படிப்புக் கட்டுரை 30
முதல் தீர்க்கதரிசனம்—நீங்கள் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்
“உனக்கும் பெண்ணுக்கும் . . . பகை உண்டாக்குவேன்.”—ஆதி. 3:15.
பாட்டு 15 யெகோவாவின் முதல் மகனை புகழ்ந்து பாடுங்கள்
இந்தக் கட்டுரையில்... *
1. ஆதாம்-ஏவாள் பாவம் செய்த உடனேயே யெகோவா என்ன செய்தார்? (ஆதியாகமம் 3:15)
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த உடனேயே அவர்களுடைய வருங்கால பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தைக் கொடுப்பதற்காக ஒரு முக்கியமான தீர்க்கதரிசனத்தை யெகோவா சொன்னார். அந்தத் தீர்க்கதரிசனம் ஆதியாகமம் 3:15-ல் இருக்கிறது. (வாசியுங்கள்.)
2. ஆதியாகமம் 3:15 ஏன் ஒரு முக்கியமான தீர்க்கதரிசனமாக இருக்கிறது?
2 இந்தத் தீர்க்கதரிசனம் பைபிளின் முதல் புத்தகத்தில் இருக்கிறது. பைபிளில் இருக்கிற எல்லா புத்தகங்களும் ஏதாவது ஒரு விதத்தில் இந்தத் தீர்க்கதரிசனத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒரு புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் ஒன்றாக இணைத்து பைன்டிங் செய்வதுபோல் பைபிளின் ஒவ்வொரு புத்தகத்தில் இருக்கிற விஷயங்களையும் ஆதியாகமம் 3:15-ல் இருக்கிற வார்த்தைகள் ஒன்றாக இணைத்து ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கின்றன. சாத்தானையும் அவனுக்கு ஆதரவு கொடுப்பவர்களையும் அழிப்பதற்கு ஒரு மீட்பரை கடவுள் அனுப்புவார் என்பதுதான் அந்தச் செய்தி. * யெகோவாவை நேசிக்கிறவர்களுக்கு உண்மையிலேயே இது ஒரு பெரிய ஆசீர்வாதமாக இருக்கும்.
3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
3 இந்தக் கட்டுரையில் சில கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம். ஆதியாகமம் 3:15-ல் யாரைப் பற்றியெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது? இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறுகிறது? இதிலிருந்து நமக்கு என்ன நன்மை?
இந்தத் தீர்க்கதரிசனத்தில் யாரைப் பற்றியெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது?
4. ‘பாம்பு’ யாரைக் குறிக்கிறது, அது நமக்கு எப்படித் தெரியும்?
4 ஆதியாகமம் 3:14, 15-ல் ‘பாம்பையும்’ அதன் ‘சந்ததியையும்’ ‘பெண்ணையும்’ அவளுடைய ‘சந்ததியையும்’ பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இவர்கள் எல்லாரும் யார் என்று தெரிந்துகொள்ள பைபிள் நமக்கு உதவுகிறது. * முதலில், ‘பாம்பு’ யாரைக் குறிக்கிறது என்று பார்க்கலாம். ஏதேன் தோட்டத்தில் யெகோவா சொன்ன விஷயத்தை ஒரு நிஜமான பாம்பால் புரிந்திருக்க முடியாது. அப்படியென்றால், கேட்டுப் புரிந்துகொள்ள முடிந்த ஒருவனிடம்தான் அந்தத் தண்டனைத் தீர்ப்பைப் பற்றி யெகோவா சொல்லியிருக்க வேண்டும். அது யார் என்பதை வெளிப்படுத்துதல் 12:9 தெளிவாகச் சொல்கிறது. அந்த ‘பழைய பாம்பு’ பிசாசாகிய சாத்தான்தான் என்று அந்த வசனம் தெளிவாகச் சொல்கிறது. அப்படியென்றால், அந்தப் பாம்பின் சந்ததி யார்?
5. பாம்பின் சந்ததியில் யாரெல்லாம் வருகிறார்கள்?
5 ஒரு நபரைப்போல் அப்படியே நடந்துகொள்கிறவர்களை அவருடைய சந்ததி, அதாவது பிள்ளைகள், என்று பைபிள் சில சமயங்களில் சொல்கிறது. அப்படியென்றால், யெகோவாவையும் அவருடைய மக்களையும் சாத்தானைப் போலவே எதிர்க்கிற கெட்ட தூதர்களும் மனிதர்களும்தான் பாம்பின் சந்ததியாக இருக்கிறார்கள். பரலோகத்தில் கடவுள் கொடுத்திருந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு நோவா காலத்தில் பூமிக்கு வந்த தூதர்கள் அதில் இருக்கிறார்கள். அதோடு, கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய தகப்பனான சாத்தானைப் போலவே அவர்கள் நடந்துகொள்கிறார்கள்.—ஆதி. 6:1, 2; யோவா. 8:44; 1 யோ. 5:19; யூ. 6.
6. அந்தப் ‘பெண்’ ஏன் ஏவாளாக இருக்க முடியாது?
6 அடுத்ததாக, அந்தப் ‘பெண்’ யார் என்று பார்க்கலாம். அவள் ஏவாளாக இருக்க முடியாது. அதற்கு ஒரு காரணத்தைக் கவனியுங்கள். பாம்பின் தலையை அந்தப் பெண்ணுடைய சந்ததி ‘நசுக்கும்’ என்று அந்தத் தீர்க்கதரிசனம் சொல்கிறது. அந்தப் பாம்பு, பொல்லாத தூதனான சாத்தானைக் குறிக்கிறது என்று இப்போதுதான் பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவனை நசுக்கிப்போடுவதற்கு ஏவாளின் சந்ததியில் வரும் பாவ இயல்புள்ள எந்த மனிதனுக்கும் சக்தி கிடையாது. அப்படியென்றால், சாத்தானை அழிக்கப்போவது யார்?
7. ஆதியாகமம் 3:15-ல் வருகிற பெண் யார் என்று கண்டுபிடிக்க வெளிப்படுத்துதல் 12:1, 2, 5, 10 எப்படி உதவுகிறது?
7 ஆதியாகமம் 3:15-ல் வருகிற பெண் யார் என்று பைபிளின் கடைசிப் புத்தகம் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 12:1, 2, 5, 10-ஐ வாசியுங்கள்.) அவள் ஒரு சாதாரண பெண் அல்ல. அவளுடைய பாதங்களுக்குக் கீழே சந்திரன் இருக்கிறது. 12 நட்சத்திரங்கள் இருக்கிற ஒரு கிரீடத்தை அவள் தலையில் வைத்திருக்கிறாள். அவளுக்கு ரொம்பவே வித்தியாசமான ஒரு குழந்தை பிறக்கிறது. அதுதான் கடவுளுடைய அரசாங்கம். அந்த அரசாங்கம் பரலோகத்தில் இருக்கிறது. அப்படியென்றால், அந்தப் பெண்ணும் பரலோகத்தில்தான் இருக்க வேண்டும். அந்தப் பெண் உண்மையுள்ள தேவதூதர்கள் இருக்கிற யெகோவாவுடைய அமைப்பின் பரலோக பாகத்தைக் குறிக்கிறாள்.—கலா. 4:26.
8. அந்தப் பெண்ணின் சந்ததியின் முக்கிய பாகமாக இருப்பது யார், அவர் எப்போது அந்தச் சந்ததியின் முக்கிய பாகமானார்? (ஆதியாகமம் 22:15-18)
8 அந்தப் பெண்ணின் சந்ததியின் முக்கிய பாகமாக இருப்பது யார் என்று கண்டுபிடிப்பதற்கும் பைபிள் நமக்கு உதவுகிறது. அவர் ஆபிரகாமின் வம்சத்தில் வருவார் என்று ஏற்கெனவே தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருந்தது. (ஆதியாகமம் 22:15-18-ஐ வாசியுங்கள்.) அந்தத் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருந்த விதமாகவே, கடவுளுக்கு உண்மையாக வாழ்ந்த ஆபிரகாமின் வம்சத்தில் இயேசு வந்தார். (லூக். 3:23, 34) ஆனால், அந்தச் சந்ததி சாதாரண மனிதனைவிட சக்திபடைத்தவராக இருந்தால்தான் சாத்தானுடைய தலையை நசுக்க முடியும். அதற்கு ஏற்ற மாதிரி இயேசுவுக்கு கிட்டத்தட்ட 30 வயது இருந்தபோது அவர் கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டார். இப்படி அபிஷேகம் செய்யப்பட்டபோது இயேசு அந்தச் சந்ததியின் முக்கிய பாகமாக ஆனார். (கலா. 3:16) இயேசு இறந்து உயிர்த்தெழுந்த பிறகு கடவுள் அவருக்கு ‘மகிமையையும் மதிப்பையும் . . . கிரீடமாகச் சூட்டினார்.’ அதோடு, ‘பரலோகத்திலும் பூமியிலும் . . . எல்லா அதிகாரத்தையும் கொடுத்தார்.’ ‘பிசாசின் செயல்களை ஒழிப்பதற்கான’ அதிகாரமும் அதில் ஒன்று.—எபி. 2:7; மத். 28:18; 1 யோ. 3:8.
9-10. (அ) வேறு யாரெல்லாம் அந்தப் பெண்ணின் சந்ததியின் பாகமாக ஆகிறார்கள், அவர்கள் எப்போது இந்தச் சந்ததியாக ஆகிறார்கள்? (ஆ) அடுத்து நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
9 அந்தச் சந்ததியின் பாகமாக இயேசு மட்டுமல்ல, இன்னும் சிலரும் இருப்பார்கள். அவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதற்கு அபிஷேகம் செய்யப்பட்ட யூத கிறிஸ்தவர்களிடமும் யூதரல்லாத கிறிஸ்தவர்களிடமும் அப்போஸ்தலன் பவுல் சொன்ன ஒரு விஷயம் நமக்கு உதவுகிறது. “நீங்கள் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் என்றால், உண்மையிலேயே ஆபிரகாமின் சந்ததியாக, வாக்குறுதியின்படி அவருடைய வாரிசுகளாக இருக்கிறீர்கள்” என்று அவர் சொன்னார். (கலா. 3:28, 29) ஒரு கிறிஸ்தவருக்கு யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுத்து அபிஷேகம் செய்யும்போது அவர் அந்தப் பெண்ணின் சந்ததியின் பாகமாக ஆகிவிடுகிறார். அப்படியென்றால், இயேசு கிறிஸ்துவும் அவரோடு ஆட்சி செய்யப்போகிற 1,44,000 பேரும்தான் அந்தச் சந்ததியாக இருக்கிறார்கள். (வெளி. 14:1) இவர்கள் எல்லாருமே அவர்களுடைய அப்பாவாக இருக்கிற யெகோவாவைப் போலவே யோசிக்கிறார்கள், நடந்துகொள்கிறார்கள்.
10 ஆதியாகமம் 3:15-ல் யாரைப் பற்றியெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொண்டோம். இந்தத் தீர்க்கதரிசனத்தை யெகோவா படிப்படியாக எப்படி நிறைவேற்றுகிறார்? இதைத் தெரிந்துகொள்வதால் நமக்கு என்ன நன்மை? இதைப் பற்றியெல்லாம் இப்போது சுருக்கமாகப் பார்க்கலாம்.
இந்தத் தீர்க்கதரிசனம் படிப்படியாக நிறைவேறுகிறது—எப்படி?
11. அந்தப் பெண்ணின் சந்ததியின் ‘குதிங்கால்’ நசுக்கப்படும் என்று சொன்ன தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது?
11 அந்தப் பெண்ணின் சந்ததியின் “குதிங்காலை” பாம்பு நசுக்கும் என்று ஆதியாகமம் 3:15 சொல்கிறது. அது எப்படி நிறைவேறியது? யூதர்களையும் ரோமர்களையும் பயன்படுத்தி, கடவுளுடைய மகனை சாத்தான் கொலை செய்தபோது அது நிறைவேறியது. (லூக். 23:13, 20-24) குதிங்காலில் காயம் ஏற்பட்டால் ஒருவரால் கொஞ்ச நாட்களுக்கு நடக்க முடியாது. அதேபோல்தான் இயேசு இறந்து கிட்டத்தட்ட மூன்று நாட்கள் கல்லறையில் இருந்தபோது அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.—மத். 16:21.
12. பாம்பின் தலை எப்படி நசுக்கப்படும், இது எப்போது நடக்கும்?
12 இயேசு கல்லறையிலேயே இருந்தார் என்றால், ஆதியாகமம் 3:15-ல் இருக்கிற தீர்க்கதரிசனம் நிறைவேறாமல் போய்விடும். ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், அந்தச் சந்ததி பாம்பின் தலையை நசுக்கும் என்று அந்தத் தீர்க்கதரிசனம் சொல்கிறது. அப்படியென்றால், குதிங்கால் காயத்திலிருந்து இயேசு குணமாக வேண்டும். அதாவது அவர் உயிர்த்தெழுப்பப்பட வேண்டும். உண்மையிலேயே அதுதான் நடந்தது. அவர் இறந்து மூன்றாவது நாள் உயிரோடு எழுப்பப்பட்டார். அதாவது பரலோகத்தில் சாவே இல்லாமல் வாழ்கிற உடலோடு உயிர்த்தெழுப்பப்பட்டார். கடவுள் முடிவு செய்திருக்கிற நேரத்தில், சாத்தானை இயேசு நசுக்கி ஒழித்துக்கட்டிவிடுவார். (எபி. 2:14) கிறிஸ்துவும் அவரோடு ஆட்சி செய்பவர்களும், கடவுளுடைய எதிரிகளாக இருக்கிற பாம்பின் சந்ததியை பூமியிலிருந்து அழித்துவிடுவார்கள்.—வெளி. 17:14; 20:4, 10. *
இந்தத் தீர்க்கதரிசனத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் நன்மை
13. இந்தத் தீர்க்கதரிசனத்திலிருந்து நாம் எப்படி நன்மை அடைகிறோம்?
13 நீங்கள் கடவுளுக்கு அர்ப்பணித்த ஒருவராக இருந்தீர்கள் என்றால், இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்திலிருந்து நன்மை அடைந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இயேசு இந்தப் பூமிக்கு ஒரு மனிதராக வந்தபோது, அவருடைய அப்பாவின் குணங்களை அப்படியே காட்டினார். (யோவா. 14:9) அவர் மூலமாக யெகோவா அப்பாவைப் பற்றி நாம் தெரிந்துகொண்டோம். அவர்மேல் அன்பு காட்டவும் கற்றுக்கொண்டோம். அதோடு, இயேசு சொல்லிக்கொடுத்த விஷயங்களிலிருந்தும், இன்றைக்கு கிறிஸ்தவ சபையை அவர் வழிநடத்துகிற விதத்திலிருந்தும் நாம் நன்மை அடைந்திருக்கிறோம். யெகோவாவுக்குப் பிடித்த விதமாக எப்படி வாழ வேண்டும் என்றும் அவர் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, இயேசுவின் குதிங்கால் நசுக்கப்பட்டதால் அதாவது, அவர் இறந்ததால், நாம் எல்லாருமே நன்மை அடைய முடியும். எப்படி? இயேசு உயிர்த்தெழுந்து பரலோகத்துக்குப் போனபோது, அவர் கொடுத்த பரிபூரண பலியை யெகோவா ஏற்றுக்கொண்டார். அந்தப் பலிதான், ‘எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குகிறது.’—1 யோ. 1:7.
14. ஏதேனில் யெகோவா சொன்ன தீர்க்கதரிசனம் உடனே நிறைவேறவில்லை என்று நமக்கு எப்படித் தெரியும்? விளக்குங்கள்.
14 ஏதேனில் யெகோவா சொன்ன வார்த்தைகளிலிருந்து அந்தத் தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேறுவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும் என்று தெரிகிறது. அந்தப் பெண்ணின் சந்ததி உருவாவதற்கும்... சாத்தான் தனக்கு ஆதரவு கொடுக்கிறவர்களைக் கூட்டிச்சேர்ப்பதற்கும்... அந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடையில் பகை (அதாவது, வெறுப்பு) உண்டாவதற்கும்... காலம் எடுக்கும். தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற இந்த விஷயங்களைப் புரிந்துகொள்வது நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்? சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற இந்த உலகம் யெகோவாவை வணங்குபவர்களை வெறுக்கும் என்று இது நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது. இதேபோன்ற ஒரு எச்சரிக்கையை இயேசுவும் தன்னுடைய சீஷர்களுக்குக் கொடுத்தார். (மாற். 13:13; யோவா. 17:14) இப்படி நாம் வெறுப்புக்கு ஆளாவோம் என்று சொல்லப்பட்டிருப்பது கடந்த 100 வருஷங்களாக நிறைவேறி வருவதை நாம் கண்ணாரப் பார்த்திருக்கிறோம். எப்படி?
15. பெண்ணின் சந்ததியை இந்த உலகம் முன்பைவிட இப்போது ஏன் ரொம்பவே வெறுக்கிறது, ஆனால் சாத்தானை நினைத்து நாம் ஏன் பயப்பட வேண்டியதில்லை?
15 இயேசு 1914-ல் ராஜாவான உடனேயே சாத்தானைப் பரலோகத்திலிருந்து பூமிக்குத் தள்ளிவிட்டார். சீக்கிரத்தில், அவனுக்கு அழிவு வரப்போவது அவனுக்குத் தெரியும். (வெளி. 12:9, 12) ஆனால், அதுவரை அவன் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருப்பதில்லை. அவனுடைய ஆத்திரத்தையும் கோபத்தையும் கடவுளுடைய மக்கள்மேல் காட்டிக்கொண்டிருக்கிறான். (வெளி. 12:13, 17) அதனால்தான், சாத்தானுடைய உலகம் பெண்ணின் சந்ததியாக இருப்பவர்களை முன்பைவிட ரொம்பவே வெறுக்கிறது. ஆனால், சாத்தானையும் அவனுக்கு ஆதரவு கொடுப்பவர்களையும் பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, அப்போஸ்தலன் பவுலைப் போலவே நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். “கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?” என்று அவரைப் போலவே நாமும் தைரியமாகச் சொல்லலாம். (ரோ. 8:31) நாம் இதுவரை பார்த்தபடி, ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்டிருக்கிற நிறைய விஷயங்கள் ஏற்கெனவே நிறைவேறிவிட்டதால் யெகோவாமேல் நாம் முழு நம்பிக்கை வைக்கலாம்.
16-18. ஆதியாகமம் 3:15-ஐப் புரிந்துகொண்டது கர்டிஸுக்கும், அர்ஸ்லாவுக்கும் ஜெஸிக்காவுக்கும் எப்படிப் பிரயோஜனமாக இருந்தது?
16 நமக்கு எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் அதையெல்லாம் சமாளிப்பதற்கு ஆதியாகமம் 3:15-ல் யெகோவா கொடுத்திருக்கிற வாக்குறுதி உதவியாக இருக்கும். குவாமில் மிஷனரியாக சேவை செய்யும் கர்டிஸ் என்ற சகோதரருடைய அனுபவம்கூட இதைத்தான் காட்டுகிறது. “சில சமயங்கள்ல வாழ்க்கையில ஏமாற்றங்களும் சோதனைகளும் வந்தப்போ யெகோவாவுக்கு உண்மையாக இருக்குறது எனக்கு சவாலாக இருந்துச்சு. ஆனா, ஆதியாகமம் 3:15-ல் இருக்குற வாக்குறுதிய பத்தி ஆழமா யோசிச்சு பார்த்தது யெகோவா அப்பாமேல இருக்குற நம்பிக்கைய விட்டுடாம இருக்க எனக்கு உதவியா இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். எல்லா கஷ்டங்களுக்கும் யெகோவா முற்றுப்புள்ளி வைக்கப்போகிற நாளுக்காக சகோதரர் கர்டிஸ் ரொம்ப ஆசையாகக் காத்துக்கொண்டிருக்கிறார்.
17 அடுத்ததாக, பவேரியாவில் இருக்கிற அர்ஸ்லா என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். ஆதியாகமம் 3:15-ல் இருக்கிற தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொண்டது பைபிள் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட புத்தகம்தான் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு அவருக்கு உதவியாக இருந்திருக்கிறது. பைபிளில் இருக்கிற மற்ற தீர்க்கதரிசனங்கள் எல்லாமே இந்தத் தீர்க்கதரிசனத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டது அவருடைய மனதை ரொம்பவே தொட்டது. “மனுஷங்களுக்கு எதிர்காலத்துல ஒரு நல்ல வாழ்க்கைய கொடுக்குறதுக்காக யெகோவா உடனடியா நடவடிக்கை எடுத்தத பத்தி தெரிஞ்சுகிட்டப்போ அவர்மேல இருக்குற அன்பு எனக்கு இன்னும் அதிகமாயிடுச்சு” என்று அவர் சொல்கிறார்.
18 மைக்ரோனேஷியாவில் இருக்கிற ஜெஸிக்கா என்ன சொல்கிறார் என்று இப்போது பார்க்கலாம். “பைபிள் சத்தியத்த முதல்முதல்ல தெரிஞ்சுகிட்டப்போ எனக்கு எப்படி இருந்துச்சுனு இப்பகூட நல்லா ஞாபகம் இருக்கு. ஆதியாகமம் 3:15-ல் இருக்குற தீர்க்கதரிசனம் நிறைவேறிட்டு வருதுங்கறத தெரிஞ்சுகிட்டப்போ, இப்போ வாழ்ற வாழ்க்கை எல்லாம் உண்மையான வாழ்க்கை இல்லங்கறத புரிஞ்சுகிட்டேன். யெகோவாவ வணங்குனாதான் இப்பவும் நல்லா வாழ முடியும். எதிர்காலத்துல இன்னும் சந்தோஷமா வாழ முடியும்னு உறுதியா நம்புறதுக்கு இந்த தீர்க்கதரிசனம் எனக்கு கை கொடுத்துச்சு.”
19. ஆதியாகமம் 3:15-ல் இருக்கிற தீர்க்கதரிசனத்தின் கடைசி பாகமும் நிறைவேறும் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?
19 நாம் இதுவரை பார்த்தபடி, ஆதியாகமம் 3:15 இப்போது நிறைவேறி வருகிறது. பெண்ணின் சந்ததியும், பாம்பின் சந்ததியும் யார் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டோம். பெண்ணின் சந்ததியின் முக்கிய பாகமாக இருக்கிற இயேசு, குதிங்கால் காயத்திலிருந்து குணமாகி இப்போது சக்திபடைத்த ராஜாவாக இருக்கிறார். அவருக்கு அழிவே இல்லை. அந்தச் சந்ததியின் பாகமாக இருக்கிற மற்றவர்களையும் யெகோவா கிட்டத்தட்ட தேர்ந்தெடுத்துவிட்டார் என்று சொல்லலாம். இந்தத் தீர்க்கதரிசனத்தின் முதல் பாகம் நிறைவேறிவிட்டது. அதனால், அதன் கடைசி பாகமும், அதாவது பாம்பின் தலை நசுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருப்பதும் நிறைவேறும் என்று நாம் உறுதியாக நம்பலாம். ஒருவழியாக சாத்தான் அழிக்கப்படுவான். அப்போது கடவுளுடைய மக்கள் எல்லாரும் நிம்மதியாக இருப்பார்கள். அதுவரை நம்பிக்கையை விட்டுவிடாமல் நாம் உறுதியாக இருக்க வேண்டும். நம்முடைய கடவுளை நிச்சயம் நம்பலாம். அந்தப் பெண்ணின் சந்ததியின் மூலமாக ‘பூமியிலுள்ள எல்லா தேசத்தாரையும்’ அவர் அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.—ஆதி. 22:18.
பாட்டு 23 யெகோவாவின் ஆட்சி ஆரம்பித்தது
^ ஆதியாகமம் 3:15-ல் இருக்கிற தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொண்டால்தான் பைபிளை நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றி ஆழமாக படித்துத் தெரிந்துகொள்ளும்போது யெகோவாமேல் நமக்கு இருக்கிற விசுவாசம் பலமாகும். அவருடைய வாக்குறுதிகளை எல்லாம் அவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையும் பலமாகும்.
^ புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இணைப்பு B1-ல் “பைபிளின் செய்தி” என்ற தலைப்பில் பாருங்கள்.
^ “ஆதியாகமம் 3:14, 15-ல் சொல்லப்பட்டிருப்பவர்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.
^ “ ஆதியாகமம் 3:15-ன் நிறைவேற்றமாக நடக்கிற சில முக்கிய சம்பவங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.