சத்தியம் ‘சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்குகிறது’
“பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன்.”—மத். 10:34.
பாடல்கள்: 125, 135
1, 2. (அ) இப்போது நாம் எப்படிப்பட்ட சமாதானத்தை அனுபவிக்கலாம்? (ஆ) இப்போது நமக்கு முழுமையான சமாதானம் கிடைக்க ஏன் வாய்ப்பில்லை? (ஆரம்பப் படம்)
கவலை இல்லாமல் சமாதானத்தோடு வாழத்தான் நாம் விரும்புகிறோம். அதனால், யெகோவா நமக்கு ‘தேவசமாதானத்தை’ கொடுப்பதற்காக நாம் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். தேவசமாதானம் என்பது மன அமைதியைக் குறிக்கிறது; சோர்வை ஏற்படுத்துகிற எண்ணங்களும் உணர்ச்சிகளும் நமக்கு வராதபடி அது பார்த்துக்கொள்கிறது. (பிலி. 4:6, 7) நம் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணித்திருப்பதால், நாம் ‘கடவுளோடும் சமாதானத்தை’ அனுபவிக்கிறோம். அதாவது, அவரோடு ஒரு நல்ல பந்தத்தை அனுபவிக்கிறோம்.—ரோ. 5:1.
2 ஆனாலும், கடவுள் இந்தப் பூமியில் முழுமையான சமாதானத்தைக் கொண்டுவரும் காலம் இன்னும் வரவில்லை. நாம் கடைசி நாட்களில் வாழ்வதால், நிறையப் பிரச்சினைகள் நமக்குக் கவலை தருகின்றன. வன்முறையான ஆட்கள் மத்தியில்தான் நாம் வாழ வேண்டியிருக்கிறது. (2 தீ. 3:1-4) அதோடு, சாத்தானையும் அவன் பரப்புகிற பொய்ப் போதனைகளையும் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. (2 கொ. 10:4, 5) ஆனால், எல்லாவற்றையும்விட ஒரு பெரிய பிரச்சினை நம்மைக் கவலையில் மூழ்கடிக்கிறது; அதுதான், யெகோவாவை வணங்காத குடும்பத்தாரிடமிருந்து வரும் எதிர்ப்பு. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அவர்களில் சிலர், நம் நம்பிக்கைகளைக் கிண்டல் செய்யலாம் அல்லது குடும்பங்களைப் பிரிப்பதாக நம்மேல் குற்றம்சாட்டலாம். யெகோவாவை வணங்குவதை நிறுத்தாவிட்டால் குடும்பத்தைவிட்டே நம்மை ஒதுக்கி வைத்துவிடுவதாக மிரட்டலாம். குடும்பத்தாரின் எதிர்ப்பை நாம் என்ன கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்? நாம் எப்படி சமாதானத்தைக் காத்துக்கொள்ளலாம்?
குடும்பத்தாரின் எதிர்ப்பை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்?
3, 4. (அ) இயேசுவின் போதனைகள் என்ன விளைவை ஏற்படுத்துகின்றன? (ஆ) இயேசுவைப் பின்பற்றுவது முக்கியமாக எப்போது சுலபமாக இருக்காது?
3 எல்லாருமே தன்னுடைய போதனைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. தன் சீஷர்களைச் சிலர் எதிர்ப்பார்கள் என்பதால் அவர்களுக்குத் தைரியம் தேவைப்படும் என்றும், அவர்களுடைய குடும்பங்களின் சமாதானம் சீர்குலையும் என்றும் அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால், “பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன். சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள்” என்று சொன்னார்.—மத். 10:34-36.
4 “சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்” என சொன்னபோது இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? அவரைப் பின்பற்றுவதால் வரும் விளைவுகளை மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும் என்பதை அர்த்தப்படுத்தினார். மக்களுக்குக் கடவுளைப் பற்றிய சத்தியத்தைச் சொல்லிக்கொடுப்பதுதான் இயேசுவின் நோக்கமாக இருந்தது, குடும்பங்களைப் பிரிப்பது அல்ல. (யோவா. 18:37) ஆனால், இயேசுவைப் பின்பற்றுவது எப்போதுமே சுலபமாக இருக்காது, முக்கியமாக நெருங்கிய நண்பர்களோ குடும்பத்தில் இருப்பவர்களோ சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதபோது அது சுலபமாக இருக்காது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.
5. இயேசுவின் சீஷர்களுக்கு என்ன பிரச்சினை வந்தது?
5 மற்ற பிரச்சினைகளைச் சகித்துக்கொள்வது போலவே குடும்பத்தாரின் எதிர்ப்பையும் தன் சீஷர்கள் சகித்துக்கொள்ள வேண்டுமென்று இயேசு சொன்னார். (மத். 10:38) அதனால், அவரைப் பிரியப்படுத்த விரும்பிய அவருடைய சீஷர்கள், தங்களுடைய குடும்பத்தார் கேலி செய்தபோதும் வெறுத்து ஒதுக்கியபோதும் சகிப்புத்தன்மையைக் காட்டினார்கள். ஆனால், அவர்கள் இழந்ததைவிட பெற்றுக்கொண்டதுதான் ரொம்ப அதிகம்.—மாற்கு 10:29, 30-ஐ வாசியுங்கள்.
6. குடும்பத்தார் எதிர்க்கும்போது நாம் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்?
6 நாம் யெகோவாவை வணங்குகிறோம் என்பதற்காக நம் குடும்பத்தார் நம்மை எதிர்த்தாலும், நாம் அவர்களை நேசிக்கிறோம். ஆனால், கடவுள் மீதும் இயேசு மீதும் நாம் வைத்திருக்கிற அன்பு, வேறு யார் மீதும் வைத்திருக்கிற அன்பைவிட பலமாக இருக்க வேண்டும் என்பதை நாம் மறக்கக் கூடாது. (மத். 10:37) நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கக் கூடாதென்று சாத்தான் நினைக்கிறான்; அதனால், குடும்பத்தார்மேல் நாம் வைத்திருக்கிற அன்பைப் பயன்படுத்தி யெகோவாவைவிட்டு நம்மைப் பிரிக்கப் பார்க்கிறான். நாம் எதிர்ப்படுகிற கஷ்டமான சில சூழ்நிலைகளைப் பற்றியும், அவற்றை நாம் எப்படி சகித்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றியும் இப்போது பார்க்கலாம்.
உங்கள் மணத்துணை யெகோவாவை வணங்காதபோது...
7. உங்கள் மணத்துணை யெகோவாவை வணங்காதவராக இருந்தால், நீங்கள் அந்தச் சூழ்நிலையை எப்படிப் பார்க்க வேண்டும்?
7 கல்யாணம் செய்கிறவர்களுக்கு “வாழ்க்கையில் உபத்திரவங்கள் வரும்,” அதாவது பிரச்சினைகள் வரும், என்று பைபிள் எச்சரிக்கிறது. (1 கொ. 7:28) அதுவும், யெகோவாவை வணங்காத ஒருவரை நீங்கள் கல்யாணம் செய்திருந்தால், வேதனையும் கவலையும் இன்னும் அதிகமாகவே இருக்கும். ஆனாலும், உங்கள் சூழ்நிலையை யெகோவா பார்ப்பதுபோல் பார்ப்பது முக்கியம். உங்கள் மணத்துணை யெகோவாவை வணங்குவதில்லை என்பதற்காக, அவரைவிட்டுப் பிரியவோ அவரை விவாகரத்து செய்யவோ கூடாதென்று யெகோவா சொல்கிறார். (1 கொ. 7:12-16) உங்கள் கணவர் யெகோவாவை வணங்காதவரா? அப்படியென்றால், ஆன்மீக விஷயங்களில் அவர் குடும்பத்தை வழிநடத்தாமல் இருந்தாலும், அவர் குடும்பத் தலைவராக இருப்பதால் நீங்கள் அவரை மதிக்க வேண்டும். உங்கள் மனைவி யெகோவாவை வணங்காதவரா? அப்படியே இருந்தாலும், நீங்கள் அவரிடம் அன்பும் அக்கறையும் கரிசனையும் காட்ட வேண்டும்.—எபே. 5:22, 23, 28, 29.
8. உங்கள் மணத்துணை ஆன்மீக விஷயங்களில் கட்டுப்பாடுகள் போட்டால், என்ன கேள்விகளை நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்?
8 உங்கள் மணத்துணை ஆன்மீக விஷயங்களில் கட்டுப்பாடுகள் போட்டால் என்ன செய்வது? ஒரு சகோதரியின் கணவர், வாரத்தில் சில நாட்கள்தான் ஊழியத்துக்குப் போக வேண்டுமென்று அவரிடம் சொல்லிவிட்டார். நீங்களும் அதே சூழ்நிலையில் இருந்தால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவ வணங்கவே கூடாதுன்னா என் கணவர் பிலி. 4:5.
சொல்றாரு? இல்லையே... அப்படின்னா, அவரு சொல்ற மாதிரி என்னால செய்ய முடியுமா?’ நீங்கள் நியாயமானவராக இருந்தால், கல்யாண வாழ்க்கையில் உங்களுக்கு அந்தளவு பிரச்சினைகள் வராது.—9. யெகோவாவை வணங்காத மணத்துணைக்கு மதிப்புக் காட்ட பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்லிக்கொடுக்கலாம்?
9 உங்கள் மணத்துணை யெகோவாவை வணங்காதவராக இருந்தால், யெகோவாவின் வழியில் பிள்ளைகளை வளர்ப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். உதாரணத்துக்கு, “உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்” என்ற பைபிளின் கட்டளைக்குக் கீழ்ப்படிய பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லித்தர வேண்டும். (எபே. 6:1-3) ஆனால், உங்கள் மணத்துணை பைபிள் தராதரங்களைப் பின்பற்றாதபோது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அவருக்கு மதிப்புக் காட்டுவதன் மூலம் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரி வைக்க வேண்டும். அவருடைய நல்ல குணங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அதோடு, அவர் செய்கிற நல்ல காரியங்கள் எல்லாவற்றுக்கும் நன்றியோடு இருப்பதாக அவரிடம் சொல்லுங்கள். பிள்ளைகளுக்கு முன்னால் அவரைப் பற்றிக் குறை சொல்லாதீர்கள். யெகோவாவை வணங்குவதா வேண்டாமா என்பது ஒருவருடைய சொந்த முடிவு என்பதை அவர்களிடம் விளக்குங்கள். சத்தியத்தில் இல்லாத உங்கள் மணத்துணைக்கு மதிப்புக் கொடுக்க பிள்ளைகளுக்குக் கற்றுத்தரும்போது என்ன பலன் கிடைக்கும்? பிள்ளைகளின் நல்ல நடத்தையைப் பார்த்து உங்கள் மணத்துணை யெகோவாவைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்புவார்.
10. யெகோவாவை நேசிப்பதற்குக் கிறிஸ்தவப் பெற்றோர் எப்படித் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம்?
10 யெகோவாவை வணங்காத ஒரு அப்பா அல்லது அம்மா, தன் பிள்ளை பொய் மதப் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டுமென்றோ பொய் மதப் போதனைகளைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றோ நினைக்கலாம். சில கணவர்கள், பைபிளைப் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க தங்கள் மனைவியை அனுமதிக்காமல் இருக்கலாம். ஆனாலும், மனைவி தன்னால் முடிந்தவரை தன் பிள்ளைகளுக்குச் சத்தியத்தைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். (அப். 16:1; 2 தீ. 3:14, 15) உதாரணத்துக்கு, பிள்ளைகளுக்கு பைபிள் படிப்பு நடத்தக் கூடாதென்றும், அவர்களைக் கூட்டங்களுக்குக் கூட்டிக்கொண்டு போகக் கூடாதென்றும் ஒரு கணவர் தன் மனைவியிடம் சொல்லலாம். அவருடைய தீர்மானத்துக்கு மனைவி மதிப்புக் கொடுத்தாலும், முடிந்தபோதெல்லாம் தன் நம்பிக்கைகளைப் பற்றிப் பிள்ளைகளிடம் பேசலாம். அப்போது, பிள்ளைகள் யெகோவாவையும் அவருடைய தராதரங்களையும் பற்றிக் கற்றுக்கொள்வார்கள். (அப். 4:19, 20) கடைசியில், யெகோவாவை வணங்குவதா வேண்டாமா என்று பிள்ளைகள்தான் முடிவெடுக்க வேண்டும். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)—உபா. 30:19, 20.
உங்கள் குடும்பத்தார் உண்மை வணக்கத்தை எதிர்க்கும்போது...
11. நமக்கும் நம் குடும்பத்துக்கும் இடையில் ஏன் விரிசல் ஏற்படலாம்?
11 நாம் யெகோவாவின் சாட்சிகளோடு படிக்க ஆரம்பித்தபோது, நம் குடும்பத்தாரிடம் அதைப் பற்றிச் சொல்லாமல் இருந்திருப்போம். ஆனால் நம் விசுவாசம் பலமானபோது, நாம் யெகோவாவுக்குச் சேவை செய்ய விரும்புவதை அவர்களிடம் சொல்ல வேண்டும் என்பது நமக்குப் புரிந்திருக்கும். (மாற். 8:38) நீங்கள் கடவுளுக்கு உண்மையாக இருப்பதால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். யெகோவாவுக்கு உண்மையாக இருக்கும் அதேசமயத்தில் சமாதானத்தைக் காத்துக்கொள்ள நீங்கள் என்னென்ன செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
12. நம் குடும்பத்தார் ஏன் நம்மை எதிர்க்கலாம், நாம் அவர்களுடைய உணர்ச்சிகளை மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
12 யெகோவாவை வணங்காத குடும்பத்தாரின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளுங்கள். சத்தியத்தைத் தெரிந்துகொண்டதற்காக நாம் ரொம்ப சந்தோஷப்படுகிறோம். ஆனால், நாம் ஏமாந்துவிட்டதாகவோ ரொம்ப வித்தியாசமான ஒரு மதத்தில் சேர்ந்துவிட்டதாகவோ நம் குடும்பத்தார் நினைக்கலாம். அவர்களோடு சேர்ந்து நாம் பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை என்பதால் அவர்களை நாம் நேசிப்பதில்லை என்று அவர்கள் நினைக்கலாம். நாம் இறந்த பிறகு கடவுள் நம்மைத் தண்டிப்பாரோ என்று நினைத்தும் அவர்கள் பயப்படலாம். அதனால், அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கவும் வேண்டும்; அப்போதுதான், நம்மை நினைத்து அவர்கள் ஏன் கவலைப்படுகிறார்கள் என்பது புரியும். (நீதி. 20:5) ‘எல்லா விதமான ஆட்களையும்’ புரிந்துகொள்ள பவுல் முயற்சி செய்தார்; ஏனென்றால், அவர்கள் எல்லாருக்கும் கடவுளுடைய செய்தியைச் சொல்ல அவர் விரும்பினார். குடும்பத்தில் இருப்பவர்களைப் புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்யும்போது, அவர்களுக்கு எப்படிச் சத்தியத்தைச் சொல்லிக்கொடுக்கலாம் என்று தெரிந்துகொள்வோம்.—1 கொ. 9:19-23.
13. யெகோவாவை வணங்காத நம் குடும்பத்தாரிடம் நாம் எப்படிப் பேச வேண்டும்?
13 சாந்தமாகப் பேசுங்கள். ‘உங்கள் பேச்சு எப்போதும் கனிவாக இருக்க வேண்டும்’ என்று பைபிள் சொல்கிறது. (கொலோ. 4:6) ஆனால், அது எப்போதுமே சுலபமல்ல. அதனால், குடும்பத்தாரிடம் சாந்தமாகவும் அன்பாகவும் நடந்துகொள்ள யெகோவாவின் சக்திக்காக நாம் ஜெபம் செய்யலாம். அவர்களுடைய பொய் மத நம்பிக்கைகள் ஒவ்வொன்றையும் பற்றி நாம் வாக்குவாதம் செய்யக் கூடாது. அவர்களுடைய சொல்லோ செயலோ நம்மைப் புண்படுத்திவிட்டால், அப்போஸ்தலர்களின் முன்மாதிரியை நாம் பின்பற்றலாம். “மற்றவர்கள் எங்களை அவமானப்படுத்தும்போது ஆசீர்வதிக்கிறோம், கொடுமைப்படுத்தும்போது பொறுமையோடு சகித்துக்கொள்கிறோம். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லும்போது சாந்தமாகப் பதில் சொல்கிறோம்” என்று பவுல் சொன்னார்.—1 கொ. 4:12, 13.
14. நல்ல நடத்தையால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
14 நல்ல நடத்தையைக் காத்துக்கொள்ளுங்கள். இது ஏன் முக்கியம்? சாந்தமாகப் பேசுவது நம் குடும்பத்தாரோடு சமாதானமாக இருக்க உதவும் என்றாலும், நம்முடைய நல்ல நடத்தைக்கு அதைவிட அதிக வலிமை இருக்கிறது. (1 பேதுரு 3:1, 2, 16-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் சாட்சிகள் கல்யாண வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதையும், பிள்ளைகளை நன்றாகக் கவனித்துக்கொள்வதையும், பைபிள் தராதரங்களுக்கு ஏற்றபடி வாழ்வதையும், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதையும் உங்களுடைய முன்மாதிரியைப் பார்த்தே உங்கள் குடும்பத்தார் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை, நம் குடும்பத்தார் கடைசிவரை சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் போனாலும், நம்முடைய நல்ல நடத்தை யெகோவாவைப் பிரியப்படுத்துகிறது என்பதை நினைத்து நாம் சந்தோஷப்படலாம்.
15. நம் குடும்பத்தாரோடு வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க நாம் எப்படி முன்கூட்டியே யோசிக்கலாம்?
15 முன்கூட்டியே யோசியுங்கள். என்னென்ன சூழ்நிலைகளில் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்களுக்கும் வாக்குவாதம் வெடிக்கலாம் என்பதை முன்கூட்டியே யோசியுங்கள். பிறகு, என்ன செய்ய வேண்டுமென்று முடிவெடுங்கள். (நீதி. 12:16, 23) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு சகோதரி இதைத்தான் செய்தார். அவருடைய மாமனார் சத்தியத்தைக் கடுமையாக எதிர்த்தார். அதனால், அவருக்கு ஃபோன் செய்வதற்கு முன்னால், அந்தச் சகோதரியும் அவருடைய கணவரும் யெகோவாவிடம் ஜெபம் செய்வார்கள்; அவர் கோபப்பட்டாலும் சாந்தமாகப் பதில் சொல்ல உதவும்படி யெகோவாவிடம் கேட்பார்கள். எந்த விஷயங்களைப் பற்றிப் பேசினால் அவர் சந்தோஷப்படுவார் என்று யோசித்து வைப்பார்கள். பொதுவாக, நிறைய நேரம் பேசினால் மதத்தைப் பற்றி வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்பதால், எப்போதும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் பேச முடிவு செய்வார்கள்.
16. உங்கள் குடும்பத்தாரின் மனதைக் கஷ்டப்படுத்திவிட்டதாக நினைத்து வருத்தப்படும்போது நீங்கள் எதை மறக்கக் கூடாது?
16 யெகோவாவை வணங்காத குடும்பத்தாரோடு கருத்து வேறுபாடு ஏற்படுவதை சிலசமயங்களில் உங்களால் தவிர்க்க முடியாது என்பது உண்மைதான். அப்படிப்பட்ட சமயங்களில், அவர்களுடைய மனதைக் கஷ்டப்படுத்திவிட்டதாக நினைத்து நீங்கள் வருத்தப்படலாம். ஏனென்றால், நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள், அவர்களுக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறீர்கள். ஆனால், குடும்பத்தின் மீது அன்பு காட்டுவதைவிட யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதுதான் முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் குடும்பத்தார் இதைப் புரிந்துகொள்ளும்போது, யெகோவாவை வணங்குவது எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்துகொள்வார்கள். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்படி யாரையுமே நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால், யெகோவாவின் வழிகளில் நடப்பது உங்களுக்கு எப்படி உதவி செய்திருக்கிறது என்பதை மற்றவர்களுக்குக் காட்ட உங்களால் முடியும். உண்மையில், தனக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பை யெகோவா நமக்குக் கொடுத்தது போலவே அவர்களுக்கும் கொடுக்கிறார்.—ஏசா. 48:17, 18.
குடும்பத்திலுள்ள ஒருவர் யெகோவாவைவிட்டு விலகும்போது...
17, 18. குடும்பத்திலுள்ள ஒருவர் யெகோவாவைவிட்டு விலகுவதால் வரும் வேதனையை நீங்கள் எப்படிச் சமாளிக்கலாம்?
17 குடும்பத்திலுள்ள ஒருவர் சபை நீக்கம் செய்யப்பட்டால் அல்லது சபையிலிருந்து தொடர்பறுத்துக்கொண்டால், அந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பது நமக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கும். யாரோ நம்மை வாளால் குத்துவதுபோல் நாம் வேதனையில் துடிதுடிப்போம். அந்த வேதனையை எப்படிச் சமாளிப்பது?
18 யெகோவாவின் சேவையில் முழு கவனம் செலுத்துங்கள். அந்த வேதனையை நீங்கள் அனுபவிக்கும்போது, உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துவது முக்கியம். அதனால், தவறாமல் பைபிளை வாசியுங்கள், கூட்டங்களுக்குத் தயாரியுங்கள், அவற்றில் கலந்துகொள்ளுங்கள், ஊழியம் செய்யுங்கள், சகித்திருக்கத் தேவையான பலத்தைத் தரும்படி யெகோவாவிடம் கேளுங்கள். (யூ. 20, 21) இதையெல்லாம் செய்த பிறகும் அந்த வலி போகாவிட்டால், சோர்ந்துபோகாதீர்கள்! தொடர்ந்து யெகோவாவின் சேவையில் முழு கவனம் செலுத்துங்கள். காலப்போக்கில், உங்கள் யோசனைகளையும் உணர்ச்சிகளையும் உங்களால் கட்டுப்படுத்த முடியும். சங்கீதம் 73-ஐ எழுதியவரின் அனுபவமும் இதுதான். ஒரு சமயத்தில், தன் யோசனைகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது அவருக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால், யெகோவாவை வணங்கியது, விஷயங்களை மறுபடியும் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க அவருக்கு உதவியது. (சங். 73:16, 17) உங்களுக்கும் அது உதவும்.
19. யெகோவா தன் மக்களைக் கண்டித்துத் திருத்தும் விதத்துக்கு நீங்கள் எப்படி மதிப்புக் காட்டலாம்?
19 யெகோவா தரும் கண்டிப்புக்கு மதிப்புக் காட்டுங்கள். யெகோவா கண்டித்துத் திருத்தும்போது, சபை நீக்கம் செய்யப்பட்டவர் மட்டுமல்லாமல் எல்லாருமே நன்மை அடைவார்கள். நாம் நேசிக்கிற ஒருவர் சபை நீக்கம் செய்யப்படும்போது நமக்கு ரொம்ப வேதனையாகத்தான் இருக்கும். ஆனால், எதிர்காலத்தில் அவர் மறுபடியும் யெகோவாவிடம் திரும்பிவர இந்த ஏற்பாடு உதவும். (எபிரெயர் 12:11-ஐ வாசியுங்கள்.) அதுவரை, சபை நீக்கம் செய்யப்பட்டவர்களோடு “பழகுவதை விட்டுவிட வேண்டும்” என்ற யெகோவாவின் கட்டளைக்கு நாம் மதிப்புக் காட்டுவது ரொம்ப அவசியம். (1 கொ. 5:11-13) இது அவ்வளவு சுலபமல்ல என்றாலும், ஃபோன், மெசேஜ், ஈமெயில், அல்லது சோஷியல் மீடியா மூலம் அவர்களைத் தொடர்புகொள்வதை நாம் தவிர்க்க வேண்டும்.
20. நாம் எதை நம்பிக்கையோடு எதிர்பார்க்க வேண்டும்?
20 நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்! அன்பு “எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்.” அதனால், நம்முடைய அன்பானவர்கள் யெகோவாவிடம் திரும்பி வருவார்கள் என்று நாம் நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம். (1 கொ. 13:7) உங்களுடைய நெருங்கிய குடும்ப அங்கத்தினர் மனம் மாறிவருவதை நீங்கள் பார்க்கும்போது, பைபிளிலிருந்து அவர் பலம் பெற வேண்டுமென்றும், “என்னிடம் திரும்பி வா” என்ற யெகோவாவின் அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஜெபம் செய்யலாம்.—ஏசா. 44:22.
21. நீங்கள் இயேசுவைப் பின்பற்றுவதால் உங்கள் குடும்பத்தார் எதிர்க்கும்போது என்ன செய்ய வேண்டும்?
21 எந்த மனிதரையும்விட தன்னை அதிகமாக நேசிக்க வேண்டுமென்று இயேசு சொல்லியிருக்கிறார். குடும்பத்தார் எதிர்த்தாலும் தன் சீஷர்கள் தைரியத்தைக் காட்டுவார்கள் என்றும், தனக்கு உண்மையாக இருப்பார்கள் என்றும் அவர் உறுதியாக நம்பினார். நீங்கள் இயேசுவைப் பின்பற்றுவதால் உங்கள் குடும்பத்தார் எதிர்க்கிறார்களா? அப்படியென்றால், யெகோவாவை நம்பியிருங்கள். பிரச்சினையைச் சமாளிக்க உதவும்படி அவரிடம் கேளுங்கள். (ஏசா. 41:10, 13) நீங்கள் யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் பிரியமாக நடக்கிறீர்கள் என்பதையும், உண்மையாக இருப்பதற்காக அவர்கள் உங்களை ஆசீர்வதிப்பார்கள் என்பதையும் நினைத்து சந்தோஷப்படுங்கள்.
^ பாரா. 2 இந்தக் கட்டுரையில், “குடும்பம், குடும்பத்தார், குடும்பத்தில் இருப்பவர்கள்” என்ற வார்த்தைகள் சொந்தக்காரர்களையும் குறிக்கின்றன.
^ பாரா. 10 மணத்துணை யெகோவாவை வணங்காதபோது பிள்ளைகளை எப்படிப் பயிற்றுவிக்கலாம் என்பதைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள, ஆகஸ்ட் 15, 2002 காவற்கோபுரம் பத்திரிகையில் வெளிவந்த “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியைப் பாருங்கள்.