படிப்புக் கட்டுரை 7
பாட்டு 51 நம்மை தேவனுக்கு அர்ப்பணித்திருக்கிறோம்
நசரேயர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்
“அவர் நசரேயராக இருக்கும் நாளெல்லாம் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக இருக்கிறார்.”—எண். 6:8.
என்ன கற்றுக்கொள்வோம்?
யெகோவாவுக்காகத் தியாகங்கள் செய்வதற்கும் தைரியமாக அவருக்கு சேவை செய்வதற்கும் நசரேயர்களிடமிருந்து கற்றுக்கொள்வோம்.
1. யெகோவாவின் ஊழியர்கள் காலம் காலமாகவே அவரை எப்படி வணங்கியிருக்கிறார்கள்?
யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தத்தைப் பொக்கிஷமாக நினைக்கிறீர்களா? கண்டிப்பாக நினைப்பீர்கள்! ஆரம்ப காலத்திலிருந்தே நிறைய பேர் உங்களைப் போல்தான் நினைத்திருக்கிறார்கள். (சங். 104:33, 34) யெகோவாவை வணங்குவதற்காக நிறைய பேர் தியாகங்களை செய்திருக்கிறார்கள். அன்று இருந்த இஸ்ரவேலர்கள் மத்தியில் நசரேயர்கள் என்று சிலர் இருந்தார்கள். அவர்களும் அதைத்தான் செய்தார்கள். அவர்கள் யார்? அவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
2. (அ) நசரேயர்கள் யார்? (எண்ணாகமம் 6:1, 2) (ஆ) சில இஸ்ரவேலர்கள் ஏன் நசரேயர்களாக இருக்க நேர்ந்துகொண்டார்கள்?
2 “தேர்ந்தெடுக்கப்பட்டவர்,” “பிரித்து வைக்கப்பட்டவர்,” “அர்ப்பணிக்கப்பட்டவர்” என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெய வார்த்தையிலிருந்து வந்ததுதான் “நசரேயர்” என்ற வார்த்தை. யெகோவாவுக்கு விசேஷமான ஒரு விதத்தில் சேவை செய்வதற்காக தியாகங்கள் செய்யத் தயாராக இருந்த இஸ்ரவேலர்கள்தான் நசரேயர்கள். திருச்சட்டத்தின்படி ஒரு ஆணோ பெண்ணோ கொஞ்ச காலத்துக்கு ஒரு நசரேயராக இருக்க நேர்ந்துகொள்ளலாம். a (எண்ணாகமம் 6:1, 2-ஐ வாசியுங்கள்.) நசரேய விரதம் இருப்பதாக நேர்ந்துகொண்ட ஒரு இஸ்ரவேலருக்கு சில கட்டுப்பாடுகள் இருந்தன. அப்படியிருந்தும் ஒரு இஸ்ரவேலர் ஏன் நசரேயராக வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார்? யெகோவாமேல் ரொம்ப அன்பு இருந்ததாலும் அவருக்கு நன்றிகாட்ட ஆசைப்பட்டதாலும் அப்படி செய்தார்.—உபா. 6:5; 16:17.
3. இன்று கடவுளுடைய மக்கள் எப்படி நசரேயர்களைப் போலவே இருக்கிறார்கள்?
3 திருச்சட்டத்துக்குப் பதிலாக ‘கிறிஸ்துவின் சட்டம்’ வந்தபோது, நசரேயராக சேவை செய்யும் ஏற்பாடு முடிவுக்கு வந்தது. (கலா. 6:2; ரோ. 10:4) இருந்தாலும், யெகோவாவின் மக்கள் இன்றும் அவருக்கு முழு இதயத்தோடு, முழு மூச்சோடு, முழு மனதோடு, முழு பலத்தோடு சேவை செய்ய ஆசைப்படுகிறார்கள். (மாற். 12:30) யெகோவாவுக்கு நம் வாழ்க்கையை அர்ப்பணிக்கும்போது இப்படியெல்லாம் செய்வதாக நாம் மனதார உறுதிமொழி எடுக்கிறோம். அதைக் காப்பாற்ற வேண்டுமென்றால் யெகோவாவின் விருப்பத்துக்கு ஏற்றமாதிரி நாம் வாழ வேண்டும்; தியாகங்களை செய்ய வேண்டும். நசரேயர்கள் எப்படி கொடுத்த வாக்குக்கு ஏற்றமாதிரி வாழ்ந்தார்கள் என்று நாம் பார்க்கலாம். அவர்களைப் போலவே கொடுத்த வாக்குக்கு ஏற்றமாதிரி நாம் எப்படி வாழலாம் என்றும் கற்றுக்கொள்ளலாம். b—மத். 16:24
தியாகங்கள் செய்யுங்கள்
4. எண்ணாகமம் 6:3, 4 சொல்வதுபோல் நசரேயர்கள் என்ன தியாகங்களை செய்தார்கள்?
4 எண்ணாகமம் 6:3, 4-ஐ வாசியுங்கள். எல்லா விதமான மதுபானத்தையும் திராட்சைக் கொடியிலிருந்து கிடைத்த எல்லாவற்றையும் நசரேயர்கள் தவிர்க்க வேண்டியிருந்தது. திராட்சைப் பழங்களையோ உலர்ந்த திராட்சைகளையோ அவர்கள் சாப்பிடக் கூடாது. இதையெல்லாம் அவர்களை சுற்றியிருந்த மக்கள் அன்றாட உணவாக சாப்பிட்டிருப்பார்கள். அது அவர்களுக்கு சந்தோஷமாகவும் இருந்திருக்கும். அப்படி அவர்கள் சாப்பிட்டதில் எந்தத் தவறும் இல்லை. சொல்லப்போனால், ‘மனிதனுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்தும் திராட்சமது’ கடவுள் தரும் பரிசு என்று பைபிள்கூட சொல்கிறது. (சங். 104:14, 15) ஆனாலும் இப்படிப்பட்ட சந்தோஷங்களை நசரேயர்கள் மனதாரத் தியாகம் செய்தார்கள். c
5. ஒரு தம்பதி என்ன தியாகம் செய்ய முடிவுசெய்தார்கள், ஏன்?
5 யெகோவாவுக்கு முழுமையாக சேவை செய்வதற்காக நசரேயர்களைப் போல் நாமும் சில தியாகங்களை செய்கிறோம். மேடியன்-மார்சிலா என்ற தம்பதி என்ன செய்தார்கள் என்று பாருங்கள். d அவர்கள் ரொம்ப வசதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். மேடியன் கைநிறைய சம்பாதித்துக்கொண்டு இருந்தார். ரொம்ப அழகான ஒரு வீட்டில் அவர்கள் குடியிருந்தார்கள். ஆனால் யெகோவாவுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். அதனால், வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்தார்கள். “முதலில் நாங்கள் எங்களுடைய செலவுகளைக் குறைத்தோம். பிறகு, ஒரு சின்ன வீட்டுக்கு குடிமாறி போனோம். எங்கள் காரையும் விற்றுவிட்டோம்” என்று அந்த தம்பதி சொல்கிறார்கள். உண்மையில், இந்தத் தியாகங்களை எல்லாம் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கு இல்லை. இருந்தாலும், ஊழியத்தை அதிகமாக்க இந்த தியாகங்களை செய்யலாம் என்று அவர்களே முடிவெடுத்தார்கள். இப்படி செய்ததால், அவர்களுக்கு சந்தோஷமும் திருப்தியும் கிடைத்தது.
6. இன்று நாம் ஏன் தியாகங்களை செய்கிறோம்? (படத்தையும் பாருங்கள்.)
6 யெகோவாவுடைய சேவையை அதிகமாக செய்வதற்காக கிறிஸ்தவர்கள் தியாகங்களை செய்கிறார்கள்; அதை சந்தோஷமாக செய்கிறார்கள். (1 கொ. 9:3-6) இந்தத் தியாகங்களைக் அவர்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பது இல்லை. அதேசமயத்தில் அவர்கள் விட்டுக்கொடுக்கும் விஷயங்கள் தவறு என்றும் சொல்ல முடியாது. உதாரணத்துக்கு சிலர் வேலையை, வீட்டைத் தியாகம் செய்கிறார்கள். சிலர் செல்லப்பிராணிகள் வளர்ப்பதை விட்டுக்கொடுக்கிறார்கள். கல்யாணம் செய்வதையும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதையும் சிலர் தள்ளிப்போடுகிறார்கள். வேறுசிலர் தேவை அதிகம் இருக்கிற இடங்களில் சேவை செய்வதற்காக குடும்பத்தையெல்லாம் விட்டுவிட்டு ரொம்ப தூரம் போகிறார்கள். யெகோவாவுக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற ஆசையால்தான் இதுபோன்ற தியாகங்களை நாம் எல்லாருமே செய்கிறோம். நாம் செய்யும் தியாகங்கள் பெரிதாக இருந்தாலும் சரி, சின்னதாக இருந்தாலும் சரி, யெகோவா அதை உயர்வாகப் பார்க்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.—எபி. 6:10.
தனியாகத் தெரிய தயங்காதீர்கள்
7. நேர்ந்துகொண்டதைக் காப்பாற்றுவது ஒரு நசரேயருக்கு ஏன் கஷ்டமாக இருந்திருக்கலாம்? (எண்ணாகமம் 6:5) (படத்தையும் பாருங்கள்.)
7 எண்ணாகமம் 6:5-ஐ வாசியுங்கள். தலைமுடியை வெட்ட மாட்டோம் என்று நசரேயர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். யெகோவாவுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பதைக் காட்டுவதற்காக அப்படி செய்தார்கள். ஒருவேளை, ரொம்ப காலத்துக்கு ஒருவர் நசரேயராக இருந்திருந்தால் அவருடைய முடி ரொம்ப நீளமாக வளர்ந்திருக்கும்; நிறைய பேர் அதை வித்தியாசமாகப் பார்த்திருப்பார்கள். அவரை சுற்றியிருந்தவர்கள் அவருக்கு ஆதரவாக இருந்திருந்தால், இது ஒரு பிரச்சினையாக இருந்திருக்காது. ஆனால், எல்லா சமயத்திலும் நசரேயர்களுக்கு அப்படியொரு ஆதரவு கிடைக்கவில்லை. ஒருகாலத்தில் நசரேயர்களை இஸ்ரவேலர்கள் அவ்வளவாக மதிக்கவில்லை, அவர்களுக்கு ஆதரவும் கொடுக்கவில்லை. உதாரணத்துக்கு, ஆமோஸ் தீர்க்கதரிசி வாழ்ந்த காலத்தில், யெகோவாவுக்கு உண்மையில்லாத இஸ்ரவேலர்கள், ‘நசரேயர்களுக்குத் திராட்சமது கொடுத்துவந்தார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (ஆமோ. 2:12) அதாவது, திராட்சமது குடிக்கக் கூடாது என்று அவர்கள் எடுத்த விரதத்தை முறிப்பதற்காக இப்படி செய்தார்கள். அதுபோன்ற சமயங்களில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பதற்கும் மற்றவர்களிலிருந்து தனியாகத் தெரிவதற்கும் ஒரு நசரேயருக்குக் கண்டிப்பாகத் தைரியம் தேவைப்பட்டிருக்கும்.
8. பெஞ்சமினின் உதாரணம் உங்களை எப்படி உற்சாகப்படுத்துகிறது?
8 யெகோவாவின் உதவியோடு நம்மாலும் மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக இருக்க முடியும். ஒருவேளை நமக்கு கூச்ச சுபாவம் இருந்தாலும், நம்மால் தைரியமாக அப்படி இருக்க முடியும். நார்வேயில் இருக்கும் 10 வயது பெஞ்சமின் என்ன செய்தான் என்று பாருங்கள். உக்ரேனில் போர் நடந்துகொண்டு இருந்ததால், அங்கே இருந்த மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அவனுடைய ஸ்கூலில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். அதில், உக்ரேன் தேசிய கொடியின் நிறத்தில் பிள்ளைகளுக்கு டிரெஸ் போட்டுவிட்டு, பாட்டு பாடுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். ஆனால், தேசப்பற்றைக் காட்டக்கூடிய இந்தமாதிரி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கூடாது என்று பெஞ்சமின் முடிவு செய்தான். அதனால், அந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்திலிருந்து தள்ளி நின்றான். ஆனால் அவனுடைய டீச்சர் அவனைப் பார்த்துவிட்டு, சத்தமாக: “பெஞ்சமின், இங்கே வா! உனக்காகத்தான் எல்லாரும் காத்திருக்கிறோம்” என்று சொன்னார். பெஞ்சமின் அவனுடைய டீச்சரிடம் போய், “நான் எந்த நாட்டுக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. தேசிய நிகழ்ச்சிகளிலும் நான் கலந்துகொள்ள மாட்டேன். சொல்லப்போனால், போரில் கலந்துகொள்ளாததால் யெகோவாவின் சாட்சிகளில் நிறைய பேர் ஜெயிலில்கூட இருக்கிறார்கள்” என்று தைரியமாக சொன்னான். அவன் சொன்னதை டீச்சரும் ஏற்றுக்கொண்டு அவனை விட்டுவிட்டார். ஆனால், அவன் வகுப்பில் இருந்த பிள்ளைகள் அவன் ஏன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று கேட்டார்கள். அப்போது அவன் பயந்துவிட்டான்; பயத்தில் அழுகிற மாதிரியே ஆகிவிட்டான். இருந்தாலும், டீச்சரிடம் சொன்ன அதே காரணத்தை வகுப்பில் இருந்த எல்லாரிடமும் திரும்பவும் சொன்னான். இப்படித் தைரியமாக பேச யெகோவாதான் உதவி செய்தார் என்று பிறகு தன்னுடைய அப்பா அம்மாவிடம் சொன்னான்.
9. யெகோவாவின் இதயத்தை நாம் எப்படி சந்தோஷப்படுத்தலாம்?
9 யெகோவாவின் விருப்பத்தை செய்ய நாம் முடிவு செய்திருப்பதால், மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாகத் தெரிகிறோம். வேலை செய்யும் இடத்திலும் பள்ளியிலும் நாம் ஒரு யெகோவாவின் சாட்சி என்று சொல்ல கண்டிப்பாக தைரியம் தேவை. காலங்கள் போகப்போக, இந்த உலகத்தில் இருக்கிறவர்களின் யோசனைகளும் அவர்கள் நடந்துகொள்ளும் விதமும் மோசமாகத்தான் ஆகும். இந்த சூழ்நிலையில், பைபிள் சொல்வதுபோல் வாழ்வதும் பைபிள் செய்தியை மற்றவர்களிடம் சொல்வதும் நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். (2 தீ. 1:8; 3:13) ஆனால், எப்போதுமே ஒரு விஷயத்தை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம்: மற்றவர்களிலிருந்து நாம் வித்தியாசமாகத் தெரியும்போது நாம் ‘[யெகோவாவின்] இதயத்தை சந்தோஷப்படுத்துகிறோம்.’—நீதி. 27:11; மல். 3:18.
வாழ்க்கையில் யெகோவாவை முதலில் வையுங்கள்
10. எண்ணாகமம் 6:6, 7-ல் சொல்லியிருப்பதை செய்வது நசரேயர்களுக்கு ஏன் ரொம்பவே கஷ்டமாக இருந்திருக்கலாம்?
10 எண்ணாகமம் 6:6, 7-ஐ வாசியுங்கள். பிணத்துக்குப் பக்கத்தில் நசரேயர்கள் போகக்கூடாது. இதில் என்ன பெரிய தியாகம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இந்த சூழ்நிலையை யோசித்துப் பாருங்கள்: ரொம்ப நெருங்கிய சொந்தக்காரர் ஒருவர் இறந்தால்கூட நசரேயர்களால் அவருடைய பிணத்துக்குப் பக்கத்தில் போக முடியாது. பைபிள் காலங்களில் சவ அடக்கத்தோடு சம்பந்தப்பட்ட சில பழக்கவழக்கங்கள் இருந்தன. பிணத்துக்குப் பக்கத்தில் போய் அவர்கள் சில விஷயங்களை செய்தார்கள். (யோவா. 19:39, 40; அப். 9:36-40) ஆனால், நசரேயர்கள் விரதம் எடுத்திருந்ததால் இந்தமாதிரி எதையும் செய்ய முடியாது. பயங்கர வேதனையான ஒரு சமயத்தில்கூட, அதாவது குடும்பத்தில் ஒருவர் இறந்தால்கூட, கொடுத்த வாக்கை நசரேயர்கள் மீறவில்லை. இப்படி, கடவுள்பக்தியைக் காட்டினார்கள். இந்தமாதிரி கஷ்டமான சூழ்நிலைகளை சகித்து நிற்பதற்கு யெகோவா அவர்களுக்குக் கண்டிப்பாக பலம் கொடுத்திருப்பார்.
11. குடும்பத்துக்காகத் தீர்மானங்கள் எடுக்கும்போது ஒரு கிறிஸ்தவர் எதை மனதில் வைக்க வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)
11 கிறிஸ்தவர்களாக நாம், அர்ப்பணித்தபோது யெகோவாவுக்குக் கொடுத்த வாக்கை ரொம்ப முக்கியமாக நினைக்கிறோம். இந்த வாக்கை மனதில் வைத்துதான் குடும்பம் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்கிறோம். குடும்பத்தில் இருக்கிறவர்களைக் கவனிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைக்கிறோம். அதேசமயத்தில், குடும்பத்தில் இருக்கிறவர்கள் விரும்புவதை நிறைவேற்றுவதற்காக யெகோவாவை இரண்டாவது இடத்தில் வைத்துவிட மாட்டோம். (மத். 10:35-37; 1 தீ. 5:8) சிலசமயத்தில், நாம் யெகோவாவை சந்தோஷப்படுத்துவதற்காக குடும்பத்தில் இருக்கிறவர்களுக்குப் பிடிக்காத முடிவுகளைக்கூட எடுக்க வேண்டியிருக்கலாம்.
12. கஷ்டமான ஒரு சூழ்நிலை வந்தபோது அலெக்ஸான்ட்ரு என்ன செய்தார், என்ன செய்யவில்லை?
12 அலெக்ஸான்ட்ரு மற்றும் டொரீனா தம்பதியின் உதாரணத்தை இப்போது பார்க்கலாம். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு வருஷத்துக்குப் பைபிள் படிப்பு படித்தார்கள். ஆனால் அதன்பிறகு, டொரீனா படிப்பதை நிறுத்திவிட்டார். அலெக்ஸான்ட்ருவையும் படிப்பை நிறுத்த சொன்னார். இருந்தாலும் அலெக்ஸான்ட்ரு தொடர்ந்து படிக்க விரும்புவதாக தன்னுடைய மனைவியிடம் சாந்தமாகவும் பக்குவமாகவும் எடுத்து சொன்னார். அலெக்ஸான்ட்ரு தொடர்ந்து படித்தது டொரீனாவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவரை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று டொரீனா முயற்சி செய்தார். தன் மனைவி ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்பதை அலெக்ஸான்ட்ருவால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சிலசமயத்தில் டொரீனா அவரைக் கிண்டல் செய்தார், ரொம்பக் கடுமையாகக்கூட பேசினார். அப்போதெல்லாம், பேசாமல் படிப்பை நிறுத்திவிடலாமா என்றுகூட அலெக்ஸான்ட்ரு யோசித்திருக்கிறார். இருந்தாலும், யெகோவாவைத் தன்னுடைய வாழ்க்கையில் முதலில் வைக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதேசமயத்தில் தன்னுடைய மனைவிக்கு அன்பையும் மரியாதையையும் காட்டினார். கடைசியில் என்ன நடந்தது? அலெக்ஸான்ட்ரு நல்ல விதமாக நடந்துகொண்டதால் டொரீனாவும் பைபிள் படிக்க ஆரம்பித்தார், சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்.—jw.org வெப்சைட்டில் “சத்தியம் வாழ்க்கையையே மாற்றுகிறது” என்ற பகுதியில் அலெக்ஸான்ட்ரு மற்றும் டொரீனா வக்கார்: அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது என்ற வீடியோவைப் பாருங்கள்.
13. யெகோவாமேலும் நம்முடைய குடும்பத்தின்மேலும் நாம் எப்படி அன்பு காட்டலாம்?
13 குடும்பம் என்ற ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்ததே யெகோவாதான். நாம் எல்லாரும் குடும்பமாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். (எபே. 3:14, 15) அதனால், உண்மையிலேயே சந்தோஷமாக இருப்பதற்கு அவர் சொல்கிறபடி நாம் செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்கிறீர்கள். அவர்கள்மேல் மதிப்புமரியாதையைக் காட்டுகிறீர்கள். அதோடு சேர்த்து, யெகோவாவை வணங்குவதற்கும் நிறைய தியாகங்களை செய்கிறீர்கள். இவை எல்லாவற்றையும் யெகோவா பெரிதாக நினைக்கிறார் என்பதில் சந்தேகமே வேண்டாம்!—ரோ. 12:10.
நசரேயர்களைப் போல் இருக்க மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள்
14. நாம் குறிப்பாக யாரையெல்லாம் பலப்படுத்த வேண்டும்?
14 யெகோவாவை வணங்கும் நாம் எல்லாருமே அவர்மேல் இருக்கும் அன்பால் தியாகங்கள் செய்ய தயாராக இருக்கிறோம். உண்மை என்னவென்றால், எல்லா சமயத்திலும் அது சுலபம் இல்லை. யெகோவாவுக்காக தியாகங்கள் செய்ய நாம் எப்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தலாம்? நம் வார்த்தைகள் மூலமாக! (யோபு 16:5) உங்கள் சபையில், அதிகமாக சேவை செய்ய வேண்டும் என்பதற்காக வாழ்க்கையை எளிமையாக்க யாராவது முயற்சி செய்கிறார்களா? பள்ளியில் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்க போராடிக்கொண்டிருக்கும் இளம் பிள்ளைகளை உங்களுக்குத் தெரியுமா? குடும்பத்தில் வருகிற எதிர்ப்பையும் தாண்டி யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிற பைபிள் படிப்புகள் அல்லது சகோதர சகோதரிகள் இருக்கிறார்களா? இவர்கள் எல்லாரையும் பலப்படுத்துங்கள். இவர்கள் காட்டும் தியாகத்தையும் தைரியத்தையும் பாராட்டுவதற்கு வாய்ப்புகளைத் தேடுங்கள்.—பிலே. 4, 5, 7.
15. முழுநேர சேவையில் இருக்கிறவர்களுக்கு சிலர் எப்படி உதவியிருக்கிறார்கள்?
15 முழுநேர சேவை செய்கிறவர்களுக்கு நாம் சில நடைமுறையான உதவிகளைக்கூட செய்யலாம். (நீதி. 19:17; எபி. 13:16) இலங்கையில் இருக்கும் வயதான ஒரு சகோதரி அப்படி உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவருக்கு வந்த பென்ஷன் தொகை கொஞ்சம் அதிகமானது. அப்போது, பணக் கஷ்டத்தின் மத்தியிலும் பயனியர் செய்துகொண்டிருந்த இரண்டு இளம் சகோதரிகளுக்கு உதவ நினைத்தார். அவர்களுடைய ஃபோன் பில்லைக் கட்டுவதற்கு, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஒரு தொகையை அவர்களுக்கு கொடுக்க முடிவு செய்தார். அந்த வயதான சகோதரிக்கு எவ்வளவு பெரிய மனசு!
16. நசரேயர் ஏற்பாட்டிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
16 அன்று இருந்த நசரேயர்கள் உண்மையிலேயே நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி! இந்த ஏற்பாட்டிலிருந்து யெகோவாவைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்கிறோம். நாம் அவரை சந்தோஷப்படுத்துவோம் என்றும் அர்ப்பணித்தபோது கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தியாகங்கள் செய்வோம் என்றும் யெகோவா நம்புவதை இந்த ஏற்பாடு காட்டுகிறது. அவர்மேல் நாம் வைத்திருக்கும் அன்பை எப்படி காட்டலாம் என்று நாமே முடிவுசெய்வதற்கு அவர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இப்படி நம்மைக் கவுரவப்படுத்தியிருக்கிறார். (நீதி. 23:15, 16; மாற். 10:28-30; 1 யோ. 4:19) தன்னை வணங்குகிறவர்களை யெகோவா கவனிக்கிறார்... அவர்கள் செய்யும் தியாகத்தை ரொம்ப பெரிதாக நினைக்கிறார் என்பதையெல்லாம் இந்த நசரேயர் ஏற்பாடு காட்டுகிறது. அதனால், யெகோவாவுக்கு நாம் தொடர்ந்து சேவை செய்யலாம். நம்மால் முடிந்த எல்லாவற்றையும் அவருக்காக மனசாரக் கொடுக்கலாம்.
உங்கள் பதில் என்ன?
-
நசரேயர்கள் எப்படியெல்லாம் தியாகங்களை செய்தார்கள், தைரியத்தைக் காட்டினார்கள்?
-
நசரேயர்களைப் போல் இருக்க நாம் எப்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தலாம்?
-
யெகோவா தன் ஊழியர்கள்மேல் என்ன நம்பிக்கை வைத்திருக்கிறார்?
பாட்டு 124 என்றும் உண்மையுள்ளோராய்
a சில இஸ்ரவேலர்களை யெகோவாவே நசரேயர்களாகத் தேர்ந்தெடுத்தார். ஆனால் நிறைய இஸ்ரவேலர்கள் தாங்களாகவே முன்வந்துதான் அப்படி சேவை செய்தார்கள்.—“ யெகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நசரேயர்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.
b நம் பிரசுரங்கள் சிலசமயங்களில் முழுநேர சேவையில் இருக்கிறவர்களை நசரேயர்களோடு ஒப்பிட்டுப் பேசி இருக்கிறது. ஆனால் இந்த கட்டுரையில் யெகோவாவுக்கு அர்ப்பணித்திருக்கிற எல்லாருமே எப்படி நசரேயர்களைப் போல் இருக்கலாம் என்று பார்ப்போம்.
c நசரேயர்கள் தாங்கள் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவதற்காக கூடுதலாக எந்த பொறுப்புகளையோ வேலைகளையோ செய்ததுபோல் தெரியவில்லை.
d jw.org வெப்சைட்டில் “யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவங்கள்” என்ற பகுதியில், “வாழ்க்கையை எளிமையாக்க முடிவு செய்தோம்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
e படவிளக்கம்: வீட்டு மாடியிலிருந்து ஒரு நசரேயர் தன்னுடைய நெருங்கிய குடும்ப அங்கத்தினரின் உடல் எடுத்து செல்லப்படுவதைப் பார்க்கிறார். அவர் நசரேயராக இருப்பதால் அவர்களோடு சேர்ந்து போக முடியவில்லை.