பாகுபாடு—உங்களைத் தொற்றியிருக்கிறதா?
பாகுபாடு என்பது ஒரு வைரஸ் கிருமி போன்றது. இந்தக் கிருமி தங்களைத் தொற்றியிருப்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை.
வேறு நாடு, தேசம், குலம், அல்லது மொழியைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமல்ல, வேறு மதம், பாலினம், சமுதாய அந்தஸ்தைச் சேர்ந்தவர்களிடமும் மக்கள் பாகுபாடு காட்டுகிறார்கள். வயது, படிப்பு, உடல் குறைபாடு, அல்லது வெளித்தோற்றத்தை வைத்தும் மற்றவர்களைச் சிலர் தவறாக எடைபோடுகிறார்கள். ஆனாலும், தங்களுக்குள் பாகுபாடு இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
பாகுபாடு உங்களையும் தொற்ற வாய்ப்பிருக்கிறது. மற்றவர்களிடம் பாகுபாடு இருப்பதை நாம் சுலபமாகக் கண்டுபிடிக்கிறோம். ஆனால், நம்மிடம் அந்தக் குணம் இருப்பது நமக்குத் தெரிவதில்லை. உண்மையைச் சொன்னால், நம் எல்லாரிடமும் கொஞ்சமாவது பாகுபாடு இருக்கத்தான் செய்கிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களைப் பற்றி மக்களுக்குத் தப்பான அபிப்பிராயம் இருக்கும்போது, அவர்களில் ஒருவரை சந்தித்தால், “அவரிடம் மக்கள் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள். ஆனால், அப்படி நடந்துகொள்வது அவர்களுக்கே தெரிவதில்லை” என்று சமூகவியல் பேராசிரியர் டேவிட் வில்லியம்ஸ் சொல்கிறார்.
உதாரணத்துக்கு, யோவிட்ஸா என்பவர் வாழ்கிற பால்கன் நாட்டில் ஒரு சிறுபான்மை தொகுதியினர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி அவருக்கு இருந்த எண்ணத்தை அவரே சொல்கிறார்: “அந்த தொகுதில இருக்கிற யாருமே நல்லவங்க கிடையாதுனு நெனச்சேன். ஆனா, எனக்குள்ள பாகுபாடு இருக்குங்கிறத யோசிக்கவே இல்ல. ஏன்னா, ‘அவங்க அப்படிப்பட்டவங்கதான்’னு நானே நெனச்சுக்கிட்டேன்.”
இன வேறுபாடு போன்ற எல்லா விதமான பாகுபாடுகளையும் ஒழித்துக்கட்டுவதற்கு நிறைய அரசாங்கங்கள் சட்டங்களை அமல்படுத்துகின்றன. ஆனாலும், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. ஏன்? ஏனென்றால், அந்தச் சட்டங்கள் ஒருவருடைய செயல்களைத்தான் கட்டுப்படுத்துகின்றன. அவருடைய எண்ணத்தையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்துவது கிடையாது. பாகுபாடு, ஒருவருடைய மனதில்தான் வேர்விட ஆரம்பிக்கிறது. அப்படியென்றால், பாகுபாட்டை அடியோடு ஒழித்துக்கட்ட முடியுமா? இந்தத் தொற்றுக்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா?
பாகுபாட்டை தங்கள் மனதிலிருந்து பிடுங்கியெறிய நிறைய பேருக்கு உதவிய ஐந்து ஆலோசனைகளை அடுத்துவரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.