நடைமுறையான ஞானத்தை நீங்கள் பாதுகாத்துக்கொள்கிறீர்களா?
இது ஒரு பையனைப் பற்றிய கதை... ஒதுக்குப்புறமான ஒரு கிராமத்தில் அந்தச் சின்ன பையன் இருந்தான். அவன் ஓர் ஏழை. அவனுக்குப் புத்தி சரியில்லை என்று நினைத்துக்கொண்டு, அந்தக் கிராமத்தில் இருந்தவர்கள் அவனைப் பார்த்து சிரிப்பார்கள். அந்தக் கிராமத்துக்கு யாராவது வந்தால், அங்கிருக்கும் சிலர் தங்கள் நண்பர்கள் முன்னால் அவனைக் கிண்டல் செய்வார்கள். ஒரு பெரிய வெள்ளிக் காசையும் ஒரு சின்ன தங்கக் காசையும் அவனிடம் கொடுத்து, “உனக்கு எது வேணுமோ அதை எடுத்துக்கோ” என்று சொல்வார்கள். அந்தத் தங்கக் காசு, வெள்ளிக் காசைவிட இரண்டு மடங்கு மதிப்புள்ளது. ஆனால், அந்தப் பையன் வெள்ளிக் காசை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிடுவான்.
ஒருநாள், அந்தக் கிராமத்துக்கு வந்த ஒருவர் அந்தப் பையனிடம், “அந்த வெள்ளி காசைவிட தங்க காசு ரெண்டு மடங்கு மதிப்புள்ளதுனு உனக்கு தெரியாதா?” என்று கேட்டார். அந்தப் பையன் சிரித்துக்கொண்டு, “எனக்கு தெரியுமே!” என்று சொன்னான். “அப்படீனா, நீ ஏன் வெள்ளி காசை எடுத்த? தங்க காசை எடுத்தா ரெண்டு மடங்கு பணம் கிடைக்குமே!” என்று அவர் சொன்னார். “உண்மைதான்! ஆனா, தங்க காசை எடுத்தா ஊர்க்காரங்க என்னோட விளையாடுறத நிறுத்திடுவாங்களே. என்கிட்ட இப்போ எத்தனை வெள்ளி காசு இருக்குனு தெரியுமா?” என்று அவன் கேட்டான். அந்தக் கதையில் வரும் சின்ன பையனுக்கு நடைமுறையான ஞானம் இருந்தது. இப்படிப்பட்ட ஞானம் பெரியவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும்!
“ஞானத்தையும் [அதாவது, நடைமுறையான ஞானத்தையும்] யோசிக்கும் திறனையும் பாதுகாத்துக்கொள் . . . அப்போது, நீ உன் பாதையில் பாதுகாப்பாக நடப்பாய். உன் கால் ஒருபோதும் தடுமாறாது” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 3:21, 23, NW) அதனால், “நடைமுறையான ஞானம்” என்றால் என்ன என்பதையும் அதை எப்படி வாழ்க்கையில் பயன்படுத்தலாம் என்பதையும் தெரிந்துகொண்டால், அது நமக்குப் பாதுகாப்பாக இருக்கும். ஆன்மீக ரீதியில் தடுமாறாமல், நம் ‘கால்களை’ நிலையாக வைத்துக்கொள்வதற்கும் அது உதவியாக இருக்கும்.
நடைமுறையான ஞானம் என்றால் என்ன?
இது அறிவு மற்றும் புரிந்துகொள்ளுதலிலிருந்து வித்தியாசமானது. அறிவு இருக்கும் ஒருவர், தகவல்களைச் சேகரிக்கிறார். புரிந்துகொள்ளுதல் இருக்கும் ஒருவர், அந்தத் தகவல்கள் எப்படி ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று பார்க்கிறார். ஞானம் இருக்கும் ஒருவர் அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் சேர்த்து அதை நடைமுறைப்படுத்துகிறார்.
உதாரணத்துக்கு, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்திலிருக்கும் விஷயங்களை ஒருவர் கொஞ்ச காலத்திற்குள்ளேயே படித்து, அதைப் புரிந்துகொள்ளலாம். பைபிள் படிப்பு நடத்தப்படும்போது, அவர் எல்லா கேள்விகளுக்கும் சரியாகப் பதில் சொல்லலாம். சபை கூட்டங்களுக்கு வரும்போதும், நன்றாகப் பதில் சொல்லலாம். அவர் ஆன்மீக முன்னேற்றம் செய்கிறார் என்பதை இவையெல்லாம் காட்டினாலும் அவருக்கு ஞானம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? அப்படிச் சொல்ல முடியாது! அவர் ஒருவேளை எல்லாவற்றையும் வேகமாகக் கற்றுக்கொள்ளலாம். ஆனால், அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் பயன்படுத்தி, தான் கற்றுக்கொண்ட உண்மைகளைச் சரியான விதத்தில் நடைமுறைப்படுத்தினால்தான் அவருக்கு ஞானம் இருக்கிறது என்று சொல்ல முடியும். அவர் எடுக்கும் தீர்மானங்களில் அவருக்கு வெற்றி கிடைத்தால், அவர் நன்றாக யோசித்திருக்கிறார் என்பதை அவருடைய தீர்மானங்கள் காட்டினால், அவர் ஞானத்தோடு செயல்பட்டிருக்கிறார் என்று சொல்ல முடியும்.
ஒரு வீட்டைக் கட்டிய இரண்டு மனிதர்களைப் பற்றி இயேசு சொன்ன உதாரணம், மத்தேயு 7:24 முதல் 27 வரையுள்ள வசனங்களில் இருக்கிறது. அந்த இரண்டு மனிதர்களில் ஒருவன் ‘புத்தியுள்ளவன்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கலாம் என்பதை அவன் முன்கூட்டியே யோசித்து, தன்னுடைய வீட்டை பாறைமேல் கட்டினான். அவன் முன்யோசனை உள்ளவனாகவும், நடைமுறையானவனாகவும் இருந்தான். மணல்மேல் வீடு கட்டினால், செலவு குறையும் என்றோ சீக்கிரம் கட்டிவிடலாம் என்றோ அவன் காரணம் சொல்லவில்லை. தன்னுடைய செயல்களால் வரும் விளைவுகளைப் பற்றி ஞானமாக யோசித்தான். அதனால், புயல் வந்தபோது அவனுடைய வீடு பத்திரமாக இருந்தது. இப்போது, நாம் எப்படி நடைமுறையான ஞானத்தைப் பெற்றுக்கொள்ளலாம், அதை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
நடைமுறையான ஞானத்தை எப்படிப் பெற்றுக்கொள்ளலாம்?
முதலாவதாக, மீகா 6:9 (NW) சொல்வதைக் கவனியுங்கள். “ஞானம் உள்ளவர்கள் அவருடைய [யெகோவாவுடைய] பெயருக்குப் பயந்து நடப்பார்கள்” என்று அது சொல்கிறது. யெகோவாவுடைய பெயருக்குப் பயந்து நடப்பது என்றால் அவருக்கு மரியாதை காட்டுவது என்று அர்த்தம். அவருடைய தராதரங்கள் மற்றும் அவருடைய பெயரின் அர்த்தம் ஆகியவற்றின் மீது நமக்கு இருக்கும் உண்மையான பயபக்தியை இது அர்த்தப்படுத்துகிறது. நாம் யாருக்காவது மரியாதை காட்ட வேண்டுமென்றால் அவர் யோசிக்கும் விதத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், அவர்மீது நம்பிக்கை வைக்கவும், அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் முடியும். அவர் செய்வதைப் போலவே செய்தால் நமக்கும் வெற்றி கிடைக்கும். நம்முடைய செயல்கள் யெகோவாவோடு இருக்கிற நம் பந்தத்தை நாளடைவில் எப்படிப் பாதிக்கும் என்பதைப் பற்றி யோசித்தால், அவருடைய தராதரங்களை மனதில் வைத்து தீர்மானங்கள் எடுப்போம். அப்படிச் செய்யும்போது, நம்மால் நடைமுறையான ஞானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இரண்டாவதாக, நீதிமொழிகள் 18:1 (NW) சொல்வதைக் கவனியுங்கள். “தன்னைத் தனிமைப்படுத்துகிறவன் தன்னுடைய ஆசைகளையே தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறான். எல்லா ஞானத்தையும் அவன் ஒதுக்கித்தள்ளுகிறான்” என்று அது சொல்கிறது. நாம் கவனமாக இல்லையென்றால், யெகோவாவிடமிருந்தும் அவருடைய மக்களிடமிருந்தும் நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதைத் தவிர்க்க வேண்டுமென்றால், யெகோவாவுடைய பெயருக்குப் பயந்து நடப்பவர்களோடும் அவருடைய தராதரங்களுக்கு மரியாதை கொடுப்பவர்களோடும் நாம் நேரம் செலவு செய்ய வேண்டும். நம்மால் முடியாத சமயங்களைத் தவிர, மற்ற எல்லா சமயங்களிலும் ராஜ்ய மன்றத்துக்குப் போக வேண்டும்; நம்முடைய சகோதர சகோதரிகளோடு பழக வேண்டும். சபை கூட்டங்களில் சொல்லப்படும் விஷயங்கள் நம் மனதுக்குள் போக வேண்டுமென்றால், அவற்றை நன்றாகக் கவனிக்க வேண்டும்.
அதோடு, நம் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி யெகோவாவிடம் ஜெபம் செய்யும்போது, நம்மால் அவரிடம் நெருங்கிப் போக முடியும். (நீதி. 3:5, 6) பைபிளையும் யெகோவாவின் அமைப்பு வெளியிட்டிருக்கும் பைபிள் பிரசுரங்களையும் வாசிக்கும்போது, அதைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்க்க முடியும். அப்போது, நம்முடைய செயல்களால் வரும் நீண்ட கால விளைவுகளைப் பற்றி யோசித்துப் பார்த்து, அதற்குத் தகுந்தபடி நடந்துகொள்ள முடியும். அதோடு, முதிர்ச்சியுள்ள சகோதரர்களின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். (நீதி. 19:20) அப்போது, ‘எல்லா ஞானத்தையும் ஒதுக்கித்தள்ளுவதற்கு’ பதிலாக, முக்கியமான இந்தப் பண்பை வளர்த்துக்கொள்வோம்.
நடைமுறையான ஞானம் என் குடும்பத்துக்கு எப்படி உதவும்?
நடைமுறையான ஞானம் குடும்பங்களைப் பாதுகாக்கும். உதாரணத்துக்கு, மனைவி தன் கணவனுக்கு “ஆழ்ந்த மரியாதை” காட்ட வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (எபே. 5:33) கணவன் எப்படி ஆழ்ந்த மரியாதையைப் பெற்றுக்கொள்ளலாம்? கட்டாயப்படுத்துவதன் மூலமோ கடுமையாக நடந்துகொள்வதன் மூலமோ அதைப் பெற்றுக்கொள்ள நினைத்தால், அது நீண்ட கால பலனைத் தராது. ஒருவேளை, பிரச்சினைகள் வராமல் இருப்பதற்காக ஒரு மனைவி அப்படிப்பட்ட கணவன் இருக்கும்போது ஓரளவு மரியாதையாக நடந்துகொள்ளலாம். ஆனால், அவர் இல்லாத சமயத்திலும் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று அவள் நினைப்பாளா? அது ரொம்ப கஷ்டம்தான்! அதனால், நீண்ட கால பலன் கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று அந்தக் கணவன் யோசித்துப் பார்க்க வேண்டும். கடவுளுடைய சக்தியால் உண்டாகிற அன்பு, கருணை ஆகிய குணங்களைப் பற்றி அவர் யோசித்துப் பார்த்தால் அவரால் ஆழ்ந்த மரியாதையைச் சம்பாதிக்க முடியும். மரியாதையைச் சம்பாதித்துக்கொள்ளும் விதத்தில் தன் கணவன் நடந்தாலும் சரி, நடக்கவில்லை என்றாலும் சரி, ஒரு கிறிஸ்தவ மனைவி தன் கணவனுக்குக் கண்டிப்பாக மரியாதை காட்ட வேண்டும்.—கலா. 5:22, 23.
கணவர்கள் தங்கள் மனைவிகள்மீது அன்பு காட்ட வேண்டும் என்றும் பைபிள் சொல்கிறது. (எபே. 5:28, 33) கணவனுடைய அன்பை இழந்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்குத் தெரியப்படுத்த வேண்டிய விஷயங்களை, அதுவும் அவருக்குப் பிடிக்காத விஷயங்களை, அவரிடமிருந்து மறைத்துவிட மனைவி நினைக்கலாம். அப்படிச் செய்யும்போது, அந்த மனைவிக்கு நடைமுறையான ஞானம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? மனைவி அந்த விஷயத்தை தன்னிடமிருந்து மறைத்ததைப் பற்றி கணவனுக்குத் தெரிய வரும்போது, என்ன ஆகும்? அவள்மீது இன்னும் அதிகமாக அவர் அன்பு காட்டுவாரா? அப்படிக் காட்டுவது அவருக்கு நிச்சயம் கஷ்டமாக இருக்கும். ஒருவேளை சரியான சமயம் பார்த்து, அந்த விஷயங்களைத் தன் கணவனிடம் அமைதியாகச் சொல்லும்போது, தன் மனைவி உண்மையாக நடந்துகொண்டதைப் பார்த்து அவர் அவளைப் பாராட்டலாம். அப்போது, அவள்மீது இருக்கும் அன்பு அதிகமாகும்.
பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும்; யெகோவாவுக்கு ஏற்ற முறையில் கண்டிக்கப்பட வேண்டும். (எபே. 6:1, 4) அதற்காக, எதை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று ஒரு பெரிய பட்டியலைப் பெற்றோர் போட வேண்டுமா? வீட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் இருக்கின்றன, தவறு செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை மட்டும் பிள்ளைகள் தெரிந்துவைத்திருந்தால் போதாது. நடைமுறையான ஞானம் இருக்கிற பெற்றோர், பிள்ளைகள் ஏன் கீழ்ப்படிய வேண்டும் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பார்கள்.
உதாரணத்துக்கு, பெற்றோரிடம் ஒரு பிள்ளை மரியாதை இல்லாமல் பேசிவிடுகிறது. அப்போது, பெற்றோர் கோபமாகப் பேசினாலோ உடனடியாக தண்டித்தாலோ அது பிள்ளைக்குத் தர்மசங்கடமாக இருக்கலாம் அல்லது அந்தப் பிள்ளை அமைதியாகிவிடலாம். ஆனால், அந்தப் பிள்ளையின் மனதில் கோபம் இருக்கலாம்; பெற்றோரிடமிருந்து விலகுவதற்கு அது காரணமாகிவிடலாம்.
தங்கள் பிள்ளைகளை எப்படிக் கண்டிப்பது என்றும் எதிர்காலத்தில் அது அவர்களுக்கு எப்படிப் பலன் தரும் என்றும் நடைமுறையான ஞானம் இருக்கிற பெற்றோர் யோசித்துப் பார்ப்பார்கள். பிள்ளைகள் மரியாதை இல்லாமல் நடந்துகொண்டது தங்களுக்குக் கஷ்டமாக இருந்தது என்பதற்காகப் பெற்றோர் உடனடியாக எதுவும் செய்யக்கூடாது. அவர்களைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய் அவர்களிடம் அமைதியாக, அன்பாகப் பேசலாம். தங்களுடைய நிரந்தர நன்மைக்காகத்தான் பெற்றோருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கலாம். அப்போதுதான், பெற்றோருக்கு மதிப்பு கொடுப்பதன் மூலம் யெகோவாவுக்கு மதிப்பு கொடுக்கிறோம் என்பதைப் பிள்ளைகள் புரிந்துகொள்வார்கள். (எபே. 6:2, 3) இப்படி அன்பாக நடந்துகொள்வது பிள்ளைகளின் மனதைத் தொடும். பெற்றோர் தங்கள்மீது உண்மையிலேயே அக்கறையாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள், பெற்றோர்மீது இருக்கும் மதிப்பும் அதிகமாகும். அதோடு, முக்கியான விஷயம் சம்பந்தமாக ஏதாவது உதவி தேவைப்பட்டால் பிள்ளைகள் பெற்றோரிடம் கேட்பதற்கு இது உதவியாக இருக்கும்.
பிள்ளைகளுடைய மனது கஷ்டப்படுமோ என்று நினைத்து சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் திருத்தாமல் விட்டுவிடலாம். அப்படிச் செய்தால், அவர்கள் வளர்ந்த பிறகு என்ன ஆகும்? அவர்கள் யெகோவாவுக்குப் பயப்படுவார்களா, யெகோவாவின் தராதரங்களுக்குக் கீழ்ப்படிவதால் வரும் நன்மைகளைப் புரிந்துகொள்வார்களா? யெகோவா சொல்வதைக் கேட்க தயாராக இருப்பார்களா அல்லது ஆன்மீக ரீதியில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வார்களா?—நீதி. 13:1; 29:21.
தான் செதுக்கப்போகிற சிற்பத்தைப் பற்றி ஒரு நல்ல சிற்பி முன்கூட்டியே யோசித்துப் பார்ப்பார். யோசிக்காமல் செதுக்கிவிட்டு, நல்ல சிற்பம் கிடைக்க வேண்டுமென்று எதிர்பார்க்க மாட்டார். நடைமுறையான ஞானம் இருக்கிற பெற்றோர்கள், யெகோவாவுடைய தராதரங்களைப் பற்றி தெரிந்துகொள்ள நிறைய நேரம் செலவு செய்வார்கள், அந்தத் தராதரங்களைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள்; இதன் மூலம் யெகோவாவுடைய பெயருக்குப் பயப்படுவார்கள். யெகோவாவிடமிருந்தும் அவருடைய அமைப்பிடமிருந்தும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் இருப்பதன் மூலம் அவர்கள் நடைமுறையான ஞானத்தைப் பெற்றுக்கொள்வார்கள். தங்கள் குடும்ப பந்தத்தைப் பலப்படுத்த அந்த ஞானத்தை அவர்கள் பயன்படுத்துவார்கள்.
நம்முடைய எதிர்காலத்தைப் பாதிக்கும் நிறைய தீர்மானங்களை நாம் ஒவ்வொரு நாளும் எடுக்க வேண்டியிருக்கிறது. அந்தந்த நேரத்துக்கு சட்டென்று தீர்மானம் எடுப்பதற்குப் பதிலாக, நீங்கள் ஏன் அதைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்கக்கூடாது? அதனால் வரும் நீண்ட கால விளைவுகளைப் பற்றி நன்றாக யோசியுங்கள். யெகோவாவின் வழிநடத்துதலைத் தேடுங்கள், அவரிடமிருந்து வரும் ஞானத்தை வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். அப்படிச் செய்யும்போது, நாம் நடைமுறையான ஞானத்தை பாதுகாத்துக்கொள்வோம், அது நமக்கு வாழ்வு தரும்.—நீதி. 3:21, 22.