நட்பில் விரிசல் ஏற்படும்போது நீங்கள் ஒரு நல்ல நண்பராக இருப்பீர்களா?
ஜானி, மாரெட்ஸியோவின் 50 வருஷ நட்பில் விரிசல் ஏற்படுவதற்கான ஒரு சமயம் வந்தது. மாரெட்ஸியோ இப்படிச் சொல்கிறார்: “நான் பிரச்சினையில இருந்தப்போ, பெரிய தப்பு பண்ணிட்டேன். நாங்க ரெண்டு பேரும் பிரியிற அளவுக்கு அது போயிடுச்சு.” இப்போது, ஜானி சொல்வதைக் கவனியுங்கள்: “ஆரம்பத்துல, மாரெட்ஸியோதான் எனக்கு பைபிள் படிப்பு எடுத்தார். ஆன்மீக விஷயங்கள்ல அவர் எனக்கு நல்ல வழிகாட்டியா இருந்தார். அதனால, அவர் செஞ்சத என்னால நம்பவே முடியல. நாங்க ரெண்டு பேரும் பிரிய வேண்டியிருக்கும்னு நினைச்சப்போ, நான் இடிஞ்சு போயிட்டேன். எனக்கு யாருமே இல்லனு நினைச்சேன்.”
நல்ல நண்பர்களை ஒரு சொத்து என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், நிலையான நட்பு தானாகவே அமைந்துவிடாது. ஒருவேளை, நம்முடைய நட்பில் விரிசல் ஏற்படும் சூழ்நிலைகள் வந்தால், நாம் என்ன செய்ய வேண்டும்? பைபிள் காலங்களில் இருந்த சில உண்மையான நண்பர்களுடைய நட்பிலும் விரிசல் ஏற்படுகிற சூழ்நிலைகள் வந்தன. அப்போது, அவர்கள் என்ன செய்தார்கள்? அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
நண்பர் தவறு செய்துவிடும்போது...
மேய்ப்பரும் ராஜாவுமான தாவீதுக்கு நல்ல நண்பர்கள் இருந்தார்கள். தாவீதின் நண்பர் என்றாலே யோனத்தானுடைய பெயர்தான் நம் ஞாபகத்துக்கு வரும். (1 சா. 18:1) ஆனால், தாவீதுக்கு வேறு சில நண்பர்களும் இருந்தார்கள். அதில், தீர்க்கதரிசியான நாத்தானும் ஒருவர். இவர்கள் எப்போது நண்பர்களாக ஆனார்கள் என்று பைபிள் சொல்வதில்லை. ஆனால், நாம் நம்முடைய நண்பரை நம்புவது போல, தாவீதும் ஒரு கட்டத்தில் நாத்தானை நம்பினார். யெகோவாவுக்காக ஒரு ஆலயத்தைக் கட்ட ஆசைப்படுவதாக நாத்தானிடம் சொன்னார். நாத்தான் தன்னுடைய நண்பர் என்பதாலும் அவருக்கு யெகோவாவின் சக்தி இருந்ததாலும் அவர் சொன்ன விஷயத்தை தாவீது மதித்தார்.—2 சா. 7:2, 3.
இருந்தாலும், அவர்களுடைய நட்பில் விரிசல் ஏற்படுவதற்கான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. பத்சேபாளுடன் தாவீது தவறான உறவுகொண்டார். பிறகு, அவளுடைய கணவன் உரியாவைப் போரில் கொல்வதற்காக ஏற்பாடு செய்தார். (2 சா. 11:2-21) பல வருஷங்களாக தாவீது யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்; நியாயமாகவும் நடந்துகொண்டார். ஆனாலும், இப்படியொரு மோசமான பாவத்தை அவர் செய்தார்! நல்ல ராஜாவான அவருக்கு என்ன ஆனது? அவர் செய்தது எவ்வளவு மோசமான விஷயமென்று அவருக்குத் தெரியவில்லையா? கடவுளிடமிருந்து இதை மறைத்துவிடலாம் என்று நினைத்தாரா?
இப்போது நாத்தான் என்ன செய்வார்? இந்த விஷயத்தைப் பற்றி வேறு யாராவது ராஜாவிடம் பேசட்டும் என்று நினைப்பாரா? உரியாவைக் கொல்ல தாவீது ஏற்பாடு செய்திருந்த விஷயம் மற்றவர்களுக்கும் தெரிந்திருந்தது. அதனால், இந்த விஷயத்தில் தலையிட்டு தாவீதோடு இருக்கும் நட்பை நாத்தான் ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்? சொல்லப்போனால், இதைப் பற்றி தாவீதிடம் பேசினால் நாத்தானுடைய உயிரே போய்விடலாம். ஏனென்றால், ஏற்கெனவே, அப்பாவியான உரியாவைக் கொல்ல தாவீது ஏற்பாடு செய்திருந்தார்.
நாத்தான் கடவுளுடைய சார்பில் பேசுபவராக இருந்தார். தான் அமைதியாக இருந்தால் தாவீதோடு இருக்கும் நட்பு முன்பு போல் இருக்காது என்றும், தன்னுடைய மனசாட்சி தன்னை உறுத்திக்கொண்டே இருக்கும் என்றும் நாத்தானுக்குத் தெரியும். அவருடைய நண்பரான தாவீது, யெகோவாவின் நட்பை இழந்துவிடும் விதத்தில் ஒன்றைச் செய்திருந்தார். இழந்த நட்பை மறுபடியும் பெறுவதற்கு, ஒரு உண்மையான நண்பரின் உதவி தாவீதுக்குத் தேவைப்பட்டது. நாத்தான் அப்படிப்பட்ட ஒரு உண்மையான நண்பராக இருந்தார். முன்பு மேய்ப்பராக இருந்த தாவீதின் மனதைத் தொடும் விதத்தில் ஒரு உதாரணத்தைச் சொல்லி அந்த விஷயத்தைப் பற்றி அவர் பேச ஆரம்பித்தார். கடவுள் சொல்லச் சொன்னதை நாத்தான் தாவீதிடம் சொன்னார். தான் செய்த பாவம் எந்தளவு மோசமானது என்பதைத் தாவீது உணரும் விதத்திலும், அதற்கேற்ற மாற்றங்களை அவர் செய்யும் விதத்திலும் தாவீதிடம் நாத்தான் பேசினார்.—2 சா. 12:1-14.
உங்களுடைய நண்பர் ஒரு பெரிய தவறையோ ஒரு மோசமான பாவத்தையோ செய்துவிட்டால், நீங்கள் என்ன செய்யலாம்? ‘அத பத்தி அவர்கிட்ட பேசுனா நட்புல விரிசல் வந்துடுமே’ என்று நினைத்துக்கொண்டு, உங்களை நீங்களே நியாயப்படுத்திக்கொள்ளலாம். அல்லது, ‘மூப்பர்கள் ஆன்மீக ரீதியில உதவி செய்வாங்கதான், ஆனா அவர் செஞ்ச தப்ப பத்தி அவங்ககிட்ட சொன்னா, நட்புக்கு துரோகம் செய்ற மாதிரி ஆயிடுமே’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், என்ன செய்வது சரியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஜானி இப்படிச் சொல்கிறார்: “மாரெட்ஸியோகிட்ட ஏதோ ஒரு மாற்றம் தெரிஞ்சது. முன்னெல்லாம் எல்லாத்தையும் மறைக்காம அவர் சொல்வார், ஆனா இப்போ அவர் அப்படி இல்ல. அத பத்தி பேச பயமா இருந்தாலும், கண்டிப்பா பேசியே ஆகணும்னு முடிவு செஞ்சேன். ‘அவர்கிட்ட என்ன பேசுறது, அவருக்குத்தான் எல்லாமே தெரியுமே. ஒருவேளை அவர் கடுமையா நடந்துக்கிட்டா, என்ன செய்றது’னு யோசிச்சேன். ஆனா, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து படிச்ச விஷயங்கள ஞாபகப்படுத்தி பார்த்தப்போ, அவர்கிட்ட பேசுறதுக்கு தைரியம் வந்துச்சு. எனக்கு உதவி தேவைப்பட்டப்போ மாரெட்ஸியோ நிறைய உதவி செஞ்சிருக்கார். எங்க நட்பு இதோட முடிஞ்சுடக் கூடாதுனு நினைச்சேன். அவர்மேல எனக்கு அக்கறை இருந்ததால அவருக்கு உதவணும்னு ஆசைப்பட்டேன்.”
அதைப் பற்றி மாரெட்ஸியோ இப்படிச் சொல்கிறார்: “ஜானி உண்மையா இருந்தார். அவர் செஞ்சது சரிதான். என்னோட தீர்மானத்தால வந்த விளைவுக்கு ஜானியும் பொறுப்பில்ல யெகோவாவும் பொறுப்பில்ல. அதனால, மூப்பர்கள் கண்டிச்சு திருத்துனப்போ, அத நான் ஏத்துக்கிட்டேன்; சீக்கிரமாவே நான் செஞ்ச தப்புல இருந்து மீண்டு வந்தேன்.”
நண்பர் பிரச்சினையில் இருக்கும்போது...
தாவீது கஷ்டப்பட்டபோது, சில நண்பர்கள் அவருக்கு உண்மையாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் ஊசாய்; பைபிள் இவரை ‘தாவீதின் நண்பர்’ என்று சொல்கிறது. (2 சா. 16:16; 1 நா. 27:33) அவர் அரண்மனை அதிகாரியாகவும், தாவீது ராஜாவின் நெருங்கிய நண்பராகவும் இருந்திருக்கலாம். சில சமயங்களில், ராஜாவின் ரகசிய கட்டளைகளை அவர்தான் நிறைவேற்றினார்.
தாவீதின் மகன் அப்சலோம் ஆட்சியைப் பறித்தபோது, நிறைய இஸ்ரவேலர்கள் அவன் பக்கம் சேர்ந்துகொண்டார்கள். ஆனால், ஊசாய் அவனோடு சேரவில்லை. தாவீது தப்பித்து ஓடியபோது, ஊசாயும் அவரோடு போனார். சொந்த மகனும், நெருக்கமான சிலரும் தனக்குத் துரோகம் செய்ததால், தாவீது ரொம்பவே மனம் உடைந்து போயிருந்தார். ஆனாலும், ஊசாய் தாவீதுக்கு உண்மையாக இருந்தார். தாவீதுக்கு எதிரான சதித்திட்டத்தை முறியடிக்க, தன்னுடைய உயிரையே பணயம் வைக்கத் தயாராக இருந்தார். தான் ஒரு அரண்மனை அதிகாரி என்பதாலும், வெறும் கடமை உணர்ச்சியாலும் அவர் அப்படிச் செய்யவில்லை. உண்மையான நண்பராக இருந்ததால்தான் அவர் அப்படிச் செய்தார்.—2 சா. 15:13-17, 32-37; 16:15–17:16.
சபையில் தங்களுக்கு என்ன பொறுப்புகள் இருந்தாலும், நியமிப்புகள் இருந்தாலும், இன்று சகோதர சகோதரிகள் ஒற்றுமையாக இருப்பதைப் பார்க்கும்போது, மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தங்களுடைய செயல்களால் அவர்கள் இதைத்தான் சொல்லாமல் சொல்கிறார்கள்: “உங்க ஃப்ரெண்டா இருக்கணுங்கிற கட்டாயத்தால, நான் உங்க ஃப்ரெண்டா இல்ல. நீங்க எனக்கு முக்கியங்கிறதுனாலதான் நான் உங்க ஃப்ரெண்டா இருக்கேன்.”
சகோதரர் ஃபெட்ரிக்கோவின் அனுபவத்தைக்
கவனியுங்கள். அவர் பிரச்சினையில் இருந்தபோது, அவருடைய நண்பர் ஆன்டோனியோ அவருக்குப் பக்கபலமாக இருந்தார். ஃபெட்ரிக்கோ இப்படிச் சொல்கிறார்: “ஆன்டோனியோ எங்க சபைக்கு வந்ததுக்கு அப்புறம், சீக்கிரமாவே நாங்க ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம். நாங்க ரெண்டு பேரும் உதவி ஊழியரா இருந்தோம். நாங்க ஒண்ணா வேலை செஞ்சது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. கொஞ்ச நாளைக்கு அப்புறம், அவர் மூப்பரா ஆனார். ஆன்டோனியோ என்னோட ஃப்ரெண்ட் மட்டுமில்ல, ஆன்மீக ரீதியில எனக்கு நல்ல முன்மாதிரியும் கூட!” பிறகு, ஃபெட்ரிக்கோ தவறான ஒரு காரியத்தைச் செய்தார், உடனடியாக ஆன்மீக உதவியைப் பெற்றுக்கொண்டார். ஆனால், ஒழுங்கான பயனியராகவும், உதவி ஊழியராகவும் சேவை செய்யும் தகுதியை அவர் இழந்துவிட்டார். அப்போது, ஆன்டோனியோ எப்படி நடந்துகொண்டார்?அதைப் பற்றி ஃபெட்ரிக்கோ இப்படிச் சொல்கிறார்: “என்னோட வலியை ஆன்டோனியோ புரிஞ்சிக்கிட்டார். உணர்ச்சி ரீதியில என்னை பலப்படுத்துறதுக்கு அவரால முடிஞ்சதையெல்லாம் செஞ்சார். ஆன்மீக ரீதியில நான் சரி ஆகணுங்கிறதுக்காக என்னை அக்கறையா பார்த்துக்கிட்டார், என்னை கைவிடவே இல்ல. மறுபடியும் ஆன்மீக ரீதியில முன்னேற்றம் செய்றதுக்கும், விடாமுயற்சியோட இருக்கிறதுக்கும் என்னை உற்சாகப்படுத்துனார்.” ஆன்டோனியோ இப்படிச் சொல்கிறார்: “நான் ஃபெட்ரிக்கோ கூட நிறைய நேரம் செலவு செஞ்சேன். எல்லாத்தையும் பத்தி, ஏன், அவரோட வலியையும் வேதனையையும் பத்திகூட அவர் என்கிட்ட தயக்கம் இல்லாம பேசணும்னு நினைச்சேன்.” கொஞ்சக் காலத்துக்குள், ஃபெட்ரிக்கோ ஆன்மீக ரீதியில் நல்ல முன்னேற்றம் செய்தார். திரும்பவும் ஒரு ஒழுங்கான பயனியராகவும் உதவி ஊழியராகவும் நியமிக்கப்பட்டார். “நாங்க இப்போ வேற வேற சபையில இருந்தாலும், முன்னவிட இப்போ நெருக்கமா இருக்கோம்” என்று ஆன்டோனியோ சொல்கிறார்.
ஏமாற்றப்பட்டதுபோல் உணர்வீர்களா?
உங்களுக்கு உதவி தேவைப்படுகிறபோது, உங்கள் நண்பர் உங்களை கைவிட்டு விட்டால், உங்களுக்கு எப்படி இருக்கும்? வேறு சில விஷயங்கள் உங்களுக்கு இன்னும் வேதனையாக இருக்கலாம். அப்போது என்ன செய்வீர்கள்? உங்கள் நண்பரை மன்னிப்பீர்களா? முன்பு இருந்தது போலவே இப்போதும் உங்களுடைய நட்பு பலமாக இருக்குமா?
இயேசு பூமியில் இருந்த கடைசி நாட்களில் என்ன நடந்தது என்பதை நினைத்துப் பாருங்கள். உண்மையுள்ள அவருடைய அப்போஸ்தலர்களோடு அவர் நிறைய நேரம் செலவு செய்திருந்தார். அவர்கள் ஒற்றுமையாக இருந்தார்கள்; அவர்களுக்குள் ஒரு விசேஷ பந்தம் இருந்தது. அதனால்தான், அவர்களைத் தன்னுடைய நண்பர்கள் என்று இயேசு சொன்னார். (யோவா. 15:15) இருந்தாலும், அவர் கைது செய்யப்பட்டபோது என்ன நடந்தது? அப்போஸ்தலர்கள் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். தான் ஒருபோதும் இயேசுவை விட்டுப் ஓடிப்போவதில்லை என்று எல்லார் முன்பாகவும் சொன்ன பேதுரு, அன்று ராத்திரியே, இயேசுவை யாரென்றே தெரியாது என்று சொல்லிவிட்டார்.—மத். 26:31-33, 56, 69-75.
தனியாகத்தான் சோதனைகளைச் சமாளிக்க வேண்டும் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. இருந்தாலும், தான் ஏமாற்றப்பட்டதாகவும், புண்படுத்தப்பட்டதாகவும் உணருவதற்கு அவருக்கு நியாயமான காரணங்கள் இருந்தன. உயிரோடு எழுப்பப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அவர் சீஷர்களோடு பேசியதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? ஏமாற்றமோ, வெறுப்போ, வருத்தமோ தனக்கு இருந்ததாக அவர் துளிகூட காட்டிக்கொள்ளவில்லை! தான் கைது செய்யப்பட்ட ராத்திரி அன்று சீஷர்கள் செய்த தவறு உட்பட, அவர்களுடைய எல்லா பலவீனங்களையும் ஒவ்வொன்றாக பட்டியல் போட்டுக் காட்ட வேண்டும் என்றும் அவர் நினைக்கவில்லை.
அதற்குப் பதிலாக, பேதுரு மற்றும் அப்போஸ்தலர்கள் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாக உறுதியளித்தார். மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் ஒரு முக்கியமான வேலை அவர்களுக்கு இருந்தது. மனித வரலாற்றிலேயே மிக முக்கியமான அந்த வேலைக்குத் தேவையான அறிவுரைகளைத் தந்ததன் மூலம், அவர்கள் மீதிருந்த நம்பிக்கையை அவர் உறுதிப்படுத்தினார். இயேசுவைப் பொறுத்தவரைக்கும், அப்போஸ்தலர்கள் இன்னும் அவருடைய நண்பர்கள்தான்! அவர் காட்டிய அன்பு அவர்களுடைய நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தது! தங்களுடைய எஜமானுக்கு மறுபடியும் ஏமாற்றம் தராமல் இருப்பதற்கு தங்களால் முடிந்ததையெல்லாம் அவர்கள் இனி செய்வார்கள். சொல்லப்போனால், தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு இயேசு கொடுத்திருந்த வேலையை அவர்கள் வெற்றிகரமாகச் செய்தார்கள்.—அப். 1:8; கொலோ. 1:23.
எல்விரா என்ற சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். தன்னுடைய தோழி ஜூலியானாவோடு இருந்த கருத்து வேறுபாட்டைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “நான் செஞ்சது அவளுக்கு கஷ்டமா இருந்துச்சுனு அவ சொன்னப்போ, மனசெல்லாம் ஒரு மாதிரி இருந்துச்சு. கோபப்படுறதுக்கு அவளுக்கு நியாயமான காரணம் இருக்கு. ஆனா, அவ என்னை பத்தியும், நான் அப்படி நடந்துகிட்டதால, எனக்கு வரப்போற பாதிப்பு பத்தியும்தான் கவலப்பட்டா. அது என் மனச தொட்டுடுச்சு. நான் அவள காயப்படுத்துனத பத்தி அவ யோசிக்கல, என்னோட தப்பால நான் என்ன விளைவுகளை அனுபவிச்சிக்கிட்டு இருக்கேங்கிறத பத்திதான் அவ கவலப்பட்டா. தன்னோட உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்காம, என்னை பத்தி கவலப்படற ஒரு ஃப்ரெண்ட் கிடைச்சதுக்காக நான் யெகோவாவுக்கு நன்றி சொன்னேன்.”
நட்பில் விரிசல் வரும்போது, ஒரு நல்ல நண்பர் என்ன செய்வார்? தன்னுடைய நண்பரிடம் கனிவாகப் பேசுவார்; தேவைப்பட்டால், வெளிப்படையாகப் பேசுவார். அப்படிப் பேசுகிற நண்பர் யாரைப் போல இருப்பார்? தங்களுடைய நண்பர் பிரச்சினையில் இருந்தபோது அவர்களுக்கு உண்மையாக இருந்த நாத்தான் மற்றும் ஊசாயைப் போலவும், தன்னுடைய நண்பர்களை மன்னிக்கத் தயாராக இருந்த இயேசுவைப் போலவும் இருப்பார். நீங்களும் இப்படிப்பட்ட ஒரு நண்பராக இருப்பீர்களா?