Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சம்பிரதாயங்கள்—சமநிலையான கருத்து

சம்பிரதாயங்கள்—சமநிலையான கருத்து

பைபிளின் கருத்து

சம்பிரதாயங்கள்—சமநிலையான கருத்து

“எந்தவொரு பழக்கத்தை எடுத்துக்கொண்டாலும், அது ஒரு சமயத்தில் ஒரு இடத்தில் கண்டனம் செய்யப்பட்டிருக்கும், ஆனால் இன்னொரு சமயத்தில் இன்னொரு இடத்தில் கடமையாக கடைப்பிடிக்கப்பட்டிருக்கும்.”

மனிதர்களின் சுபாவம் எத்தனை அடிக்கடி மாறும் இயல்புடையது என்பதை இப்படிச் சொல்லி புரியவைக்கிறார் அயர்லாந்து நாட்டின் வரலாற்றாசிரியர் வில்லியம் லெக்கி என்பவர். காலா காலமாக இருந்துவரும் பழக்கவழக்கங்களுக்கும் பாரம்பரியங்களுக்கும்கூட அவருடைய கருத்து பொருந்துகிறது. ஆம், அன்றாட வாழ்க்கையில் அவசியமானது என்று ஒரு காலத்தில் கருதப்பட்ட அனேக பழக்க வழக்கங்கள் பிற்காலங்களில் கண்டனம் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஏனென்றால் கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் சொன்னபடி ‘இவ்வுலகத்தின் காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது.’​—⁠1 கொரிந்தியர் 7:31, NW.

ஆம், மனித சமுதாயம் சதா மாறிக்கொண்டே இருக்கிறது. மனிதரின் மனப்பான்மைகளிலும் சமுதாய பழக்க வழக்கங்களிலும் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதிலிருந்து இது தெரிகிறது. கிறிஸ்தவர்கள் ‘உலகத்தின் பாகமாக இருக்கக்கூடாது’​—⁠அதாவது கடவுளிடமிருந்து விலகிவிட்டிருக்கும் மனித சமுதாயத்திலிருந்து அவர்கள் பிரிந்திருக்க வேண்டும். ஆனாலும் கிறிஸ்தவர்கள் ‘உலகத்தில் இருக்கிறார்கள்’ என்று ஒப்புக்கொள்ளும் பைபிள் அவர்கள் தனியே ஒதுங்கி வாழவேண்டும் என்று கூறுவதில்லையே. ஆகவே பழக்க வழக்கங்களைப்பற்றி ஒரு சமநிலையான கருத்தைக் கொண்டிருப்பது அவசியமாகும்.​—யோவான் 17:11, 14-16; 2 கொரிந்தியர் 6:14-17; எபேசியர் 4:17-19; 2 பேதுரு 2:⁠20.

சம்பிரதாயம் என்றால் என்ன?

குறிப்பிட்ட வகுப்பை அல்லது இடத்தை சேர்ந்தவர்கள் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களே சம்பிரதாயங்கள், இவை சமூக வாழ்வோடு சம்பந்தப்பட்டவை. மற்றவர்களோடு ஒன்றுகூடியிருக்கையில் அல்லது அவர்களோடு சேர்ந்து சாப்பிடுகையில் நடந்துகொள்ள வேண்டிய முறை, ஒழுங்கு போன்ற சம்பிரதாயங்களை எடுத்துக்கொள்ளலாம். இவை, நாலு பேர் ஒன்றாக கூடியிருக்கையில் நாகரிகமாகவும் மரியாதைக்குரிய விதத்திலும் பழக வேண்டிய அவசியத்திற்காக தோன்றியிருக்கலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், மனித உறவுகள் என்ற சக்கரத்தில் ஏற்படக்கூடிய உராய்வுகளை சரிசெய்யும் எண்ணெய்க்கு இந்த பண்பாடுள்ள நடத்தையை ஒப்பிடலாம்.

மதம், சம்பிரதாயங்கள்மீது பெருமளவு செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. சொல்லப்போனால், அநேக பழக்கவழக்கங்கள் பண்டைய காலத்து மூட நம்பிக்கைகளிலிருந்தும் பைபிளில் காணப்படாத மத கருத்துக்களிலிருந்துமே தோன்றின. உதாரணமாக, அன்பானவரை மரணத்தில் இழந்திருப்போருக்கு பூக்களைக் கொடுப்பது என்பது மத சம்பந்தமான மூட நம்பிக்கையிலிருந்து தோன்றியிருக்கலாம் a அதோடு ஆண் குழந்தைகளோடு சம்பந்தப்படுத்தப்படும் நீல நிறம் பேய்களை விரட்டுவதாக கருதப்பட்டது. பெண்கள் மஸ்காரா போட்டுக்கொண்டால் கண் படாமல் இருக்கும் என்றும், லிப்ஸ்டிக் பூசினால் பேய்கள் வாய் வழியாக உள்ளே சென்று அவர்களை ஆட்டிப்படைக்காது என்றும் நம்பப்பட்டது. சாதாரணமாக கொட்டாவி விடும்போது வாயை பொத்திக்கொள்கிறோம். இந்தப் பழக்கமும்கூட, வாயை அகலமாக திறந்தால் ஒருவருடைய ஆத்துமா அதன் வழியாக வெளியேறிவிடும் என்ற நம்பிக்கையால் தோன்றியிருக்கலாம். ஆனால் காலப்போக்கில் இப்படிப்பட்ட மத சம்பந்தமான அர்த்தங்கள் மறைந்துவிட்டன, இன்று இந்தப் பழக்கவழக்கங்களுக்கு எந்த மத சம்பந்தமான முக்கியத்துவமும் இல்லை.

கிறிஸ்தவர்களின் கவலை

ஒரு குறிப்பிட்ட பழக்கத்தை செய்வதா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலை வரும்போது, பைபிளின்படி கடவுளின் நோக்குநிலை என்ன என்பதையே ஒரு கிறிஸ்தவன் முக்கியமாக சிந்திக்க வேண்டும். குழந்தை பலி, இரத்தத்தை தவறாக பயன்படுத்துவது, பல்வேறு பாலியல் பழக்கங்கள் போன்றவற்றை கடந்த காலங்களில் கடவுள் கண்டனம் செய்தார். இருந்தாலும் சில சமுதாயங்கள் இவற்றை கடைப்பிடித்து வந்தன. (லேவியராகமம் 17:13, 14; 18:1-30; உபாகமம் 18:10, 11ஆ) அதுபோலவே இன்று சர்வ சாதாரணமாக இருக்கும் சில பழக்கங்கள் பைபிள் நியமங்களுக்கு இசைவாக இல்லை. கிறிஸ்மஸ், ஈஸ்டர் போன்ற மத விடுமுறைகளோடு தொடர்புடைய பைபிள் ஆதாரமில்லாத பாரம்பரியங்களும் ஆவி கொள்கையோடு சம்பந்தப்பட்ட மூட நம்பிக்கையான வழக்கங்களும் இதில் அடங்கும்.

முற்காலங்களில் சில பழக்க வழக்கங்கள் கேள்விக்குரியதாக இருந்திருக்கலாம், ஆனால் இன்று அவை சாதாரண சமுதாய பழக்கமாகவே கருதப்படலாம். இவற்றைப் பற்றி என்ன? உதாரணமாக, மோதிரம் மாற்றிக்கொள்வது, கேக் வெட்டுவது போன்ற அநேக திருமண சம்பிரதாயங்கள் புற மதத்திலிருந்து ஆரம்பமாகி இருக்கலாம். அப்படியானால் கிறிஸ்தவர்கள் இந்தப் பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கக் கூடாதா? சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒவ்வொரு பழக்கத்தையும் துருவிப் பார்த்து, ஏதாவது ஒரு இடத்தில் அல்லது ஏதாவது ஒரு சமயத்தில் அதற்கு தவறான அர்த்தம் இருந்திருக்குமா என ஆராய வேண்டுமா?

“கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” என்பதாக பவுல் குறிப்பிடுகிறார். (2 கொரிந்தியர் 3:17; யாக்கோபு 1:25, பொ.மொ.) இந்த விடுதலையை சுய ஆசைகளுக்காக பயன்படுத்தாமல் எது சரி எது தவறு என்பதை அறியும்படி நம்முடைய பகுத்தறிவை பயிற்றுவிக்க பயன்படுத்த வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். (கலாத்தியர் 5:13; எபிரெயர் 5:14; 1 பேதுரு 2:16) ஆகவே பைபிள் நியமங்கள் மீறப்படவில்லை என்பது தெளிவாக இருக்கும்போது யெகோவாவின் சாட்சிகள் கண்டிப்பான எந்தச் சட்டத்தையும் இயற்றுவதில்லை. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தான் எதிர்ப்படும் சூழ்நிலைமைகளை சீர்தூக்கிப் பார்த்து சொந்தமாக தீர்மானம் எடுக்க வேண்டும்.

அடுத்தவர் பிரயோஜனத்தை நாடுங்கள்

நேரடியாக பைபிள் போதனைகளை மீறாதவரையில் ஒரு குறிப்பிட்ட பழக்கத்தில் கலந்துகொள்வது எப்போதும் சரியாகவே இருக்கும் என்பது பொருளா? உண்மையில் அப்படியில்லை. (கலாத்தியர் 5:13) ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய சொந்த பிரயோஜனத்தை மட்டும் தேடாமல் “அநேகருடைய பிரயோஜனத்தைத் தேட” வேண்டும் என்று பவுல் சொல்கிறார். ‘எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்து’ இடறலற்றவராயிருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 10:31-33) ஆகவே கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற விரும்பும் எவரும் தன்னைத்தான் இவ்விதமாக கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘இந்தப் பழக்கத்தை மற்றவர்கள் எவ்வாறு கருதுகின்றனர்? சமுதாயத்தில் இதற்கு ஆட்சேபணைக்குரிய அர்த்தம் ஏதாவது இருக்கிறதா? இதில் நான் கலந்துகொண்டால் கடவுளுக்கு பிரியமில்லாத பழக்கங்கள் அல்லது கருத்துகளோடு எனக்கு உடன்பாடு இருக்கிறது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுமா?’​—1 கொரிந்தியர் 9:19, 23; 10:23, 24.

பொதுவாக தீங்கற்றதாக இருந்தாலும் ஒரு சில பழக்க வழக்கங்கள் பைபிள் நியமங்களுக்கு முரண்படலாம். உதாரணமாக, சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பூக்களைக் கொடுப்பதற்கு தனி அர்த்தம் இருக்கலாம். இது பைபிள் போதனைகளுக்கு எதிர்மாறாக இருக்கலாம். ஆகவே ஒரு கிறிஸ்தவன் முக்கியமாக எதை சிந்திக்க வேண்டும்? ஒரு குறிப்பிட்ட பழக்கம் எப்படி ஆரம்பமானது என்பதை ஆராய்வதற்கு காரணமிருந்தாலும்கூட, சில சமயங்களில், இந்தப் பழக்கம் தான் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த இடத்திலும் அந்தச் சமயத்திலும் ஜனங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது என்று சிந்திப்பதே அதிக முக்கியமானதாகும். வருடத்தின் குறிப்பிட்ட ஒரு காலத்தில் அல்லது குறிப்பிட்ட சில சூழ்நிலைமைகளில் ஒரு பழக்கம் பைபிளுக்கு எதிராகவோ அல்லது மற்றபடி தவறான அர்த்தத்திலோ எடுத்துக்கொள்ளப்படும் என்றால் கிறிஸ்தவர்கள் அந்தச் சமயத்தில் அதைத் தவிர்த்துவிடுவது ஞானமான காரியமாகும்.

கிறிஸ்தவர்களின் அன்பு திருத்தமான அறிவிலும் பகுத்துணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருக வேண்டும் என்று பவுல் ஜெபித்தார். பிரபலமான சம்பிரதாயங்களை சமநிலையோடு நோக்குவதன் மூலம் கிறிஸ்தவர்கள் ‘குற்றமற்றவர்களாய், மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்காமல், அதிமுக்கிய காரியங்களை நிச்சயப்படுத்திக் கொள்கிறார்கள்.’ (பிலிப்பியர் 1:9, 10, NW) அதே சமயத்தில் தங்கள் “நியாயத்தன்மை எல்லா மனுஷருக்கும் தெரியும்”படி நடந்துகொள்வார்கள்.​—பிலிப்பியர் 4:⁠5, NW.

[அடிக்குறிப்புகள்]

a இறந்தவர்கள் உயிரோடிருப்பவர்களை அடிக்கடி வந்து தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு பூச்செண்டுகள் படைக்கப்பட்டன என மனிதவியல் ஆய்வாளர்கள் சிலர் சொல்கின்றனர்.

[பக்கம் -ன் படங்கள்26]

கொட்டாவி விடும்போது வாயை பொத்திக்கொள்வது, துக்கம் விசாரிக்க செல்கையில் பூக்களைக் கொடுப்பது போன்ற சில பழக்கவழக்கங்கள் ஆரம்பத்திலிருந்த முக்கியத்துவத்தை இழந்துவிட்டன