மூங்கில் கனவுகள்
மூங்கில் கனவுகள்
பிரான்ஸிலிருந்து விழித்தெழு! நிருபர்
கிட்டத்தட்ட 150 வருடங்கள் ஆகிவிட்டது, தென் பிரான்ஸைச் சேர்ந்த இஸான் மாசல் என்பவர் தன் கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கி, இன்று அவர் கனவு உயிர்பெற்று உலகிலேயே மிகப் பெரிய மூங்கில் தோப்பாக திகழ்கிறது. கிடுகிடுவென ஓங்கி வளர்ந்து பல்வேறு பயனளிக்கும் மூங்கில்களில் கிட்டத்தட்ட 200 வகைகள் இப்போது இங்கே இருக்கின்றன. ஆசியாவிலிருந்து கிராம்பு, பட்டை போன்ற மசாலா பொருட்களை இறக்குமதி செய்துவந்த மாசலின் கனவு 1855 வரை நனவாகவில்லை. ஏனெனில் ஐரோப்பாவில் மூங்கில்கள் வளர்ந்ததில்லை. இது அவரது ஆசைக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது.
எதிர்பார்த்தபடி ஆசியாவிலிருந்து மூங்கில்களை இறக்குமதி செய்ய முடியாமல் போனது. மூங்கில் அதன் சொந்த ஊரில் “பயில்வான்”தான். (சில வகை மூங்கில்கள் -24 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான சீதோஷணத்திலும் தாக்குப்பிடித்துவிடும், 16,000 அடி உயரத்திலும் வளரும்.) இருந்தாலும் அதை மற்றொரு கண்டத்திற்கு எடுத்துச்செல்வதற்குள் வேர் காய்ந்துபோனது. அதன் உயிரை பாதுகாத்திட வழியே தெரியவில்லை. அதன் பிறகோ அதிவேக கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆக ஒருவழியாக 1827-ல் மூங்கில்கள் இங்கிலாந்திற்கும் பிற்பாடு பிரான்ஸுக்கும் நல்லபடியாக உயிரோடு வந்து சேர்ந்தன. மாசலின் காய்ந்துபோன ஆசை துளிர்விட ஆரம்பித்தது.
ஆனால் மூங்கில் வந்தால் போதுமா, வளர்க்க இடம் வேண்டாமா? ஆக, மூங்கிலுக்கு இஷ்டமான இடத்தைத் தேடும் படலத்தில் இறங்கினார் மாசல். 1855-ல், தென் பிரான்ஸில் ஆன்டூஸ் நகர் அருகே 84 ஏக்கர் எஸ்டேட்டை மாசல் வாங்கினார். சீதோஷணமும் சரி மண்ணும் சரி கச்சிதமாக அமைந்துவிட்டது. ஒரே ஒரு குறை, தண்ணீர். அருகிலிருந்த ஆற்று நீரை கொண்டுவருவது சாமானிய வேலை அல்ல. ஆனால் மாசல் சிந்திய இரத்த வேர்வைக்கு பலன் கிடைக்காமல் போகவில்லை.
1890-ல் மாசலின் வாழ்க்கையில் துன்பப் புயல் வீசியது. அவர் உயிருக்கு உயிராய் நேசித்து வளர்த்த மூங்கில் தோப்பை தத்துக்கொடுக்க வேண்டியதாயிற்று. எல்லாம் பணம் படுத்திய பாடுதான், அவர் திவாலாகிவிட்டார். நல்லவேளையாக, தத்தெடுத்தவர்கள் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார்கள். இப்போது வருடா வருடம் சுமார் 3,50,000 பேரின் கண்ணுக்கு விருந்தளிக்கிறது இந்த “லா பான்பூஸ்ரா” மூங்கில் தோப்பு. மாசல் கண்ட கனவு நனவாகிவிட்டது!
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
அனைத்து படங்களும் : La Bambouseraie de Prafrance