யாருடைய கைவண்ணம்?
வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கும் சஹாரா வெள்ளி எறும்பின் கவசங்கள்
சஹாரா பாலைவனத்தில் காணப்படும் வெள்ளி எறும்பு (காட்டாக்லிஃபிஸ் பாம்பிஸினா) மிக அதிகமான வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கும் நிலவாழ் உயிரினங்களில் ஒன்று. இந்த எறும்பைத் தின்னும் உயிரினங்கள் உச்சி வெயில் நேரத்தில் நிழலைத் தேடிப் போய்விடும். அந்த நேரம் பார்த்து இந்த எறும்பு உணவைத் தேடி தன் புற்றைவிட்டு வெளியே வந்துபோகும். கடும் வெப்பத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் செத்துக்கிடக்கும் மற்ற பூச்சிகளை அது தின்னும்.
யோசித்துப் பாருங்கள்: இந்த வெள்ளி எறும்பின் உடலில், வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கும் கவசங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, அதனுடைய உடலின் மேல்பாகத்தைப் போர்த்தியிருக்கும் ஒரு விதமான விசேஷ முடி. இன்னொன்று, முடி இல்லாத அதனுடைய உடலின் கீழ்ப்பாகம். இந்த எறும்பின் உடலில் உள்ள முடிகள் (1, 2) வெள்ளி போலப் பளபளக்கின்றன. சின்னச் சின்னக் குழாய்கள்போல் இருக்கும் அந்த முடிகள் குறுக்குவெட்டில் முக்கோண வடிவத்தில் இருக்கின்றன (3) அந்த முக்கோணத்தின் இரண்டு மேல்பக்கங்களில் கண்களுக்குத் தெரியாத மேடுபள்ளங்கள் இருக்கின்றன, ஆனால் அதன் அடிப்பக்கம் வழுவழுப்பாக இருக்கிறது. வெப்பத்தைத் தாக்குப்பிடிக்க இந்த வடிவமைப்பு இரண்டு விதங்களில் உதவியாக இருக்கிறது. முதலாவதாக, சூரியனிலிருந்து வரும் வெப்பக் கதிர்களை அந்த முடிகள் பிரதிபலிப்பதற்கு உதவியாக இருக்கிறது. இரண்டாவதாக, சுற்றுப்புற வெப்பத்தினால் ஏற்படும் உடல் சூட்டைத் தணித்துவிட உதவியாக இருக்கிறது. இந்த எறும்பின் உடலுடைய முடியில்லாத கீழ்ப்பக்கம், பாலைவன நிலப்பரப்பிலிருந்து எழும்பும் வெப்பக் கதிர்களைப் பிரதிபலிக்கிறது. *
சஹாரா வெள்ளி எறும்பினால் அதிகபட்சமாக 128.5 டிகிரி ஃபாரன்ஹீட் (53.6 டிகிரி செல்சியஸ்) வெப்பத்தை மட்டும்தான் தாக்குப்பிடிக்க முடியும். அதற்குமேல் அதன் உடலின் வெப்பம் அதிகமாகிவிடாதபடி அதன் கவசங்கள் பார்த்துக்கொள்கின்றன. இந்தச் சின்னஞ்சிறு உயிரினத்தைப் பார்த்து ஆராய்ச்சியாளர்கள் அசந்துபோயிருக்கிறார்கள்; மின்விசிறிகள் அல்லது மற்ற குளிர்சாதனங்களின் உதவி இல்லாமலேயே வெப்பத்தைத் தணிக்கும் விசேஷ சாதனங்களை உருவாக்க முயற்சியும் செய்துவருகிறார்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த சஹாரா வெள்ளி எறும்பின் கவசங்கள் பரிணாமத்தினால் உருவானவையா? அல்லது வடிவமைக்கப்பட்டவையா? ◼
^ கடும் வெப்பத்திலிருந்து இந்த எறும்பைக் காப்பாற்றும் மற்ற கவசங்கள்: 1) அதன் உடலில் இருக்கும் விசேஷமான புரதங்கள்; இவை வெப்பத்தினால் சிதைந்துபோவதில்லை. 2) நீளமான கால்கள்; எறும்பின் உடல் சூடான மணல்பரப்பில் படாமல் இருப்பதற்கும், எறும்பு வேகமாக ஓடுவதற்கும் இவை உதவுகின்றன. 3) திசைகளைத் தெரிந்துகொள்ளும் அபாரத் திறன்; இதனால் இந்த எறும்பு படுவேகமாக அதன் புற்றுக்குத் திரும்பிவிடுகிறது.