Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு

பிள்ளைக்கு செக்ஸ் பற்றி சொல்லித்தருவது எப்படி

பிள்ளைக்கு செக்ஸ் பற்றி சொல்லித்தருவது எப்படி

சவால்

சில பத்தாண்டுகளுக்கு முன்பு, செக்ஸ் விஷயங்களை பற்றி பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து தெரிந்துகொண்டார்கள். பிள்ளைகள் மற்றவர்களிடம் இருந்து அதை தெரிந்துகொள்வதற்கு பதிலாக பெற்றோரே அவர்களிடம் பேசுவதற்கான வாய்ப்பும் அப்போது இருந்தது. அதனால், பிள்ளையின் வயதையும் தேவையையும் மனதில் வைத்து அவர்கள் சொல்லிக்கொடுத்தார்கள்.

இப்போது காலம் மாறிவிட்டது. “செக்ஸை பற்றி பிள்ளைகள் ரொம்ப சின்ன வயதிலேயே தெரிந்துகொள்கிறார்கள். பிள்ளைகள் பார்க்கும் படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் செக்ஸ் சம்பந்தமான விஷயங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது” என்று தீ லோலிட்டா எஃபெக்ட் என்ற புத்தகம் சொல்கிறது. இது பிள்ளைகளுக்கு நல்லதா கெட்டதா?

தெரிந்துவைத்திருக்க வேண்டிய விஷயங்கள்

திரும்பின பக்கமெல்லாம் ஆபாச காட்சிகள் இருக்கின்றன. “விளம்பரங்கள், படங்கள், புத்தகங்கள், பாடல் வரிகள், டிவி நிகழ்ச்சிகள், மெசேஜ்கள், விளையாட்டுகள், போஸ்டர்கள், செல்ஃபோன்கள், கம்ப்யூட்டர்கள் என்ன எல்லாவற்றிலும் ஆபாச படங்களும், இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளும் ஆபாச பேச்சுகளும் மலிந்து கிடக்கின்றன. அதனால், தங்களை அறியாமலேயே, நிறைய பேர் [டீனேஜ் பிள்ளைகளும் அவர்களைவிட சின்ன பிள்ளைகளும்] தங்களுடைய வாழ்க்கையில் செக்ஸ்தான் ரொம்ப முக்கியமானது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்” என்று டாக் டூ மீ ஃபஸ்ட் என்ற புத்தகத்தில் டெப்ரா ராஃப்மென் சொல்கிறார்.

வியாபாரிகள் செய்யும் தவறு. விளம்பரதாரர்களும் வியாபாரிகளும் கவர்ச்சியான உடையை வாங்க பிள்ளைகளைக்கூட தூண்டுகிறார்கள். அதனால், சின்ன வயதிலிருந்தே பிள்ளைகள் தங்களுடைய தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். “இளம் பிள்ளைகளுக்கு என்ன பிடிக்கும் என்று விற்பனையாளர்களுக்கு நன்றாக தெரியும். அதை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் . . .  பிள்ளைகளை செக்ஸில் ஈடுபடுத்துவதற்காக அல்ல, ஷாப்பிங்கில் ஈடுபடுத்துவதற்காகதான் கவர்ச்சியான படங்களையும் பொருள்களையும் பயன்படுத்துகிறார்கள்” என்று சோ செக்ஸி சோ சூன் என்ற புத்தகம் சொல்கிறது.

என்ன செய்வது என்று தெரிந்தால் மட்டும் போதாது. ஒரு காரை எப்படி ஓட்டுவது என்று தெரிந்திருப்பதற்கும் ஒரு நல்ல பொறுப்புள்ள டிரைவராக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதேபோல், செக்ஸ் என்றால் என்ன என்று தெரிந்திருப்பதற்கும் அந்த அறிவைப் பயன்படுத்தி சரியான தீர்மானங்களை எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

உண்மை இதுவே: முன்பு இருந்ததைவிட, இப்போது “தங்களுடைய பகுத்தறியும் திறன்களை” பயன்படுத்தி “நன்மை எது, தீமை எது எனக் கண்டறிய” பெற்றோர் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.—எபிரெயர் 5:14.

நீங்கள் என்ன செய்யலாம்?

பேச முயற்சி செய்யுங்கள். தர்மசங்கடமாக இருந்தாலும் உங்கள் பிள்ளைகளிடம் செக்ஸை பற்றி பேச வேண்டியது உங்கள் பொறுப்பு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.—பைபிள் ஆலோசனை: நீதிமொழிகள் 22:6.

கொஞ்ச நேரம் பேசுங்கள். ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் பேசுவதற்கு பதிலாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கொஞ்ச நேரம் பேசுங்கள். ஏதாவது வேலையை சேர்ந்து செய்யும்போதோ அல்லது பயணம் செய்யும்போதோ இதைப் பற்றி பேசலாம். உங்கள் பிள்ளை மனம்திறந்து பேசுவதற்கு யோசிக்க வைக்கும் கேள்விகளை அவர்களிடம் கேளுங்கள். உதாரணத்துக்கு, “ஏன் இப்படி அசிங்கமான விளம்பரங்கள போடுறாங்க?” என்று கேளுங்கள். உங்கள் பிள்ளை பதில் சொன்ன பிறகு, “இத பத்தி நீ என்ன நினைக்குற?” என்று கேளுங்கள். அதற்கு பதிலாக, “இந்த விளம்பரங்கள்ல அரையும்கொறையுமா உடுத்திட்டு வராங்களே, அத பாக்க உனக்கு பிடிக்குமா?” என்று கேட்காதீர்கள்.—பைபிள் ஆலோசனை: உபாகமம் 6:6, 7.

பிள்ளையின் வயதுக்கேற்ப பேசுங்கள். பள்ளிக்கு இன்னும் போக ஆரம்பிக்காத பிள்ளைகளுக்கு உடம்பில் இருக்கும் உறுப்புகளின் பெயர்களை... முக்கியமாக பிறப்புறுப்புகளின் பெயர்களை சொல்லிக்கொடுங்கள். அதோடு, யாராவது அவர்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்தால் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதையும் சொல்லிக்கொடுங்கள். பிள்ளைகள் வளரவளர இன்னும் சில அடிப்படை விஷயங்களை சொல்லிக்கொடுங்கள். அப்போதுதான், அவர்கள் வயதுக்கு வரும்போது உடலளவிலும் மனதளவிலும் செக்ஸை பற்றி சரியான விஷயங்களை தெரிந்து வைத்திருப்பார்கள்.

ஒழுக்க நெறிகளை சொல்லிக்கொடுங்கள். சின்ன வயதிலிருந்தே நேர்மையாக, மரியாதையாக எப்படி இருப்பது என்று பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களை அவர்களிடம் முதலில் பேசினால் பிற்பாடு செக்ஸ் விஷயங்களை பற்றி பேசுவது சுலபமாக இருக்கும். உங்களுக்கு எது பிடிக்காது என்பதையும் தெளிவாக சொல்லுங்கள். உதாரணமாக, திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வது தவறு என்று நீங்கள் நினைக்கலாம். அதை உங்கள் பிள்ளையிடம் சொல்லுங்கள். அது ஏன் தவறு அதனால் என்ன ஆபத்து வரும் என்பதையும் சொல்லுங்கள். “டீனேஜ் வயதில் செக்ஸ் வைத்துக்கொள்வது தங்கள் பெற்றோருக்கு பிடிக்காது என்று சொல்லும் டீனேஜ் பிள்ளைகள் பெரும்பாலும் அந்த தப்பை செய்ய மாட்டார்கள்” என்று பியாண்ட் தி பிக் டாக் என்ற புத்தகம் சொல்கிறது.

நல்ல முன்மாதிரி வையுங்கள். சொல்லி கொடுக்கும் விஷயங்களை உங்கள் வாழ்க்கையில் முதலில் கடைப்பிடியுங்கள். உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: அசிங்கமான இரட்டை அர்த்தமுள்ள ஜோக்குகளுக்கு நான் சிரிக்கிறேனா? மற்றவர்களுடைய உணர்ச்சியை தூண்டும் விதத்தில் உடுத்துகிறேனா? என்னுடைய மணத்துணை இல்லாத ஒருவரோடு நெருங்கி பழகுகிறேனா? நீங்களே தவறாக நடந்துகொண்டால் உங்கள் பிள்ளைகள் எப்படி நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள்!பைபிள் ஆலோசனை: ரோமர் 2:21.

சரியான கண்ணோட்டத்தை வளர்க்க உதவுங்கள். பாலுறவு என்பது மனிதர்களுக்கு கடவுள் கொடுத்த ஒரு பரிசு. அதை சரியாக பயன்படுத்தும்போது, அதாவது திருமணத்துக்கு பிறகு பயன்படுத்தும்போது அதிக சந்தோஷத்தை தரும். (நீதிமொழிகள் 5:18, 19) அவர்களுக்கு திருமணம் ஆனபிறகு அந்தப் பரிசை அனுபவிக்கலாம் என்று உங்கள் பிள்ளைக்கு புரிய வையுங்கள். திருமணத்துக்கு முன்பாக செக்ஸ் வைத்துக்கொண்டால் தேவையில்லாத பிரச்சினைகளும் வேதனைகளும்தான் வரும் என்பதையும் புரிய வையுங்கள்.—1 தீமோத்தேயு 1:18, 19. ▪ (g16-E No. 5)