உங்களுக்குத் தெரியுமா?
மரக் கம்பத்தில் அறைந்து கொலை செய்யப்பட்டவர்களுடைய உடலை அடக்கம் செய்ய ரோமர்கள் அனுமதித்தார்களா? உதாரணத்துக்கு, இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு அவர்கள் அனுமதித்திருப்பார்களா?
இயேசு இரண்டு குற்றவாளிகளுக்கு நடுவில் மரக் கம்பத்தில் அறையப்பட்டதைப் பற்றி நிறையப் பேருக்குத் தெரியும். (மத். 27:35-38) ஆனால், அதற்குப் பின்பு இயேசுவின் உடலை அடக்கம் செய்வதற்காகத் தயார்படுத்தி அதை ஒரு கல்லறையில் வைத்ததாக பைபிள் சொல்வது உண்மையாக இருக்க முடியாது என்று சிலர் சொல்கிறார்கள்.—மாற். 15:42-46.
மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளைக் கல்லறையில் நல்லடக்கம் செய்வதற்கு ரோமர்கள் அனுமதித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான் என்று சுவிசேஷ புத்தகங்களை விமர்சனம் செய்கிற சிலர் சொல்கிறார்கள். அந்தக் குற்றவாளிகளின் உடலை வேறு விதமாகத்தான் ரோமர்கள் அப்புறப்படுத்தியிருப்பார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சிலர் ஏன் அப்படி நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி ஏரியல் சபார் என்ற பத்திரிகையாளர் ஸ்மித்சோனியன் பத்திரிகையில் இப்படி எழுதியிருக்கிறார்: “சமுதாயத்தில் படுமோசமான ஆட்களைத்தான் ரோமர்கள் சிலுவையில் அறைந்தார்கள். அப்படிப்பட்ட ஆட்களைப்போய் நல்லடக்கம் செய்து கவுரவித்தார்கள் என்று நினைப்பதே ரொம்ப அபத்தமாக இருக்கிறது என்று சில நிபுணர்கள் நினைத்தார்கள்.” குற்றவாளிகளை எந்தளவுக்குக் கேவலப்படுத்த முடியுமோ அந்தளவுக்குக் கேவலப்படுத்த வேண்டுமென ரோமர்கள் நினைத்தார்கள். அதனால், அவர்களுடைய உடலைக் காட்டு மிருகங்கள் கடித்துக் குதறுவதற்காக மரக் கம்பத்திலேயே தொங்கவிட்டுவிட்டார்கள். அந்த மிருகங்கள் விட்டுவைக்கிற மிச்ச மீதியை, பிணங்கள் புதைக்கப்பட்ட இடத்தில் வீசியெறிந்தார்கள்.
ஆனால், கொலை செய்யப்பட்ட சில யூதர்களுடைய விஷயத்திலாவது இதற்கு விதிவிலக்கு இருந்ததாக புதைபொருள் ஆராய்ச்சி காட்டுகிறது. இயேசு வாழ்ந்த காலத்தில் மரக் கம்பத்தில் அறையப்பட்ட ஒருவருடைய எலும்புத் துண்டுகளை 1968-ஆம் வருஷம் கண்டுபிடித்தார்கள். எருசலேமுக்குப் பக்கத்தில் இருந்த யூதர்களுடைய ஒரு குடும்பக் கல்லறையில் அந்த எலும்புத் துண்டுகளைக் கண்டெடுத்தார்கள். இறந்தவர்களின் எலும்புகளை வைக்கிற ஒரு பெட்டிக்குள் அது இருந்தது. அதில் ஒரு குதிங்கால் எலும்பும் இருந்தது. நாலரை அங்குல (11.5 செ.மீ.) இரும்பு ஆணியால் அந்தக் குதிங்காலை ஒரு மரப்பலகையோடு சேர்த்து அடித்திருந்தார்கள். பத்திரிகையாளர் சபார் இப்படி எழுதியிருக்கிறார்: “யெஹோகனன் என்பவருடைய அந்தக் குதிங்கால் எலும்பு, ரொம்ப நாளாகப் புகைந்துகொண்டிருக்கிற ஒரு சர்ச்சைக்கு முடிவுகட்டியது. இயேசுவின் உடல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக சுவிசேஷ புத்தகம் சொல்வது உண்மையாக இருக்கலாம் என்று இது காட்டியது. இயேசுவின் காலத்தில் சிலுவையில் அறையப்பட்ட ஒருவரை யூத முறைப்படி அடக்கம் செய்வதற்கு ரோமர்கள் அனுமதித்திருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. யெஹோகனனின் குதிங்கால் எலும்பு இதற்கான அத்தாட்சியைக் கொடுக்கிறது.”
இயேசுவின் கைகால்களை மரக் கம்பத்தில் எந்த விதத்தில் வைத்து ஆணியடித்திருப்பார்கள் என்று இந்தக் குதிங்கால் எலும்பை அடிப்படையாக வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறார்கள். ஆனால், ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. சில குற்றவாளிகளின் உடல்களை வெறுமனே வீசியெறியாமல் அடக்கம் செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியென்றால், இயேசுவின் உடல் ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக பைபிள் சொல்வது உண்மைதான், அத்தாட்சி அதைத்தான் தெளிவாகக் காட்டுகிறது.
அதைவிட முக்கியமாக, இயேசுவின் உடல் ஒரு பணக்காரரின் கல்லறையில் அடக்கம் செய்யப்படும் என்று யெகோவா முன்கூட்டியே சொல்லியிருந்தார். அவருடைய வார்த்தை நிறைவேறுவதை யாராலும் தடுக்க முடியாது.—ஏசா. 53:9; 55:11.