எதை வைத்து ஒரு முடிவுக்கு வருவது?
“பிரபஞ்சம் தானாகவே உருவாகும். அந்தத் திறன் அதற்கு இருக்கிறது.”—ஸ்டீஃபன் ஹாக்கிங் மற்றும் லெனார்ட் மலோடினோவ், இயற்பியல் விஞ்ஞானிகள்.
“கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்.”—பைபிள், ஆதியாகமம் 1:1.
இந்தப் பிரபஞ்சத்தையும் அதில் இருக்கிற உயிர்களையும் கடவுள் படைத்தாரா, அல்லது அவை தானாகவே வந்தனவா? மேலே இருக்கிற விஞ்ஞானிகளுடைய கருத்தும் பைபிளின் கருத்தும் எதிரும் புதிருமாக இருக்கிறது. சிலர், பைபிளின் கருத்தை நம்புகிறார்கள். சிலர், விஞ்ஞானிகளின் கருத்தை நம்புகிறார்கள். வேறு சிலர், எதை நம்புவது என்றே தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள். இது சம்பந்தமாக நிறைய புத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன; விவாத மேடைகளில் வாக்குவாதங்களும் நடக்கின்றன.
‘படைத்தவர் என்றெல்லாம் யாரும் இல்லை; இந்தப் பிரபஞ்சமும் உயிரும் தானாகவே வந்துவிட்டது’ என்று ஆசிரியர்கள் உங்களுக்குச் சொல்லித் தந்திருக்கலாம். படைத்தவர் என்று ஒருவர் இல்லை என்பதற்கு அவர்கள் ஆதாரங்களைக் காட்டியிருக்கிறார்களா? இன்னொரு பக்கம், படைத்தவர் இருக்கிறார் என்று மதத்தலைவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அதற்கான அத்தாட்சிகளை அவர்கள் காட்டியிருக்கிறார்களா? அல்லது, தாங்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?
இதுபோன்ற கேள்விகளை நீங்களும்கூட யோசித்திருக்கலாம். படைத்தவர் ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா இல்லையா என்று யாராலும் சொல்ல முடியாது என்றுகூட உங்களுக்குத் தோன்றலாம். அல்லது, ‘இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வதால் எனக்கு என்ன பிரயோஜனம்’ என்று நீங்கள் யோசிக்கலாம்.
படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று ஏன் நிறைய பேர் நம்புகிறார்கள்? உயிர் எப்படி உருவானது என்று தெரிந்துகொள்வதால் என்ன நன்மை? இதைப் பற்றியெல்லாம் இந்த விழித்தெழு! பத்திரிகை பேசும்.