யாருடைய கைவண்ணம்?
போலியா பெர்ரியின் கண்ணைப் பறிக்கும் நீல நிறம்
ஆப்பிரிக்காவில் காணப்படுகிற இந்தச் சிறிய பழம், போலியா கொண்டன்ஸேட்டா தாவர இனத்தைச் சேர்ந்தது. இந்தப் பழத்தில் நீல நிறமி (pigment) இல்லையென்றாலும், இது ஆழ்ந்த நீல நிறத்தில் இருக்கிறது. இது போன்ற நீல நிறம் வேறெந்த செடியிலும் இல்லை. அப்படியென்றால், கண்ணைப் பறிக்கும் நீல நிறத்தின் ரகசியம் என்ன?
யோசித்துப் பாருங்கள்: இந்தப் பழத்தின் தோலிலுள்ள செல் சுவர்களில் இருக்கிற மெல்லிய நூல்கள் தீக்குச்சிகளைப் போல வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூல்கள் ஒன்றுக்குமேல் ஒன்று கொஞ்சம் தள்ளி அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன; இவை பார்ப்பதற்கு சுருள் வடிவத்தில் இருக்கும். இந்த நூல்கள் நீல நிறத்தில் இல்லையென்றாலும், இவை அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற விதம்தான் பழத்தின் நீல நிறத்துக்குக் காரணம். இப்படி, பழத்தின் நிறமியல்ல அதன் வடிவம்தான் ஆழ்ந்த நீல நிறத்தையும் பொலிவையும் தருகிறது. பெரும்பாலான செல்கள் நீல நிறத்தில் இருக்கின்றன. அடுக்குகளின் வடிவமைப்பில் ஏற்படும் நுணுக்கமான மாற்றங்களால், இந்தப் பழத்தை வித்தியாசமான கோணங்களிலிருந்து பார்க்கும்போது, இது பச்சையாகவும் மஞ்சளாகவும் இளஞ் சிவப்பாகவும் தெரிகிறது. கம்ப்யூட்டர் திரையில் இருக்கும் நிறங்கள் புள்ளி புள்ளியாகத் தெரிவதைப் போல, இந்தப் பழத்தை உற்றுப்பார்க்கும்போது, இதன் நிறங்களும் புள்ளி புள்ளியாகவே தெரிகின்றன.
நிறமி இல்லாத காரணத்தால், செடியிலிருந்து விழுந்த பிறகும் போலியா பெர்ரியின் நிறம் அப்படியே இருக்கிறது. சொல்லப்போனால், நூறு வருஷங்களுக்குப் பிறகுகூட, இந்தப் பழம் ‘ஃப்ரெஷ்ஷாக’ இருக்கும். இந்தப் பழத்தில் வெறும் விதைகள்தான் இருக்கின்றன, அதைச் சாப்பிட முடியாது. இருந்தாலும், சுற்றியிருக்கும் பறவைகளை இந்தப் பழம் கவருவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
நிறம் மங்காத சாயங்கள் முதல் போலியாக்கிவிட முடியாத காகிதங்கள்வரை ஏராளமான பொருள்களை உற்பத்தி செய்வதற்கு நிறமி இல்லாத போலியா பெர்ரியின் நிறம் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கண்ணைப் பறிக்கும் இந்த போலியா பெர்ரியின் நிறம் பரிணாமத்தால் உருவானதா? அல்லது வடிவமைக்கப்பட்டதா?