விஞ்ஞானிகளால் விளக்க முடியாதவை
விஞ்ஞானிகள் இந்தப் பிரபஞ்சத்தை ஆராய்ந்து நிறைய விஷயங்களைக் கண்டுபிடித்திருப்பது என்னவோ உண்மைதான்! ஆனால், நிறைய முக்கியமான கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை.
இந்தப் பிரபஞ்சமும் உயிரும் எப்படி உருவானது என்பதைப் பற்றி விஞ்ஞானத்தால் விளக்க முடியுமா? இல்லை! பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளிடம் இதற்குப் பதில் இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், டார்ட்மவுத் கல்லூரியின் வானவியல் பேராசிரியர் மார்செலோ க்லெய்செர், “இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை இதுவரை எங்களால் விளக்கவே முடியவில்லை” என்று சொல்கிறார். இவருக்குக் கடவுள் நம்பிக்கையும் இல்லை!
சைன்ஸ் நியூஸ் பத்திரிகை உயிர் உருவானதைப் பற்றி இப்படிச் சொல்கிறது: “பூமியில் உயிர் இப்படித்தான் உருவானது என்று திட்டவட்டமாக சொல்வது கஷ்டம்! ஏனென்றால், பூமி உருவான சமயத்தில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிற பாறைகளும் புதைபடிவங்களும் காலப்போக்கில் இல்லாமலே போய்விட்டது.” இந்தப் பிரபஞ்சமும் உயிரும் எப்படி உருவானது என்று விஞ்ஞானிகளால் விளக்க முடியவில்லை என்பதையே இவையெல்லாம் காட்டுகின்றன.
‘உயிர் உருவாகியிருக்கிறது என்றால், அதை உருவாக்கியவர் யார்?’ என்று நீங்கள் யோசிக்கலாம். இது சம்பந்தமாக இன்னும் சில கேள்விகளும் உங்களுக்கு வரலாம். ‘ஞானமான அன்பான படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்றால் மனிதர்கள் இவ்வளவு கஷ்டப்படுவதைப் பார்த்துவிட்டு ஏன் சும்மா இருக்கிறார்? ஏன் இத்தனை மதங்களை விட்டுவைத்திருக்கிறார்? அவரை வணங்குகிறவர்கள் தவறு செய்யும்போது ஏன் கண்டும்காணாமல் இருக்கிறார்?’ என்றெல்லாம் நீங்கள் யோசிக்கலாம்.
இந்தக் கேள்விகளுக்கு விஞ்ஞானத்தில் பதில் இல்லை. அதற்காக எங்குமே பதில் இல்லை என்று சொல்ல முடியாது. பைபிளில் பதில் இருக்கிறது! அந்தப் பதில் ரொம்பத் திருப்தியாக இருப்பதாக நிறைய பேர் நினைக்கிறார்கள்.
சில விஞ்ஞானிகள் நேரம் எடுத்து பைபிளைப் படிக்கிறார்கள். படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று நம்புகிறார்கள். அதைப் பற்றி அவர்களே என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள jw.org வெப்சைட்டில் “உயிரின் தோற்றம்—சிலர் சொல்வதென்ன?” என்ற தலைப்பில் பாருங்கள்.