யாருடைய கைவண்ணம்?
கிளிஞ்சல்களின் வடிவம்
கிளிஞ்சல்களுக்குள் இருக்கிற மிகவும் மென்மையான உயிரினம்தான் மெல்லுடலி (mollusk). அந்த மெல்லுடலி கடினமான சூழ்நிலைகளில் வாழ்வதற்கும், கடலின் அடிப்பரப்பில் ஏற்படும் பயங்கரமான அழுத்தங்களைத் தாக்குப்பிடிப்பதற்கும் கிளிஞ்சல்கள் உதவுகின்றன. கிளிஞ்சல்களின் பாதுகாக்கும் திறனைப் பார்த்து, அதன் வடிவம் மற்றும் அமைப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று இன்ஜினியர்கள் நினைத்தார்கள். கட்டிடத்திற்குள் அல்லது வாகனத்திற்குள் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும் விதத்தில் அவற்றை வடிவமைக்க முடியுமா என்று ஆராய்ச்சி செய்கிறார்கள்.
யோசித்துப் பாருங்கள்: கிளிஞ்சல்களின் இரண்டு விதமான வடிவங்களை இன்ஜினியர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். (1) சிப்பி வடிவம் (திறந்து மூடும் வடிவம்), (2) சங்கு வடிவம் (ஸ்க்ரூ வடிவம்).
சிப்பி வடிவ கிளிஞ்சல்களின் மேற்பரப்பில், கொஞ்சம் எழும்பியபடி வரிகள் காணப்படுகின்றன. இந்த வரிகள் இருப்பதன் காரணத்தால், கடலின் அடிப்பரப்பில் ஏற்படும் அழுத்தங்கள், கிளிஞ்சல்களின் இணைப்பு பகுதியையும், விளிம்புகளையும் நோக்கி செல்கின்றன. சங்கு வடிவ கிளிஞ்சல்களின் வளைவுகளால், அழுத்தங்கள், அதனுடைய மைய பகுதியையும், அகலமான மேற்பகுதியையும் நோக்கி செல்கின்றன. இந்த இரண்டு விதமான வடிவங்களாலும், அழுத்தங்கள் கிளிஞ்சல்களின் பலமான பகுதிகளுக்குத் தள்ளப்படுகின்றன. அதனால், ஏதாவது பாதிப்பு ஏற்படும்போது, மெல்லுடலிகள் அவ்வளவாகப் பாதிக்கப்படுவதில்லை.
நிஜ கிளிஞ்சல்கள்மீதும், எளிய அரையுருண்டை மற்றும் கூம்பு வடிவில் உருவாக்கப்பட்ட (3-டி பிரின்டரால் உருவாக்கப்பட்ட) செயற்கை வடிவ கிளிஞ்சல்கள்மீதும் ஆராய்ச்சியாளர்கள் அழுத்த பரிசோதனை (stress test) செய்தார்கள். எளிய வடிவில் உருவாக்கப்பட்ட செயற்கை கிளிஞ்சல்களைவிட சிக்கலான மேற்பரப்பு வடிவங்களைக் கொண்ட நிஜ கிளிஞ்சல்கள் இரண்டு மடங்கு அழுத்தத்தைத் தாங்கியதாக பரிசோதனையின் முடிவில் தெரியவந்தது.
சைன்டிஃபிக் அமெரிக்கன் இந்த ஆராய்ச்சியின் பயன்பாட்டைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறது: “என்றாவது ஒரு நாள், கிளிஞ்சல் வடிவிலான காரை நீங்கள் ஓட்டலாம். அது பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கும். அதேசமயம், காரின் உள்ளே இருக்கும் பாகங்களைப் பாதுகாக்கிற விதத்திலும் அது வடிவமைக்கப்பட்டிருக்கும்.”
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கிளிஞ்சல்களின் வடிவம் பரிணாமத்தால் உருவானதா? அல்லது வடிவமைக்கப்பட்டதா?