Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 7

பாட்டு 15 யெகோவாவின் முதல் மகனை புகழ்ந்து பாடுங்கள்!

யெகோவாவின் மன்னிப்பு​—உங்களுக்கு என்ன நன்மை?

யெகோவாவின் மன்னிப்பு​—உங்களுக்கு என்ன நன்மை?

“நீங்கள் மனதார மன்னிக்கிறீர்கள்.”சங். 130:4.

என்ன கற்றுக்கொள்வோம்?

யெகோவா நம்மை எப்படி மன்னிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள பைபிளில் இருக்கிற சில அழகான சொல்லோவியங்கள், அதாவது உதாரணங்கள் உதவும். யெகோவா தருகிற மன்னிப்புக்கு இன்னும் நன்றியோடு இருக்க இந்தக் கட்டுரை உதவும்.

1. மனிதர்கள் நம்மை மன்னிப்பதாக சொல்லும்போது அதற்குபின் எப்படி நிறைய அர்த்தங்கள் இருக்கலாம்?

 “நான் உன்னை மன்னித்துவிட்டேன்!” இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது நமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கும்! அதுவும் நாம் யாரையாவது காயப்படுத்தியிருந்தால், அவர் இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது உண்மையிலேயே நம் மனசுக்குக் நிம்மதியாக இருக்கும். ஆனால், “நான் உன்னை மன்னித்துவிட்டேன்” என்று சொல்லும்போது அவர் உண்மையிலேயே எதை அர்த்தப்படுத்துகிறார்? ‘இனிமேலும் நாம் நல்ல ஃபிரெண்ட்ஸாக இருக்கலாம்’ என்று சொல்ல வருகிறாரா? அல்லது, ‘இந்த பிரச்சினையைப் பற்றி இனிமேல் பேச வேண்டாம், இதை விட்டுவிடலாம்; ஆனால் முன்பு போல் நாம் ஃபிரெண்ட்ஸாக இருக்க முடியாது’ என்று சொல்ல வருகிறாரா? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், மனிதர்கள் நம்மை மன்னிப்பதாக சொல்லும்போது அதற்குபின் நிறைய அர்த்தங்கள் இருக்கலாம்.

2. யெகோவாவின் மன்னிப்பைப் பற்றி பைபிள் எப்படி விவரிக்கிறது? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)

2 யெகோவா நம்மை மன்னிக்கிற விதமும், நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்கிற விதமும் ரொம்ப வித்தியாசமானது. யெகோவாவை மாதிரி யாராலுமே மன்னிக்க முடியாது. அதைப் பற்றி ஒரு சங்கீதக்காரர் இப்படிச் சொன்னார்: “நீங்கள் மனதார மன்னிக்கிறீர்கள். அதனால் உங்கள்மேல் பயபக்தி உண்டாகிறது.” a (சங். 130:4) உண்மையிலேயே மன்னிப்பது என்றால் என்ன என்று யெகோவாதான் நமக்குக் காட்டியிருக்கிறார். சில பைபிள் எழுத்தாளர்கள், யெகோவா மன்னிக்கிற விதத்தை விவரிக்கிற எபிரெய வார்த்தையை, மனிதர்கள் மன்னிக்கிற விதத்தை விவரிப்பதற்குப் பயன்படுத்தவில்லை.

3. யெகோவா மன்னிக்கிற விதம் எப்படி வித்தியாசப்பட்டிருக்கிறது? (ஏசாயா 55:6, 7)

3 யெகோவா ஒருவரை மன்னிக்கும்போது அவருடைய பாவத்தை முழுமையாகத் துடைத்தழிக்கிறார். அந்த நபரால் யெகோவாவோடு மறுபடியும் நெருக்கமான ஒரு பந்தத்தை அனுபவிக்க முடியும். இந்த மாதிரி யெகோவா முழுமையாக நம்மை மறுபடியும் மறுபடியும் மன்னிக்கிறார். இதை நினைக்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!ஏசாயா 55:6, 7-ஐ வாசியுங்கள்.

4. உண்மையான மன்னிப்பைப் புரிந்துகொள்வதற்கு யெகோவா நமக்கு எப்படி உதவி செய்திருக்கிறார்?

4 நாம் மன்னிக்கிற விதத்துக்கும் யெகோவா மன்னிக்கிற விதத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றால், நாம் எப்படி அவர் காட்டுகிற உண்மையான மன்னிப்பைப் புரிந்துகொள்வது? அதற்காகத்தான் யெகோவா பைபிளில் நிறைய உதாரணங்களைக் கொடுத்திருக்கிறார். அதில் சிலவற்றை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அந்த உதாரணங்கள், யெகோவா நம்முடைய பாவங்களை எப்படி எடுத்துப்போடுகிறார் என்றும், அவருடைய நண்பர்களாக நம்மை எப்படி மறுபடியும் ஏற்றுக்கொள்கிறார் என்றும் காட்டும். அந்த உதாரணங்களைப் படிக்கும்போது, அவர் நம்மை மன்னிப்பதை எப்படி வித்தியாசமான விதங்களில் விவரிக்கிறார் என்பதையும் புரிந்துகொள்வோம். அப்போது, அவர்மேல் இருக்கிற அன்பும் நன்றியும் இன்னும் அதிகமாகும்.

யெகோவா பாவங்களை எடுத்துப்போடுகிறார்

5. யெகோவா நம்முடைய பாவங்களை என்ன செய்கிறார்?

5 பாவங்களைப் பாரமான சுமைகளுக்கு பைபிள் ஒப்பிட்டுப் பேசுகிறது. தாவீது ராஜா தான் செய்த பாவங்களைப் பற்றி இப்படிச் சொன்னார்: “என்னுடைய குற்றங்கள் என் தலைக்குமேல் குவிந்திருக்கின்றன. பாரமான சுமைபோல் என்னை அழுத்துகின்றன. என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.” (சங். 38:4) ஆனால், மனம் திருந்துகிறவர்களுடைய பாவங்களை யெகோவா மன்னிக்கிறார். (சங். 25:18; 32:5) “மன்னிக்கிறார்” என்று பயன்படுத்தப்பட்டிருக்கிற எபிரெய வார்த்தை “தூக்குவதை” அல்லது, “சுமப்பதை” அர்த்தப்படுத்துகிறது. யெகோவாவை ஒரு பலசாலியாக நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம். ஒரு பலசாலி எப்படி ஒரு சுமையைத் தூக்கிக்கொண்டு போவாரோ, அந்தமாதிரி யெகோவா நம் தோள்மேல் இருக்கிற பாவம் என்ற சுமையைத் தூக்கிக்கொண்டு போகிறார்.

“மன்னித்தீர்கள்” (சங். 32:5)


6. எவ்வளவு தூரத்துக்கு யெகோவா நம்முடைய பாவங்களைச் தூக்கிக்கொண்டு போகிறார்?

6 யெகோவா நம்முடைய பாவங்களை எவ்வளவு தூரத்துக்குத் தூக்கிக்கொண்டு போகிறார்? இதைப் புரிந்துகொள்ள இன்னொரு உதாரணத்தைப் பார்க்கலாம். சங்கீதம் 103:12 இப்படிச் சொல்கிறது: “கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரத்துக்கு நம்முடைய குற்றங்களை அவர் தூக்கியெறிந்திருக்கிறார்.” கிழக்குக்கும் மேற்குக்கும் இடையில் இருக்கிற தூரம் ரொம்ப ரொம்ப அதிகம். சொல்லப்போனால், அவை இரண்டும் சந்திக்கவே சந்திக்காது. வேறு வார்த்தைகளில் சொன்னால், நாம் கற்பனைகூட செய்துபார்க்க முடியாத தூரத்துக்கு யெகோவா நம்முடைய பாவங்களை எடுத்துக்கொண்டு போகிறார். யெகோவாவுடைய மன்னிப்பு நம் மனசுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது!

“கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ” (சங். 103:12)


7. யெகோவா நம்முடைய பாவங்களை என்ன செய்வதாக பைபிள் சொல்கிறது? (மீகா 7:18, 19)

7 யெகோவா நம்முடைய பாவங்களைக் தூக்கிக்கொள்கிறார்தான்; அதற்காக, அவர் தூக்கி வைத்துக்கொண்டே இருக்கிறாரா? இல்லை. இதைப் பற்றி எசேக்கியா ராஜா என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். “என்னுடைய பாவங்களையெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்தீர்கள்” என்று சொன்னார். (ஏசா. 38:9, 17) அப்படியென்றால், மனம் திருந்துகிறவர்களுடைய பாவங்களை யெகோவா கண்ணுக்குத் தெரியாத இடத்தில் தூக்கி எறிந்துவிடுகிறார். ஒருவேளை, எசேக்கியாவின் வார்த்தைகளை வேறு விதமாக சொன்னால், “நான் பாவமே செய்யாத மாதிரி நீங்கள் என்னை பார்க்கிறீர்கள்” என்று சொல்லலாம். நம்முடைய பாவங்களை யெகோவா எவ்வளவு தூரத்துக்குத் தூக்கிப்போடுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள மீகா 7:18, 19-ல் (வாசியுங்கள்) இன்னொரு உதாரணம் இருக்கிறது. அதில், யெகோவா நம்முடைய பாவங்களை ஆழ்கடலில் தூக்கிப்போடுவதாக சொல்லப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில், ஆழ்கடலில் தூக்கிப்போடப்பட்ட ஒரு பொருளை யாராலும் திரும்ப எடுக்கவே முடியாது. அவ்வளவு தூரத்துக்கு யெகோவா நம்முடைய பாவங்களைத் தூக்கிப்போடுகிறார்.

“என்னுடைய பாவங்களையெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்தீர்கள்” (ஏசா. 38:17)

“நம்முடைய எல்லா பாவங்களையும் ஆழ்கடலுக்குள் போட்டுவிடுவார்” (மீ. 7:19)


8. இவ்வளவு நேரம் நாம் என்ன கற்றுக்கொண்டோம்?

8 இவ்வளவு நேரம் பார்த்த உதாரணங்களிலிருந்து என்ன கற்றுக்கொண்டோம்? யெகோவா நம்மை மன்னிக்கும்போது, பாவம் என்ற சுமையைத் தூக்கிப்போட்டுவிடுகிறார். யெகோவா அந்தச் சுமையைத் தூக்கியப் பிறகு குற்ற உணர்ச்சியால் நாம் கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. தாவீது சொன்ன மாதிரியே, “யாருடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, யாருடைய பாவங்கள் மூடப்பட்டதோ அவர்கள் சந்தோஷமானவர்கள். எந்த மனிதருடைய பாவத்தை யெகோவா ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டாரோ அவர் சந்தோஷமானவர்.” (ரோ. 4:6-8) இதுதான் யெகோவா தருகிற உண்மையான மன்னிப்பு!

யெகோவா பாவங்களைத் துடைத்தழிக்கிறார்

9. தான் எந்தளவுக்கு மன்னிக்கிறார் என்பதைக் காட்ட யெகோவா என்ன உதாரணங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்?

9 மீட்புவிலையின் அடிப்படையில், மனம் திருந்துகிற ஒருவருடைய பாவத்தை யெகோவா எப்படி மன்னிக்கிறார் என்பதைக் காட்ட அவர் இன்னும் சில உதாரணங்களைச் சொல்கிறார். ஒரு துணியைத் துவைத்து அலசி போடும்போது அது எப்படிச் சுத்தமாகிறதோ, அந்தமாதிரி யெகோவா நம்முடைய பாவங்களைக் கழுவி நம்மைச் சுத்தப்படுத்துகிறார். (சங். 51:7; ஏசா. 4:4; எரே. 33:8) இதைப் பற்றி அவர் இப்படி விவரிக்கிறார்: “உங்களுடைய பாவங்கள் இரத்தம்போல் சிவப்பாக இருந்தாலும், பனிபோல் வெண்மையாகும். செக்கச்செவேல் என்று இருந்தாலும், வெள்ளைவெளேர் என்று ஆகும்.” (ஏசா. 1:18) பொதுவாக, சிவப்பு நிறத்தில் இருக்கிற ஒரு சாயமோ கறையோ துணியில் பட்டால் அதை எடுப்பது ரொம்ப கஷ்டம். இந்த உதாரணத்தின் மூலம், நம்முடைய பாவங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதன் சுவடே தெரியாத அளவுக்கு அதைத் துடைத்தழிக்க முடியும் என்ற நம்பிக்கையை யெகோவா கொடுக்கிறார்.

“உங்களுடைய பாவங்கள் இரத்தம்போல் சிவப்பாக இருந்தாலும், பனிபோல் வெண்மையாகும்” (ஏசா. 1:18)


10. யெகோவா நம்முடைய பாவங்களைத் தாராளமாக மன்னிக்கிறார் என்பதை எந்த உதாரணம் காட்டுகிறது?

10 முந்தின கட்டுரையில் பார்த்த மாதிரி, பாவங்களை ‘கடன்களுக்கும்’ ஒப்பிட்டு பைபிள் பேசுகிறது. (மத். 6:12; லூக். 11:4) ஒவ்வொரு தடவை நாம் யெகோவாவுக்கு எதிராக பாவம் செய்யும்போது நம்முடைய கடன் அதிகமாகிக்கொண்டே போகிறது. சொல்லப்போனால், ஒரு பெரிய தொகையை அவரிடம் நாம் திரும்ப கொடுக்க வேண்டியது போல் ஆகிவிடுகிறது. ஆனால், யெகோவா நம்மை மன்னிக்கும்போது, ஒட்டுமொத்தமாக நம் கடன்களை ரத்து செய்வது போல் இருக்கிறது. ஏற்கெனவே மன்னிக்கப்பட்ட பாவங்களுக்கு அவர் நம்மிடம் கணக்குக் கேட்பதில்லை. இந்த உதாரணத்தை நினைத்துப் பார்க்கும்போது உண்மையிலேயே நமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!

“எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியுங்கள்” (மத். 6:12)


11. நம்முடைய பாவங்கள் “துடைத்தழிக்கப்படும்” என்று பைபிள் சொல்வதற்கு அர்த்தம் என்ன? (அப்போஸ்தலர் 3:19)

11 யெகோவா நம்முடைய கடன்களை, அதாவது பாவங்களை, ரத்து செய்வது மட்டுமல்ல, அதை முழுமையாகத் துடைத்தழிக்கிறார். (அப்போஸ்தலர் 3:19-ஐ வாசியுங்கள்.) பொதுவாக, ஒரு கடனை ரத்து செய்யும்போது, அந்தத் தொகையை அடித்துவிடுவார்கள். அதாவது, அதன்மேல் ஒரு கோடு (/) அல்லது இரண்டு கோடுகள் (×) போடுவார்கள். ஆனால் அப்படி கோடு போட்டப் பிறகும், கடன் தொகையை நம்மால் பார்க்க முடியும். துடைத்தழிப்பது என்பது அப்படிக் கிடையாது. இதைப் புரிந்துகொள்வதற்கு பைபிள் காலங்களில் என்ன மாதிரியான மையைப் பயன்படுத்தினார்கள் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அன்று பயன்படுத்தப்பட்ட மை, கார்பன், பசை மற்றும் தண்ணீரைக் கலந்து செய்யப்பட்டது. அதனால், எழுத்துக்களை ஈரமான துணியை வைத்து துடைத்துவிட முடியும். அப்படியென்றால், ஒரு கடனை ‘துடைத்தழிக்கும்போது’ அது முழுமையாக இல்லாமல் போய்விடும். என்ன எழுதப்பட்டிருந்தது என்றுகூட நம் கண்ணுக்குத் தெரியாது. அது அப்படியே சுவடு தெரியாமல் அழிந்துபோய்விடுகிறது. யெகோவா நம்முடைய பாவங்களை ரத்து செய்வது மட்டுமல்ல, அதை முழுமையாகத் துடைத்தழிக்கிறார் என்று தெரிந்துகொள்ளும்போது நம் மனசுக்கு எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது!—சங். 51:9.

“உங்களுடைய பாவங்கள் துடைத்தழிக்கப்படும்” (அப். 3:19)


12. இருண்ட மேகத்தைப் பற்றிய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

12 யெகோவா நம்முடைய பாவங்களை எப்படித் துடைத்தழிக்கிறார் என்பதற்கு இன்னொரு உதாரணத்தைச் சொல்கிறார். “நீ செய்த குற்றங்களையெல்லாம் மேகத்தால் மறைத்துவிடுவேன். உன்னுடைய பாவங்களையெல்லாம் இருண்ட மேகத்தால் மூடிவிடுவேன். என்னிடம் திரும்பி வா, நான் உன்னை விடுவிப்பேன்” என்று சொல்கிறார். (ஏசா. 44:22) அப்படியென்றால், யெகோவா நம்முடைய பாவங்களை மன்னிக்கும்போது அதை ஒரு இருண்ட மேகத்தால் மூடுகிற மாதிரி இருக்கிறது. அவரும் அதைப் பார்ப்பதில்லை, நம்முடைய பார்வையிலிருந்தும் அதை முழுமையாக மறைத்துவிடுகிறார்.

“நீ செய்த குற்றங்களையெல்லாம் மேகத்தால் மறைத்துவிடுவேன்” (ஏசா. 44:22)


13. யெகோவா நம்மை மன்னித்தப் பிறகும் நாம் எப்படி உணரத் தேவையில்லை?

13 இதிலிருந்து என்ன தெரிகிறது? யெகோவா நம்மை மன்னித்தப் பிறகும், நாம் வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சியில் தவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் அடிப்படையில் யெகோவா நம்முடைய கடன்களை, அதாவது பாவங்களை, முழுமையாக ரத்து செய்கிறார். ஒரு விதத்தில், அந்தப் பாவத்தை நாம் செய்யாத மாதிரி பார்க்கிறார். நாம் மனம் திருந்தும்போது இப்படித்தான் யெகோவா நம்மை முழுமையாக மன்னிக்கிறார்.

யெகோவா நம்மை நண்பர்களாக மறுபடியும் ஏற்றுக்கொள்கிறார்

யெகோவா நம்மை மன்னிப்பதால் நம்மால் மறுபடியும் அவருடைய நண்பர்களாக ஆக முடிகிறது (பாரா 14)


14. யெகோவா நம்மை முழுமையாக மன்னிப்பார் என்று நாம் ஏன் நம்பலாம்? (படங்களையும் பாருங்கள்.)

14 யெகோவா நம்மை மன்னிக்கும்போது நம்மை மறுபடியும் அவருடைய நண்பராக ஏற்றுக்கொள்கிறார். அதனால், நாம் தேவையில்லாமல் குற்ற உணர்ச்சியில் தவிக்க வேண்டியதில்லை. யெகோவா தன் மனசுக்குள் கோபத்தை வைத்துக்கொண்டே இருப்பதாகவும், எப்போது நம்மைத் தண்டிக்கலாம் என்று வாய்ப்பு தேடிக்கொண்டிருப்பதாகவும் நினைத்து நாம் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால், அப்படி அவர் செய்யவே மாட்டார். யெகோவா நம்மை மன்னிப்பதாகச் சொல்வதை நாம் ஏன் முழுமையாக நம்பலாம்? எரேமியா தீர்க்கதரிசி மூலமாக அவர் இப்படிச் சொல்கிறார்: “நான் அவர்களுடைய குற்றத்தை மன்னிப்பேன். அவர்களுடைய பாவத்தை இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்.” (எரே. 31:34) இந்த வசனத்தை அப்போஸ்தலன் பவுலும் மேற்கோள் காட்டிப் பேசினார். “அவர்களுடைய பாவங்களை இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்” என்று எழுதினார். (எபி. 8:12) ஆனால், இதன் அர்த்தம் என்ன?

“அவர்களுடைய பாவத்தை இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்” (எரே. 31:34)


15. எந்த அர்த்தத்தில் யெகோவா நம்முடைய பாவங்களை நினைத்துப் பார்ப்பதில்லை?

15 பைபிளில், ‘நினைத்துப் பார்ப்பது’ என்ற வார்த்தை எல்லா சமயத்திலும் ஞாபகத்துக்குக் கொண்டு வருவதை அல்லது யோசித்துப் பார்ப்பதை மட்டுமே அர்த்தப்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, ஒருவர் ஏதோவொரு விஷயத்தைச் செய்வதைக்கூட அது குறிக்கலாம். இயேசுவுக்குப் பக்கத்தில் அறையப்பட்டிருந்த அந்தக் குற்றவாளி, “இயேசுவே, நீங்கள் ஆட்சிக்கு வரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்று கேட்டான். (லூக். 23:42, 43) இயேசு தன்னுடைய அரசாங்கத்தில் அவனைப் பற்றிச் சும்மா நினைத்துப் பார்க்க வேண்டும் என்று அவன் கேட்கவில்லை; ஒரு விஷயத்தைச் செய்யச் சொல்லி அவன் கேட்டான் என்று தெரிகிறது. இயேசுவின் பதிலைப் பார்க்கும்போது, அவர் அவனைத் திரும்ப உயிரோடு கொண்டு வரப்போவதைப் பற்றிச் சொன்னதாகத் தெரிகிறது. அப்படியென்றால், யெகோவா நம்முடைய பாவங்களை நினைத்துப் பார்க்க மாட்டார் என்று சொல்லும்போது, அந்தப் பாவங்களை மனதில் வைத்து அவர் நம்மை எதுவும் செய்ய மாட்டார், அதாவது எதிர்காலத்தில் நம்மைத் தண்டிக்க மாட்டார் என்று அர்த்தம்.

16. மன்னிக்கப்படுவதால் கிடைக்கும் விடுதலையைப் பற்றி பைபிள் எப்படி விவரிக்கிறது?

16 பைபிள் இன்னொரு உதாரணத்தையும் சொல்கிறது. யெகோவா நம்மை மன்னிக்கும்போது நமக்கு எப்படி விடுதலை கிடைக்கிறது என்று புரிந்துகொள்ள அது உதவுகிறது. நம் எல்லாருக்கும் பாவ இயல்பு இருப்பதால், நாம் “பாவத்துக்கு அடிமைகளாக” இருக்கிறோம். ஆனால், யெகோவா நம்மை மன்னிக்கும்போது நாம் “பாவத்திலிருந்து விடுதலை” ஆகிறோம். (ரோ. 6:17, 18; வெளி. 1:5) ஒரு அடிமைக்கு விடுதலை கிடைக்கும்போது, அவர் எவ்வளவு சந்தோஷப்படுவாரோ அதேமாதிரி யெகோவா நம்மை மன்னிக்கும்போது நாம் சந்தோஷப்படுகிறோம்.

‘நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறீர்கள்’ (ரோ. 6:18)


17. யெகோவா நம்மைக் மன்னிக்கும்போது நாம் எப்படிக் குணமாகிறோம்? (ஏசாயா 53:5)

17 ஏசாயா 53:5-ஐ வாசியுங்கள். கடைசியாக ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். நமக்குள் பாவம் இருப்பதால், மோசமான நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைப் போல் இருக்கிறோம். ஆனால், யெகோவா தன்னுடைய மகன் மூலமாக கொடுத்த மீட்புவிலையால் நாம் குணமாகியிருக்கிறோம். (1 பே. 2:24) நாம் பாவம் செய்யும்போது ஆன்மீக விதத்தில் நோயாளிகளாகிறோம். அதாவது, யெகோவாவோடு இருக்கிற பந்தம் பாதிக்கப்படுகிறது. ஆனால், மீட்புவிலையின் அடிப்படையில் யெகோவா நம்மை மன்னிக்கிறார். நமக்கும் அவருக்கும் இருக்கிற பந்தத்தைச் சரிசெய்து, நம்மைத் தன்னுடைய நண்பராக ஆக்கிக்கொள்கிறார். மோசமான ஒரு நோயில் இருந்து ஒருவர் குணமானால் அவர் ரொம்ப சந்தோஷப்படுவார். அதேமாதிரி, ஆன்மீக விதத்தில் குணமாகி யெகோவாவுடைய அங்கீகாரம் நமக்கு மறுபடியும் கிடைக்கும்போது நாம் ரொம்ப சந்தோஷப்படுகிறோம்.

“அவருடைய காயங்களால்தான் நாம் குணமானோம்” (ஏசா. 53:5)


யெகோவாவின் மன்னிப்பால் கிடைக்கும் நன்மை

18. இதுவரை பார்த்த உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்? (“யெகோவா நம்மை எப்படி மன்னிக்கிறார்?” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

18 யெகோவாவின் மன்னிப்பைப் பற்றி பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்? யெகோவா நம்மை மன்னிக்கும்போது நம்மை முழுமையாக மன்னிக்கிறார், நிரந்தரமாக மன்னிக்கிறார். அதனால், நம்முடைய பரலோக அப்பாவோடு நம்மால் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள முடிகிறது. அதேசமயத்தில், ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. யெகோவாவிடமிருந்து மன்னிப்பைப் பெறுவதற்கு மனிதர்களுக்குத் தகுதியோ, உரிமையோ இல்லை. இருந்தாலும், யெகோவா அவருடைய அன்பாலும் அளவற்ற கருணையாலும் நம்மை மன்னிக்கிறார். அது அவரிடமிருந்து கிடைக்கிற ஒரு அன்பளிப்பு!—ரோ. 3:24.

19. (அ) நாம் எதற்காக நன்றியோடு இருக்க வேண்டும்? (ரோமர் 4:8) (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

19 ரோமர் 4:8-ஐ வாசியுங்கள். யெகோவா ‘மனதார மன்னிப்பதால்’ நாம் ஒவ்வொருவரும் அவருக்கு எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்! (சங். 130:4) ஆனால், யெகோவா நம்மை மன்னிக்க வேண்டுமென்றால் நாம் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும். அதைப் பற்றி இயேசு இப்படிச் சொன்னார்: “மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னிக்காவிட்டால், உங்கள் தகப்பனும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.” (மத். 6:14, 15) அப்படியென்றால், யெகோவா மாதிரியே நாமும் மற்றவர்களை மன்னிப்பது ரொம்ப முக்கியம். ஆனால், அதை எப்படிச் செய்யலாம்? அடுத்த கட்டுரையில் அதைப் பற்றிப் பார்க்கலாம்.

பாட்டு 46 யெகோவாவே, நன்றி!

a “மனதார மன்னிக்கிறீர்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற எபிரெய வார்த்தைகள், யெகோவா மட்டுமே காட்டுகிற உண்மையான மன்னிப்பைக் குறிக்கிறது. யெகோவா மன்னிக்கிற விதத்துக்கும், மற்றவர்கள் மன்னிக்கிற விதத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.