படிப்புக் கட்டுரை 30
மத நம்பிக்கை இல்லாத மக்களின் இதயத்தைத் தொட முயற்சி செய்யுங்கள்
“எப்படியாவது சிலரை மீட்புக்கு வழிநடத்த வேண்டும் என்பதற்காக எல்லா விதமான ஆட்களுக்கும் எல்லா விதமாகவும் ஆனேன்.”—1 கொ. 9:22.
பாட்டு 93 உங்கள் ஒளி மின்னட்டுமே
இந்தக் கட்டுரையில்... *
1. சமீப வருஷங்களில், சில இடங்களில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன?
ஆயிரக்கணக்கான வருஷங்களாக, இந்த உலகத்தின் பெரும்பாலான மக்கள் ஏதோவொரு மதத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், சமீப வருஷங்களில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, தாங்கள் எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல என்று சொல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. சொல்லப்போனால், சில நாடுகளில் இருக்கிற பெரும்பாலான மக்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)—மத். 24:12.
2. சிலருக்கு ஏன் மத நம்பிக்கை இல்லை?
2 மத நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் அதிகமாகிக்கொண்டே வருகிறார்கள்? சிலர், சுகபோகமாக வாழ்வதிலேயே அல்லது தங்களுடைய பிரச்சினைகளிலேயே மூழ்கிப்போயிருக்கலாம். (லூக். 8:14) வேறுசிலர், நாத்திகர்களாக ஆகியிருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு, கடவுள்மீது நம்பிக்கையிருந்தாலும் மதமெல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்துவராது என்று நினைக்கிறார்கள். அதோடு, மதத்தால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்றும், விஞ்ஞானத்தோடு அது ஒத்துப்போவதில்லை என்றும், அது ஓர் அர்த்தமற்ற விஷயம் என்றும் நினைக்கிறார்கள். பரிணாமத்தின் மூலம்தான் உயிர் வந்தது என்று தங்கள் நண்பர்களும் ஆசிரியர்களும் மீடியாவைச் சேர்ந்த ஆட்களும் சொல்வது அவர்களுடைய காதில் விழலாம். அதோடு, கடவுள்மேல் நம்பிக்கை வைப்பதற்கான நியாயமான காரணங்களை அவர்கள் அவ்வளவாகக் கேள்விப்படாமல் இருந்திருக்கலாம். பணத்துக்காகவும் பதவிக்காகவும் பேராசைப்படுகிற மதத் தலைவர்களைப் பார்த்து அவர்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். சில நாடுகளில், மதத்தோடு சம்பந்தப்பட்ட வேலைகளுக்குக் கட்டுப்பாடுகள் போடப்பட்டிருக்கின்றன. மத நம்பிக்கை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருவதற்கு இவையெல்லாம்தான் காரணம்!
3. இந்தக் கட்டுரை உங்களுக்கு எப்படி உதவும்?
3 ‘எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்குங்கள்’ என்ற கட்டளையை இயேசு மத். 28:19) கடவுளை நேசிக்கவும் கிறிஸ்துவின் சீஷர்களாக ஆகவும் மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எப்படி உதவலாம்? நம்முடைய செய்திக்கு ஒருவர் எப்படிப் பிரதிபலிக்கிறார் என்பது, அவர் எங்கே வளர்ந்தார் என்பதைப் பொறுத்து இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர் நம் செய்தியைக் கேட்பதற்கும், ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் நம் செய்தியைக் கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கலாம். ஏனென்றால், ஐரோப்பாவில் இருக்கிற நிறைய பேருக்கு பைபிளைப் பற்றி ஓரளவு தெரியும். அதோடு, கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்திருக்கிறார் என்பதை அவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால், ஆசியாவில் இருக்கிற பெரும்பாலான மக்களுக்கு பைபிளைப் பற்றி அவ்வளவாகத் தெரியாமல் இருக்கலாம் அல்லது அதைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கலாம். படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை அவர்கள் நம்பாமல் இருக்கலாம். ஊழியத்தில் நாம் சந்திக்கிற ஆட்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எப்படிப்பட்ட நம்பிக்கைகள் இருந்தாலும் சரி, எல்லாருடைய மனதையும் தொடும் விதத்தில் பேச இந்தக் கட்டுரை நமக்கு உதவும்.
நமக்குக் கொடுத்திருக்கிறார். (நம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள்
4. ஊழியம் செய்யும்போது நாம் எப்படி நம்பிக்கையோடு இருக்கலாம்?
4 நம்பிக்கையோடு இருங்கள். மத நம்பிக்கை இல்லாத நிறைய பேர், ஒவ்வொரு வருஷமும் யெகோவாவின் சாட்சிகளாக ஆகிறார்கள். இவர்களில் நிறைய பேர், ஏற்கெனவே ஒழுக்கத் தராதரங்களின்படி வாழ்ந்துவந்தவர்கள். ஆனால், மதத்தில் இருக்கிற போலித்தனத்தைப் பார்த்து வெறுப்படைந்தவர்கள். வேறுசிலர், ஒழுக்கத் தராதரங்களைக் கடைப்பிடிக்காதவர்கள். இவர்களில் நிறைய பேர், தங்களுடைய கெட்ட பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது? யெகோவாவின் உதவியோடு, “முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு” இருக்கிறவர்களை நம்மால் நிச்சயம் தேடிக் கண்டுபிடிக்க முடியும்.—அப். 13:48; 1 தீ. 2:3, 4.
5. மக்கள் பெரும்பாலும் நம் செய்தியை ஏன் கேட்கிறார்கள்?
5 அன்பு காட்டுங்கள், சாதுரியமாகப் பேசுங்கள். பெரும்பாலும், நாம் என்ன சொல்கிறோம் என்பதைப் பொறுத்து அல்ல, அதை எப்படிச் சொல்கிறோம் என்பதைப் பொறுத்துதான் மக்கள் நம்முடைய செய்தியைக் கேட்பார்கள். அன்பாக நடந்துகொள்ளும்போதும், சாதுரியமாகப் பேசும்போதும், உண்மையான அக்கறை காட்டும்போதும் மக்கள் சந்தோஷப்படுகிறார்கள். நாம் சொல்வதைக் கேட்கும்படி நாம் அவர்களைக் கட்டாயப்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, மதத்தைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோம். உதாரணத்துக்கு, நாம் முன்பின் தெரியாதவர்களாக இருப்பதால், நம்மிடம் மதத்தைப் பற்றிப் பேசுவதற்கு சிலர் தயங்கலாம். நாம் கடவுளைப் பற்றிக் கேள்விகள் கேட்பது, வேறு சிலருக்கு வித்தியாசமாகப் படலாம். பைபிளை வாசிப்பதை, அதுவும் நம்மோடு சேர்ந்து பைபிள் வாசிப்பதை, யாராவது பார்த்துவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்து சிலர் கவலைப்படலாம். எது எப்படி இருந்தாலும், மக்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்கிறோம்.—2 தீ. 2:24, அடிக்குறிப்பு.
6. மற்றவர்களுக்கு ஏற்றபடி அப்போஸ்தலன் பவுல் எப்படிப் பேசினார், நாம் எப்படி அவரைப் போலவே பேசலாம்?
6 “பைபிள்,” “படைப்புகள்,” “கடவுள்,” அல்லது “மதம்” போன்ற வார்த்தைகள், கேட்பவருக்குப் பிடிக்காததுபோல் தோன்றினால் என்ன செய்வது? அப்போஸ்தலன் பவுலைப் போல் நாம் நடந்துகொள்ளலாம்; பேசும் விதத்தை மாற்றலாம். யூதர்களிடம் பேசியபோது, வேதவசனங்களிலிருந்து அவர் நியாயங்காட்டிப் பேசினார். ஆனால், அரியோபாகுவின் நடுவில், கிரேக்க தத்துவ ஞானிகளிடம் பேசியபோது, வேதவசனங்களிலிருந்து பேசுவதுபோல் அவர் காட்டிக்கொள்ளவில்லை. (அப். 17:2, 3, 22-31) பவுலைப் போல நாம் எப்படி நடந்துகொள்ளலாம்? பைபிளை நம்பாத ஒருவரிடம் பேசும்போது, பைபிளிலிருந்து நாம் பேசுகிறோம் என்பதைக் காட்டிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களோடு சேர்ந்து பைபிள் படிப்பதை மற்றவர்கள் பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து ஒருவர் சங்கடப்பட்டால் என்ன செய்யலாம்? மற்றவர்கள் கண்ணில்படாத விதத்தில், ஒருவேளை எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தி வசனங்களைக் காட்டலாம்.
7. ஒன்று கொரிந்தியர் 9:20-23 சொல்கிறபடி, நாம் எப்படி பவுலைப் போல் நடந்துகொள்ளலாம்?
7 மற்றவர்களைப் புரிந்துகொள்ளுங்கள், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நாம் சந்திக்கும் நபர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஏன் அப்படி யோசிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும். (நீதி. 20:5) பவுல் என்ன செய்தார் என்பதை மறுபடியும் கவனியுங்கள். அவர் யூதர்களோடு வளர்ந்ததால், மற்ற தேசத்து மக்களிடம் பிரசங்கிக்கும்போது, பேசும் விதத்தை அவர் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்றால், யெகோவாவைப் பற்றியும் வேதவசனங்களைப் பற்றியும் அவர்களுக்கு ரொம்பக் குறைவாகத் தெரிந்திருக்கலாம் அல்லது எதுவுமே தெரியாமல் இருந்திருக்கலாம். நம்முடைய ஊழியப் பகுதியில் இருப்பவர்களின் இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்பதற்கும், அவர்களைப் புரிந்துகொள்வதற்கும் நாம் சில ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டியிருக்கலாம். அல்லது, அனுபவமுள்ள சகோதர சகோதரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.—1 கொரிந்தியர் 9:20-23-ஐ வாசியுங்கள்.
8. பைபிளைப் பற்றி மக்களிடம் பேச ஆரம்பிப்பதற்கு ஒரு நல்ல வழி என்ன?
8 ‘தகுதியுள்ளவர்களை’ கண்டுபிடிப்பதுதான் நம்முடைய குறிக்கோள்! (மத். 10:11) இதைத் திறமையாகச் செய்ய வேண்டுமென்றால், தங்களுடைய கருத்துகளைத் தாராளமாகச் சொல்வதற்கு நாம் மற்றவர்களுக்கு இடம்கொடுக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்க வேண்டும். இங்கிலாந்தில் இருக்கிற ஒரு சகோதரர் இதை எப்படிச் செய்கிறார் என்று பாருங்கள். கல்யாண வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கு என்ன செய்வது... பிள்ளைகளை எப்படி வளர்ப்பது... அநீதியை எப்படிப் பொறுத்துக்கொள்வது... ஆகிய விஷயங்களைப் பற்றி அவர் மக்களிடம் கேட்கிறார். அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்ட பிறகு, “கிட்டத்தட்ட 2,000 வருஷங்களுக்கு முன்னாடி எழுதப்பட்ட இந்த ஆலோசனைய பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்கிறார். பிறகு, “பைபிள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமலேயே தன்னுடைய மொபைல் ஃபோனிலிருந்து பொருத்தமான வசனங்களைக் காட்டுகிறார்.
மக்களின் இதயத்தைத் தொட முயற்சி செய்யுங்கள்
9. கடவுளைப் பற்றிப் பேச விரும்பாதவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?
9 பொதுவாக, கடவுளைப் பற்றிப் பேச சிலர் விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களிடம் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசலாம். அவர்களுக்குப் பிடித்த ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுக்கலாம். உதாரணத்துக்கு, இயற்கையைப் பார்த்து நிறைய பேர் ஆச்சரியப்படுகிறார்கள். அவர்களிடம் இந்த மாதிரி ஏதாவது கேட்கலாம்: “இயற்கையில ஏற்கெனவே இருக்கிறத காபியடிச்சு விஞ்ஞானிகள் நிறைய விஷயங்கள கண்டுபிடிக்குறத நீங்க கேள்விப்பட்டிருக்கலாம். உதாரணத்துக்கு, மைக்க தயாரிக்கிறவங்க காதுகளோட அமைப்பை பத்தி ஆராய்ச்சி செய்றாங்க. கேமரா தயாரிக்கிறவங்க கண்களோட அமைப்பை பத்தி ஆராய்ச்சி செய்றாங்க. இயற்கைய பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க, அது தானா வந்திருக்குமா? யாராவது படைச்சிருப்பாங்களா? இல்ல வேற எப்படியாவது வந்திருக்குமா?” அவர்களுடைய பதிலைக் கவனமாகக் கேட்ட பிறகு, “காதுகளும் கண்களும் வடிவமைக்கப்பட்டிருக்குற விதத்த பார்த்து என்ஜினியர்கள் கத்துக்குறாங்க. அப்படினா, கண்ணையும் காதையும் படைச்சவர்கிட்ட இருந்துதானே கத்துக்குறாங்கனு அர்த்தம்? ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த ஒரு கவிஞர் எழுதுனத படிச்சப்போ, அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. ‘காதை உண்டாக்கியவரால் கேட்க முடியாதா? கண்ணை உண்டாக்கியவரால் பார்க்க முடியாதா? . . . மக்களுக்கு அறிவைப் புகட்டுபவர் அவர்தானே!’ அப்படினு அவர் எழுதியிருக்குறாரு. அவர் சொன்னது உண்மைனு சில விஞ்ஞானிகளும் ஒத்துக்குறாங்க” என்று நீங்கள் சொல்லலாம். (சங். 94:9, 10) JW லைப்ரரியில் இருக்கும் ஒரு வீடியோவைக் காட்டுங்கள். (மீடியா > பேட்டிகளும் அனுபவங்களும் > உயிரின் தோற்றம்—சிலர் சொல்வதென்ன? என்ற பகுதியில் பாருங்கள்.) அல்லது, உயிர் படைக்கப்பட்டதா? (ஆங்கிலம்) என்ற சிற்றேட்டையோ, உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிற்றேட்டையோ கொடுக்கலாம்.
10. கடவுளைப் பற்றிப் பேச விரும்பாதவர்களிடம் பேச்சை ஆரம்பிப்பதற்கான இன்னொரு வழி என்ன?
10 ஒளிமயமான எதிர்காலம் வர வேண்டும் என்று மக்கள் நிறைய பேர் ஆசைப்படுகிறார்கள். ஆனால், இந்த உலகம் அழிந்துவிடும் என்றோ யாருமே குடியிருக்க முடியாத சங். 37:29; பிர. 1:4.
ஓர் இடமாக மாறிவிடும் என்றோ நிறைய பேர் பயப்படுகிறார்கள். கடவுளைப் பற்றிப் பேச விரும்பாதவர்கள், உலக நிலைமைகளைப் பற்றிப் பேசுவதற்கு விருப்பம் காட்டுகிறார்கள் என்று நார்வேயில் பயணக் கண்காணியாகச் சேவை செய்யும் சகோதரர் ஒருவர் சொல்கிறார். மக்களுக்கு வணக்கம் சொன்ன பிறகு, அவர் இப்படிச் சொல்வார்: “ஒளிமயமான ஒரு எதிர்காலம் வருங்குற நம்பிக்கை உங்களுக்கு இருக்கா? அப்படினா, அத யாரு கொண்டுவருவாங்க? அரசியல்வாதிகளா, விஞ்ஞானிகளா, இல்லனா வேற யாராவதா?” அவர்கள் சொன்னதைக் கவனமாகக் கேட்ட பிறகு, பிரகாசமான ஓர் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் பைபிள் வசனத்தை அவர் வாசிப்பார் அல்லது அந்த வசனத்தின் குறிப்பைச் சொல்வார். இந்தப் பூமி ஒருபோதும் அழியாது என்றும், மக்கள் என்றென்றும் வாழ்வார்கள் என்றும் பைபிள் கொடுத்திருக்கிற வாக்குறுதி சிலருடைய மனதைக் கவர்ந்திருக்கிறது.—11. நாம் ஏன் வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தி மக்களிடம் பேச ஆரம்பிக்க வேண்டும், ரோமர் 1:14-16 காட்டுகிறபடி நாம் எப்படி பவுலைப் போல நடந்துகொள்ளலாம்?
11 மக்களிடம் பேச ஆரம்பிக்கும்போது, நாம் வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், ஒருவரைப் போல் இன்னொருவர் இருக்க மாட்டார். ஒருவர் ஏற்றுக்கொள்ளும் விஷயத்தை இன்னொருவர் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். சிலர், கடவுளைப் பற்றி அல்லது பைபிளைப் பற்றி நாம் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்பார்கள். வேறுசிலர், மற்ற விஷயங்களைப் பற்றி நாம் பேசும்போது, அதை ரொம்பவே ஆர்வமாகக் கேட்பார்கள். எப்படியிருந்தாலும் சரி, எல்லா விதமான மக்களிடமும் பேச வாய்ப்புகளைத் தேட வேண்டும். (ரோமர் 1:14-16-ஐ வாசியுங்கள்.) அதேசமயத்தில், நீதியை நேசிக்கிறவர்களின் இதயத்தில் யெகோவாதான் சத்தியத்தை வளர வைக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது.—1 கொ. 3:6, 7.
ஆசியாவைச் சேர்ந்த மக்களிடம் சத்தியத்தைப் பற்றிச் சொல்வது எப்படி?
12. படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரா என்பதைப் பற்றி யோசித்துக்கூட பார்க்காத ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு எப்படி உதவலாம்?
12 உலகம் முழுவதும் இருக்கிற சகோதர சகோதரிகள் நிறைய பேர், ஆசிய நாடுகளிலிருந்து வந்திருக்கிற மக்களைச் சந்திக்கிறார்கள். அந்த நாடுகள் சிலவற்றில், மத சம்பந்தப்பட்ட வேலைகளுக்குக் கட்டுப்பாடுகள் போடப்பட்டிருக்கின்றன. ஆசியாவைச் சேர்ந்த நிறைய நாடுகளில் இருக்கிற மக்கள், படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரா என்பதைப் பற்றி யோசித்துக்கூட பார்த்தது இல்லை. அதனால், நாம் சொல்வதைச் சிலர் ஆர்வமாகக் கேட்கிறார்கள்; உடனே பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். வேறு சிலருக்கு, பைபிளில் இருக்கிற விஷயங்கள் புதிதாக இருப்பதால், ஆரம்பத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? இவர்களிடம் நட்பாகப் பேச ஆரம்பிக்கலாம், உண்மையான அக்கறையைக் காட்டலாம், பைபிள் நியமத்தின்படி செய்ததால் நம் வாழ்க்கை எப்படி முன்னேறி இருக்கிறது என்பதைப் பொருத்தமான சமயத்தில் சொல்லலாம். இப்படியெல்லாம் செய்ததால் நல்ல பலன்கள் கிடைத்திருப்பதாக அனுபவமுள்ள சகோதர சகோதரிகள் சொல்கிறார்கள்.
13. பைபிளிடம் மக்களை ஈர்ப்பது எது? (அட்டைப் படம்)
13 அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான ஞானமான அறிவுரைகள் பைபிளில் இருக்கின்றன. இவைதான் நிறைய பேரை முதலில் ஈர்க்கின்றன. (பிர. 7:12) நியு யார்க்கில் இருக்கிற ஒரு சகோதரி, மான்டரின் மொழி பேசும் ஒரு பெண்ணைச் சந்தித்துவருகிறார். “மக்கள்மேல அக்கறை காட்டுறதுக்கும் அவங்க சொல்றத கவனமா கேட்குறதுக்கும் நான் முயற்சி செய்றேன். வேற நாட்டிலிருந்து சமீபத்துல குடிமாறி வந்திருக்கிறவங்ககிட்ட, ‘இந்த இடம் உங்களுக்கு பழகிடுச்சா? வேலை கிடைச்சிடுச்சா? இங்க இருக்கிற மக்கள் எல்லாரும் உங்ககிட்ட நல்லா பழகுறாங்களா?’னு கேட்பேன்” என்று அந்தச் சகோதரி சொல்கிறார். இப்படிக் கேட்பது, சிலசமயங்களில் பைபிளில் இருக்கிற விஷயங்களைப் பற்றிப் பேச அவருக்கு உதவுகிறது. பொருத்தமான சமயத்தில், “மக்களோட ஒத்துப்போறதுக்கு எது முக்கியம்னு நினைக்கிறீங்க? பைபிள்ல இருக்கிற ஒரு பழமொழிய காட்டட்டுமா? இதுதான் அந்த பழமொழி: ‘சண்டையை ஆரம்பிப்பது அணையைத் திறந்துவிடுவதுபோல் இருக்கிறது. வாக்குவாதம் வெடிப்பதற்கு முன் அந்த இடத்தைவிட்டுப் போய்விடு.’ மத்தவங்களோட ஒத்துப்போறதுக்கு இந்த ஆலோசனை உதவும்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்பார். (நீதி. 17:14) இதுபோல பேசுவது, பைபிளைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பும் ஆட்களை அடையாளம் கண்டுகொள்ள உதவியாக இருக்கும்.
14. ஆசியாவில் இருக்கிற ஒரு சகோதரர், கடவுள் நம்பிக்கை இல்லாத மக்களுக்கு எப்படி உதவுகிறார்?
14 கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்களிடம் எப்படிப் பேசுவது என்று இப்போது கவனிக்கலாம். ஆசியாவில் இருக்கிற ஒரு சகோதரர், மத நம்பிக்கை இல்லாத மக்களிடம் ரொம்பக் காலமாக பிரசங்கித்துவருகிறார். அவர் இப்படிச் சொல்கிறார்: “இங்க இருக்கிற ஒருத்தர், ‘எனக்கு கடவுள்மேல நம்பிக்கை இல்லை’னு சொன்னாருனா, பொதுவா இந்த பகுதியில இருக்கிறவங்க வழிபடுற தெய்வங்கள்மேல அவருக்கு நம்பிக்கை இல்லனு அர்த்தம். அதனால, நிறைய தெய்வங்கள மனுஷங்கதான் உண்டாக்குறாங்கனும், அதெல்லாம் உண்மையிலேயே கடவுள் இல்லனும் அவர்கிட்ட சொல்லுவேன். எரேமியா 16:20-ஐ வாசிப்பேன். ‘மனுஷன் தனக்காகத் தெய்வங்களை உண்டாக்க முடியுமா? அவன் உண்டாக்குகிறவை உண்மையில் தெய்வங்கள் கிடையாதே!’னு அது சொல்லுது. அப்புறம், ‘உண்மையான கடவுள் யாருனும் மனுஷங்க உண்டாக்குன தெய்வங்க யாருனும் எப்படி தெரிஞ்சிக்கிறது’னு அவர்கிட்ட கேட்பேன். அவர் சொல்ற பதில கவனமா கேட்டதுக்கு அப்புறம், ஏசாயா 41:23-ஐ வாசிப்பேன். ‘எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்லுங்கள். அப்போதுதான், நீங்கள் எல்லாரும் தெய்வங்கள் என்று நாங்கள் ஒத்துக்கொள்வோம்’னு அந்த வசனம் சொல்லுது. கடைசியா, எதிர்காலத்த பத்தி யெகோவா என்ன சொல்லியிருக்காருனு காட்டுற ஒரு உதாரணத்த காட்டுவேன்.”
அப்புறம்,15. கிழக்கு ஆசியாவில் இருக்கிற சகோதரரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
15 கிழக்கு ஆசியாவில் இருக்கிற ஒரு சகோதரர், மறுசந்திப்புகள் செய்யும்போது எப்படிப் பேசுவார் என்று சொல்கிறார். “சில ஞானமான ஆலோசனைகளயும், நிறைவேறுன சில தீர்க்கதரிசனங்களயும், இந்த பிரபஞ்சத்த கட்டுப்படுத்துற சில சட்டங்களயும் பைபிள்ல இருந்து காட்டுவேன். உயிருள்ள, ஞானமுள்ள ஒரு படைப்பாளர் இருக்குறாருங்குறத இதெல்லாம் எப்படி நிரூபிக்கிதுனு சொல்லுவேன். கடவுள் இருக்குறதுக்கு வாய்ப்பு இருக்குனு ஒருத்தர் நம்ப ஆரம்பிச்சதுக்கு அப்புறம், யெகோவாவ பத்தி பைபிள் என்ன சொல்லுதுனு காட்டுவேன்” என்று அவர் சொல்கிறார்.
16. எபிரெயர் 11:6 சொல்கிறபடி, நம்மோடு சேர்ந்து பைபிள் படிப்பவர்கள் ஏன் கடவுளின் மேலும் பைபிளின் மேலும் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும், நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்?
16 மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நாம் பைபிள் படிப்புகளை நடத்தும்போது, கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்ள அவர்களுக்குத் தொடர்ந்து உதவ வேண்டும். (எபிரெயர் 11:6-ஐ வாசியுங்கள்.) பைபிள்மீது இருக்கும் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். இதைச் செய்வதற்கு, திரும்பத் திரும்ப சில குறிப்புகளைச் சொல்ல வேண்டியிருக்கலாம். ஒவ்வொரு தடவை படிப்பு நடத்தும்போதும், பைபிள் கடவுளுடைய வார்த்தைதான் என்பதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டியிருக்கலாம். இதை எப்படிச் செய்யலாம்? நிறைவேறியிருக்கும் பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றி அல்லது விஞ்ஞானத்தோடும் சரித்திரத்தோடும் பைபிள் எப்படி ஒத்துப்போகிறது என்பதைப் பற்றி அல்லது பைபிள் எப்படி நம்முடைய வாழ்க்கைக்கு கைகொடுக்கிறது என்பதைப் பற்றிக் கொஞ்ச நேரம் பேசலாம்.
17. மக்கள்மீது அன்பு காட்டும்போது என்ன பலன் கிடைக்கிறது?
17 மக்களுக்கு மத நம்பிக்கை இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, அன்பு காட்டுவதன் மூலம் அவர்களும் கிறிஸ்துவின் சீஷர்களாக ஆவதற்கு நாம் உதவுகிறோம். (1 கொ. 13:1) அவர்களைக் கடவுள் நேசிக்கிறார் என்பதையும், அவர்களும் கடவுளை நேசிக்க வேண்டும் என்பதையும் புரியவைப்பதுதான் நம்முடைய குறிக்கோள். ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான பேர் கடவுளை நேசிக்கக் கற்றுக்கொள்கிறார்கள்; ஞானஸ்நானமும் எடுக்கிறார்கள். இவர்களுக்கு மதத்தின் மீது கொஞ்சம் மட்டுமே நம்பிக்கை இருந்திருக்கலாம் அல்லது கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம். இதிலிருந்து என்ன தெரிகிறது? நம்பிக்கையோடு ஊழியம் செய்யுங்கள். எல்லா விதமான மக்கள்மீதும் அக்கறை காட்டுங்கள். அவர்கள் பேசுவதைக் கவனமாகக் கேளுங்கள். அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்கள் கிறிஸ்துவின் சீஷர்களாக ஆவதற்கு உங்கள் முன்மாதிரியின் மூலம் கற்றுக்கொடுங்கள்.
பாட்டு 153 உன் நெஞ்சம் துள்ளாதோ?
^ பாரா. 5 மத நம்பிக்கை இல்லாதவர்களை, முன்பைவிட இப்போது நாம் அதிகமாகச் சந்திக்கலாம். அப்படிப்பட்டவர்களிடம் பைபிளில் இருக்கிற உண்மைகளை எப்படிச் சொல்லலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, பைபிளின் மீதும் யெகோவாவின் மீதும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.
^ பாரா. 1 ஒரு கணக்கெடுப்பின்படி அந்த நாடுகளில் சில: அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, அஜர்பைஜான், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பிரான்சு, ஜெர்மனி, ஹாங்காங், அயர்லாந்து, இஸ்ரேல், ஜப்பான், நெதர்லாந்து, நார்வே, தென் கொரியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரசு, வியட்நாம்.
^ பாரா. 53 படங்களின் விளக்கம்: சகோதரர் ஒருவர், தன்னோடு மருத்துவமனையில் வேலை செய்யும் ஒருவரிடம் சத்தியத்தைப் பற்றிப் பேசுகிறார். பிற்பாடு, அந்த நபர் நம்முடைய வெப்சைட்டை பார்க்கிறார்.