பழங்காலத்து மண் ஜாடியில் ஒரு பைபிள் பெயர்
2012-ல், மூவாயிரம் வருஷங்கள் பழமையான ஒரு மண் ஜாடியின் சிறு துண்டுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். அதைப் பார்த்ததும் அவர்களுக்கு ஒரே சந்தோஷம்! அதற்குக் காரணம், அந்த ஜாடியின் சிறு துண்டுகள் அல்ல, அதில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள்தான்!
தங்களுக்குக் கிடைத்த துண்டுகளை ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாகச் சேர்த்தபோது, அந்த ஜாடியில் எழுதப்பட்டிருந்த கானானிய எழுத்துக்களை அவர்களால் வாசிக்க முடிந்தது. “இஷ்பேல் பென் பீடா” என்று அதில் எழுதப்பட்டிருந்தது. “பீடாவின் மகன் எஸ்பால்” என்பதுதான் அதனுடைய அர்த்தம். இந்தப் பெயர் ஒரு பழங்கால பொருள்மீது இருப்பதை அப்போதுதான் ஆராய்ச்சியாளர்கள் முதல் முதலில் கண்டுபிடித்தார்கள்.
பைபிளில் எஸ்பால் என்ற பெயரில் இன்னொருவரும் குறிப்பிடப்பட்டிருக்கிறார். அவர் சவுல் ராஜாவின் மகன்களில் ஒருவர். (1 நா. 8:33; 9:39) இந்த மண் ஜாடியைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான யோசெஃப் கார்ஃபின்கெல் என்ற பேராசிரியர் இப்படிச் சொன்னார்: “எஸ்பால் என்ற பெயர் பைபிளில், தாவீது ராஜாவின் ஆட்சிக் காலத்தில் மட்டும்தான் இருந்தது. இப்போது, தொல்பொருள் ஆராய்ச்சியின் பதிவிலும் அந்தப் பெயரைத் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.” பைபிள் பதிவுகளைத் தொல்பொருள் ஆராய்ச்சி ஆதரிக்கிறது என்பதற்கு இது இன்னொரு உதாரணம்!
பைபிளில், சவுலின் மகன் எஸ்பால் என்பவர் இஸ்போசேத் என்றும் அழைக்கப்படுகிறார். (2 சா. 2:10) “பால்” என்பதற்குப் பதிலாக ஏன் “போசேத்” என்ற பெயர் இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது? எஸ்பால் என்ற பெயர், கானானியர்கள் வணங்கிய ‘பால்’ என்ற புயல் கடவுளை இஸ்ரவேலர்களுக்கு ஞாபகப்படுத்தலாம் என்பதற்காக, 2 சாமுவேல் புத்தகத்தில் இந்தப் பெயர் பயன்படுத்தப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனாலும், எஸ்பால் என்ற பெயர் 1 நாளாகமம் புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.