பெற்றோர்களே, ஞானஸ்நானம் எடுக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுகிறீர்களா?
“ஏன் தாமதிக்கிறாய்? எழுந்து, ஞானஸ்நானம் பெற்றுக்கொள்.” —அப். 22:16.
பாடல்கள்: 59, 89
1. தங்கள் பிள்ளை ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பே கிறிஸ்தவப் பெற்றோர்கள் எதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்?
ஞானஸ்நானம் எடுக்கத் தீர்மானித்தபோது என்ன நடந்தது என்பதைப் பற்றி ப்ளாஸ்ஸம் ப்ராண்ட் என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “ஞானஸ்நானம் எடுக்க ஆசைப்படறேன்னு பல மாசமா நான் அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டே இருந்தேன். அவங்களும் அத பத்தி அடிக்கடி எங்கிட்ட பேசுனாங்க. நான் எடுத்த தீர்மானம் எவ்வளவு முக்கியம்ங்குறது எனக்கு புரிஞ்சிருக்கான்னு தெரிஞ்சுக்க அவங்க விரும்புனாங்க. கடைசியா, என் வாழ்க்கையிலேயே முக்கியமான அந்த நாள் வந்துச்சு. அதுதான் டிசம்பர் 31, 1934!” இன்றும், ஞானமான தீர்மானங்கள் எடுப்பதற்கு தங்களுடைய பிள்ளைகளுக்கு உதவ வேண்டுமென்று பெற்றோர்கள் ஆசைப்படுகிறார்கள். சரியான காரணமில்லாமல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஞானஸ்நானத்தைத் தள்ளிப்போட்டால், பிள்ளைகளுக்கு யெகோவாவோடு இருக்கிற பந்தம் பாதிக்கப்படும். (யாக். 4:17) ஞானமான பெற்றோர்கள், தங்கள் பிள்ளை ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பே, கிறிஸ்துவின் சீஷராக ஆவதற்கு அவன் தயாராகிவிட்டானா என்பதை உறுதிசெய்துகொள்வார்கள்.
2. (அ) சில வட்டாரக் கண்காணிகள் எதை கவனித்திருக்கிறார்கள்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றி பார்ப்போம்?
2 சத்தியத்தில் வளர்க்கப்படுகிற சில பிள்ளைகள், டீனேஜ் பருவம் முடியும் சமயத்தில் அல்லது 20 வயதைத் தாண்டிய பிறகும்கூட ஞானஸ்நானம் எடுக்காமல்
இருப்பதை சில வட்டாரக் கண்காணிகள் கவனித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள், கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போகிறார்கள்; தங்களை யெகோவாவின் சாட்சிகளாகத்தான் நினைக்கிறார்கள். இருந்தாலும், ஏதோ சில காரணங்களுக்காக, இன்னும் யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுக்காமல் இருக்கிறார்கள். சில பெற்றோர்கள், ஞானஸ்நானம் எடுப்பதற்குத் தங்கள் பிள்ளை இன்னும் தயாராகவில்லை என்று நினைக்கிறார்கள். அவர்கள் அப்படி நினைப்பதற்கான நான்கு காரணங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.என் பிள்ளைக்கு ஞானஸ்நானம் எடுக்கிற வயது வந்துவிட்டதா?
3. ப்ளாஸ்ஸமின் பெற்றோர் எதைப் பற்றி யோசித்தார்கள்?
3 மேலே சொல்லப்பட்ட ப்ளாஸ்ஸமின் பெற்றோர், ஞானஸ்நானத்தைப் பற்றியும், அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் புரிந்துகொள்ளும் அளவுக்கு ப்ளாஸ்ஸமுக்கு வயது வந்துவிட்டதா என்று யோசித்தார்கள். யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணிப்பதற்குத் தங்கள் பிள்ளைகள் தயாராகிவிட்டார்களா என்பதைப் பெற்றோர்கள் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
4. மத்தேயு 28:19, 20-ல் இருக்கிற இயேசுவின் கட்டளை இன்றிருக்கும் பெற்றோர்களுக்கு எப்படி உதவும்?
4 மத்தேயு 28:19, 20-ஐ வாசியுங்கள். ஞானஸ்நானம் எடுப்பதற்கு வயது வரம்பு இருப்பதாக பைபிள் சொல்வதில்லை. இருந்தாலும், சீஷராக்கும் வேலையில் என்ன அடங்கியிருக்கிறது என்பதைப் பற்றி பெற்றோர்கள் கவனமாக யோசித்துப் பார்ப்பது நல்லது. மத்தேயு 28:19-ல் சொல்லப்பட்டிருக்கும் “சீஷர்களாக்கி” என்பதற்கான கிரேக்க வார்த்தைக்கு என்ன அர்த்தம்? ஒரு நபரை பைபிள் மாணாக்கராக அல்லது சீஷராக ஆக்கவேண்டுமென்ற குறிக்கோளோடு அவருக்குக் கற்றுத் தருவது என்று அர்த்தம்! இயேசுவின் போதனைகளை கற்றுக்கொண்டு, அதைப் புரிந்துகொள்பவர்களும், அவருக்குக் கீழ்ப்படிய ஆசைப்படுகிறவர்களும்தான் அவருடைய சீஷர்கள்! அதனால், பிள்ளைகள் பிறந்ததிலிருந்தே பெற்றோர்களுக்கு ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அதாவது, அந்தப் பிள்ளைகள் எதிர்காலத்தில் யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்து, கிறிஸ்துவின் சீஷர்களாக ஆகவேண்டும் என்ற குறிக்கோளோடு பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும்போதே ஞானஸ்நானம் எடுக்க தகுதி பெற முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், இளம் பிள்ளைகளால்கூட சத்தியத்தைப் புரிந்துகொண்டு அதை நேசிக்க முடியும் என்பதை பைபிள் காட்டுகிறது.
5, 6. (அ) தீமோத்தேயுவைப் பற்றிய பைபிள் பதிவிலிருந்து, அவருடைய ஞானஸ்நானத்தைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்? (ஆ) தங்கள் பிள்ளைகள் முன்னேறுவதற்கு ஞானமான பெற்றோர்கள் என்ன செய்யலாம்?
5 இளவயதிலேயே கடவுளுக்கு சேவை செய்ய தீர்மானித்த ஒரு சீஷர்தான் தீமோத்தேயு! கடவுளுடைய வார்த்தையிலிருந்த சத்தியத்தை “சிசுப் பருவத்திலிருந்தே” அவர் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததாக அப்போஸ்தலன் பவுல் சொன்னார். தீமோத்தேயுவின் அப்பா யெகோவாவை வணங்காதவராக இருந்தாலும், தீமோத்தேயு கடவுளுடைய வார்த்தையை நேசிப்பதற்கு அவருடைய அம்மாவும் பாட்டியும் உதவினார்கள். அதனால், அவரால் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள முடிந்தது. (2 தீ. 1:5; 3:14, 15) டீனேஜ் பருவம் முடியும் சமயத்தில் அல்லது 20 வயதைத் தாண்டிய சமயத்தில், சபையில் விசேஷ நியமிப்புகளைப் பெறுமளவுக்கு அவர் தகுதி பெற்றிருந்தார்.—அப். 16:1-3.
6 எல்லா பிள்ளைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எல்லா பிள்ளைகளும் ஒரே வயதில் ஆன்மீக முதிர்ச்சி அடைவதுமில்லை. சில பிள்ளைகள், இளவயதிலேயே சத்தியத்தைப் புரிந்துகொள்கிறார்கள், ஞானமான தீர்மானங்களை எடுக்கிறார்கள், ஞானஸ்நானம் எடுக்கவும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் மற்ற பிள்ளைகள், ஞானஸ்நானம் எடுப்பதற்குக் கொஞ்சக் காலம் எடுத்துக்கொள்கிறார்கள். ஞானமான பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஞானஸ்நானம் எடுக்கச்சொல்லி கட்டாயப்படுத்த மாட்டார்கள். அதற்குப் பதிலாக, பிள்ளைகள் தாங்களாகவே முன்னேறுவதற்கு உதவுவார்கள். தங்கள் பிள்ளைகள் நீதிமொழிகள் 27:11-ன்படி நடந்துகொள்ளும்போது பெற்றோர்கள் சந்தோஷப்படுகிறார்கள். (வாசியுங்கள்.) அதேசமயத்தில், பிள்ளைகள் சீஷராக ஆவதற்கு உதவ வேண்டும் என்பதுதான் தங்கள் குறிக்கோள் என்பதைப் பெற்றோர்கள் மறந்துவிடக் கூடாது. இதை மனதில் வைத்துக்கொண்டு, பெற்றோர்கள் இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘தன்னை அர்ப்பணிச்சு ஞானஸ்நானம் எடுக்குற அளவுக்கு என் பிள்ளை கடவுளை பத்தி தெரிஞ்சு வைச்சிருக்கானா?’
என் பிள்ளைக்குப் போதுமான அளவு பைபிளைப் பற்றி தெரியுமா?
7. ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பே பைபிள் போதனைகள் ஒவ்வொன்றையும் பற்றி நுணுக்கமாக தெரிந்துவைத்திருக்க வேண்டுமா? விளக்குங்கள்.
7 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்போது, கொலோசெயர் 1:9, 10-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு பைபிளை எந்தளவு தெரிந்துவைத்திருக்க வேண்டும்?
தங்கள் பிள்ளைகள் சத்தியத்தை நன்றாகத் தெரிந்துகொள்ள உதவுகிறார்கள். கடவுளுக்குத் தங்களை அர்ப்பணிப்பதற்கு இந்த அறிவு பிள்ளைகளைத் தூண்டுகிறது. அதற்காக, தங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பே, பைபிள் போதனைகள் ஒவ்வொன்றையும் பற்றி அவர்கள் நுணுக்கமாக தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. கிறிஸ்துவின் சீஷர்கள் ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் எடுத்ததற்குப் பிறகும் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. (8, 9. பிலிப்பியிலிருந்த சிறைக்காவலனுக்கு என்ன நடந்தது, அந்த அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
8 அந்தக் காலத்திலிருந்த ஒரு குடும்பத்தாருடைய அனுபவம், இன்றிருக்கும் பெற்றோர்களுக்கு உதவும். (அப். 16:25-33) கி.பி. 50-ல், தன்னுடைய இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது, அப்போஸ்தலன் பவுல் பிலிப்பி நகரத்துக்குப் போனார். அங்கிருந்தபோது, அவர்மீதும் சீலாமீதும் பொய்க்குற்றம் சாட்டப்பட்டது; அவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டார்கள். அந்த ராத்திரியில், பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு சிறையின் எல்லா கதவுகளும் திறந்துகொண்டன. கைதிகள் எல்லாரும் தப்பித்து ஓடிவிட்டதாக நினைத்து, சிறைக்காவலன் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தான். ஆனால், பவுல் அவனைத் தடுத்தார். பிறகு, பவுலும் சீலாவும், அந்தச் சிறைக்காவலனுக்கும் அவனுடைய குடும்பத்தாருக்கும் இயேசுவைப் பற்றிய சத்தியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள். இயேசுவைப் பற்றி கற்றுக்கொண்ட விஷயங்களை அவர்கள் நம்பினார்கள், அவருக்குக் கீழ்ப்படிவது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தார்கள். அதனால், தாமதிக்காமல் உடனடியாக ஞானஸ்நானம் எடுத்தார்கள். இவர்களுடைய அனுபவத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
9 ஒருவேளை, அந்தச் சிறைக்காவலன் ஓய்வுபெற்ற ரோமப் படைவீரனாக இருந்திருக்கலாம். கடவுளுடைய வார்த்தையைப் பற்றி அந்தச் சிறைக்காவலனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதனால், கிறிஸ்தவராக ஆவதற்கு, பைபிளைப் பற்றிய அடிப்படை சத்தியங்களை அவன் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது; தன்னுடைய ஊழியர்களிடமிருந்து யெகோவா எதை எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது; இயேசுவின் போதனைகளுக்குக் கீழ்ப்படியவும் வேண்டியிருந்தது. அந்தக் குறுகிய நேரத்தில் கற்றுக்கொண்ட விஷயங்கள், ஞானஸ்நானம் எடுப்பதற்கு அவனைத் தூண்டியது. ஞானஸ்நானத்துக்குப் பிறகும் அவன் தொடர்ந்து கற்றிருப்பான் என்பதில் சந்தேகமே இல்லை. அதனால், யெகோவாமேல் இருக்கிற அன்பாலும், அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற ஆசையாலும் ஞானஸ்நானம் எடுக்க விரும்புவதாக உங்கள் பிள்ளைகள் சொல்லும்போது, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? மூப்பர்களிடம் பேசும்படி சொல்ல வேண்டும்; உங்கள் பிள்ளை ஞானஸ்நானம் எடுக்க தகுதி பெற்றிருக்கிறானா என்பதை அவர்கள் பார்ப்பார்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஞானஸ்நானம் எடுத்த மற்ற கிறிஸ்தவர்களைப் போலவே, உங்கள் பிள்ளையும், தன் இறுதி மூச்சுவரை, ஏன், முடிவில்லாத காலம்வரை, தொடர்ந்து யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வான்.—ரோ. 11:33, 34.
எந்தக் கல்வி என் பிள்ளைக்கு வெற்றியைத் தேடித்தரும்?
10, 11. (அ) சில பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள்? (ஆ) எது உங்கள் பிள்ளைக்கு உண்மையான பாதுகாப்பைத் தரும்?
10 ‘என் பிள்ளை நல்லா படிச்சு ஒரு வேலைக்குப் போனதுக்கு அப்புறம் அவன் ஞானஸ்நானம் எடுக்கட்டும், அதுதான் அவனுக்கு நல்லது’ என்று சில பெற்றோர்கள் நினைக்கிறார்கள். நல்ல எண்ணத்தோடு அவர்கள் அப்படி நினைக்கலாம். ஆனால், அவர்கள் இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘இப்படிச் செய்றது உண்மையிலயே என் பிள்ளைக்கு பிரயோஜனமா இருக்குமா? இததான் பைபிள் கத்துக்கொடுக்குதா? நாம எப்படிப்பட்ட வாழ்க்கை வாழணும்னு யெகோவா ஆசைப்படுறாரு?’—பிரசங்கி 12:1-ஐ வாசியுங்கள்.
11 இந்த உலகமும், உலகத்தில் இருக்கிற காரியங்களும், யெகோவாவின் விருப்பத்துக்கும் சிந்தனைக்கும் எதிராக இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. (யாக். 4:7, 8; 1 யோ. 2:15-17; 5:19) யெகோவாவுடன் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ளும்போதுதான், சாத்தானிடமிருந்தும், இந்த உலகத்திடமிருந்தும், உலகத்தில் இருக்கிற மோசமான சிந்தனைகளிலிருந்தும் உங்கள் பிள்ளையால் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். பிள்ளைகளுடைய கல்விக்கும் வேலைக்கும் பெற்றோர்கள் முதலிடம் தந்தால், யெகோவாவுடன் இருக்கிற நெருக்கமான பந்தத்தைவிட, இந்த உலகமும், அதிலிருக்கிற காரியங்களும்தான் மிக முக்கியம் என்று பிள்ளைகள் நினைத்துவிடலாம். கடைசியில் அது ஆபத்தில்தான் போய் முடியும். பாசமான பெற்றோர்களே, சந்தோஷமாக இருப்பது எப்படி என்று இந்த உலகம் உங்கள் பிள்ளைக்கு சொல்லித்தர வேண்டுமென்றா நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்? யெகோவாவுக்கு முதலிடம் தந்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும், உண்மையான சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியும்.—சங்கீதம் 1:2, 3-ஐ வாசியுங்கள்.
என் பிள்ளை பாவம் செய்துவிட்டால் என்ன செய்வது?
12. தங்கள் பிள்ளை ஞானஸ்நானம் எடுப்பதற்கு இன்னும் கொஞ்சக் காலம் போகட்டும் என்று ஏன் சில பெற்றோர்கள் நினைக்கிறார்கள்?
12 தன் பிள்ளை ஞானஸ்நானம் எடுப்பது ஏன் தனக்குப் பிடிக்கவில்லை என்பதைப் பற்றி ஒரு அம்மா இப்படிச் சொன்னார்: “சபைநீக்கம்ங்குற ஏற்பாடு இருக்குறதுனாலதான் என் பொண்ணோட ஞானஸ்நானத்த நான் தள்ளிப்போட்டுக்கிட்டே இருக்கேன். இப்படி சொல்றதுக்கு எனக்கு வெட்கமாத்தான் இருக்கு.” அந்தச் சகோதரியைப் போலத்தான் சில பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அதாவது, தங்கள் பிள்ளை ஞானஸ்நானம் எடுப்பதற்கு இன்னும் கொஞ்சக் காலம் போக வேண்டுமென்று நினைக்கிறார்கள். அப்போதுதான் முட்டாள்தனமான தவறுகள் எதையும் அவன் செய்துவிட மாட்டான் என்று நியாயப்படுத்துகிறார்கள். (ஆதி. 8:21; நீதி. 22:15) தங்கள் பிள்ளை ஞானஸ்நானம் எடுக்கவில்லை என்றால், சபைநீக்கம் செய்யப்படுகிற நிலைமை அவனுக்கு வராது என்றும் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் நினைப்பது சரியா?—யாக். 1:22.
13. ஞானஸ்நானம் எடுக்காவிட்டால், கடவுளுக்குக் கணக்கு கொடுக்க வேண்டியதில்லை என்று அர்த்தமா? விளக்குங்கள்.
13 யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணிக்க இன்னும் தயாராகாத ஒரு பிள்ளையை ஞானஸ்நானம் எடுக்கச் சொல்லி எந்தப் பெற்றோரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள். அதேசமயத்தில், ஞானஸ்நானம் எடுத்தால்தான் தன் பிள்ளை யெகோவாவுக்கு கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர்கள் நினைக்கக் கூடாது; அப்படி நினைப்பது தவறு. ஏனென்றால், யெகோவாவின் பார்வையில் எது சரி எது தவறு என்பதைப் பற்றி உங்கள் பிள்ளைக்கு எப்போது தெரிந்ததோ, அப்போதிருந்தே உங்கள் பிள்ளை யெகோவாவுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது. (யாக்கோபு 4:17-ஐ வாசியுங்கள்.) தங்கள் பிள்ளை ஞானஸ்நானம் எடுப்பதை ஞானமான பெற்றோர்கள் தடுக்க மாட்டார்கள். யெகோவா எதை நேசிக்கிறாரோ அதை நேசிக்கவும், யெகோவா எதை வெறுக்கிறாரோ அதை வெறுக்கவும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் இளவயதிலிருந்தே சொல்லிக்கொடுக்கிறார்கள்; தங்களுடைய முன்மாதிரியின் மூலம் இதை கற்றுக்கொடுக்கிறார்கள். (லூக். 6:40) யெகோவாமேல் உங்கள் பிள்ளைக்கு அன்பு இருக்கும்போது, யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்ய அவன் ஆசைப்படுவான். அந்த அன்பு, மோசமான பாவத்தைச் செய்யாதபடி அவனைப் பாதுகாக்கும்.—ஏசா. 35:8.
மற்றவர்களின் உதவி
14. பெற்றோர்களின் முயற்சிகளுக்கு மூப்பர்கள் எப்படி ஆதரவு தரலாம்?
14 யெகோவாவின் சேவையில் வைக்க வேண்டிய இலக்குகளைப் பற்றி உற்சாகமூட்டும் விதத்தில் பேசுவதன் மூலம், பெற்றோர்கள் எடுக்கிற முயற்சிகளுக்கு மூப்பர்கள் ஆதரவு தரலாம். தனக்கு ஆறு வயது இருக்கும்போது, சகோதரர் ரஸல் தன்னிடம் பேசியதைப் பற்றி ஒரு சகோதரி இப்படிச் சொன்னார்: “என்னோட ஆன்மீக இலக்குகள பத்தி 15 நிமிஷம் அவரு என்கிட்ட பேசுனாரு.” அதனால் என்ன பலன் கிடைத்தது? பிற்பாடு அந்தச் சகோதரி பயனியர் சேவையை ஆரம்பித்தார், 70 வருஷங்களுக்கும்மேல் தொடர்ந்து பயனியர் சேவை செய்தார்! உற்சாகமூட்டும் வார்த்தைகள் ஒருவருடைய வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது என்பது எவ்வளவு உண்மை! (நீதி. 25:11) மூப்பர்கள், பெற்றோர்களையும் பிள்ளைகளையும் அழைத்து ராஜ்ய மன்றத்தில் சில வேலைகளைக் கொடுக்கலாம். பிள்ளைகளுடைய வயதுக்கும் திறமைக்கும் ஏற்றபடி, அவர்களுக்கு அந்த வேலைகளைப் பிரித்துக் கொடுக்கலாம்.
15. சபையில் இருக்கிற மற்றவர்கள் எப்படி இளம் பிள்ளைகளுக்கு உதவலாம்?
15 இளைஞர்கள்மேல் அக்கறை காட்டுவதன் மூலம், சபையில் இருக்கிற மற்றவர்களும் அவர்களுக்கு உதவலாம். உதாரணத்துக்கு, இளைஞர்கள் யெகோவாவிடம் நெருக்கமான பந்தத்தை வளர்த்துவருவதற்கான அறிகுறிகளை நீங்கள் கவனிக்கலாம். ஒரு பிள்ளை கூட்டங்களில் அருமையாக பதில் சொல்லலாம் அல்லது வார மத்தியில் நடக்கிற கூட்டத்தில் ஏதாவது நியமிப்பைச் செய்யலாம். பள்ளியில் சங். 35:18.
சாட்சி கொடுக்கலாம் அல்லது கெட்டது செய்வதற்கான தூண்டுதல் வந்தும் சரியானதைச் செய்யலாம். அப்படிப்பட்ட பிள்ளைகளை உடனடியாகப் பாராட்டுங்கள். கூட்டங்களுக்கு முன்னும் பின்னும் இளம் பிள்ளைகளோடு பேசுவதை ஒரு குறிக்கோளாக வைத்துக்கொள்ளுங்கள். நாம் அப்படிச் செய்யும்போது, தாங்களும் ‘மாபெரும் சபையின்’ பாகம்தான் என்பதை பிள்ளைகள் உணருவார்கள்.—ஞானஸ்நானம் எடுக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்
16, 17. (அ) பிள்ளைகள் ஞானஸ்நானம் எடுப்பது ஏன் முக்கியம்? (ஆ) கிறிஸ்தவப் பெற்றோர்கள் என்ன சந்தோஷத்தை அனுபவிக்கலாம்? (ஆரம்பப் படம்)
16 யெகோவாவை நேசிக்க தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது, பெற்றோர்களுக்கு இருக்கிற மிகப் பெரிய பாக்கியங்களில் ஒன்று! (சங். 127:3; எபே. 6:4) இஸ்ரவேல் தேசத்தில், பிறக்கும்போதே பிள்ளைகள் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். ஆனால், நம் பிள்ளைகள் அப்படி இல்லை. யெகோவாவையும் சத்தியத்தையும் பெற்றோர்கள் நேசிக்கிறார்கள் என்பதற்காக, பிள்ளைகளும் நேசிப்பார்கள் என்று சொல்ல முடியாது. பிள்ளை பிறந்த அந்த நாளிலிருந்தே பெற்றோர்களுக்கு ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அதாவது, அந்தப் பிள்ளை கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுத்து, சீஷராக ஆவதற்கு உதவ வேண்டும் என்ற குறிக்கோள் இருக்க வேண்டும். ஒருவருடைய வாழ்க்கையில் எது மிக முக்கியம் என்று நினைக்கிறீர்கள்? ஒருவர் தன்னை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுத்து, யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்ய வேண்டும். இப்படிச் செய்வது, மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பதற்கு அவருக்கு வாய்ப்பளிக்கும்!—மத். 24:13.
17 ஆரம்பத்தில் பார்த்த ப்ளாஸ்ஸம் ப்ராண்ட் ஞானஸ்நானம் எடுக்க ஆசைப்பட்டபோது, அதற்கு அவள் தயாராகிவிட்டாளா என்பதை உறுதிசெய்து கொள்ள அவளுடைய பெற்றோர் விரும்பினார்கள். அவள் தயாராக இருக்கிறாள் என்று தெரிந்ததும், அவளுடைய தீர்மானத்தை அவர்கள் ஆதரித்தார்கள். ஞானஸ்நானம் எடுப்பதற்கு முந்தின நாள் ராத்திரி தன்னுடைய அப்பா என்ன செய்தார் என்பதைப் பற்றி ப்ளாஸ்ஸம் ப்ராண்ட் இப்படிச் சொன்னாள்: “ஜெபம் செய்றதுக்கு எங்க எல்லாரையும் முட்டி போட சொன்னாரு. தன்னோட குட்டிப்பொண்ணு யெகோவாவுக்கு தன்னை அர்ப்பணிச்சதை நினைச்சு ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுறதா ஜெபத்துல சொன்னாரு.” 60 வருஷங்களுக்குப் பிறகு, ப்ளாஸ்ஸம் இப்படிச் சொன்னார்: “எவ்வளவு வருஷம் ஆனாலும் அந்த ராத்திரிய என்னால மறக்கவே முடியாது!” பெற்றோர்களே, உங்கள் பிள்ளை தன்னை யெகோவாவுக்கு அர்ப்பணித்து, ஞானஸ்நானம் பெற்ற ஊழியராக ஆகும்போது, உங்களுக்கு அளவில்லாத சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கட்டும்!
^ பாரா. 9 இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள், தொகுதி 2 (ஆங்கிலம்), பக். 304-310-ல் இருக்கிற தகவல்களைப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கலந்துபேசலாம். அதோடு, ஏப்ரல் 2011, நம் ராஜ்ய ஊழியம், பக். 2-ல் இருக்கிற “கேள்விப் பெட்டி” என்ற பகுதியையும் பாருங்கள்.