நியாயத்தீர்ப்பு என்ற புயல்!—போதுமான எச்சரிப்பைக் கடவுள் கொடுக்கிறாரா?
பயங்கரமான ஒரு புயல் கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. ஜன நெருக்கடி நிறைந்த ஒரு பகுதியை அது தாக்கப்போகிற விஷயம் வானிலை ஆய்வாளருக்குத் தெரியவருகிறது. ‘ஐயோ! மக்களுக்கு என்ன ஆகுமோ’ என்று அவர் பதறுகிறார். அவர்களைக் காப்பாற்றுவதற்காக கொஞ்சம்கூட நேரத்தை வீணாக்காமல் மக்களை எச்சரிக்கிறார்.
சீக்கிரத்தில், எந்த வானிலை அறிக்கையிலும் சொல்லப்படாத ஆக்ரோஷமான ஒரு “புயல்” இந்தப் பூமியைத் தாக்கப்போகிறது! இதைப் பற்றி யெகோவா எச்சரிக்கிறார். அதை அவர் எப்படிச் செய்கிறார்? எச்சரிக்கையைக் கேட்டு நடவடிக்கை எடுப்பதற்குப் போதுமான நேரத்தை அவர் கொடுப்பார் என்று ஏன் உறுதியாகச் சொல்லலாம்? இதற்கான பதில்களைத் தெரிந்துகொள்ள, சரித்திரத்தைப் புரட்டிப் பார்க்கலாம். கடந்த காலத்தில் யெகோவா எப்படியெல்லாம் மக்களை எச்சரித்திருக்கிறார் என்பதை ஆராய்ந்து பார்க்கலாம்.
கடவுள் கொடுத்த முன்னெச்சரிக்கைகள்
பைபிள் காலங்களில், யாரெல்லாம் யெகோவாவின் கட்டளைகளுக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியவில்லையோ, அவர்களை நியாயத்தீர்ப்பு என்ற “புயல்” தாக்கியது. ஆனால், அதைப் பற்றி யெகோவா முன்கூட்டியே எச்சரித்தார். (நீதி. 10:25; எரே. 30:23) ஒவ்வொரு தடவையும், அந்தப் புயலால் பாதிக்கப்படவிருந்த மக்களை அவர் முன்கூட்டியே எச்சரித்தார்; தனக்குக் கீழ்ப்படிவதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொன்னார். (2 ரா. 17:12-15; நெ. 9:29, 30) தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய அவர்களுக்கு உதவுவதற்கு தன்னுடைய உண்மை ஊழியர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அதுவும், உடனடியாக மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவியிருக்கிறார்.—ஆமோ. 3:7.
அப்படிப்பட்ட உண்மை ஊழியர்களில் நோவாவும் ஒருவர்! ஒரு பெரிய வெள்ளம் வரப்போகிறது என்ற எச்சரிப்பு செய்தியை அவர் ரொம்பக் காலமாகச் சொல்லிவந்தார். ஒழுக்கங்கெட்ட மக்களையும் வன்முறையில் மூழ்கிக் கிடந்தவர்களையும் எச்சரிப்பதற்கு அவர் பயப்படவே இல்லை. (ஆதி. 6:9-13, 17) உயிர் பிழைக்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் சொன்னார். “நீதியைப் பிரசங்கித்தவராகிய நோவா” என்று பெயரெடுக்கும் அளவுக்கு அவர் மும்முரமாகப் பிரசங்கித்தார்.—2 பே. 2:5.
அவர் அவ்வளவு முயற்சி எடுத்து பிரசங்கித்தபோதும், அன்றிருந்த மக்கள் அவர் சொன்னதை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. தங்களுக்குக் கொஞ்சம்கூட விசுவாசம் இல்லாததை அவர்கள் காட்டினார்கள். அதனால், வெள்ளம் ‘வந்து எல்லாரையும் அடித்துக்கொண்டு போனது.’ (மத். 24:39; எபி. 11:7) கடவுள் தங்களை எச்சரிக்கவில்லை என்று அவர்களால் சொல்லியிருக்க முடியுமா? நிச்சயம் முடியாது!
வேறுசில சமயங்களில், நியாயத்தீர்ப்பு என்ற “புயல்” வீசுவதற்குக் கொஞ்சம் முன்பு மக்களை யெகோவா எச்சரித்திருக்கிறார். ஆனாலும், தகுந்த நடவடிக்கை எடுப்பதற்குப் போதுமான நேரத்தைக் கொடுத்திருக்கிறார். எகிப்து தேசத்தின்மீது பத்து தண்டனைகளைக் கொண்டுவந்தபோது அவர் என்ன செய்தார்? முன்கூட்டியே அவர்களை எச்சரித்தார்! ஏழாம் தண்டனையை, அதாவது ஆலங்கட்டி மழையை, கொண்டுவருவதற்கு முன்பு பார்வோனையும் அவனுடைய ஆட்களையும் எச்சரிப்பதற்காக மோசேயையும் ஆரோனையும் அனுப்பினார். அடுத்த நாள் பெய்யப்போகும் ஆலங்கட்டி மழையிலிருந்து தப்பிப்பதற்குப் பாதுகாப்பான ஓர் இடத்தைக் கண்டுபிடிக்கவும், யெகோவாவின் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்கவும் மக்களுக்குப் போதுமான நேரம் இருந்ததா? பைபிள் இப்படிச் சொல்கிறது: “அப்போது, பார்வோனின் ஊழியர்களில் யாரெல்லாம் யெகோவாவுக்குப் பயந்தார்களோ அவர்கள் எல்லாரும் தங்களுடைய ஆட்களையும் கால்நடைகளையும் வேகவேகமாகக் கூரைக்குள் கூட்டிக்கொண்டு வந்தார்கள். ஆனால், யெகோவாவின் வார்த்தையைக் காதில் போட்டுக்கொள்ளாத எல்லாரும் தங்களுடைய ஆட்களையும் கால்நடைகளையும் வெளியிலேயே விட்டுவிட்டார்கள்.” (யாத். 9:18-21) அவர்களுக்குப் போதுமான எச்சரிப்பை யெகோவா கொடுத்தார் என்பது இதிலிருந்து தெரிகிறது. எச்சரிப்பைக் கேட்டு உடனடியாகச் செயல்பட்டவர்கள், அந்தத் தண்டனையிலிருந்து தப்பித்தார்கள்.
பத்தாம் தண்டனைக்கு முன்பும் பார்வோன் மற்றும் அவனுடைய ஆட்களுக்கு எச்சரிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், புத்தியில்லாமல் அவர்கள் அதைத் தட்டிக்கழித்தார்கள். (யாத். 4:22, 23) அதனால், தங்கள் மூத்த பிள்ளைகளைப் பறிகொடுத்தார்கள். எவ்வளவு பரிதாபமான முடிவு! (யாத். 11:4-10; 12:29) எச்சரிப்பைக் கேட்டு நடவடிக்கை எடுக்குமளவுக்கு அவர்களுக்கு நேரம் இருந்ததா? ஆமாம், இருந்தது! இப்போது, இஸ்ரவேலர்களுடைய விஷயத்துக்கு வரலாம். கொஞ்சம்கூட காலம் கடத்தாமல் மோசே இஸ்ரவேலர்களை எச்சரித்திருந்தார். அவர்களுடைய குடும்பங்களைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். (யாத். 12:21-28) அந்த எச்சரிப்புக்கு எத்தனை பேர் கீழ்ப்படிந்தார்கள்? சில கணிப்பின்படி, 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அந்த எச்சரிப்புக்குக் கீழ்ப்படிந்தார்கள். அவர்கள் எல்லாரும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்தார்கள், எகிப்தைவிட்டு கிளம்பினார்கள். அவர்களில், இஸ்ரவேலர்கள் மட்டுமல்ல, ‘பலதரப்பட்ட ஜனங்களும்’ இருந்தார்கள். அதாவது, எகிப்தியர்களும் மற்ற தேசத்தாரும் இருந்தார்கள்.—யாத். 12:38, அடிக்குறிப்பு.
இந்தச் சம்பவங்களிலிருந்து என்ன தெரிகிறது? தன்னுடைய எச்சரிப்பைக் கேட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கத் தேவையான நேரத்தை யெகோவா கொடுக்கிறார். (உபா. 32:4) ஏனென்றால், ‘ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று அவர் விரும்புவதாக’ அப்போஸ்தலன் பேதுரு சொல்கிறார். (2 பே. 3:9) மக்களுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என்று யெகோவா விரும்புகிறார். நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவதற்கு முன்பே மக்கள் மனம் திருந்த வேண்டும் என்றும், தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்.—ஏசா. 48:17, 18; ரோ. 2:4.
இன்று கடவுள் கொடுக்கிற எச்சரிப்புக்குக் கவனம் செலுத்துங்கள்
அன்று போல் இன்றும் ஓர் அவசர எச்சரிப்பு உலகம் முழுவதும் கொடுக்கப்படுகிறது. எல்லா மக்களும் அதைக் கேட்டு நடவடிக்கை எடுப்பது அவசியம். இயேசு பூமியில் இருந்தபோது, எதிர்காலத்தில் “மிகுந்த உபத்திரவம்” வரும் என்றும், இன்றிருக்கும் உலகத்துக்கு முடிவுகட்டப்படும் என்றும் சொன்னார். (மத். 24:21) அதோடு, மிகுந்த உபத்திரவம் வருவதற்கு முன்பு என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்பதையும், என்ன மாதிரியான பிரச்சினைகளை தன்னுடைய சீஷர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் தெரிந்துகொள்வதற்காக சில அடையாளங்களைச் சொன்னார். உலகம் முழுவதும் நடக்கும் என்று அவர் சொன்ன சம்பவங்கள் இன்று நடந்துவருவதை நம்மால் பார்க்க முடிகிறது.—மத். 24:3-12; லூக். 21:10-13.
அந்தத் தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறி வருவதால், தனக்குச் சேவை செய்யும்படியும் கீழ்ப்படியும்படியும் யெகோவா எல்லாரையும் கேட்டுக்கொள்கிறார். தனக்குக் கீழ்ப்படிகிற மக்களுக்கு இன்று ஓர் அருமையான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றும், நீதி குடியிருக்கிற பூஞ்சோலை பூமியில் அவர்கள் ஏராளமான ஆசீர்வாதங்களை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் ஆசைப்படுகிறார். (2 பே. 3:13) தன்னுடைய வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை வைக்க மக்களுக்கு யெகோவா உதவுகிறார். எப்படி? உயிர்காக்கும் ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்திதான்’ அது! இந்தச் செய்தி, “உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” என்று இயேசுவும் சொன்னார். (மத். 24:14) தன்னுடைய உண்மை ஊழியர்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் ‘சாட்சி’ கொடுப்பதற்கு, அதாவது தன்னுடைய செய்தியைப் பிரசங்கிப்பதற்கு, யெகோவா ஏற்பாடு செய்திருக்கிறார். அவர்கள் இந்த வேலையைக் கிட்டத்தட்ட 240 நாடுகளில் செய்கிறார்கள். நிறைய பேர் தன்னுடைய எச்சரிப்புக்குக் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தன்னுடைய நீதியான நியாயத்தீர்ப்பு என்ற ‘புயலிலிருந்து’ தப்பிக்க வேண்டும் என்றும் அவர் ஆசைப்படுகிறார்.—செப். 1:14, 15; 2:2, 3.
எச்சரிப்பைக் கேட்டு நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான நேரத்தை யெகோவா கொடுக்கிறாரா என்பது இப்போது கேள்வி அல்ல. ஏனென்றால், அவர் போதுமான நேரத்தைக் கொடுக்கிறார் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. அப்படியென்றால், காலம் இருக்கும்போதே மக்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதுதான் கேள்வி. கடவுளின் செய்தியை அறிவிப்பவர்களாகிய நாம், இந்த உலகத்தின் முடிவிலிருந்து தப்பிப்பதற்கு எத்தனை பேருக்கு உதவ முடியுமோ அத்தனை பேருக்கு உதவ வேண்டும்.