தம்பதிகளுக்கு
4: மன்னிப்பு
இதன் அர்த்தம் என்ன?
மன்னிப்பது என்பது மனஸ்தாபத்தை முழுவதுமாக மறந்துவிடுவதையும், அதனால் ஏற்பட்ட மனக்கசப்பை அடியோடு விட்டுவிடுவதையும் அர்த்தப்படுத்துகிறது. அதற்காக, நடந்தது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு இல்லை என்றோ, தவறே நடக்கவில்லை என்றோ நினைத்துக்கொள்வதை அது அர்த்தப்படுத்தாது.
பைபிள் நியமம்: “ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள்.”—கொலோசெயர் 3:13.
“நீங்க ஒருத்தர நேசிச்சீங்கன்னா, அவரோட குறைகள பார்க்குறதுக்குப் பதிலா, அதை சரி செஞ்சுக்க அவர் எடுக்குற முயற்சிகள மட்டும்தான் பார்ப்பீங்க.”—ஏரன்.
இது ஏன் முக்கியம்?
கோபத்தை நீங்கள் மனதில் தேக்கி வைத்தால், உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் உங்களைக் கெடுத்துக்கொள்வீர்கள்; உங்கள் மணவாழ்க்கையையும் சிதைத்துவிடுவீர்கள்.
“என் மனச காயப்படுத்துனதுக்காக ஒருசமயம் என்னோட கணவர் என்கிட்ட மன்னிப்பு கேட்டார். அவர மன்னிக்குறது எனக்கு அப்போ ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. கொஞ்ச நாளைக்கு அப்புறம்தான் அவர மன்னிச்சேன். ஆனா, சீக்கிரமாவே அவர மன்னிக்காம போயிட்டேனேன்னு வருத்தப்படுறேன். ஏன்னா, எங்க உறவுல தேவையில்லாத விரிசல அது ஏற்படுத்திடுச்சு.”—ஜூலியா.
நீங்கள் என்ன செய்யலாம்?
உங்களையே சோதித்துப்பாருங்கள்
அடுத்த தடவை, உங்கள் துணை செய்த அல்லது சொன்ன ஏதோவொரு விஷயம் உங்கள் மனதைப் புண்படுத்தினால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:
-
‘நான் தொட்டாச்சிணுங்கியா இருக்குறேனா?’
-
‘செஞ்ச தப்புக்கு அவர்/ள் என்கிட்ட மன்னிப்பு கேட்டே ஆகணும்னு நினைக்குறேனா, இல்லன்னா அதை என்னால மறந்துட முடியுமா?’
உங்கள் துணையோடு கலந்துபேசுங்கள்
-
நாம் ஒருவரையொருவர் மன்னிக்க எவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறோம்?
-
ஒருவரையொருவர் உடனே மன்னிப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?
டிப்ஸ்
-
உங்கள் துணை உங்கள் மனதைக் கஷ்டப்படுத்தினால், ஏதோவொரு கெட்ட எண்ணத்தோடுதான் அப்படிச் செய்தார்/ள் என்று தவறாக முடிவுகட்டிவிடாதீர்கள்.
-
“நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்” என்பதை மனதில் வைத்து, உங்கள் துணையை மன்னிக்க முயற்சி செய்யுங்கள்.—யாக்கோபு 3:2.
“ரெண்டு பேர் மேலயும் தப்பு இருந்தா, மன்னிக்குறது ஈஸி; ஆனா, யாராவது ஒருத்தர்மேல மட்டும் தப்பு இருந்தா, மன்னிக்குறது ரொம்ப கஷ்டம். மன்னிப்ப ஏத்துக்கிட்டு மனசார மன்னிக்குறதுக்கு உண்மையிலயே மனத்தாழ்மை அவசியம்.” —கிம்பெர்லி.
பைபிள் நியமம்: “சீக்கிரமாகச் சமரசம் செய்துகொள்ளுங்கள்.”—மத்தேயு 5:25.
கோபத்தை நீங்கள் மனதில் தேக்கி வைத்தால், உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் உங்களைக் கெடுத்துக்கொள்வீர்கள்; உங்கள் மணவாழ்க்கையையும் சிதைத்துவிடுவீர்கள்