Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 11

பைபிளிலிருந்து பலம் பெறுவது எப்படி?

பைபிளிலிருந்து பலம் பெறுவது எப்படி?

“சகிப்புத்தன்மையை . . . கடவுள் . . . உங்களுக்கும் கொடுக்கட்டும்.”—ரோ. 15:5.

பாட்டு 113 வேத வார்த்தைக்கு நன்றி

இந்தக் கட்டுரையில்... *

1. யெகோவாவின் மக்களுக்கு என்ன மாதிரியான சோதனைகள் வரலாம்?

சபையில் இருக்கிற யாராவது உங்களைக் காயப்படுத்தி இருக்கிறார்களா? (யாக். 3:2) நீங்கள் யெகோவாவை வணங்குவதால் உங்களோடு வேலை செய்கிறவர்கள் அல்லது உங்களோடு படிக்கிறவர்கள் கிண்டல் செய்கிறார்களா? (1 பே. 4:3, 4) கூட்டங்களுக்குப் போகக் கூடாது என்று உங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்கள் உங்களைத் தடை செய்கிறார்களா? யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசக் கூடாது என்று சொல்கிறார்களா? (மத். 10:35, 36) அல்லது, இதைத் தவிர வேறு ஏதாவது கஷ்டங்களை அனுபவிக்கிறீர்களா? பொதுவாக, பயங்கரமான பிரச்சினைகள் வரும்போது, “போதும்ப்பா... இதுக்கு மேல முடியாது” என்று நினைத்து நீங்கள் சோர்ந்துபோய் விடலாம். ஆனால் கவலைப்படாதீர்கள்! எப்பேர்ப்பட்ட கஷ்டம் வந்தாலும் அதைச் சமாளிப்பதற்குத் தேவையான ஞானத்தையும் பலத்தையும் யெகோவா நிச்சயம் கொடுப்பார்.

2. ரோமர் 15:4 சொல்வதுபோல், பைபிளைப் படிப்பது நமக்கு எப்படி உதவும்?

2 கஷ்டங்கள் வந்தபோது நிறைய பேர் அதை எப்படிச் சமாளித்தார்கள் என்பதைப் பற்றி பைபிளில் யெகோவா விளக்கமாக சொல்லி இருக்கிறார். நாம் கற்றுக்கொள்வதற்காகத்தான் அதை பதிவு செய்து வைத்திருக்கிறார். அப்போஸ்தலன் பவுலும் ரோமர் 15:4-ல் இதைத்தான் எழுதியிருக்கிறார். (வாசியுங்கள்.) இந்தத் தகவல்களை படிக்கும்போது நமக்கு நிச்சயம் ஆறுதலும் நம்பிக்கையும் கிடைக்கும். ஆனால், வெறுமனே பைபிளை வாசித்துக்கொண்டே போனால் மட்டும் போதாது. வாசிக்கிற விஷயங்கள் நம் யோசனைகளை மாற்ற வேண்டும். நம் இதயத்தைத் தொட வேண்டும். ஏதாவது ஒரு பிரச்சினை உங்களை வாட்டி வதைக்கிறதா? அதைச் சமாளிப்பதற்கு பைபிள் உங்களுக்கு உதவ வேண்டும் என்றால், இந்த நான்கு விஷயங்களை செய்து பார்க்கலாம்: (1) ஜெபம் செய்யுங்கள் (2) கற்பனை செய்து பாருங்கள் (3) ஆழமாக யோசித்துப் பாருங்கள் (4) கற்றுக்கொண்ட விஷயத்தின்படி செய்யுங்கள். இந்த ஒவ்வொன்றையும் இப்போது நாம் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம். * தாவீது ராஜாவின் வாழ்க்கையிலிருந்தும் அப்போஸ்தலன் பவுலுடைய வாழ்க்கையிலிருந்தும் நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு இந்த நான்கு விஷயங்களையும் எப்படிச் செய்யலாம் என்பதையும் பார்க்கலாம்.

1. ஜெபம் செய்யுங்கள்

பைபிளைப் படிப்பதற்கு முன்பு, அதிலிருந்து பிரயோஜனமடைய உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள் (பாரா 3)

3. பைபிளைப் படிப்பதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும், ஏன்?

3 (1ஜெபம் செய்யுங்கள். பைபிளைப் படிப்பதற்கு முன்பு, படிக்கப்போகிற விஷயங்களிலிருந்து பிரயோஜனமடைய உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள். ஒருவேளை, உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கலாம். அதைச் சமாளிப்பதற்குத் தேவையான நியமங்களைக் கண்டுபிடிக்க உதவச் சொல்லி யெகோவாவிடம் கேளுங்கள்.—பிலி. 4:6, 7; யாக். 1:5.

2. கற்பனை செய்து பாருங்கள்

யாரைப் பற்றிப் படிக்கிறீர்களோ, அவருடைய இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள் (பாரா 4)

4. பைபிள் பதிவுகளை உங்கள் கண் முன் கொண்டுவந்து நிறுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்?

4 (2கற்பனை செய்து பாருங்கள். இந்த அற்புதமான திறமையை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். பைபிள் பதிவுகளை உங்கள் கண்ணுக்கு முன்பாக கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்றால், நீங்கள் யாரைப் பற்றிப் படிக்கிறீர்களோ அவரிடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். அவரைச் சுற்றி இருந்த விஷயங்களைக் கற்பனை செய்து பாருங்கள். அவர் பார்த்தவற்றை நீங்களும் பாருங்கள். அவருடைய உணர்வுகளை உள்வாங்கிக்கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

3. ஆழமாக யோசித்துப் பாருங்கள்

படிக்கும் விஷயங்கள் உங்களுக்கு எப்படிப் பொருந்துகின்றன என்று யோசியுங்கள் (பாரா 5)

5. ஆழமாக யோசித்துப் பார்ப்பது என்றால் என்ன, அதை நீங்கள் எப்படிச் செய்யலாம்?

5 (3ஆழமாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் என்ன படிக்கிறீர்கள்... அவற்றின்படி எப்படிச் செய்யலாம்... என்றெல்லாம் யோசியுங்கள். அப்படிச் செய்யும்போது நீங்கள் படிக்கிற தகவல்களை ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படுத்திப் பார்க்க முடியும். படிக்கிற விஷயங்களை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் முடியும். ஆழமாக யோசித்துப் பார்க்காமல் பைபிளைப் படிப்பது, சமைப்பதற்குத் தேவையான உணவுப் பொருள்களை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்குச் சமம்! அந்தப் பொருள்களை ஒன்றுசேர்த்து சமைக்கும்போதுதான் சுவையான உணவு தயாராகும். அதே மாதிரி, படிக்கிற விஷயங்களைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்கும்போதுதான் அந்த விஷயங்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து சம்பந்தப்படுத்திப் பார்க்க முடியும். அவற்றின் முழு கருத்தையும் புரிந்துகொள்ள முடியும். அதற்கு, இந்த மாதிரியான கேள்விகளை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்: ‘நான் யாரை பத்தி படிச்சிட்டு இருக்குறேன்? பிரச்சினைய சமாளிக்குறதுக்கு அவரு என்ன செஞ்சாரு? அவருக்கு யெகோவா எப்படி உதவுனாரு? என்னோட பிரச்சினைய சமாளிக்குறதுக்கு இவரு மாதிரியே நான் என்ன செய்யலாம்?’

4. கற்றுக்கொண்டதன்படி செய்யுங்கள்

கற்றுக்கொண்டதன்படி செய்யும்போது, நல்ல முடிவுகளை எடுக்க முடியும். மன சமாதானமும் விசுவாசமும் அதிகமாகும் (பாரா 6)

6. கற்றுக்கொண்ட விஷயத்தின்படி செய்வது ஏன் முக்கியம்?

6 (4கற்றுக்கொண்ட விஷயத்தின்படி செய்யுங்கள். அப்படி நாம் செய்யவில்லை என்றால், மணல் மேல் வீட்டைக் கட்டும் ஒரு மனிதனைப் போல் இருப்போம் என்று இயேசு சொன்னார். என்னதான் அந்த மனிதன் கடினமாக உழைத்தாலும், அவனுடைய உழைப்பெல்லாம் வீண் தான்! ஏனென்றால் புயலோ வெள்ளமோ வந்தால், அந்த வீடு இடிந்து தரைமட்டம் ஆகிவிடும். (மத். 7:24-27) அதே மாதிரி நாமும் ஜெபம் செய்திருக்கலாம், கற்பனை செய்து பார்த்திருக்கலாம், ஆழமாக யோசித்தும் பார்த்திருக்கலாம். ஆனால், கற்றுக்கொண்ட விஷயத்தின்படி செய்யவில்லை என்றால் ஒரு பிரயோஜனமும் இல்லை. புயல் மாதிரியான பிரச்சினைகளோ துன்புறுத்தல்களோ வரும்போது, நம்முடைய விசுவாசம் என்ற வீடு ஆட்டம் கண்டுவிடும். கற்றுக்கொண்ட விஷயத்தின்படி செய்யும்போது நம்மால் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். நம்முடைய மன சமாதானமும் அதிகமாகும், விசுவாசமும் பலமாகும். (ஏசா. 48:17, 18) தாவீதின் வாழ்க்கையிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு இந்த நான்கு விஷயங்களையும் எப்படிச் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

தாவீது ராஜாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

7. எந்தச் சம்பவத்தைப் பற்றி இப்போது பார்க்கப் போகிறோம்?

7 அப்சலோம், தன்னுடைய அப்பாவான தாவீது ராஜாவுக்கே நம்பிக்கை துரோகம் செய்தான். தாவீதின் ஆட்சியைத் தட்டிப் பறிப்பதற்கு சதி வேலைகளில் ஈடுபட்டான். உங்களுடைய நண்பரோ குடும்பத்தில் இருப்பவரோ உங்களுக்குத் துரோகம் செய்திருக்கிறார்களா? அப்படியென்றால், இந்தப் பதிவு உங்களுக்கு எப்படி உதவும் என்று இப்போது பார்க்கலாம்.—2 சா. 15:5-14, 31; 18:6-14.

8. யெகோவாவின் உதவியைப் பெற்றுக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?

8 (1ஜெபம் செய்யுங்கள். இந்தப் பதிவை மனதில் வைத்துக்கொண்டு, மற்றவர்கள் உங்களைத் தவறாக நடத்தியதால் நீங்கள் எந்தளவுக்கு வேதனைப்படுகிறீர்கள் என்பதை யெகோவாவிடம் சொல்லுங்கள். (சங். 6:6-9) உங்கள் மனதுக்குள் இருக்கிற உணர்ச்சிப் போராட்டங்கள் எல்லாவற்றையும் மனம் திறந்து சொல்லிவிடுங்கள். இந்தக் கஷ்டமான சூழ்நிலையைச் சமாளிப்பதற்குத் தேவையான நியமங்களைக் கண்டுபிடிக்க உதவச் சொல்லி அவரிடம் கேளுங்கள்.

9. தாவீதுக்கும் அப்சலோமுக்கும் இடையில் நடந்த சம்பவத்தை எப்படி விளக்குவீர்கள்?

9 (2கற்பனை செய்து பாருங்கள். இந்தப் பதிவில் இருக்கிற சம்பவங்களையும், தாவீது எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருப்பார் என்பதையும் கற்பனை செய்து பாருங்கள். தாவீதின் மகன் அப்சலோம், மக்களைத் தன் பக்கம் ஈர்ப்பதற்கு நிறைய வருஷங்களாக முயற்சி செய்துகொண்டு இருக்கிறான். (2 சா. 15:7) இப்போது, தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சமயம் வந்துவிட்டது என்று நினைக்கிறான். மக்கள் தன்னை ராஜாவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக உடனடியாக இஸ்ரவேல் தேசம் முழுவதும் தூதுவர்களை அனுப்புகிறான். தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தாவீதின் நண்பனும் ஆலோசகருமான அகித்தோப்பேலையும் தன்னுடைய கைக்குள் போட்டுக்கொள்கிறான். தன்னை ராஜாவாக அறிவிப்பு செய்துகொள்கிறான். தாவீதைக் கொல்வதற்கும் முயற்சி செய்கிறான். ஒருவேளை, இந்தச் சமயத்தில் தாவீதின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருந்திருக்கலாம். (சங். 41:1-9) இப்போது, தாவீதுக்கு இந்தச் சதித்திட்டம் தெரியவருகிறது. உடனடியாக எருசலேமிலிருந்து தப்பிக்கிறார். கடைசியில், அப்சலோமின் ஆட்களுக்கும் தாவீதுக்கு உண்மையாக இருந்த ஆட்களுக்கும் சண்டை நடக்கிறது. அந்தச் சண்டையில் அப்சலோம் செத்துப்போகிறான்.

10. தாவீது எப்படியெல்லாம் யோசிப்பதற்கு வாய்ப்பு இருந்தது?

10 இதெல்லாம் நடந்தபோது தாவீதுக்கு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்சலோமின் மேல் அவர் அன்பு வைத்திருந்தார். அகித்தோப்பேலையும் நம்பினார். ஆனால், அவருக்கு நெருக்கமாக இருந்த இந்த இரண்டு பேருமே நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள். அவருடைய மனதைக் குத்திக் கிழித்தார்கள்! அவரைத் தீர்த்துக்கட்டுவதற்கும் முயற்சி செய்தார்கள். அதனால், மற்ற நண்பர்கள்மேல் இருந்த நம்பிக்கையையும் அவர் இழந்திருக்கலாம். அவர்களும் அப்சலோமோடு கூட்டு சேர்ந்து தனக்குக் குழி பறித்து விடுவார்களோ என்று அவர்கள்மேல் சந்தேகப்பட்டு இருக்கலாம். இந்தச் சூழ்நிலையில், அவர் விரக்தி அடைந்திருக்கலாம். அல்லது, தன்னைப் பற்றி மட்டுமே யோசித்திருக்கலாம். தான் மட்டுமே தப்பித்துப் போக நினைத்திருக்கலாம். ஆனால், இப்படியெல்லாம் தாவீது நினைக்கவில்லை. தனக்கு வந்த கஷ்டங்களை நல்லபடியாக சமாளித்தார். அவரால் எப்படி முடிந்தது?

11. தன்னுடைய சூழ்நிலையை தாவீது எப்படிச் சமாளித்தார்?

11 (3ஆழமாக யோசித்துப் பாருங்கள். “இந்தச் சூழ்நிலையை தாவீது எப்படிச் சமாளித்தார்?” இந்தக் கேள்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? தாவீது பதட்டப்படவில்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யவில்லை. தவறான முடிவுகளையும் எடுக்கவில்லை. அதே சமயத்தில், காலம் தாழ்த்தவும் இல்லை. பயத்தில் அப்படியே உறைந்து போய்விடவும் இல்லை. அதற்குப் பதிலாக, யெகோவாவிடம் ஜெபம் செய்தார். மற்ற நண்பர்களிடமும் உதவி கேட்டார். முடிவு எடுத்த பிறகு, அதை உடனடியாக செயல்படுத்தினார். அவர் மனதெல்லாம் ரணமாக இருந்தாலும் மற்றவர்கள்மேல் வெறுப்பைக் கொட்டவில்லை. அவர்களைச் சந்தேகப் பார்வையோடும் பார்க்கவில்லை. யெகோவாமேலும் நண்பர்கள்மேலும் முழு நம்பிக்கை வைத்தார்.

12. தாவீதுக்கு உதவ யெகோவா என்ன செய்தார்?

12 தாவீதுக்கு யெகோவா எப்படி உதவினார்? இன்னும் நன்றாக ஆராய்ச்சி செய்து பார்த்தால், சோதனையைச் சமாளிப்பதற்கு யெகோவா அவரை எப்படிப் பலப்படுத்தினார் என்பதைத் தெரிந்துகொள்வீர்கள். (சங். 3:1-8; முன்குறிப்பு) தாவீது எடுத்த முடிவுகளை யெகோவா ஆசீர்வதித்தார். தாவீதுக்கு உண்மையாக இருந்த நண்பர்கள் அவரைக் காப்பாற்றுவதற்காக எடுத்த முயற்சிகளையும் ஆசீர்வதித்தார்.

13. யாராவது உங்கள் மனதைக் காயப்படுத்திவிட்டால், தாவீது மாதிரியே நீங்கள் எப்படி நடந்துகொள்ளலாம்? (மத்தேயு 18:15-17)

13 (4கற்றுக்கொண்டதைச் செய்யுங்கள். ‘நான் எப்படி தாவீது மாதிரியே நடந்துக்கலாம்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். பிரச்சினையைச் சரி செய்வதற்கு அவர் மாதிரியே நீங்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தேயு 18-ம் அதிகாரத்தில் இயேசு சொன்ன ஆலோசனைகளின்படி செய்வதற்கு முயற்சி செய்யலாம். தேவைப்பட்டால், அவர் சொன்ன எல்லா படிகளையும் எடுக்கலாம். இல்லை என்றால், சூழ்நிலையைப் பொறுத்து, சமாதானம் ஆவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யலாம். (மத்தேயு 18:15-17-ஐ வாசியுங்கள்.) ஆனால், நீங்கள் செய்யக் கூடாத விஷயம் ஒன்று இருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடாதீர்கள்! நிதானமாக இருப்பதற்கு உதவச் சொல்லி யெகோவாவிடம் கேட்டுக்கொண்டே இருங்கள். ஞானத்துக்காகவும் கேளுங்கள். நண்பர்கள்மேல் இருக்கிற நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். அவர்களுடைய உதவியை ஒதுக்கித்தள்ளாதீர்கள். (நீதி. 17:17) முக்கியமாக, பைபிளில் இருக்கிற ஆலோசனைகளின்படி நடந்துகொள்ளுங்கள்.—நீதி. 3:5, 6.

பவுலிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

14. இரண்டு தீமோத்தேயு 1:12-16; 4:6-11, 17-22 வசனங்கள், எந்த மாதிரியான சூழ்நிலைகளில் உங்களைப் பலப்படுத்தும்?

14 நீங்கள் யெகோவாவை வணங்குவதற்கு உங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்கள் தடை போடுகிறார்களா? நம்முடைய வேலைக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டிருக்கிற நாட்டிலோ தடை செய்யப்பட்ட நாட்டிலோ வாழ்கிறீர்களா? அப்படியென்றால், 2 தீமோத்தேயு 1:12-16; 4:6-11, 17-22 வசனங்கள் உங்களைப் பலப்படுத்தும். * பவுல் சிறையில் இருந்தபோது இந்த வசனங்களை எழுதினார்.

15. யெகோவாவிடம் நீங்கள் என்ன கேட்கலாம்?

15 (1ஜெபம் செய்யுங்கள். இந்தப் பதிவை படிப்பதற்கு முன் உங்களுடைய பிரச்சினை என்ன என்பதைப் பற்றி யெகோவாவிடம் சொல்லுங்கள். அது உங்களை எப்படி வேதனைப்படுத்துகிறது என்பதையும் சொல்லுங்கள். குறிப்பாக எது உங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறதோ அதைச் சொல்லுங்கள். பவுலைப் பற்றிய இந்தப் பதிவிலிருந்து உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கிற நியமங்களைக் கண்டுபிடிக்க உதவச் சொல்லி யெகோவாவிடம் கேளுங்கள்.

16. பவுலுடைய சூழ்நிலையை எப்படி விளக்குவீர்கள்?

16 (2கற்பனை செய்து பாருங்கள். பவுலுடைய இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். அவர் ரோமில் சிறையில் இருக்கிறார். அவருடைய கைகளில் விலங்கு மாட்டப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பே அவர் சிறையில் இருந்திருக்கிறார். ஆனால், இந்தத் தடவை மரண தண்டனை உறுதி என்பது அவருக்கு நன்றாகத் தெரிகிறது. அதோடு, அவரோடு இருந்த சிலரும் அவரை விட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். உடலளவிலும் அவர் ரொம்ப சோர்ந்துபோயிருக்கிறார்.—2 தீ. 1:15.

17. பவுல் நினைத்திருந்தால் எப்படியெல்லாம் யோசித்திருக்கலாம்?

17 பவுல் நினைத்திருந்தால், ‘கிறிஸ்தவனா ஆகுறதுக்கு முன்னாடி என் வாழ்க்கை எவ்வளவு நல்லா இருந்துச்சு! கிறிஸ்தவனா ஆகாம இருந்திருந்தா இப்படி சிறையில இருக்க வேண்டிய நிலைம வந்திருக்காதே’ என்று யோசித்திருக்கலாம். ஆசிய மாகாணத்தில் இருந்தவர்கள் அவரை விட்டுவிட்டுப் போனதை நினைத்து வருத்தத்தில் இருந்திருக்கலாம். மற்ற நண்பர்கள்மேல் வைத்திருந்த நம்பிக்கையையும் இழந்திருக்கலாம். ஆனால், பவுல் இப்படியெல்லாம் யோசிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையிலும், நண்பர்கள் தனக்கு உண்மையாக இருப்பார்கள் என்றும் யெகோவா தனக்குப் பலன் கொடுப்பார் என்றும் அவரால் எப்படி நம்பிக்கையாக இருக்க முடிந்தது?

18. சோதனைகளை பவுல் எப்படிச் சமாளித்தார்?

18 (3ஆழமாக யோசித்துப் பாருங்கள். இந்தச் சூழ்நிலையை பவுல் எப்படிச் சமாளித்தார்? இந்தக் கேள்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? மரண தண்டனை காத்திருந்த அந்தச் சூழ்நிலையிலும் முக்கியமான விஷயத்தை அவர் மறக்கவில்லை. அதாவது, எல்லாவற்றையும்விட யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்பதுதான் முக்கியம் என்பதை மனதில் ஆழமாகப் பதிய வைத்திருந்தார். மற்றவர்களை எப்படிப் பலப்படுத்தலாம் என்பதைப் பற்றியே எப்போதும் யோசித்தார். விடாமல் ஜெபம் செய்தார். (2 தீ. 1:3) தன்னை விட்டுவிட்டுப் போனவர்களைப் பற்றியே அவர் யோசித்துக்கொண்டு இருக்கவில்லை. தனக்கு ஆதரவாக இருந்த நண்பர்களைப் பற்றி யோசித்துப் பார்த்தார். அவர்களுக்கு ரொம்ப நன்றியோடு இருந்தார். அதோடு, வேதவசனங்களைத் தவறாமல் படித்தார். (2 தீ. 3:16, 17; 4:13) முக்கியமாக, யெகோவாவும் இயேசுவும் தன்னை நேசிக்கிறார்கள் என்பதை உறுதியாக நம்பினார். தன்னுடைய சேவைக்கு அவர்கள் பலன் கொடுப்பார்கள் என்பதில் அவருக்கு சந்தேகமே இருக்கவில்லை. அவர்களும் அவரைக் கைவிடவே இல்லை!

19. பவுலுக்கு யெகோவா எப்படி உதவினார்?

19 கிறிஸ்தவராக இருப்பதால் பவுல் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று யெகோவா சொல்லியிருந்தார். (அப். 21:11-13) ஆனாலும், அவருக்கு எப்படி உதவினார்? அவருடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுத்தார். காலங்கள் போகப்போக, அவருக்குத் தேவையான பலத்தைக் கொடுத்தார். (2 தீ. 4:17) அவருக்குக் கிடைக்க வேண்டிய பரிசு நிச்சயம் கிடைக்கும் என்ற உறுதியைக் கொடுத்தார். அவருக்கு உதவும்படி அவருடைய நண்பர்களையும் தூண்டினார்.

20. ரோமர் 8:38, 39-ல் பவுல் சொன்ன மாதிரியே நாமும் சொல்ல வேண்டும் என்றால், நாம் என்ன செய்ய வேண்டும்?

20 (4கற்றுக்கொண்ட விஷயத்தின்படி செய்யுங்கள். ‘நான் எப்படி பவுல் மாதிரியே நடந்துக்கலாம்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அவருக்கு வந்த மாதிரியே நமக்கும் துன்புறுத்தல்கள் வரும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும். (மாற். 10:29, 30) அந்த மாதிரி சூழ்நிலைகளில் நாம் உண்மையாக இருக்க வேண்டும் என்றால், எப்போதும் யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும். பைபிளையும் பிரசுரங்களையும் தவறாமல் படிக்க வேண்டும். எல்லாவற்றையும்விட யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்பதுதான் ரொம்ப முக்கியம் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். யெகோவா நம்மைக் கைவிடவே மாட்டார்! அவர் நம்மேல் காட்டுகிற அன்பைத் தடுக்கிற சக்தி யாருக்கும் எதற்கும் கிடையாது!!ரோமர் 8:38, 39-ஐ வாசியுங்கள்; எபி. 13:5, 6

பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற மற்றவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்

21. அயோக்காவுக்கும் ஹெக்டருக்கும் எது உதவியது?

21 நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் பைபிளில் சொல்லப்பட்டிருப்பவர்களின் அனுபவங்களைப் படிக்கும்போது நமக்குத் தேவையான பலம் கிடைக்கும். உதாரணத்துக்கு, ஜப்பானில் பயனியர் சேவை செய்கிற அயோக்கா * என்ற சகோதரிக்குப் பொது ஊழியம் செய்வது என்றாலே பயம்! ஆனால், யோனாவின் வாழ்க்கையைப் பற்றி படித்தது அவருக்கு ரொம்ப உதவியாக இருந்தது. இந்தோனேஷியாவில் இருக்கிற ஹெக்டர் என்ற இளம் சகோதரருடைய அப்பா அம்மா சத்தியத்தில் இல்லை. யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் அவருக்குச் சேவை செய்வதற்கும் ரூத்தின் உதாரணம் ஹெக்டருக்கு உதவியது.

22. பைபிள் நாடகங்களிலிருந்தும், “இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்” என்ற தலைப்பில் வரும் தொடர் கட்டுரைகளிலிருந்தும் பிரயோஜனமடைய என்ன செய்ய வேண்டும்?

22 நம்முடைய அமைப்பு நிறைய வீடியோக்களையும் ஆடியோ நாடகங்களையும் வெளியிடுகிறது. “இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்” என்ற தலைப்பிலும் தொடர் கட்டுரைகள் வருகின்றன. * இவையெல்லாம், பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற சம்பவங்களை தத்ரூபமாக நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இவற்றைப் பார்ப்பதற்கு, கேட்பதற்கு அல்லது படிப்பதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று இருக்கிறது. அதாவது, நீங்கள் செய்ய வேண்டிய விஷயத்தைக் கண்டுபிடிக்க உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள். அதோடு, உங்களை அவர்களுடைய இடத்தில் வைத்துப் பாருங்கள். கஷ்டமான சூழ்நிலைகளில் அவர்கள் என்ன செய்தார்கள்... அவர்களுக்கு யெகோவா எப்படி ஆதரவாக இருந்தார்... என்பதைப் பற்றி ஆழமாக யோசித்துப் பாருங்கள். பிறகு, என்ன கற்றுக்கொண்டீர்களோ அதன்படி செய்யுங்கள். ஏற்கெனவே யெகோவா உங்களுக்கு செய்திருக்கிற உதவிக்கு நன்றி சொல்லுங்கள். மற்றவர்களைப் பலப்படுத்துவதன் மூலம் அவருக்கு நன்றியோடு இருப்பதைக் காட்டுங்கள்.

23. யெகோவா என்ன வாக்கு கொடுத்திருக்கிறார்?

23 சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற இந்த உலகத்தில் ஒவ்வொரு நாளையும் ஓட்டுவதே பெரும்பாடாக இருக்கிறது. சில சமயங்களில், என்ன செய்வதென்றே தெரியாமல் நாம் விழி பிதுங்கி நிற்கலாம். (2 தீ. 3:1) ஆனால், பதட்டப்படவோ பயப்படவோ வேண்டியது இல்லை. நாம் படுகிற கஷ்டம் எல்லாம் யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். நாம் தடுமாறும்போது, தன்னுடைய வலது கையால் நம்மைத் தூக்கி விடுவதாக அவர் வாக்குக் கொடுக்கிறார். (ஏசாயா 41:10, 13-ஐ வாசியுங்கள்.) இந்த நம்பிக்கையோடு பைபிளைப் படிக்கும்போது நிச்சயம் நமக்கு பலம் கிடைக்கும். எப்பேர்ப்பட்ட சோதனைகள் வந்தாலும் அதைத் தாக்குப்பிடிக்க முடியும்.

பாட்டு 114 கடவுளுடைய புத்தகம் ஒரு பொக்கிஷம்

^ பாரா. 5 யெகோவா தன்னுடைய ஊழியர்களை நேசிக்கிறார் என்பதையும், எப்பேர்ப்பட்ட கஷ்டம் வந்தாலும் அதைச் சமாளிக்க உதவுவார் என்பதையும் பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். பைபிள் படிக்கும்போது அதிலிருந்து முழு நன்மையடைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

^ பாரா. 2 பைபிளை ஆழமாகப் படிப்பதற்கு இது ஒரு விதம்தான்! இன்னும் நிறைய விதங்களைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு சொல்கிறது. அதைப் பற்றித் தெரிந்துகொள்ள, இந்தக் கையேட்டில் “பைபிள்” என்ற தலைப்புக்குப் போங்கள். அதற்குக் கீழே, “பைபிளை வாசிப்பது, புரிந்துகொள்வது” என்ற உபதலைப்பின் கீழ் பாருங்கள்.

^ பாரா. 14 காவற்கோபுர படிப்பு நடக்கும்போது இந்த வசனங்களை வாசிக்காதீர்கள்.

^ பாரா. 21 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

^ பாரா. 22 jw.org வெப்சைட்டில், “இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்—பைபிளிலுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்” என்ற தலைப்பில் பாருங்கள். (பைபிள் போதனைகள் > கடவுள்மேல் விசுவாசம்.)