Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

நல்ல முன்மாதிரிகளாக இருந்தவர்களைப் பின்பற்ற முயற்சி செய்தேன்

நல்ல முன்மாதிரிகளாக இருந்தவர்களைப் பின்பற்ற முயற்சி செய்தேன்

“எனக்கு என்ன வயசு ஆகுதுனு உங்களுக்கு தெரியுமா?” என்று நான் கேட்டேன். “எனக்கு நல்லா தெரியும்” என்று சகோதரர் ஈசாக் மரே சொன்னார். நியு யார்க், பேட்டர்ஸனில் இருந்து கொலரடோவில் இருக்கிற எனக்கு அவர் ஃபோன் செய்தார். அதைப் பற்றி சொல்வதற்கு முன்பு, என் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களைப் பற்றி சொல்கிறேன்.

1936, டிசம்பர் 10 அன்று அமெரிக்காவைச் சேர்ந்த கான்சாஸில் இருக்கும் விசிடாவில் நான் பிறந்தேன். என் கூடப்பிறந்தவர்கள் மூன்று பேர்; அதில் நான்தான் மூத்தவன். என்னுடைய அப்பா, வில்லியமும் அம்மா ஜீனும் யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்தார்கள். என்னுடைய அப்பா கம்பெனி சர்வன்ட்டாக (அதாவது, மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக) இருந்தார். என்னுடைய அம்மா, அவருடைய அம்மாவான எம்மா வாக்னரிடமிருந்து பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொண்டார். என்னுடைய பாட்டி எம்மா, நிறைய பேருக்கு பைபிள் சத்தியங்களைச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். அவர்களில் கெர்ட்ரூடு ஸ்டீல் என்பவரும் ஒருவர்; இவர் பியூர்டோ ரிகோவில் மிஷனரியாகச் சேவை செய்தார். * நான் பின்பற்றுவதற்கு இப்படிப்பட்ட நல்ல முன்மாதிரிகள் நிறைய பேர் இருந்தார்கள்.

நல்ல முன்மாதிரிகளாக இருந்தவர்கள்

தெரு முனையில் நின்றுகொண்டு அப்பா பத்திரிகைகளைக் கொடுக்கிறார்

அப்போது எனக்கு 5 வயது. ஒரு சனிக்கிழமை சாயங்காலம், நானும் என்னுடைய அப்பாவும் தெருவில் நின்றுகொண்டு காவற்கோபுரம் மற்றும் கான்சலேஷன் (இப்போது விழித்தெழு!) பத்திரிகைகளைக் கொடுத்துக்கொண்டு இருந்தோம். அந்தச் சமயத்தில், நாடு முழுவதும் இரண்டாம் உலகப் போரில் மூழ்கியிருந்தது. ஆனால், என் அப்பா போரில் ஈடுபடவில்லை. நாங்கள் பத்திரிகைகளைக் கொடுத்துக்கொண்டிருந்தபோது, குடிபோதையிலிருந்த ஒரு டாக்டர் அந்தப் பக்கம் வந்தார். என் அப்பா ஒரு பயந்தாங்கொள்ளி என்றும் போரில் ஈடுபடாமல் இருப்பதற்காகச் சாக்குப்போக்கு சொல்கிறார் என்றும் சொன்னார். அவர் என் அப்பாவின் முகத்துக்குப் பக்கத்தில் வந்து, “சரியான பயந்தாங்கொள்ளி! எங்க, என்னை அடி பார்க்கலாம்!” என்று சொன்னார். அப்போது எனக்கு ரொம்ப பயமாக இருந்தது. ஆனால், இதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லாரிடமும் என் அப்பா பத்திரிகைகளைக் கொடுத்துக்கொண்டு இருந்ததைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தச் சமயத்தில் ஒரு ராணுவ வீரர் அந்தப் பக்கம் வந்தார். அவரிடம் அந்த டாக்டர், “இந்த பயந்தாங்கொள்ளிய ஏதாவது பண்ணுங்க” என்று கத்தினார். அவர் குடிபோதையில் இருப்பதைப் புரிந்துகொண்ட அந்த ராணுவ வீரர், ‘நீங்க போதையில இருக்கீங்க, முதல்ல வீட்டுக்கு போங்க’ என்று அவரிடம் சொன்னார். அதற்குப் பிறகு, அவர்கள் இரண்டு பேரும் அங்கிருந்து போய் விட்டார்கள். என் அப்பாவுக்கு அந்தச் சமயத்தில் தைரியத்தைக் கொடுத்ததற்காக நான் யெகோவாவுக்கு ரொம்ப நன்றியோடு இருக்கிறேன். விசிடாவில் என் அப்பாவுக்கு இரண்டு சலூன்கள் இருந்தன. அந்த டாக்டர் எப்போதும் என் அப்பாவுடைய கடைக்குத்தான் முடி வெட்ட வருவார்!

1940-ல் விசிடாவில் நடந்த மாநாட்டுக்கு என் பெற்றோரோடு போனபோது

எனக்கு 8 வயதாக இருந்தபோது எங்களுடைய வீட்டையும் கடைகளையும் என் அப்பா அம்மா விற்றார்கள். பிறகு, ஒரு சிறிய நடமாடும் வீட்டைச் செய்தார்கள். தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்வதற்காக கொலரடோவில் இருக்கும் கிராண்ட் ஜங்ஷனுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு இடத்துக்கு நாங்கள் குடிமாறிப் போனோம். என்னுடைய அப்பா அம்மா பயனியர் ஊழியம் செய்துகொண்டே பகுதி நேரமாக விவசாயமும் பண்ணை வேலையும் செய்தார்கள். யெகோவாவின் ஆசீர்வாதத்தாலும் அவர்களுடைய கடின உழைப்பாலும் அங்கே ஒரு சபை உருவானது. 1948, ஜூன் 20-ஆம் தேதி அன்று, ஒரு மலை ஓடையில் என் அப்பா எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். என்னோடு சேர்ந்து பில்லி நிக்கல்ஸும் அவருடைய மனைவியும் ஞானஸ்நானம் எடுத்தார்கள். கொஞ்ச காலத்துக்குப் பிறகு, அவர்கள் வட்டார சேவைக்குப் போனார்கள். அவர்களைப் போலவே அவருடைய மகனும் மருமகளும் வட்டார சேவை செய்தார்கள்.

யெகோவாவுடைய சேவையில் சுறுசுறுப்பாக இருந்த நிறைய பேர் எங்களுக்கு நல்ல நண்பர்களாக இருந்தார்கள். முக்கியமாக ஸ்டீல் குடும்பத்தைச் சேர்ந்த டான்-அர்லென், டேவ்-ஜூலியா, ஸை-மார்த்தா ஆகியவர்கள் எங்களுக்கு நல்ல நண்பர்களாக இருந்தார்கள். பைபிள் விஷயங்களைப் பற்றி அவர்களோடு நாங்கள் நிறைய பேசுவோம். வாழ்க்கையில் சரியான தீர்மானங்கள் எடுப்பதற்கு அவர்கள் எனக்கு நல்ல முன்மாதிரிகளாக இருந்தார்கள். கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்கும்போது நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும் சந்தோஷமுள்ளதாகவும் இருக்கும் என்பதை அவர்களுடைய வாழ்க்கை முறை காட்டியது.

மறுபடியும் வேறு இடத்துக்குப் போனோம்

எனக்கு 19 வயது இருந்தபோது, தன்னோடு சேர்ந்து அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் பயனியர் ஊழியம் செய்ய வரும்படி எங்களுடைய நண்பர் பட் ஹேஸ்டி என்னைக் கூப்பிட்டார். அந்தத் தெற்கு பகுதியில் இருக்கும் லூயிஸியானிலுள்ள ரஸ்டனுக்கு போகும்படி வட்டாரக் கண்காணி எங்கள் இரண்டு பேரிடமும் சொன்னார். ஏனென்றால், அங்கே நிறைய சகோதர சகோதரிகள் செயலற்ற பிரஸ்தாபிகளாக இருந்தார்கள். யாருமே சபைக்கு வரவில்லை என்றாலும் வாரம் தவறாமல் எல்லா கூட்டங்களையும் நடத்தும்படி அவர் எங்களிடம் சொல்லியிருந்தார். கூட்டங்களை நடத்துவதற்காக நாங்கள் ஒரு இடத்தை ஏற்பாடு செய்தோம்; தவறாமல் எல்லா கூட்டங்களையும் நடத்தினோம். ஆனால், கொஞ்ச காலம்வரை எங்கள் இரண்டு பேரைத் தவிர வேறு யாருமே கூட்டத்துக்கு வரவில்லை. நாங்கள் இரண்டு பேரும் மாறிமாறி கூட்டங்களை நடத்தினோம். நான் கூட்டங்களை நடத்தும்போது அவர் எல்லா பதில்களையும் சொல்வார், அவர் நடத்தும்போது நான் எல்லா பதில்களையும் சொல்வேன். ஒருவேளை நடிப்புகள் இருந்தால் இரண்டு பேரும் சேர்ந்து அவற்றைச் செய்வோம். ஆனால், அதைக் கவனிப்பதற்கு யாருமே இருக்க மாட்டார்கள்! கொஞ்ச காலத்துக்குப் பின்பு, ஒரு வயதான சகோதரி கூட்டத்துக்கு வர ஆரம்பித்தார். கடைசியில், எங்களோடு பைபிள் படித்துக்கொண்டிருந்த சிலரும் செயலற்ற பிரஸ்தாபிகள் சிலரும் வர ஆரம்பித்தார்கள்; சீக்கிரத்தில் அங்கே ஒரு சபை உருவானது.

ஒரு நாள் நானும் பட்டும் ‘சர்ச் ஆஃப் கிரைஸ்ட்’ என்ற சபையைச் சேர்ந்த ஒரு ஊழியரைச் சந்தித்தோம். சில வசனங்களைப் பற்றி அவர் எங்களோடு பேசினார். அவற்றைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாததால் ரொம்ப கவலையாக இருந்தது; என்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி நான் ஆழமாக யோசிக்க ஆரம்பித்தேன். அவருடைய கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வதற்காக, ஒரு வாரம் வரைக்கும், ஒவ்வொரு நாள் ராத்திரியும் ரொம்ப நேரம் படித்தேன். யெகோவாவோடு இருக்கும் நட்பைப் பலப்படுத்திக்கொள்ள இது எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது. இனிமேல் இந்த மாதிரி ஊழியர்கள் யாரையாவது பார்த்தால், அவர்களோடு பேச நான் தயாராக இருந்தேன்.

இது நடந்து கொஞ்ச காலத்துக்குப் பிறகு, அர்கான்சாஸைச் சேர்ந்த எல்டெராடோவில் இருந்த சபைக்குப் போய் உதவி செய்யும்படி வட்டாரக் கண்காணி என்னிடம் சொன்னார். நான் எல்டெராடோவில் இருந்தபோது, ‘ட்ராஃப்ட் போர்டுக்கு’ முன்னால் (ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் குழு) ஆஜராவதற்காக அடிக்கடி கொலரடோவுக்குப் போக வேண்டியிருந்தது. ஒரு சமயம், நானும் சில பயனியர்களும் அங்கே போய்க்கொண்டிருந்தபோது, டெக்ஸஸில் எதிர்பாராத ஒரு விபத்து நடந்தது. அதில் என்னுடைய கார் பயங்கரமாகச் சேதமானது. உடனே நாங்கள் ஒரு சகோதரருக்கு ஃபோன் செய்தோம். அவர் வந்து எங்களை அவருடைய வீட்டுக்கும், பிறகு சபை கூட்டத்துக்கும் கூட்டிக்கொண்டு போனார். எங்களுக்கு நடந்த விபத்தைப் பற்றி கூட்டத்தில் அறிவித்தபோது நிறைய சகோதரர்கள் எங்களுக்குப் பணம் கொடுத்து உதவினார்கள். என்னைக் கூட்டிக்கொண்டு வந்த சகோதரர் என்னுடைய காரை 25 டாலருக்கு விற்றுக்கொடுத்தார்.

பிறகு, அங்கிருந்து எங்களால் விசிடாவுக்குப் போக முடிந்தது. எங்களுடைய நெருங்கிய நண்பரான இ. எஃப். மெக்கார்ட்னி, அங்கே பயனியர் ஊழியம் செய்துகொண்டு இருந்தார். அவரை நாங்கள் ‘‘டாக்’’ என்று கூப்பிடுவோம். அவருடைய இரட்டைப் பிள்ளைகளான, ஃப்ரான்க் மற்றும் ஃப்ரான்சிஸ் இன்றுவரை என்னுடைய நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்த ஒரு பழைய காரை எனக்கு 25 டாலருக்குக் கொடுத்தார்கள். சேதமடைந்திருந்த என்னுடைய கார் என்ன விலைக்குப் போனதோ அதே விலைக்கு அந்தக் கார் கிடைத்தது! கடவுளுடைய அரசாங்கத்துக்கு என் வாழ்க்கையில் முதலிடம் கொடுத்ததால், எனக்குத் தேவையானதை யெகோவா கொடுத்திருக்கிறார் என்பதை அப்போதுதான் முதல் முறையாக உணர்ந்தேன். நான் அவர்களோடு இருந்த சமயத்தில், பெத்தேல் க்ரேன் என்ற அழகான சகோதரியை மெக்கார்ட்னி குடும்பத்தார் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். அந்தச் சகோதரியின் அம்மா ரூத், ஒரு வைராக்கியமுள்ள யெகோவாவின் சாட்சி. அவர் கான்சாஸைச் சேர்ந்த வெலிங்டனில் இருந்தார்; தன்னுடைய 90 வயதுவரை பயனியராகச் சேவை செய்தார். பிறகு, நானும் பெத்தேலும் ஒரு வருஷத்துக்குள் (1958-ல்) கல்யாணம் செய்துகொண்டோம்; எல்டெராடோவில் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தோம்.

எங்களுக்குக் கிடைத்த நியமிப்புகள்

எங்களுடைய வாழ்க்கையில் நிறைய பேர் எங்களுக்கு நல்ல முன்மாதிரிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்களைப் போல நாங்களும் மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரிகளாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அதனால், யெகோவாவிடம் இருந்து எந்த நியமிப்பு வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தோம். அர்கான்சாஸில் இருந்த வால்நட் ரிட்ஜ் என்ற இடத்துக்கு நாங்கள் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டோம். 1962-ல் கிலியட் பள்ளியின் 37-வது வகுப்பில் கலந்துகொள்ள அழைப்பு வந்தபோது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. டான் ஸ்டீலும் அதே வகுப்பில் இருந்தது எங்களுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. கிலியட் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, நானும் பெத்தேலும் கென்யாவில் இருக்கும் நைரோபியில் சேவை செய்ய நியமிக்கப்பட்டோம். நியு யார்க்கை விட்டுப்போவது எங்களுக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால், எங்களை வரவேற்பதற்காக நைரோபி ஏர்போர்ட்டுக்கு வந்திருந்த சகோதரர்களைப் பார்த்தபோது எங்கள் கவலையெல்லாம் போய்விட்டது.

க்றிஸ் மற்றும் அவருடைய மனைவி மேரி கனீயாவோடு நைரோபியில் ஊழியம் செய்தபோது

சீக்கிரத்திலேயே, கென்யாவில் வாழ்வதும் அங்கே ஊழியம் செய்வதும் எங்களுக்குப் பிடித்துப்போனது. எங்களுடைய பைபிள் படிப்புகளில் க்றிஸும் அவருடைய மனைவி மேரி கனீயாவும்தான் முதல் முதலில் யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள். அவர்கள் இப்போதும் கென்யாவில் முழுநேர சேவை செய்கிறார்கள். அடுத்த வருடமே, உகாண்டாவில் இருக்கிற கம்பாலாவில் சேவை செய்ய நாங்கள் நியமிக்கப்பட்டோம். அந்த நாட்டுக்குப் போன முதல் மிஷனரிகள் நாங்கள்தான். பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்ள நிறைய பேர் அங்கே ஆர்வமாக இருந்தார்கள்; யெகோவாவின் சாட்சிகளாகவும் ஆனார்கள். அது ஒரு அருமையான காலம்! ஆப்பிரிக்காவுக்குப் போன மூன்றரை வருடத்துக்குப் பிறகு, பிறக்கப் போகும் பிள்ளையை வளர்ப்பதற்காக நாங்கள் அமெரிக்காவுக்குத் திரும்பிப் போனோம். நாங்கள் நியு யார்க்கை விட்டு வந்தபோது கஷ்டமாக இருந்ததைவிட, ஆப்பிரிக்காவை விட்டுப்போவது இன்னும் கஷ்டமாக இருந்தது. ஆப்பிரிக்காவில் இருந்த மக்களை நாங்கள் ரொம்ப நேசித்தோம்; என்றைக்காவது ஒருநாள் மறுபடியும் ஆப்பிரிக்காவுக்கு வருவோம் என்ற நம்பிக்கையோடு அங்கிருந்து போனோம்.

ஒரு புதிய நியமிப்பு

என் பெற்றோர் இருந்த வடக்கு கொலரடோவுக்கு நாங்கள் குடிமாறிப் போனோம். அங்கே போன கொஞ்ச மாதங்களுக்குள், எங்களுடைய முதல் மகள் கிம்பர்லி பிறந்தாள். அவள் பிறந்து 17 மாதங்களுக்குப் பிறகு, ஸ்டெஃபனி பிறந்தாள். பிள்ளைகளை வளர்க்கும் இந்தப் புதிய நியமிப்பை நாங்கள் ரொம்ப முக்கியமானதாக நினைத்தோம். எங்களுடைய அழகான இரண்டு பிள்ளைகளுக்கும் யெகோவாவைப் பற்றி சொல்லித்தர நாங்கள் கடினமாக முயற்சி செய்தோம். எங்களுக்கு நல்ல முன்மாதிரிகளாக இருந்தவர்களைப் போல நாங்களும் எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரிகளாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். ஒரு நல்ல முன்மாதிரி, பிள்ளைகளுடைய வாழ்க்கைக்கு உதவியாக இருந்தாலும் அவர்கள் வளர்ந்த பிறகும் யெகோவாவைச் சேவிப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. என்னுடைய தம்பியும் தங்கையும்கூட சத்தியத்தை விட்டுப் போய்விட்டார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் இருந்த நல்ல முன்மாதிரிகளை அவர்கள் மறுபடியும் பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!

பிள்ளைகளை வளர்ப்பதில் நாங்கள் ரொம்ப சந்தோஷப்பட்டோம். எல்லா விஷயங்களையும் குடும்பமாக செய்ய வேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்தோம். கொலரடோவில் இருந்த ஆஸ்பென் என்ற நகரத்துக்குப் பக்கத்தில் நாங்கள் இருந்ததால், பனி சறுக்கு விளையாட்டைக் கற்றுக்கொண்டோம். அதனால், குடும்பமாக அந்த விளையாட்டில் ஈடுபட முடிந்தது. எங்கள் பிள்ளைகளோடு பேசுவதற்கு இந்த மாதிரியான சமயங்கள் நல்ல வாய்ப்பாக இருந்தன. சில சமயங்களில் பிள்ளைகளோடு நாங்கள் வெளியில் போய் கூடாரம் போட்டு தங்குவோம்; நெருப்பு மூட்டி, சுற்றி உட்கார்ந்துகொண்டு ஜாலியாகப் பேசிக்கொண்டு இருப்போம். அவர்கள் சின்ன பிள்ளைகளாக இருந்தாலும், “பெருசானதுக்கு அப்புறம் நான் என்ன செய்யணும்? நான் எப்படிப்பட்ட ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கணும்?” போன்ற கேள்விகளைக் கேட்பார்கள். யெகோவாவை நேசிக்க அவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதற்காக எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தோம். முழுநேர சேவையைக் குறிக்கோளாக வைப்பதற்கும் அதே குறிக்கோளோடு இருக்கும் ஒருவரை கல்யாணம் செய்துகொள்வதற்கும் அவர்களை உற்சாகப்படுத்தினோம். சின்ன வயதிலேயே கல்யாணம் செய்யாமல் இருப்பது நல்லது என்பதை அவர்களுக்குப் புரிய வைத்தோம். “23 வயசு வரைக்குமாவது கல்யாணம் பண்ணிக்காம ஜாலியா இருங்க” என்று அவர்களிடம் நாங்கள் அடிக்கடி சொல்வோம்.

குடும்பமாகக் கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் தவறாமல் போக, எங்களுடைய பெற்றோரைப் போலவே நாங்களும் கடினமாக முயற்சி செய்தோம். அதோடு, முழுநேர சேவை செய்யும் சிலரை எங்கள் வீட்டில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்தோம். அதுமட்டுமல்ல, மிஷனரி சேவையை நாங்கள் எந்தளவு நேசித்தோம் என்று அடிக்கடி பேசுவோம். என்றாவது ஒருநாள் நாங்கள் நான்கு பேரும் ஆப்பிரிக்காவுக்குப் போவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. எங்களுடைய பிள்ளைகளும் அங்கே போவதற்கு ரொம்ப ஆர்வமாக இருந்தார்கள்.

நாங்கள் தவறாமல் குடும்ப வழிபாடு செய்தோம். பள்ளியில் எங்கள் பிள்ளைகள் எதிர்ப்படும் சூழ்நிலைகளை எங்கள் குடும்ப வழிபாட்டில் நடித்துப் பார்ப்போம். ஒரு யெகோவாவின் சாட்சியாக, அப்படிப்பட்ட சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பார்கள் என்று எங்கள் பிள்ளைகள் நடித்துக் காட்டுவார்கள். இப்படிக் கற்றுக்கொண்டது அவர்களுக்கு ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது; அந்த மாதிரியான சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கான தைரியத்தையும் தந்தது. அவர்கள் கொஞ்சம் பெரியவர்களான பிறகு, குடும்ப வழிபாட்டைப் பற்றி சில சமயங்களில் குறை சொன்னார்கள். ஒரு தடவை எனக்கு ரொம்ப கோபம் வந்துவிட்டது. அதனால் நான் அவர்களிடம், ‘இன்னைக்கு குடும்ப வழிபாடெல்லாம் இல்ல, பேசாம போங்க’ என்று சொல்லிவிட்டேன். நான் அப்படிச் சொல்வேன் என்று அவர்கள் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை, உடனே அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். ஆன்மீக விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு நாங்கள் அவர்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறோம் என்பதை அப்போதுதான் புரிந்துகொள்ள ஆரம்பித்தோம். காலப்போக்கில், அவர்கள் குடும்ப வழிபாட்டில் ஆர்வமாகக் கலந்துகொண்டார்கள்; மனதில் இருப்பதை எங்களிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்ல ஆரம்பித்தார்கள். சில சமயங்களில், பைபிளில் இருக்கும் ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர்கள் சொன்னது எங்களுக்குக் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும், உண்மையிலேயே அந்த விஷயங்களைப் பற்றி அவர்கள் என்ன நினைத்தார்கள் என்பதை அப்போது எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களிடம் ஆதாரங்காட்டிப் பேசியபோது, யெகோவாவின் தராதரங்களை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

மாற்றங்களுக்கு ஏற்றபடி எங்களை மாற்றிக்கொண்டோம்

கண் மூடி திறப்பதற்குள் எங்கள் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். கடவுளுடைய அமைப்பின் உதவியாலும் வழிநடத்துதலாலும் யெகோவாவை நேசிக்கும் விதத்தில் பிள்ளைகளை வளர்க்க எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தோம். பள்ளிப் படிப்பை முடித்தவுடனே அவர்கள் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள். அதைப் பார்த்தபோது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காகச் சில வேலைகளையும் கற்றுக்கொண்டார்கள். தேவை அதிகம் இருக்கும் இடத்தில் சேவை செய்வதற்காக இரண்டு சகோதரிகளோடு சேர்ந்து டென்னெஸீயில் இருக்கும் கிளீவ்லாண்ட்டுக்கு அவர்கள் குடிமாறிப் போனார்கள். அவர்கள் போனது எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தாலும், அவர்கள் முழுநேர சேவை செய்கிறார்கள் என்று நினைத்தபோது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதற்குப் பிறகு, பெத்தேலும் நானும் மறுபடியும் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தோம். இதனால், கொஞ்ச காலத்துக்குப் பிறகு, துணை வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்யும் வாய்ப்பும் மாநாட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் எனக்குக் கிடைத்தது.

டென்னெஸீக்குப் போவதற்கு முன்பு, எங்கள் பிள்ளைகள் இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் பெத்தேலுக்குப் போனார்கள். அங்கே சேவை செய்த பால் நார்ட்டன் என்ற ஓர் இளம் சகோதரரை ஸ்டெஃபனி சந்தித்தாள். அந்தச் சமயத்தில், அவளுக்கு 19 வயது. இன்னொரு முறை அங்கே போயிருந்தபோது, பால் நார்ட்டனோடு சேவை செய்துவந்த ப்ரையன் லீவலின் என்ற சகோதரரை கிம்பர்லி சந்தித்தாள். ஸ்டெஃபனிக்கு 23 வயதானபோது, அவளும் பால் நார்ட்டனும் கல்யாணம் செய்துகொண்டார்கள். அதற்கு அடுத்த வருடம், கிம்பர்லியும் ப்ரையனும் கல்யாணம் செய்துகொண்டார்கள். அப்போது கிம்பர்லிக்கு 25 வயது. நாங்கள் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி, அவர்கள் இரண்டு பேரும் 23 வயதுவரை கல்யாணம் செய்துகொள்ளாமல் இருந்தார்கள். அவர்கள் சரியான துணைகளைத் தேர்ந்தெடுத்ததற்காக நாங்கள் ரொம்ப சந்தோஷப்படுகிறோம்.

மலாவி கிளை அலுவலகத்தில், பால், ஸ்டெஃபனி, கிம்பர்லி, ப்ரையனோடு (2002-ல்)

தங்களுடைய வாழ்க்கையில் பணக் கஷ்டம் வந்தபோதுகூட, ‘கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம்’ கொடுப்பதற்கு எங்கள் பெற்றோர்களுடைய முன்மாதிரியும் எங்களுடைய முன்மாதிரியும் உதவியதாக எங்கள் பிள்ளைகள் சொல்வார்கள். (மத். 6:33) ஏப்ரல் 1998-ஆம் வருடம், பால் நார்ட்டனுக்கும் ஸ்டெஃபனிக்கும் கிலியட் பள்ளியின் 105-வது வகுப்பில் கலந்துகொள்வதற்கு அழைப்பு கிடைத்தது. பள்ளி முடிந்த பிறகு, ஆப்பிரிக்காவிலிருக்கும் மலாவியில் சேவை செய்ய அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அதே சமயத்தில், ப்ரையனுக்கும் கிம்பர்லிக்கும் லண்டன் பெத்தேலில் சேவை செய்வதற்கு அழைப்பு கிடைத்தது. கொஞ்ச காலத்துக்குப் பிறகு, அவர்கள் மலாவி பெத்தேலுக்கு நியமிக்கப்பட்டார்கள். இதையெல்லாம் பார்த்தபோது, எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்துவதற்கு இதைவிட ஒரு சிறந்த வழி இருக்க முடியாது!

எதிர்பாராமல் வந்த அழைப்பு

ஆரம்பத்தில் நான் சொன்னபடி, ஜனவரி 2001-ல் சகோதரர் ஈசாக் மரே எனக்கு ஃபோன் செய்தார். உலகம் முழுவதும் இருக்கிற மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலத்தை நன்றாகப் புரிந்துகொள்வதற்காக, சகோதரர்கள் ஒரு வகுப்பை ஏற்பாடு செய்துகொண்டிருப்பதாக அவர் சொன்னார். அப்போது, அவர் மொழிபெயர்ப்பு சேவையின் கண்காணியாக இருந்தார். எனக்கு அப்போது 64 வயதாகியிருந்தாலும், போதனையாளர்களில் ஒருவராக இருப்பதற்கு எனக்குப் பயிற்சி கொடுக்க விரும்பினார்கள். நானும் பெத்தேலும் இதைப் பற்றி ஜெபம் செய்தோம்; எங்கள் இரண்டு பேருடைய அம்மாக்களிடமும் ஆலோசனை கேட்டோம். அவர்கள் இரண்டு பேருக்கும் வயதாகி இருந்தது, நாங்கள் போய்விட்டால் எங்களுடைய உதவி அவர்களுக்கு இருக்காது. இருந்தாலும், நாங்கள் அந்த நியமிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டார்கள். அதனால், சகோதரர் ஈசாக் மரேவுக்கு ஃபோன் செய்து, அந்த நியமிப்பைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வதாகச் சொன்னேன்.

பிறகுதான், அம்மாவுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், நாங்கள் அந்த நியமிப்பை ஏற்றுக்கொள்ள போவதில்லை என்றும் அவரைக் கவனித்துக்கொள்ள என் தங்கை லின்டாவுக்கு உதவி செய்யப்போவதாகவும் என் அம்மாவிடம் சொன்னேன். ஆனால், அவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. “நீ போகலன்னா எனக்கு இன்னும் கஷ்டமா இருக்கும்” என்று சொன்னார். நாங்கள் போக வேண்டும் என்றுதான் லின்டாவும் விரும்பினாள். அவர்கள் அவ்வளவு பெரிய தியாகம் செய்யத் தயாராக இருந்ததற்காக நாங்கள் நன்றியோடு இருந்தோம். அதுமட்டுமல்ல, எங்கள் பகுதியில் இருந்த சகோதர சகோதரிகள் செய்த உதவிக்காகவும் நாங்கள் நன்றியோடு இருந்தோம். நாங்கள் பேட்டர்ஸனில் இருக்கும் உவாட்ச்டவர் கல்வி மையத்துக்குப் போன அடுத்த நாள், என் அம்மா இறந்து விட்டதாக லின்டாவிடம் இருந்து ஃபோன் வந்தது. என் அம்மா இருந்திருந்தால் எதைச் செய்யச் சொல்லி எங்களை உற்சாகப்படுத்தியிருப்பாரோ அதைத்தான் நாங்கள் செய்தோம்; எங்களுடைய புதிய நியமிப்பை மும்முரமாகச் செய்து வந்தோம்!

எங்களுடைய முதல் நியமிப்பு மலாவியில் என்று தெரியவந்தபோது, எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அங்கேதான் எங்கள் பிள்ளைகளும் அவர்களுடைய கணவர்களும் சேவை செய்துகொண்டிருந்தார்கள். மறுபடியும் நாங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தது எங்களுக்குச் சந்தோஷமாக இருந்தது. அடுத்து, ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியாவுக்குப் போய் அங்கிருந்த மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். மூன்றரை வருடங்கள் அந்த நியமிப்பைச் செய்த பிறகு, திரும்பவும் நாங்கள் மலாவிக்குப் போனோம். அரசியல் விவகாரங்களில் ஈடுபடாததால், மலாவியில் இருந்த சகோதர சகோதரிகள் அனுபவித்த துன்புறுத்துதல்களைப் பற்றி எழுதுவதற்காக அங்கே போனோம். *

எங்கள் பேத்திகளோடு ஊழியம் செய்யும்போது

2005-ல் நாங்கள் மறுபடியும் ஆப்பிரிக்காவை விட்டு கிளம்பியபோது எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அங்கிருந்து கொலரடோவில் இருக்கும் எங்கள் ஊரான பஸால்ட்டுக்கு நாங்கள் திரும்பிப் போனோம். 2006-ல் கிம்பர்லியும் ப்ரையனும் அவர்களுடைய பிள்ளைகளை வளர்ப்பதற்காக எங்களுடைய வீட்டுக்குப் பக்கத்தில் குடிமாறி வந்தார்கள். பால் நார்ட்டனும் ஸ்டெஃபனியும் இப்போதும் மலாவியில்தான் இருக்கிறார்கள்; பால் நார்ட்டன் கிளை அலுவலகக் குழுவின் அங்கத்தினராகச் சேவை செய்கிறார். இப்போது எனக்கு 80 வயதாகப் போகிறது. என்னோடு சேர்ந்து வேலை செய்த இளைஞர்கள், நான் செய்துவந்த பொறுப்புகளைக் கவனித்துக்கொள்வதைப் பார்க்கும்போது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. மற்றவர்கள் எப்படி எங்களுக்கு நல்ல முன்மாதிரிகளாக இருந்தார்களோ, அதே போல நாங்களும் எங்களுடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் நல்ல முன்மாதிரிகளாக இருக்க முயற்சி செய்திருக்கிறோம். இது எங்களுக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது.

^ பாரா. 5 ஸ்டீல் குடும்பத்தாருடைய மிஷனரி சேவையைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள மே 1, 1956 ஆங்கில காவற்கோபுரத்தில் பக்கங்கள் 269-272 மற்றும் மார்ச் 15, 1971 ஆங்கில காவற்கோபுரத்தில் பக்கங்கள் 186-190-ஐப் பாருங்கள்.

^ பாரா. 30 உதாரணத்துக்கு, ட்ராஃபிம் நசோம்பா என்ற சகோதரருடைய அனுபவத்தை ஏப்ரல் 15, 2015 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 14-18-ல் பாருங்கள்.