படிப்புக் கட்டுரை 6
உங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!
“சாகும்வரை நான் என்னுடைய உத்தமத்தை விட மாட்டேன்.”—யோபு 27:5.
பாட்டு 29 உத்தமம் காத்தல்
இந்தக் கட்டுரையில்... *
1. யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் மூன்று பேர் யெகோவாவுக்கு எப்படி உண்மையாக இருக்கிறார்கள்?
இந்த மூன்று சூழ்நிலைகளைக் கற்பனை செய்துபாருங்கள். (1) யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஓர் இளம் பெண் பள்ளியில் இருக்கிறார். அப்போது, அங்கே நடக்கிற ஒரு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும்படி எல்லா மாணவர்களிடமும் ஆசிரியர் சொல்கிறார். யெகோவா அந்தக் கொண்டாட்டத்தை வெறுக்கிறார் என்பது அந்த இளம் பெண்ணுக்குத் தெரியும். அதனால், அதில் கலந்துகொள்ள முடியாது என்று ஆசிரியரிடம் அவள் மரியாதையோடு சொல்கிறாள். (2) யெகோவாவின் சாட்சியாக இருக்கிற கூச்ச சுபாவமுள்ள ஓர் இளைஞர், வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருக்கிறார். தன்னோடு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் அடுத்த வீட்டில் குடியிருப்பது அவருக்கு ஞாபகம் வருகிறது. அவன் யெகோவாவின் சாட்சிகளை ஏற்கெனவே கிண்டல் செய்திருப்பது தெரிந்திருந்தும் அவனுடைய வீட்டுக் கதவைத் தட்டுகிறார். (3) யெகோவாவின் சாட்சியாக இருக்கிற ஒருவர் தன் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதற்காகக் கடினமாக உழைக்கிறார். ஒரு நாள், நேர்மையற்ற அல்லது சட்டவிரோதமான ஒரு விஷயத்தைச் செய்யும்படி அவருடைய முதலாளி சொல்கிறார். அதைச் செய்யவில்லை என்றால் வேலை பறிபோய்விடும் என்பது தெரிந்திருந்தும், அதைச் செய்ய அவர் மறுத்துவிடுகிறார். தன்னை வணங்குபவர்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் கடவுள் எதிர்பார்க்கிறார் என்பதைத் தன் முதலாளியிடம் விளக்குகிறார்.—ரோ. 13:1-4; எபி. 13:18.
2. எந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் பார்ப்போம், ஏன்?
2 இந்த மூன்று பேரும் எந்தக் குணத்தைக் காட்டியிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? நேர்மை, தைரியம் போன்ற நிறைய குணங்கள் உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். இருந்தாலும், முக்கியமான ஒரு குணத்தை இவர்கள் காட்டியிருக்கிறார்கள். அதுதான், உத்தமம்! ஒவ்வொருவரும் யெகோவாவுக்கு உண்மையாக இருந்திருக்கிறார்கள். கடவுளுடைய தராதரங்களை அவர்கள் விட்டுக்கொடுக்கவே இல்லை. உத்தமம் என்ற குணம்தான் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டியது. நாம் ஒவ்வொருவரும் இந்தக் குணத்தைக் காட்டும்போது யெகோவா நிச்சயம் பெருமைப்படுவார். நம் பரலோகத் தந்தையான யெகோவா அப்படி உணர வேண்டும் என்றுதான் நாமும் ஆசைப்படுகிறோம். அதனால், இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்: உத்தமம் என்றால் என்ன? உத்தமமாக இருப்பது ஏன் அவசியம்? இந்தக் கஷ்டமான காலத்தில், உத்தமத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை எப்படிப் பலப்படுத்திக்கொள்ளலாம்?
உத்தமம் என்றால் என்ன?
3. (அ) உத்தமம் என்றால் என்ன? (ஆ) அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள எந்த உதாரணங்கள் உதவுகின்றன?
3 முழுமனதோடு யெகோவாமீது அன்பு காட்டுவதும், அவரோடு முறிக்கமுடியாத ஒரு பந்தத்தை வைத்துக்கொள்வதும், எப்போதும் அவருக்குப் பிரியமானதைச் செய்வதும்தான் உத்தமம்! இப்படிச் செய்வதன் மூலம் கடவுளுடைய ஊழியர்கள் உத்தமத்தைக் காட்டுகிறார்கள். இப்போது, உத்தமம் என்ற வார்த்தை பைபிளில் எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று பார்க்கலாம். “உத்தமம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை, நிறைவான, குறையில்லாத அல்லது முழுமையான ஒன்றைக் குறிக்கிறது. உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு மிருக பலிகளைச் செலுத்தும்போது, அவை குறையில்லாதவையாக இருக்க வேண்டும் என்று திருச்சட்டம் சொன்னது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (லேவி. 22:21, 22) காலோ காதோ கண்ணோ இல்லாத ஒரு மிருகத்தை அல்லது நோய் பிடித்த ஒரு மிருகத்தை அவர்கள் பலி செலுத்த முடியாது. அந்த மிருகம் முழுமையானதாகவும் நோயில்லாததாகவும் இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்த்தார்; அதை அவர் ரொம்ப முக்கியமானதாக நினைத்தார். (மல். 1:6-9) யெகோவா ஏன் இப்படி எதிர்பார்த்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இதை யோசித்துப்பாருங்கள். அழுகிப்போன பழத்தையோ, சில பக்கங்கள் இல்லாத புத்தகத்தையோ, சில பாகங்கள் இல்லாத கருவியையோ நாம் வாங்குவோமா? நிச்சயம் வாங்க மாட்டோம். நாம் வாங்குகிற பொருள்கள் நிறைவானவையாக, குறையில்லாதவையாக அல்லது முழுமையானவையாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம். நம்முடைய அன்பையும் உண்மைத்தன்மையையும் பொறுத்தவரை யெகோவாவும் அதைத்தான் எதிர்பார்க்கிறார். அது நிறைவானதாக, குறையில்லாததாக அல்லது முழுமையானதாக இருக்க வேண்டும்!
4. (அ) பாவ இயல்புள்ளவர்களால்கூட ஏன் உத்தமமாக இருக்க முடியும்? (ஆ) சங்கீதம் 103:12-14-ன்படி யெகோவா நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்?
4 நாம் பரிபூரணர்களாக இருந்தால்தான் உத்தமமாக இருக்க முடியுமா? ஒருவேளை, நம்மிடம் நிறைய குறைகள் இருக்கின்றன என்றும், நாம் நிறைய தவறுகளைச் செய்துவிடுகிறோம் என்றும் நினைக்கலாம். ஆனால், அதை நினைத்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏன்? முதலாவதாக, நம்முடைய தவறுகளைப் பற்றியே யெகோவா யோசித்துக்கொண்டிருப்பது கிடையாது. “‘யா’வே, நீங்கள் குற்றங்களைக் கவனிக்க ஆரம்பித்தால், யெகோவாவே, யார் உங்கள் முன்னால் நிற்க முடியும்?” என்று அவருடைய வார்த்தை சொல்கிறது. (சங். 130:3) நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் அவர் நம்மைத் தாராளமாக மன்னிக்கிறார். (சங். 86:5) இரண்டாவதாக, நம்முடைய வரம்புகளைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். நம்மால் முடியாததை அவர் எதிர்பார்ப்பது கிடையாது. (சங்கீதம் 103:12-14-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், யெகோவாவின் பார்வையில், எந்த அர்த்தத்தில் நாம் நிறைவானவர்களாக, குறையில்லாதவர்களாக அல்லது முழுமையானவர்களாக இருக்க முடியும்?
5. உத்தமமாக இருப்பதற்கு அன்பு ரொம்ப முக்கியம் என்று ஏன் சொல்லலாம்?
5 யெகோவாவின் ஊழியர்களாக, உத்தமத்தைக் காத்துக்கொள்ள அன்பு ரொம்ப முக்கியம். கடவுள்மீது இருக்கும் அன்பும், பரலோகத் தந்தையான அவர்மீது நாம் வைத்திருக்கும் உண்மையான பக்தியும், நிறைவானதாக, குறையில்லாததாக அல்லது முழுமையானதாக இருக்க வேண்டும். சோதனைகள் வரும்போதும் நம்முடைய அன்பு மாறாமல் இருந்தால், நாம் உத்தமமாக இருக்கிறோம் என்று அர்த்தம். (1 நா. 28:9; மத். 22:37) ஆரம்பத்தில் பார்த்த யெகோவாவின் சாட்சிகள் மூன்று பேருடைய விஷயத்தைக் கவனிக்கலாம். அவர்கள் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள்? பள்ளியில் ஜாலியாக இருப்பது அந்த இளம் பெண்ணுக்குப் பிடிக்கவில்லையா? கேலி கிண்டலுக்கு ஆளாக வேண்டும் என்று அந்த இளைஞர் ஆசைப்பட்டாரா? தன் வேலையைப் பறிகொடுக்க வேண்டும் என்று அந்தக் குடும்பத் தலைவர் நினைத்தாரா? கண்டிப்பாக இல்லை! யெகோவாவுக்கென்று சில நீதியான தராதரங்கள் இருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியும். தங்களுடைய பரலோகத் தந்தைக்கு எது பிடிக்கும் என்பதைப் பற்றியே அவர்கள் யோசித்தார்கள். அவர்கள் அவரை அந்தளவு நேசித்ததால், அவரை மனதில் வைத்துதான் எல்லா முடிவுகளையும் எடுத்தார்கள். இப்படி, உத்தமமாக இருப்பதைச் செயலில் காட்டினார்கள்.
உத்தமமாக இருப்பது ஏன் அவசியம்?
6. (அ) உத்தமமாக இருப்பது ஏன் அவசியம்? (ஆ) ஆதாமும் ஏவாளும் எப்படி உத்தமத்தைக் காத்துக்கொள்ளத் தவறினார்கள்?
6 நாம் ஒவ்வொருவரும் உத்தமமாக இருப்பது ஏன் ரொம்பவே முக்கியம்? ஏனென்றால், சாத்தான் யெகோவாவிடம் சவால்விட்டிருக்கிறான்; நம்மிடமும் சவால்விட்டிருக்கிறான். இந்தக் கலகக்கார தூதன், ஏதேன் தோட்டத்தில், சாத்தானாக அதாவது ‘எதிர்ப்பவனாக’ மாறினான். கடவுள் மோசமானவர், சுயநலவாதி, நேர்மையில்லாத ஓர் ஆட்சியாளர் என்று சொன்னதன் மூலம் அவரைப் பழித்துப் பேசினான். ஆதாமும் ஏவாளும் சாத்தானின் பக்கம் ஆதி. 3:1-6) யெகோவாமீது தங்களுக்கு இருந்த அன்பைப் பலப்படுத்திக்கொள்ள, ஏதேன் தோட்டத்தில் அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. ஆனால், சாத்தான் சவால்விட்டபோது, அவர்களுடைய அன்பு நிறைவானதாக, குறையில்லாததாக அல்லது முழுமையானதாக இல்லை! அந்தச் சமயத்தில், இன்னொரு கேள்வியும் எழும்பியது: யெகோவாமீது இருக்கும் அன்பால் தூண்டப்பட்டு எந்த மனிதனாவது அவருக்கு உண்மையாக இருப்பானா? வேறு வார்த்தைகளில் சொன்னால், மனிதர்களால் உத்தமத்தைக் காத்துக்கொள்ள முடியுமா? இதே கேள்விதான் யோபுவின் விஷயத்தில் எழுப்பப்பட்டது.
சேர்ந்துகொண்டு, கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தது ரொம்பவே வருத்தமான ஒரு விஷயம். (7. யோபு 1:8-11 காட்டுகிறபடி, யோபுவின் உத்தமத்தைப் பற்றி யெகோவா என்ன நினைத்தார், அதைப் பற்றி சாத்தான் என்ன நினைத்தான்?
7 இஸ்ரவேலர்கள் எகிப்தில் இருந்த சமயத்தில் யோபு வாழ்ந்தார். அந்தக் காலத்தில், அவரைப் போல உத்தமத்தைக் காத்துக்கொண்டவர்கள் வேறு யாரும் இல்லை. நம்மைப் போலவே யோபுவும் பாவ இயல்புள்ளவர்தான்; அவரும் தவறுகளைச் செய்தார். இருந்தாலும், அவர் உத்தமமாக இருந்ததால் யெகோவா அவரை நேசித்தார். மனிதர்களால் உத்தமமாக இருக்க முடியுமா என்று சாத்தான் ஏற்கெனவே யெகோவாவிடம் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது. அதனால்தான், யோபுவைக் கவனிக்கும்படி சாத்தானிடம் யெகோவா சொன்னார். யோபு வாழ்ந்த விதம், சாத்தான் ஒரு பொய்யன் என்பதை நிரூபித்துக்காட்டியது. யோபுவின் உத்தமத்தைச் சோதித்துப்பார்க்க தன்னை அனுமதிக்கும்படி அவன் யெகோவாவிடம் கேட்டான். தன் நண்பனான யோபுவை யெகோவா நம்பினார்; அவரைச் சோதிக்கவும் சாத்தானை அனுமதித்தார்.—யோபு 1:8-11-ஐ வாசியுங்கள்.
8. சாத்தான் யோபுவை எப்படிச் சோதித்தான்?
8 சாத்தான் கொடூரமானவன், கொலைகாரன்! யோபுவிடம் இருந்த சொத்துகளையும் வேலைக்காரர்களையும் அவன் பறித்தான். அவருடைய பெயரையும் கெடுத்தான். அதோடு, அவருடைய குடும்பத்தையும் தாக்கினான். அவர் நெஞ்சார நேசித்த பத்து பிள்ளைகளின் உயிரையும் எடுத்துவிட்டான். பிறகு, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை யோபுவைக் கொடிய கொப்புளங்களால் வாட்டி வதைத்தான். இதைப் பார்த்த அவருடைய மனைவி நொந்துபோனாள், அவளால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதனால், உத்தமத்தை விட்டுவிடும்படியும், கடவுயோபு 1:13-22; 2:7-11; 15:4, 5; 22:3-6; 25:4-6.
ளைத் திட்டித் தீர்த்து செத்துப்போகும்படியும் யோபுவிடம் சொன்னாள். செத்துப்போவதே மேல் என்று யோபுவும் நினைத்தார். இருந்தாலும், தன்னுடைய உத்தமத்தை அவர் விட்டுக்கொடுக்கவே இல்லை. பிறகு, இன்னொரு விதத்தில் யோபுவைத் தாக்க சாத்தான் முயற்சி செய்தான். அதற்காக அவருடைய மூன்று நண்பர்களைப் பயன்படுத்தினான். அவர்கள் யோபுவோடு நிறைய நாட்கள் இருந்தபோதிலும் அவரை ஆறுதல்படுத்தவில்லை. மனசாட்சியே இல்லாமல் அவரைக் கேலியாகப் பேசினார்கள், கடுமையாக விமர்சித்தார்கள். அவருடைய வேதனைகளுக்கெல்லாம் கடவுள்தான் காரணம் என்று சொன்னார்கள். யோபு உத்தமமாக இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கடவுளுக்கு அக்கறை இல்லை என்று சொன்னார்கள். யோபு மோசமானவர் என்றும், தான் செய்த பாவங்களுக்கான பலனைத்தான் அவர் அனுபவிக்கிறார் என்றும் சொன்னார்கள்.—9. வேதனைகளை அனுபவித்தபோதிலும் யோபு எதை விட்டுக்கொடுக்கவில்லை?
9 இந்த வேதனைகளையெல்லாம் அனுபவித்தபோது யோபு என்ன செய்தார்? அவர் பரிபூரணமானவர் கிடையாது. தன்னுடைய போலி நண்பர்களை அவர் கோபமாகத் திட்டினார்; யோசிக்காமல் பேசியதாகவும் ஒத்துக்கொண்டார். கடவுளுடைய நீதியைவிட தன்னுடைய நீதியைப் பற்றித்தான் பேசினார். (யோபு 6:3; 13:4, 5; 32:2; 34:5) இருந்தாலும், ரொம்பவே வேதனையான சமயத்தில்கூட யெகோவாவுக்கு விரோதமாக அவர் எதையுமே செய்யவில்லை. போலி நண்பர்கள் சொன்ன பொய்களை அவர் நம்பவில்லை. “உங்களையெல்லாம் நீதிமான்கள் என்று சொல்ல எனக்கு வாயே வராது. சாகும்வரை நான் என்னுடைய உத்தமத்தை விட மாட்டேன்” என்று சொன்னார். (யோபு 27:5) எப்பேர்ப்பட்ட வார்த்தைகள்! உத்தமத்தை யோபு விட்டுவிடவில்லை; நம்மாலும் அவரைப் போலவே இருக்க முடியும்.
10. யோபுவுக்கு எதிராக சாத்தான் எழுப்பிய சவாலில் நீங்கள் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள்?
10 யோபுவைப் பற்றிக் குறைசொன்னது போலவே நம்மைப் பற்றியும் சாத்தான் குறைசொல்கிறான். சாத்தான் எழுப்பியிருக்கும் இந்தச் சவாலில் நீங்கள் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு உண்மையிலேயே யெகோவாமீது அன்பு இல்லை என்றும், ஏதாவது பிரச்சினை வந்தால் உங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அவருக்குச் சேவை செய்வதை நிறுத்திவிடுவீர்கள் என்றும் அவன் சொல்கிறான். இப்படி, நீங்கள் காட்டும் உத்தமம் பொய்யானது என்று சொல்கிறான். (யோபு 2:4, 5; வெளி. 12:10) இதைக் கேட்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது? மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது, இல்லையா? இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: யெகோவா உங்களை ரொம்பவே நம்புவதால், உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பைக் கொடுக்கிறார். உங்கள் உத்தமத்தைச் சோதிக்க சாத்தானை அனுமதிக்கிறார். உங்கள் உத்தமத்தை நீங்கள் விட்டுவிட மாட்டீர்கள் என்றும் சாத்தான் ஒரு பொய்யன் என்பதை நிரூபிக்க நீங்கள் உதவுவீர்கள் என்றும் அவர் உறுதியாக நம்புகிறார். இப்படிச் செய்ய உங்களுக்கு உதவுவதாகவும் வாக்குக் கொடுக்கிறார். (எபி. 13:6) இந்தப் பிரபஞ்சத்தின் உன்னதப் பேரரசரே நம்மை நம்புகிறார் என்றால் அது எப்பேர்ப்பட்ட ஒரு பாக்கியம்! உத்தமத்தைக் காத்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறதா? நாம் உத்தமமாக இருக்கும்போது, சாத்தான் சொல்வதெல்லாம் சுத்தப் பொய்தான் என்பதை நிரூபிக்க முடிகிறது. அதோடு, நம் பரலோகத் தந்தையின் பெயருக்கு எந்தக் களங்கமும் வராமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. அவர் ஆட்சி செய்யும் விதம்தான் சரியானது என்றும் நிரூபிக்க முடிகிறது. அதனால், உத்தமம் என்ற முக்கியமான குணத்தை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
இந்தக் காலத்தில் நாம் எப்படி உத்தமத்தைக் காத்துக்கொள்ளலாம்?
11. யோபுவிடமிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
11 நாம் வாழும் இந்த “கடைசி நாட்களில்” தன்னுடைய தாக்குதல்களைச் சாத்தான் தீவிரப்படுத்தியிருக்கிறான். (2 தீ. 3:1) இப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையில், உத்தமத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை எப்படிப் பலப்படுத்திக்கொள்ளலாம்? இதைப் பற்றி யோபுவிடமிருந்து இன்னும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். சோதனைகள் வருவதற்கு ரொம்பக் காலத்துக்கு முன்பிருந்தே அவர் யெகோவாவுக்கு உத்தமமாக இருந்துவந்தார். உத்தமமாக இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்கு உதவுகிற மூன்று பாடங்களை யோபுவிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
12. (அ) யோபு 26:7, 8, 14-ல் சொல்லியிருக்கிறபடி, யெகோவாவை நினைத்துப் பிரமித்துப்போவதற்கும் அவர்மீது அதிக மரியாதையை வளர்த்துக்கொள்வதற்கும் யோபு என்ன செய்தார்? (ஆ) யெகோவாவை நினைத்துப் பிரமித்துப்போவதற்கு நாமும் என்ன செய்யலாம்?
12 யெகோவா எவ்வளவு பிரமாண்டமானவர் என்பதை யோசித்துப்பார்த்ததன் மூலம் அவர்மீது இருந்த அன்பை யோபு பலப்படுத்திக்கொண்டார். யெகோவாவின் படைப்புகள் எவ்வளவு அற்புதமானவை என்பதை யோசித்துப்பார்ப்பதற்கு யோபு நிறைய நேரம் செலவு செய்தார். (யோபு 26:7, 8, 14-ஐ வாசியுங்கள்.) பூமி... வானம்... மேகங்கள்... இடிமுழக்கம்... இவற்றைப் பற்றியெல்லாம் யோசித்தபோது அவர் மலைத்துப்போனார். யெகோவாவின் ஏராளமான படைப்புகளைப் பற்றித் தனக்குத் தெரிந்தது கொஞ்சம்தான் என்பதை அவர் புரிந்துகொண்டார். யெகோவா சொன்னவற்றையும் அவர் ரொம்பவே உயர்வாக மதித்தார். “அவருடைய வார்த்தையைப் பொக்கிஷமாக மதித்தேன்” என்று அவர் சொன்னார். (யோபு 23:12) யெகோவாவை நினைத்து அவர் மலைத்துப்போனார்; யெகோவாமீது அவருக்கு ஆழ்ந்த மரியாதையும் இருந்தது. தன்னுடைய பரலோகத் தந்தையை அவர் ரொம்பவே நேசித்தார்; அவரைப் பிரியப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால், உத்தமத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற அவருடைய தீர்மானம் இன்னும் உறுதியானது. நாமும் யோபுவைப் போலவே செய்ய வேண்டும். யெகோவாவின் படைப்புகள் எவ்வளவு அற்புதமாக இருக்கின்றன என்பது யோபுவின் காலத்தில் வாழ்ந்த மக்களைவிட இன்று நமக்கு நன்றாகத் தெரியும். அதோடு, யெகோவா உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள, அவருடைய சக்தியால் தூண்டப்பட்டு எழுதப்பட்ட முழு பைபிளும் இன்று நம்மிடம் இருக்கிறது. இவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள், நம்மைப் பிரமிக்கவைக்கின்றன; அவர்மீது இருக்கிற மரியாதையையும் அதிகமாக்குகின்றன. அவர்மீது அன்பு வைக்கவும் அவருக்குக் கீழ்ப்படியவும் இவை நம்மைத் தூண்டுகின்றன. அதோடு, உத்தமத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற பலமான ஆசையையும் அதிகமாக்குகின்றன.—யோபு 28:28.
13-14. (அ) யோபு 31:1-ல் சொல்லியிருக்கிறபடி, யோபு எப்படிக் கீழ்ப்படிதலைக் காட்டினார்? (ஆ) நாம் எப்படி அவரைப் போலவே நடந்துகொள்ளலாம்?
13 எல்லா விஷயங்களிலும் கீழ்ப்படிந்ததன் மூலம் யோபு உத்தமத்தைக் காத்துக்கொண்டார். உத்தமமாக இருக்க வேண்டும் என்றால், கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பது யோபுவுக்குத் தெரிந்திருந்தது. சொல்லப்போனால், நாம் ஒவ்வொரு தடவையும் கீழ்ப்படியும்போது, உத்தமமாக இருக்க வேண்டும் என்ற நம் தீர்மானம் பலமாகிறது. தன்னுடைய தினசரி வாழ்க்கையில் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காக யோபு கடினமாக முயற்சி செய்தார். உதாரணத்துக்கு, பெண்களிடம் பழகும் விஷயத்தில் யோபு ரொம்பவே கவனமாக இருந்தார். (யோபு 31:1-ஐ வாசியுங்கள்.) திருமணமான அவருக்கு, தன் மனைவியைத் தவிர வேறொரு பெண்ணிடம் காதல் உணர்வுகளை வளர்த்துக்கொள்வது தவறு என்பது தெரிந்திருந்தது. இன்று, எங்கு பார்த்தாலும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விஷயங்கள்தான் குவிந்து கிடக்கின்றன. யோபுவைப் போலவே, நம்முடைய துணையைத் தவிர வேறொருவரிடம் காதல் உணர்வுகளை வளர்த்துக்கொள்வதைத் தவிர்ப்போமா? கீழ்த்தரமான, ஆபாசமான படங்கள் எங்கிருந்தாலும் அவற்றைப் பார்ப்பதைத் தவிர்ப்போமா? (மத். 5:28) இந்த மாதிரியான சுயக்கட்டுப்பாட்டை ஒவ்வொரு நாளும் காட்ட கடினமாக முயற்சி செய்தால், நம்மால் உத்தமத்தைக் காத்துக்கொள்ள முடியும்.
யோபு 31:24, 25, 28) இன்று, பொருள் செல்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் உலகத்தில் நாம் வாழ்கிறோம். பைபிள் சொல்கிறபடி, பணத்தைப் பற்றியும் சொத்துப்பத்துகளைப் பற்றியும் நாம் சரியான மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், உத்தமமாக இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தைப் பலப்படுத்திக்கொள்ளலாம்.—நீதி. 30:8, 9; மத். 6:19-21.
14 பொருள் செல்வங்களைப் பற்றிய சரியான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளும் விஷயத்திலும் யோபு யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தார். சொத்துப்பத்துகள்மீது நம்பிக்கை வைத்தால், தண்டனைக்குரிய மிகப் பெரிய பாவத்தைச் செய்துவிடும் வாய்ப்பு இருக்கிறது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. (15. (அ) உத்தமத்தைக் காத்துக்கொள்ள எந்த நம்பிக்கை யோபுவுக்கு உதவியது? (ஆ) அது எப்படி நமக்கும் உதவும்?
15 கடவுள் பலன் தருவார் என்ற நம்பிக்கையின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தியதன் மூலம் யோபு உத்தமத்தைக் காத்துக்கொண்டார். தான் காட்டும் உத்தமத்தைக் கடவுள் பெரிதாக நினைக்கிறார் என்று யோபு நம்பினார். (யோபு 31:6) எவ்வளவு சோதனைகள் வந்தாலும் கடைசியில் யெகோவா தனக்குப் பலன் கொடுப்பார் என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கு இருந்தது. உத்தமத்தைக் காத்துக்கொள்ள இந்த நம்பிக்கை அவருக்கு உதவியது. யோபு காட்டிய உத்தமத்தைப் பார்த்து யெகோவா ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதனால், அவர் பாவ இயல்புள்ள மனிதராக இருக்கும்போதே அவருக்கு அதிகமாகப் பலன் தந்தார். (யோபு 42:12-17; யாக். 5:11) எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகப் பலன் தருவார். நீங்கள் உத்தமமாக இருப்பதைப் பார்த்து யெகோவா உங்களுக்கும் பலன் தருவார் என்ற உறுதியான நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? நம்முடைய கடவுள் இன்றும் மாறவில்லை! (மல். 3:6) நாம் காட்டும் உத்தமத்தை அவர் உயர்வாக மதிக்கிறார் என்பதை எப்போதும் ஞாபகம் வைத்திருந்தால், நம்முடைய எதிர்கால நம்பிக்கை இன்னும் பலமாகும்.—1 தெ. 5:8, 9.
16. எது நம்முடைய தீர்மானமாக இருக்க வேண்டும்?
16 அப்படியென்றால், ஒருபோதும் உத்தமத்தை விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். சிலசமயங்களில், உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் விஷயத்தில் நீங்கள் தனியாகப் போராடுவதுபோல் நினைக்கலாம்; ஆனால், நீங்கள் தனியாக இல்லை! உலகம் முழுவதும் உத்தமமாக இருக்கிற லட்சக்கணக்கான உண்மை ஊழியர்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்! மரணத்தைச் சந்திக்க வேண்டிய நிலைமை வந்தபோதிலும் தங்கள் உத்தமத்தைக் காத்துக்கொண்ட கடந்த கால உண்மை ஊழியர்களின் பட்டியலிலும் நீங்கள் ஒருவராக இருப்பீர்கள்! (எபி. 11:36-38; 12:1) “என்னுடைய உத்தமத்தை விட மாட்டேன்” என்று சொன்ன யோபுவைப் போலவே நாமும் உறுதியாக இருக்கலாம். உத்தமமாக இருந்து யெகோவாவுக்கு என்றென்றும் புகழ் சேர்க்கலாம்!
பாட்டு 63 என்றும் பற்றுள்ளோராய்
^ பாரா. 5 உத்தமம் என்றால் என்ன? தன்னுடைய ஊழியர்கள் காட்டும் உத்தமத்தை யெகோவா ஏன் உயர்வாக மதிக்கிறார்? நாம் ஒவ்வொருவரும் உத்தமத்தைக் காத்துக்கொள்வது ஏன் ரொம்ப முக்கியம்? இந்தக் கேள்விகளுக்கான பைபிள் தரும் பதில்களை இதில் பார்ப்போம். ஒவ்வொரு நாளும் உத்தமத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை எப்படிப் பலப்படுத்திக்கொள்ளலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம். ஒவ்வொரு நாளும் உத்தமமாக இருக்கும்போது, ஏராளமான ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கும்.
^ பாரா. 3 “குறையில்லாத” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை, மிருகத்தைப் பற்றிக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது, மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் “உத்தமம்” என்ற வார்த்தையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.
^ பாரா. 50 படங்களின் விளக்கம்: ஓர் இளம் அப்பாவாக, தன் பிள்ளைகள் சிலருக்கு யெகோவாவின் படைப்புகளைப் பற்றி யோபு சொல்லிக்கொடுக்கிறார்.
^ பாரா. 52 படங்களின் விளக்கம்: ஒரு சகோதரர், தன்னோடு வேலை செய்பவர்களோடு சேர்ந்து ஆபாசத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கிறார்.
^ பாரா. 54 படங்களின் விளக்கம்: ஒரு சகோதரர், தனக்குத் தேவையில்லாத, தன்னால் வாங்க முடியாத, விலையுயர்ந்த பெரிய டிவியை வாங்குவதற்கான ஆசையைத் தவிர்க்கிறார்.
^ பாரா. 56 படங்களின் விளக்கம்: ஒரு சகோதரர், பூஞ்சோலையில் வாழப்போகும் நம்பிக்கையைப் பற்றி ஆழமாக யோசிக்கவும் ஜெபம் செய்யவும் நேரம் ஒதுக்குகிறார்.