில் இருக்கிற ஒருவர் மோசமான பாவம் செய்துவிட்டால் அவர் சபையில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கிற பொறுப்பை யெகோவா மூப்பர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அதைத் தீர்மானிக்க மூப்பர்கள் எதையெல்லாம் பார்க்கிறார்கள்? தவறு செய்த அந்த நபர் அதை நினைத்து உண்மையிலேயே வருத்தப்படுகிறாரா? செய்த தவறை நினைத்து வருத்தப்படுவதாக சொன்னாலும் தான் செய்தது தவறு என்று புரிந்துகொண்டாரா? அந்தத் தவறை மறுபடியும் செய்யக் கூடாது என்று நினைக்கிறாரா? ஒருவேளை, கெட்ட நண்பர்களின் சகவாசத்தால்தான் அந்தத் தவறைச் செய்திருந்தால், அந்த நட்பை முறித்துக்கொள்ள அவர் தயாராக இருக்கிறாரா? என்றெல்லாம் அவர்கள் தெரிந்துகொள்கிறார்கள். பின்பு, யெகோவாவிடம் ஜெபம் செய்கிறார்கள். என்ன நடந்தது என்பதையும் அதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதையும் பார்க்கிறார்கள். தவறு செய்தவர் இதைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதையும் பார்க்கிறார்கள். இதை வைத்து அவர் சபையில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கிறார்கள். தேவைப்பட்டால் அவரை சபைநீக்கம் செய்கிறார்கள்.—1 கொ. 5:11-13.
13. நம்முடைய நண்பரோ சொந்தக்காரரோ சபைநீக்கம் செய்யப்பட்டால் நாம் என்ன யோசிக்கலாம்?
13 மூப்பர்கள்மேல் நம்பிக்கை வைப்பது நமக்கு எப்போது கஷ்டமாக இருக்கலாம்? சபைநீக்கம் செய்யப்பட்டவர் நம்முடைய நெருங்கிய நண்பராகவோ சொந்தக்காரராகவோ இல்லையென்றால் மூப்பர்கள் எடுத்த தீர்மானம் சரிதான் என்று நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனால், சபைநீக்கம் செய்யப்பட்டவர் நமக்குப் பிடித்த ஒருவராக இருந்தால், ‘எல்லா விஷயத்தையும் மூப்பர்கள் சரியா விசாரிக்காம இந்த தீர்மானத்த எடுத்துட்டாங்களோ? இந்த தீர்மானத்தில யெகோவாவின் வழிநடத்துதல் இல்லையோ?’ என்றெல்லாம் நாம் யோசிக்கலாம். அப்படியென்றால், அவர்கள் எடுத்த தீர்மானத்தை நல்ல விதத்தில் எடுத்துக்கொள்ள நாம் என்ன செய்யலாம்?
14. நமக்குப் பிடித்த யாராவது சபைநீக்கம் செய்யப்பட்டால் நாம் எதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?
14 சபைநீக்கம் என்பது யெகோவா செய்த ஏற்பாடு என்பதை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஏற்பாட்டால் சபைக்கு நன்மை கிடைக்கும், தவறு செய்தவருக்கும் நன்மை கிடைக்கும். தவறு செய்துவிட்டு மனம் திருந்தாத ஒருவர் சபையில் இருந்தாரென்றால், அவரைப் பார்த்து மற்றவர்களும் தவறு செய்ய வாய்ப்பிருக்கிறது. (கலா. 5:9) அதோடு, தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று அவரும் புரிந்துகொள்ள மாட்டார். தான் யோசிக்கிற விதத்தையும் நடந்துகொள்கிற விதத்தையும் மாற்றிக்கொண்டு யெகோவாவிடம் திரும்பி வர வேண்டும் என்று நினைக்க மாட்டார். (பிர. 8:11) ஒருவரை சபைநீக்கம் செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற தீர்மானத்தை மூப்பர்கள் ஏனோதானோவென்று எடுப்பதில்லை. இஸ்ரவேலில் இருந்த நீதிபதிகளைப் போலவே ‘மனிதனின் சார்பாக அல்ல, யெகோவாவின் சார்பாகத் தீர்ப்பு சொல்கிறார்கள்’ என்பதை மூப்பர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.—2 நா. 19:6, 7.
இப்போது யெகோவாவை நம்பினால்தான் எப்போதும் அவரை நம்ப முடியும்
15. யெகோவா கொடுக்கிற வழிநடத்துதலை ஏன் இப்போது நம்புவது ரொம்ப முக்கியம்?
15 இந்தப் பொல்லாத உலகத்துக்கு முடிவு சீக்கிரத்தில் வரப் போகிறது. அதனால், யெகோவா சரியானதைத்தான் செய்வார் என்பதை நாம் சந்தேகமே இல்லாமல் நம்ப வேண்டும். ஏன்? ஏனென்றால், மிகுந்த உபத்திரவத்தின்போது நமக்குக் கிடைக்கிற ஆலோசனைகளைப் புரிந்துகொள்வது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். இல்லையென்றால், அவை நடைமுறைக்கு ஒத்துவராத மாதிரி நமக்குத் தோன்றலாம். அப்போது, யெகோவா நம்மிடம் நேரடியாக வந்து பேசப் போவதில்லை. பூமியில் அவர் நியமித்திருக்கிற ஆட்களை வைத்துதான் வழிநடத்துதல் கொடுப்பார். ‘அந்த வழிநடத்துதல் உண்மையிலேயே யெகோவாகிட்ட இருந்து வந்தது தானா? இல்லனா சகோதரர்கள் அவங்க இஷ்டத்துக்கு சொல்றாங்களா?’ என்று சந்தேகப்படுவதற்கு அது நேரமல்ல. விறுவிறுப்பான சம்பவங்கள் நடக்கிற அந்தச் சமயத்தில் யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் நீங்கள் நம்புவீர்களா? யெகோவா நியமித்திருக்கிறவர்கள் கொடுக்கிற ஆலோசனைக்கு இப்போது என்ன செய்கிறீர்களோ அதைத்தான் அப்போதும் செய்வீர்கள். இப்போது அவர்கள் கொடுக்கிற வழிநடத்துதலில் நம்பிக்கை வைத்து அதற்கு உடனே கீழ்ப்படிந்தீர்கள் என்றால் மிகுந்த உபத்திரவம் வரும்போது அவர்களை நம்புவீர்கள், கீழ்ப்படிவீர்கள்.—லூக். 16:10.
16. யெகோவா சரியாகத்தான் நியாயந்தீர்ப்பார் என்று நம்புவது நமக்கு எப்போது கஷ்டமாக இருக்கலாம்?
16 இந்தப் பொல்லாத உலகத்தை நியாயந்தீர்க்கும்போது யெகோவா எடுக்கிற தீர்மானங்களை நாம் ஏற்றுக்கொள்வோமா என்பதையும் யோசித்துப்பார்க்க வேண்டும். இன்றைக்கு யெகோவாவை வணங்காத நிறையப் பேரில் நம்முடைய சொந்தக்காரர்கள்கூட இருக்கலாம். முடிவு வருவதற்குள் அவர்கள் எல்லாரும் யெகோவாவை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நாம் இருக்கிறோம். ஆனால், முடிவு யெகோவா கையில்தான் இருக்கிறது, அர்மகெதோனில் அவர்தான் இயேசு மூலம் அவர்களை நியாயந்தீர்ப்பார். (மத். 25:31-33; 2 தெ. 1:7-9) யெகோவாவின் இரக்கம் யாருக்குக் கிடைக்கும், யாருக்குக் கிடைக்காது என்று நாம் சொல்ல முடியாது. (மத். 25:34, 41, 46) யெகோவாவின் தீர்ப்பு சரியாகத்தான் இருக்கும் என்று அப்போது நாம் நம்புவோமா? அல்லது தவறாக நியாயந்தீர்த்துவிட்டார் என்று சொல்லி அவரை விட்டுப் போய்விடுவோமா? ஒரு விஷயம் தெளிவாக இருக்கிறது. இப்போது நாம் யெகோவாமேல் நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொண்டால்தான் வரப்போகிற காலத்திலும் அவரை முழுமையாக நம்புவோம்.
17. இந்தப் பொல்லாத உலகத்தை யெகோவா நியாயந்தீர்க்கும்போது நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
17 யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளால் நடக்கிற மாற்றங்களை நாம் பூஞ்சோலை பூமியில் பார்ப்போம். அப்போது நமக்கு எப்படி இருக்கும்? அங்கே பொய்மதம் இருக்காது. இதுவரை மக்களை ஒடுக்கி கஷ்டப்படுத்திக்கொண்டிருந்த பேராசைப் பிடித்த அரசாங்கங்களும் இருக்காது, வியாபாரங்களும் நடக்காது. உடம்பு சரியில்லாமல் போவதோ... வயதாவதோ... நமக்குப் பிடித் தவர்கள் இறந்து போவதோ... இனிமேல் நம்முடைய வாழ்க்கையில் நடக்காது. ஆயிரம் வருஷங்களுக்கு சாத்தானாலோ அவனுடைய பேய்களாலோ மனிதர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய முடியாது, அவர்கள் செய்த கலகத்தால் வந்த பாதிப்புகளும் இல்லாமல் போய்விடும். (வெளி. 20:2, 3) யெகோவா எப்போதும் சரியானதைத்தான் செய்வார் என்று நம்பியது எவ்வளவு நல்லது என்பதை நாம் அப்போது புரிந்துகொள்வோம்.
18. எண்ணாகமம் 11:4-6-லும் 21:5-லும் சொல்லப்பட்டிருக்கிற இஸ்ரவேலர்களின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
18 யெகோவா சரியானதைத்தான் செய்வார் என்ற நம்முடைய நம்பிக்கைக்கு பூஞ்சோலை பூமியில் சோதனைகள் வருமா? உதாரணமாக, இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையான கொஞ்ச நாட்களிலேயே என்ன நடந்தது என்று யோசித்துப்பாருங்கள். எகிப்தில் அவர்கள் சாப்பிட்ட சாப்பாட்டை நினைத்து ஏங்கினார்கள். யெகோவா கொடுத்த மன்னாவைப் பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது என்று சொன்னார்கள். (எண்ணாகமம் 11:4-6-யும் 21:5-யும் வாசியுங்கள்.) மிகுந்த உபத்திரவம் முடிந்த பின்பு, ஒருவேளை நாமும் இப்படித்தான் யோசிப்போமா? அர்மகெதோனில் எல்லாம் அழிந்த பிறகு பூமியைச் சுத்தப்படுத்தி படிப்படியாக பூஞ்சோலையாக மாற்றுவதற்கு எவ்வளவு வேலைகள் செய்ய வேண்டியிருக்கும் என்று இப்போது நமக்குத் தெரியாது. ஆரம்பத்தில் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கும். சில அசௌகரியங்களும் இருக்கத்தான் செய்யும். அந்தச் சமயத்தில் யெகோவா நமக்கு எதைக் கொடுக்கிறாரோ அதை நாம் குறை சொல்லாமல் ஏற்றுக்கொள்வோமா? ஒரு விஷயத்தை நாம் மறந்து விடக் கூடாது: இப்போது யெகோவா கொடுப்பதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டால்தான் அப்போது யெகோவா கொடுக்கப்போவதையும் நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வோம்.
19. இந்தக் கட்டுரையில் கற்றுக்கொண்ட முக்கியமான குறிப்பு என்ன?
19 யெகோவா எப்போதுமே சரியானதைத்தான் செய்வார். அதை நாம் உறுதியாக நம்பலாம். யெகோவாவால் நியமிக்கப்பட்டவர்களும் யெகோவா சொல்வதைத்தான் செய்கிறார்கள் என்று நாம் நம்பலாம். ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா சொன்னதை நாம் எப்போதுமே ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்: “நீங்கள் பதட்டம் அடையாமல் என்மேல் நம்பிக்கை வைத்தால் பலமாக இருப்பீர்கள்.”—ஏசா. 30:15.
பாட்டு 98 வேதம்—கடவுள் தந்த பொக்கிஷம்
^ யெகோவாமீதும் அவருடைய மக்களை வழிநடத்துவதற்காக அவர் பயன்படுத்துபவர்கள்மீதும் நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்துவது ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும். அவர்கள்மீது நம்பிக்கையைப் பலப்படுத்துவதால், இப்போது நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் எதிர்காலத்தில் வருகிற பிரச்சினைகளை நாம் எப்படிச் சமாளிக்கலாம் என்றும் பார்க்கப்போகிறோம்.
^ சில சமயம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஒருவரோ அல்லது ஒரு குடும்பமோ வேறொரு சபைக்கு மாறிப்போக முடியாமல் இருக்கலாம். நவம்பர் 2002 நம் ராஜ்ய ஊழியத்தில், “கேள்விப் பெட்டி”யைப் பாருங்கள்.