கடவுளோடு வேலை செய்வது சந்தோஷத்தைத் தருகிறது
“கடவுளிடமிருந்து அளவற்ற கருணையைப் பெற்றுக்கொண்ட பின்பு அதன் நோக்கத்தை நிறைவேற்றாமல் இருந்துவிடாதீர்கள் என அவருடைய சக வேலையாட்களான நாங்கள் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்.”—2 கொ. 6:1.
பாடல்கள்: 75, 74
1. யெகோவா ரொம்ப உயர்ந்தவராக இருந்தாலும் மற்றவர்களை என்ன செய்யும்படி அழைக்கிறார்?
இந்தப் பிரபஞ்சத்திலேயே யெகோவாதான் உயர்ந்தவர். அவருக்கு சமமானவர் யாருமே இல்லை. அவர்தான் எல்லாவற்றையும் படைத்தார். நம்மால் கற்பனையே செய்ய முடியாதளவுக்கு ஞானமும் சக்தியும் அவருக்கு இருக்கிறது. இந்த உண்மையை யெகோவா யோபுவுக்கு உணர்த்திய பிறகு யோபு இப்படிச் சொன்னார்: “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.” (யோபு 42:2) தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற யெகோவாவுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. இருந்தாலும், அவரோடு சேர்ந்து வேலை செய்யும்படி மற்றவர்களை அன்போடு அழைக்கிறார்.
2. என்ன முக்கியமான வேலையை இயேசுவுக்கு யெகோவா கொடுத்தார்?
2 யெகோவா முதன்முதலில் அவருடைய மகனைப் படைத்தார். அவரோடு சேர்ந்து மற்ற எல்லாவற்றையும் படைத்தார். (யோவா. 1:1-3, 18) இயேசுவைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொன்னார்: “பரலோகத்திலுள்ளவை, பூமியிலுள்ளவை, காணப்படுகிறவை, காணப்படாதவை ஆகிய அனைத்தும்—அவை சிம்மாசனங்களோ தலைமை ஸ்தானங்களோ நிர்வாகங்களோ அதிகாரங்களோ எதுவாக இருந்தாலும்—அவர் மூலமாகவே படைக்கப்பட்டன. எல்லாமே அவர் வழியாகவும் அவருக்காகவும் படைக்கப்பட்டன.” (கொலோ. 1:15-17) யெகோவா அவருடைய மகனுக்கு இந்த முக்கியமான வேலையைக் கொடுத்தது மட்டுமில்லாமல் அதைப் பற்றி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தினார். இயேசுவை யெகோவா எந்தளவு கவுரவப்படுத்தியிருக்கிறார்!
3. ஆதாமுக்கு யெகோவா என்ன வேலையைக் கொடுத்தார், ஏன்?
3 தன்னோடு சேர்ந்து வேலை செய்ய யெகோவா மனிதர்களையும் அழைத்திருக்கிறார். உதாரணத்துக்கு, மிருகங்களுக்குப் பெயர் வைக்கும்படி ஆதாமிடம் சொன்னார். (ஆதி. 2:19, 20) இந்த வேலையை ஆதாம் எவ்வளவு சந்தோஷமாக செய்திருப்பார்! ஒவ்வொரு மிருகத்தையும் கூர்ந்து கவனித்தார். அது பார்க்க எப்படி இருக்கிறது, எப்படி நடந்துகொள்கிறது என்பதையெல்லாம் வைத்து அதற்குப் பெயர் வைத்தார். யெகோவாதான் எல்லா மிருகங்களையும் படைத்தார், அதனால் அவரே அதற்குப் பெயர் வைத்திருக்கலாம். இருந்தாலும், ஆதாமுக்கு அந்த வேலையை கொடுத்தார். இப்படிக் கொடுத்ததால் ஆதாம்மீது எவ்வளவு அன்பு இருந்தது என்பதைக் காட்டினார். அதுமட்டுமல்ல, இந்த முழு பூமியையும் ஒரு அழகான தோட்டமாக மாற்றும் வேலையையும் ஆதாமுக்குக் கொடுத்தார். (ஆதி. 1:27, 28) ஆனால் ஆதாமுக்கு, யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்ய விருப்பமில்லை. அதனால் அவனுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் கஷ்டமும் வேதனையும் வந்தது.—ஆதி. 3:17-19, 23.
4. யெகோவாவோடு வேலை செய்தவர்கள் எப்படி அவருடைய விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்?
4 தன்னோடு சேர்ந்து வேலை செய்ய யெகோவா இன்னும் சிலரையும் அழைத்திருக்கிறார். உதாரணத்துக்கு, குடும்பமாக பெருவெள்ளத்திலிருந்து தப்பிக்க நோவா ஒரு பெரிய பேழையைக் கட்டினார். மோசே எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களை விடுதலை செய்தார். யோசுவா இஸ்ரவேலர்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் அழைத்துக்கொண்டு போனார். சாலொமோன் எருசலேமில் ஆலயத்தைக் கட்டினார். மரியாள் இயேசுவைப் பெற்றெடுத்து வளர்த்தார். இப்படி யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்த நிறையப் பேர் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
5. யெகோவாவோடு சேர்ந்து நாம் என்ன வேலையை செய்கிறோம், இந்த வேலையை செய்ய யெகோவாவுக்கு நம்முடைய உதவி தேவைப்படுகிறதா? (ஆரம்பப் படம்)
5 இன்றும், யெகோவா தன்னுடைய அரசாங்கத்துக்கு முழு ஆதரவு கொடுக்கும்படி நம்மை அழைக்கிறார். அவருக்கு சேவை செய்ய நமக்கு நிறைய வழிகள் இருக்கின்றன. நம் எல்லாராலும் அவருக்கு ஒரேமாதிரி சேவை செய்ய முடியவில்லை என்றாலும் நம் எல்லாராலும் அவருடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிக்க முடியும். இந்த வேலையை யெகோவாவே செய்திருக்க முடியும். வானத்திலிருந்து நேரடியாக மனிதர்களிடம் பேசியிருக்க முடியும். யெகோவா நினைத்தால் மேசியானிய ராஜாவைப் பற்றி பேச கற்களைக்கூட பயன்படுத்துவார் என்று இயேசு சொன்னார். (லூக். 19:37-40) ஆனால், அவருடைய “சக வேலையாட்களாக” இருக்கும் வாய்ப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார். (1 கொ. 3:9) “கடவுளிடமிருந்து அளவற்ற கருணையைப் பெற்றுக்கொண்ட பின்பு அதன் நோக்கத்தை நிறைவேற்றாமல் இருந்துவிடாதீர்கள் என அவருடைய சக வேலையாட்களான நாங்கள் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (2 கொ. 6:1) யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்வது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்! இந்த வேலை நமக்கு எப்படி சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்று பார்க்கலாம்.
நமக்கு சந்தோஷத்தைத் தருகிறது
6. யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்ததைப் பற்றி இயேசு எப்படி உணர்ந்தார்?
6 யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்வது எப்போதுமே சந்தோஷத்தைக் கொடுக்கிறது. பூமிக்கு வருவதற்கு முன்பு இயேசு இப்படிச் சொன்னார்: “யெகோவா என்னை முதன்முதலில் படைத்தார், பல காலத்துக்கு முன்னால் என்னை உருவாக்கினார் . . . நான் அவருக்குப் பக்கத்தில் கைதேர்ந்த கலைஞனாக இருந்தேன். தினமும் என்மேல் அவர் அளவுகடந்த அன்பு காட்டினார்; அவருடன் எப்போதும் சந்தோஷமாக இருந்தேன்.” (நீதி. 8:22, 30, NW) யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்தது இயேசுவுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால், அவரால் நிறைய வேலைகளை செய்ய முடிந்தது, யெகோவா தன்னை நேசிக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. நாமும் இயேசுவைப் போலவே உணர்கிறோமா?
7. பிரசங்க வேலை நமக்கு ஏன் சந்தோஷத்தைக் கொடுக்கிறது?
7 பெற்றுக்கொள்வது, கொடுப்பது—இரண்டுமே நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று இயேசு சொன்னார். (அப். 20:35) அது உண்மைதான். யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்டபோது நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவரைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போதும் நமக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் பைபிளை புரிந்துகொள்வதால்... யெகோவாவுடைய நண்பராவதால்... அவர்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தைப் பார்க்கும்போது நமக்கும் சந்தோஷமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, யெகோவாவுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று அவர்கள் யோசிக்கும்போது, வாழ்க்கையில் மாற்றங்கள் செய்யும்போது, நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த வேலையையும்விட பிரசங்க வேலைதான் ரொம்ப முக்கியமான வேலை, திருப்தியைக் கொடுக்கும் வேலை. கடவுளுடைய நண்பர்களாக ஆகிறவர்களுக்கு முடிவில்லா வாழ்க்கையைக் கொடுக்கவும் இந்த வேலை உதவி செய்கிறது.—2 கொ. 5:20.
8. யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்வதால் கிடைக்கும் சந்தோஷத்தைப் பற்றி சிலர் என்ன சொல்கிறார்கள்?
8 யெகோவாவைப் பற்றி மற்றவர்களுக்கு நாம் சொல்லிக்கொடுப்பதைப் பார்க்கும்போது அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார்; அதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளை அவர் உயர்வாக மதிக்கிறார். இதுவும் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. (1 கொரிந்தியர் 15:58-ஐ வாசியுங்கள்.) இத்தாலியில் இருக்கும் மார்க்கோ சொல்கிறார்: “என்னால முடிஞ்ச வரைக்கும் யெகோவாவுக்கு சேவை செய்றேன், அதை நினைக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதை வார்த்தைகளால விவரிக்கவே முடியாது. நான் செஞ்சதை மனுஷங்க வேணும்னா மறந்துடுவாங்க ஆனா யெகோவா மறக்கவே மாட்டார்.” இத்தாலியில் இருக்கும் பிராங்கோ என்பவரும் இப்படிச் சொல்கிறார்: “யெகோவா நமக்கு பைபிளையும் இன்னும் நிறைய விஷயங்களையும் கொடுத்திருக்கார். அது மூலமா அவர் நம்மள நேசிக்கிறதையும் நாம செய்ற சின்ன சின்ன வேலைகளைக்கூட உயர்வா மதிக்கிறதையும் காட்டுறார். அதனாலதான் அவரோட சேர்ந்து வேலை செய்றது சந்தோஷத்தையும் என் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் கொடுக்குது.”
யெகோவாவோடும் மற்றவர்களோடும் நெருங்கிய நட்பை அனுபவிக்க உதவுகிறது
9. யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் எப்படிப்பட்ட பந்தம் இருக்கிறது, ஏன்?
9 நமக்குப் பிடித்தவர்களோடு சேர்ந்து வேலை செய்யும்போது அவர்களுடைய நெருங்கிய நண்பர்களாக ஆவோம். அவர்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது, அவர்களிடம் என்ன நல்ல குணங்கள் இருக்கிறது என்பதையெல்லாம் நன்றாகத் தெரிந்துகொள்வோம். வாழ்க்கையில் அவர்களுக்கு இருக்கும் லட்சியத்தையும் அதை அடைய அவர்கள் எடுக்கும் முயற்சிகளையும் பற்றி தெரிந்துகொள்வோம். இயேசுவும் யெகோவாவோடு சேர்ந்து கோடிக்கணக்கான வருஷங்கள் வேலை செய்திருக்கிறார். அதனால், அவர்களுக்குள் இருந்த பந்தம் பலமானது; அதை யாராலும் முறிக்க முடியாது. அவர்கள் ஒரேமாதிரி யோசிக்கிறார்கள், ஒன்றாக சேர்ந்தே எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். அதனால்தான் “நானும் என் தகப்பனும் ஒன்றாயிருக்கிறோம்” என்று இயேசு சொன்னார்.—யோவா. 10:30.
10. யெகோவாவோடும் மற்றவர்களோடும் நெருங்கி இருக்க பிரசங்க வேலை நமக்கு எப்படி உதவுகிறது?
10 ‘நாம் ஒன்றாயிருப்பது போல் இவர்களும் ஒன்றாயிருக்க’ வேண்டும் என்று இயேசு ஜெபம் செய்தார். சீடர்களை யெகோவா பாதுகாப்பதற்காக அப்படிக் கேட்டார். (யோவா. 17:11) நாம் கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழும்போதும் பிரசங்க வேலையை செய்யும்போதும் யெகோவாவுடைய குணங்களைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்வோம். யெகோவாவையே நம்பியிருப்பதும் அவருக்குக் கீழ்ப்படிவதும் எவ்வளவு ஞானமானது என்பதைப் புரிந்துகொள்வோம். நாம் யெகோவாவிடம் நெருங்கி போகும்போது அவரும் நம்மிடம் நெருங்கி வருவார். (யாக்கோபு 4:8-ஐ வாசியுங்கள்.) அதோடு, நம் சகோதர சகோதரிகளோடு நெருங்கிய நண்பர்களாக இருப்போம். ஏனென்றால் நமக்கு ஒரேமாதிரியான லட்சியம் இருக்கிறது. நாம் ஒன்று சேர்ந்து யெகோவாவுக்கு சேவை செய்கிறோம்... கஷ்டங்களை சமாளிக்கிறோம்... சந்தோஷத்தை அனுபவிக்கிறோம். பிரிட்டனில் இருக்கும் ஆக்டேவியா என்ற சகோதரி சொல்கிறார்: “யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்றதுனால சகோதர சகோதரிகளோட இன்னும் நெருங்கி இருக்க முடியுது.” அதற்கு காரணம் என்ன? “யெகோவாவுக்கு சேவை செய்றதுதான் எங்க எல்லாருடைய லட்சியமா இருக்கு.” நாமும் அவரைப் போல்தான் உணர்கிறோம் இல்லையா? யெகோவாவை சந்தோஷப்படுத்துவதற்காக சகோதர சகோதரிகள் எடுக்கும் முயற்சிகளைப் பார்க்கும்போது அவர்களுடைய நண்பர்களாக ஆக வேண்டும் என்ற ஆசை நமக்கும் வருகிறது.
11. புதிய உலகத்தில் யெகோவாவோடும் சகோதர சகோதரிகளோடும் நாம் ஏன் இன்னும் நெருங்கிய பந்தத்தை அனுபவிப்போம்?
11 யெகோவாவையும் மற்றவர்களையும் நாம் இப்போது அதிகமாக நேசித்தாலும் புதிய உலகத்தில் நாம் அவர்களை இன்னும் அதிகமாக நேசிப்போம். அங்கே நாம் எல்லாரும் செய்யப்போகும் அருமையான வேலைகளைக் கொஞ்சம் யோசித்து பாருங்கள்! இறந்துபோனவர்களை நாம் திரும்பவும் பார்க்கப் போகிறோம், யெகோவாவைப் பற்றி அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க போகிறோம். இந்தப் பூமியை ஓர் அழகான தோட்டமாகவும் மாற்ற போகிறோம். இந்த வேலைகளை எல்லாம் நாம் ஒன்று சேர்ந்து செய்யும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! அதுமட்டுமா, கிறிஸ்துவின் ஆட்சியில் எல்லாருக்கும் பாவத்தில் இருந்து விடுதலை கிடைக்க போகிறது. அப்போது, நாம் ஒருவரையொருவர் இன்னும் அதிகமாக நேசிப்போம். ஒற்றுமையாக ஒரே குடும்பமாக இருப்போம். ‘சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்க’ போகும் யெகோவாவோடும் நெருங்கிய பந்தத்தை அனுபவிப்போம்.—சங். 145:16.
நமக்குப் பாதுகாப்பைத் தருகிறது
12. பிரசங்க வேலை நமக்கு எப்படி பாதுகாப்பாக இருக்கிறது?
12 யெகோவாவோடு இருக்கும் பந்தத்தை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் நாம் சாத்தானின் உலகத்தில் வாழ்கிறோம்; அதோடு, நாம் பாவம் செய்யும் இயல்புடையவர்களாக இருக்கிறோம். நாம் கவனமாக இல்லையென்றால் இந்த உலக மக்களைப் போல் யோசிக்கவும் நடக்கவும் ஆரம்பித்துவிடுவோம். வேகமாகப் பாயும் ஆற்றில் எதிர்நீச்சல் போட வேண்டும் என்றால் நம்முடைய முழு பலத்தையும் பயன்படுத்த வேண்டும். அதேபோல், சாத்தானின் உலகத்தில் வாழ்ந்தாலும் உலக மக்களைப் போல் நடக்காமல் இருக்க நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். அதற்கு பிரசங்க வேலை நமக்கு எப்படி உதவுகிறது? நாம் பிரசங்க வேலையில் கலந்துகொள்ளும்போது எப்போதும் பிரயோஜனமான விஷயங்களை... முக்கியமான விஷயங்களை... பற்றியே பேசிக்கொண்டு இருப்போம். நம் விசுவாசத்தை பலவீனமாக்கும் விஷயங்களைப் பற்றி யோசிக்க மாட்டோம். (பிலி. 4:8) அதுமட்டுமல்ல, யெகோவாவுடைய வாக்குறுதிகளையும் சட்டத்திட்டங்களையும் பற்றி ஞாபகப்படுத்தி பார்ப்போம். அது நம் விசுவாசத்தை பலப்படுத்தும். அதோடு நல்ல குணங்களை தொடர்ந்து வளர்த்துக்கொள்ளவும் உதவும். இந்தக் குணங்கள் சாத்தானிடமிருந்தும் இந்த உலகத்தாரிடமிருந்தும் நம்மைப் பாதுகாக்கும்.—எபேசியர் 6:14-17-ஐ வாசியுங்கள்.
13. பிரசங்க வேலையைப் பற்றி ஒரு சகோதரர் எப்படி உணர்கிறார்?
13 பிரசங்கிப்பதில்... பைபிளை ஆழமாக படிப்பதில்... சபையில் இருப்பவர்களுக்கு உதவிகள் செய்வதில்... நாம் அதிக நேரம் செலவு செய்யும்போது சொந்த பிரச்சினைகளைப் பற்றி யோசிக்க நமக்கு நேரம் இருக்காது. இதுவும் நமக்குப் பாதுகாப்பைத் தருகிறது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஜோயல் சொல்கிறார்: “ஊழியத்துக்கு போகும்போதுதான் மக்கள் எவ்ளோ கஷ்டத்துல இருக்காங்கனு என்னால புரிஞ்சிக்க முடியுது. அதேசமயம் பைபிள் சொல்ற மாதிரி வாழ்றதுனால எனக்கு எவ்ளோ நன்மை கிடைக்குதுனும் புரிஞ்சிக்க முடியுது. எப்பவும் யெகோவாவையும் சகோதர சகோதரிகளையும் நம்பியிருக்கவும் மனத்தாழ்மையா இருக்கவும் பிரசங்க வேலை எனக்கு உதவுது.”
14. யெகோவாவுடைய சக்தி இருப்பதால்தான் நாம் பிரசங்க வேலையை தொடர்ந்து செய்கிறோம் என்று எப்படிச் சொல்லலாம்?
14 யெகோவா கொடுக்கும் சக்தியில்தான் பிரசங்க வேலையை செய்கிறோம் என்பதில் நமக்கு சந்தேகமே வேண்டாம். அதற்கு இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: உங்கள் பகுதியில் இருக்கும் மக்களுக்கு சத்தான உணவு கொடுக்கும் வேலையை நீங்கள் செய்வதாக நினைத்துக்கொள்ளுங்கள். அதற்கு உங்களுக்கு எந்த சம்பளமும் இல்லை. உங்கள் சொந்த செலவிலேயே இந்த வேலையை செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் கொடுக்கும் உணவை நிறையப் பேர் வாங்கிக்கொள்வதில்லை; அதைவிட கொடுமை, சிலர் உங்களை வெறுக்கவும் செய்கிறார்கள். இப்படியே போனால் எத்தனை நாட்களுக்கு நீங்கள் இந்த வேலையை செய்வீர்கள்? ஜனங்கள் நடந்துகொள்வதைப் பார்த்து சீக்கிரமே நீங்கள் சோர்ந்துவிடலாம், அந்த வேலையையே விட்டுவிடலாம்.
ஆனால் பிரசங்க வேலையை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் இந்த வேலையை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து செய்கிறோம். அதுவும் நம் சொந்த செலவிலேயே செய்கிறோம். மக்கள் நம்மை கேலி கிண்டல் செய்தாலும், நம்மீது கோபப்பட்டாலும் நாம் இந்த வேலையை செய்கிறோம். யெகோவாவுடைய சக்தி இருப்பதால்தானே இந்த வேலையை நம்மால் தொடர்ந்து செய்ய முடிகிறது!கடவுள்மீதும் மற்றவர்கள்மீதும் இருக்கும் அன்பைக் காட்ட உதவுகிறது
15. பிரசங்க வேலை எப்படி யெகோவாவுடைய விருப்பத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது?
15 பிரசங்க வேலை யெகோவாவுடைய விருப்பத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. எப்படி? மனிதர்கள் என்றென்றும் வாழ வேண்டும் என்றுதான் யெகோவா விரும்புகிறார். ஆதாம் பாவம் செய்த பிறகும் அவருடைய விருப்பத்தை மாற்றிக்கொள்ளவில்லை. (ஏசா. 55:11) நம்மைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை செய்வதற்காக யெகோவா அவருடைய ஒரே மகனையே பூமிக்கு அனுப்பினார். இயேசுவும் அவருடைய உயிரை நமக்காக பலியாகக் கொடுத்தார். இந்தப் பலியிலிருந்து நாம் நன்மையடைய வேண்டும் என்றால் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அதற்கு யெகோவா நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதைத்தான் இயேசு சொல்லிக் கொடுத்தார். அதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும்படி சீடர்களுக்கும் கட்டளைக் கொடுத்தார். யெகோவாவுடைய நண்பராவதற்கு நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது அவரோடு சேர்ந்து வேலை செய்கிறோம்; அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் நாம் அவரோடு சேர்ந்து உழைக்கிறோம்.
16. கடவுள் கொடுத்த இரண்டு முக்கியமான கட்டளைகளோடு பிரசங்க வேலை எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது?
16 உயிர்காக்கும் வேலையை செய்வதன் மூலம் மக்கள்மீதும் யெகோவாமீதும் நமக்கு அன்பிருப்பதைக் காட்டுகிறோம். “பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தை பற்றிய திருத்தமான அறிவை அடைய வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும்” கடவுளுடைய விருப்பமாக இருக்கிறது. (1 தீ. 2:4) எது ரொம்ப முக்கியமான கட்டளை என்று ஒரு பரிசேயன் இயேசுவிடம் கேட்டபோது அவர் இப்படிச் சொன்னார்: “‘உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’ இதுதான் தலைசிறந்த கட்டளை, முதலாம் கட்டளை. ‘உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்’ என்பது இரண்டாம் கட்டளை.” (மத். 22:37-39) பிரசங்க வேலை செய்யும்போது நாம் இந்த இரண்டு கட்டளைகளுக்கும் கீழ்ப்படிகிறோம்.—அப்போஸ்தலர் 10:42-ஐ வாசியுங்கள்.
17. பிரசங்க வேலை செய்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
17 பிரசங்க வேலையைக் கொடுத்ததற்காக யெகோவாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. ஏனென்றால், இந்த வேலை நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது, யெகோவாவோடும் சகோதர சகோதரிகளோடும் நெருங்கி இருக்க உதவுகிறது, யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தத்தைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த வேலையை செய்வதன் மூலமாக யெகோவாவையும் மற்றவர்களையும் நாம் எந்தளவு நேசிக்கிறோம் என்பதையும் காட்ட முடிகிறது. சிறியவர்கள்-பெரியவர்கள், ஏழைகள்-பணக்காரர்கள், ஆரோக்கியமானவர்கள்-நோய்வாய்பட்டவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் இன்று யெகோவாவை வணங்குகிறார்கள். அவர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் சரி மற்றவர்களுக்கு நற்செய்தியை சொல்ல வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். ஒருவேளை, பிரான்சில் இருக்கும் சான்ட்டல் என்ற சகோதரியை போலவே நீங்களும் உணரலாம். அவர் சொன்னார்: “இந்த பிரபஞ்சத்தையே படைச்ச சக்தியுள்ள கடவுள், சந்தோஷமான கடவுள் என்கிட்ட வந்து, ‘நீ போய் எல்லார்கிட்டயும் பேசு, எனக்காக பேசு. உன் மனசுல இருந்து பேசு. நான் உனக்கு சக்தி கொடுக்குறேன். என் வார்த்தையான பைபிளை கொடுத்திருக்கேன். தேவதூதர்களும் சகோதர சகோதரிகளும் உனக்கு உதவி செய்வாங்க. தொடர்ந்து உனக்கு பயிற்சி கொடுப்பேன். எந்த சமயத்துல என்ன செய்யணும்னு சொல்வேன்.’ உண்மையிலேயே யெகோவா கொடுத்த வேலையை அவரோடு சேர்ந்து செய்றத நினைக்கும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு!”