Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மழு மழு கன்னத்திற்கு

மழு மழு கன்னத்திற்கு

மழு மழு கன்னத்திற்கு

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

ஒவ்வொரு ஆண்மகனும் தினமும் ஓர் அறுவடை செய்கிறான். அதுவே ஷேவிங். இவ்வாறு ஷேவ் செய்ய ஒவ்வொரு நாளும் சுமார் ஐந்து நிமிடங்கள் செலவழித்தால், 50 வருடங்களில் அந்த மனிதன் அவனுடைய வாழ்நாளில் குறைந்தபட்சம் 63 நாட்களை இந்த அறுவடை வேலைக்கே ஒதுக்கிவிடுகிறான். ஒவ்வொரு நாளும் செய்யப்படும் இந்த அறுவடையைப் பற்றி சிலர் என்ன நினைக்கின்றனர்?

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வில் ஷேவிங் செய்வதைப் பற்றி சிலர் மனந்திறந்து சொன்ன குறிப்புகள் இதோ. “எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவே இல்ல.” “அத நெனச்சாலே கடுப்பா இருக்கு.” “உயிருக்கு ஆபத்தானதுல இதுவும் ஒண்ணு.” “ரொம்ப முக்கியமானது ஒண்ணும் இல்ல.” தங்கள் முகத்திலுள்ள முடியை அகற்றி மழு மழுவென்று ட்ரிம்மாக வைத்துக்கொள்வதற்கே சில ஆண்கள் இவ்வாறு சங்கடப்படுகின்றனர், இருப்பினும் இவர்கள் ஏன் ஷேவ் செய்கின்றனர்? வாருங்கள் முதலில் ஷேவிங்கைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை இதற்கான பதிலையும் கண்டுபிடிக்கலாம்.

அன்று சிப்பி இன்று ரேஸர்

சிப்பி-ஓடு அல்லது சுறா மீனின் பற்கள் அல்லது கூர்மையான ஒரு கல்லைக்கொண்டு ஷேவ் செய்வதை சற்று கற்பனை செய்து பாருங்கள். ஐயோ! என்று அலறுவீர்கள் அல்லவா. ஆனால் வருத்தகரமாக இதுவே அக்காலத்தில் இருந்த நிலை. இக்காலத்திலோ புத்திசாலித்தனமாக, ஷேவ் செய்வதற்குரிய கருவிகளை தேர்ந்தெடுப்பதில் அல்லது தயாரிப்பதில் மனிதர்கள் தங்கள் மூளையை நன்கு பயன்படுத்தியிருக்கின்றனர். அதற்காக அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்! பண்டைய எகிப்திய ஆண்கள் ஷேவ் செய்வதற்கு செம்பு ரேஸர்களை பயன்படுத்தியிருக்கின்றனர். அது பார்ப்பதற்கு சிறிய கோடாரி போன்றிருக்கும். அதன் பிறகு 18-⁠ம் மற்றும் 19-⁠ம் நூற்றாண்டுகளின்போது, கட்த்ரோட் என்று அழைக்கப்பட்ட ஒரு சாதனம் இங்கிலாந்திலுள்ள ஷெஃபீல்ட்டில் தயாரிக்கப்பட்டது. பெரும்பாலும் அழகாக காட்சியளிக்கும் இந்த ரேஸரில், ஒரு வளைவான கூர்மையான ஸ்டீல் பிளேட் இருக்கும். அதை பயன்படுத்தாதபோது அந்த பிளேட் ரேஸரின் கைப்பிடிக்குள் மடங்கி ஒளிந்துகொள்ளும். இந்த சாதனங்களை மிக ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும்; இவற்றை சரியாக பயன்படுத்த கற்றுக்கொள்வதற்கு குறைந்தபட்சம் கொஞ்சம் தோலையும் இரத்தத்தையும் தானமாக கொடுத்தாக வேண்டியிருந்தது. இவற்றைப் பற்றி சரியாக தெரியாத ஒருவர் முதல் தடவையாக பயன்படுத்துகிறார் என்றால் அவ்வளவுதான், அவருக்கு உயிர்போய் உயிர் வருவதுபோல். இருப்பினும், இந்த 20-⁠ம் நூற்றாண்டு இப்படி பயமுறுத்திக்கொண்டிருந்த சாதனங்களுக்கெல்லாம் டாட்டா காட்டிவிட்டது.

ஐக்கிய மாகாணங்களில் கிங் கேம்ப் ஜில்லட் என்பவர் 1901-⁠ல், ஒரு புதிய சாதனத்தை வடிவமைத்து காப்புரிமை பெற்றார். அது, உபயோகித்த பிறகு தூக்கி எறிந்துவிடக்கூடிய பிளேடுடன் ஒரு பாதுகாப்பான ரேஸராகும். அவருடைய இந்தப் படைப்பு உலகத்தையே ஒரு கலக்கு கலக்கியது. அதன் பிறகே அநேகருக்கு ஞானோதயம் பிறந்தது, கொஞ்ச நாட்களிலேயே வெள்ளி அல்லது தங்கமுலாம் பூசப்பட்ட பிடிகளையுடைய ரேஸர்கள் உட்பட விதவிதமான வடிவங்களில் தயாரிக்கப்பட்டன. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ரேஸர்களின் அணிவகுப்பை கொஞ்சம் பாருங்களேன், ஒருமுறை உபயோகித்தபிறகு தூக்கியெறிந்துவிடக்கூடிய ரேஸர்கள், இரண்டு அல்லது மூன்று பிளேடுகளைக்கொண்ட ரேஸர்கள், மேற்பகுதி சற்றே அசைந்து வளைந்துகொடுக்கும் தன்மையுடைய ரேஸர்கள் போன்று அநேக வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.

நாம் எலக்ட்ரிக் ரேஸரையும் மறந்துவிடக்கூடாது, இது 1931-⁠ல் விற்பனைக்கு வந்தது. இதன் திறனும் புகழும் தொடர்ந்து முன்னேறியிருக்கிறது. ஆனால் துல்லியமான அல்லது நெருக்கமான ஷேவிங்கை விரும்புபவர்கள் கூர்மையான பிளேடையே விரும்புகின்றனர்.

வந்துபோகும் பேஷன்

பண்டைய காலங்கள் முதற்கொண்டே தாடிவைக்கும் ஸ்டைல் மனிதர் மத்தியில் அடிக்கடி வந்து போகும் பேஷனாக இருந்திருக்கிறது. பண்டைய எகிப்தில் தினவாழ்க்கை (ஆங்கிலம்) என்கிற புத்தகம் சொல்கிற விதமாக, எகிப்தியர்கள் “தங்கள் உடலில் முடி இருப்பதை கொஞ்சம்கூட விரும்பவே இல்லை, அழகாக ஷேவ் பண்ணி டிரிம்மாக காட்சியளிப்பதையே உயர்வாக கருதினர். அவர்கள் நல்ல தரமான ரேஸர்களையே பயன்படுத்தினர், அந்த ரேஸர்களும் சுத்தமான தோல் பைகளில் வைக்கப்பட்டிருந்தன.” அதனால்தான் எபிரெய சிறைக்கைதியாக இருந்த யோசேப்பை எகிப்தின் அரசனான பார்வோனிடம் அழைத்து செல்வதற்கு முன், அவருக்கு சவரம் செய்து அழைத்து சென்றனர். ஆக, எகிப்தில் ஷேவிங் செய்யும் வழக்கம் இருந்தது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது அல்லவா!​—⁠ஆதியாகமம் 41:⁠14.

அசீரிய நாட்டில் எல்லா ஆண்களும் கருகருவென்று அடர்த்தியான தாடி வைத்திருந்தனர். அவர்களது தாடி மிடுக்காக தோற்றமளிக்க அதிக கவனம் செலுத்தினர். தாடியை நன்றாக பராமரித்து, அவற்றை நீளமாக சுருள் சுருளாக விட்டார்கள். சில சமயம் ஜடையாகவும் பின்னிக்கொண்டார்கள். ஆகவே, தாடி விஷயத்தில் அவர்கள் தனி கவனம் செலுத்தினர்!

அக்காலத்து இஸ்ரவேல் ஆண்களும் ஓரளவுக்கு நீளமாக தாடியை வளர்த்திருந்தனர், அதோடு அவற்றை அழகாக ட்ரிம் செய்வதற்கு ரேஸர்களை பயன்படுத்தினர். இஸ்ரவேல் ஆண்களுக்கு, ‘கிருதாவை வெட்டாமலும்’ அல்லது “தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்” இருக்க வேண்டும் என்று கடவுளுடைய சட்டம் கட்டளையிட்டது. இதன் அர்த்தம் என்ன? இதன் அர்த்தம், ஒருவர் தன் முடியையோ தாடியையோ கத்தரிக்கக்கூடாது என்பது அல்ல. இஸ்ரவேலுக்கு அருகிலிருந்த புறமத நாட்டவர்களின் தலை முடி, தாடி வெட்டும் பழக்கத்திற்கும் அவர்களது மதத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. இவர்களது பழக்கங்களை இஸ்ரவேல் ஆண்கள் பின்பற்றக்கூடாது என்பதற்காகவே இந்தக் கட்டளை கொடுக்கப்பட்டது aலேவியராகமம் 19:27; எரேமியா 9:25, 26; 25:23; 49:⁠32, NW.

பண்டைய கிரேக்க சமுதாயத்தில் உயர்குடி சீமான்கள் மாத்திரம் சுத்தமாக ஷேவ் செய்திருந்தனர். ஆனால் பொதுமக்களில் எல்லா ஆண்களும் தாடி வைத்திருந்தனர். ரோம சாம்ராஜ்யத்தில் அநேகமாக பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில்தான் ஷேவ் செய்யும் பழக்கம் ஆரம்பித்திருக்கும் என கருதப்படுகிறது. அன்று முதல் தினமும் ஷேவ் செய்யும் வழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது.

ஆனால், ரோம சாம்ராஜ்யம் வீழ்ந்தது, தாடி வளர்க்கும் ஸ்டைலோ மீண்டும் எழுந்தது. இவ்வாறு தாடி வளர்க்கும் ஸ்டைல் சுமார் 1,000 வருடம் வீறுநடை போட்டது. பிறகு 17-⁠ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மீண்டும் ஷேவ் செய்வது அப்போதைய பேஷனாக வலம் வந்தது. 18-⁠ம் நூற்றாண்டு வரையிலும் சுத்தமாக ஷேவ் செய்யப்பட்ட முகங்கள் பளபளத்தன. அதன்பிறகு, 19-⁠ம் நூற்றாண்டின் மத்திபத்திலிருந்து இறுதிவரை, மீண்டும் தாடி வளர்க்கும் ஸ்டைல் அப்போதைய பேஷனாக ஆண்களை ஆட்டிப்படைத்தது. ஆகவேதான், உவாட்ச் டவர் சொஸைட்டியின் முதல் பிரெஸிடென்ட் சி. டி. ரஸல் மற்றும் அவருடைய உடன் கிறிஸ்தவரான டபிள்யூ. ஈ. வான் அம்பர்க்-⁠ன் புகைப்படங்களில் அந்த காலத்திற்கு பொருத்தமான, நன்கு ட்ரிம் செய்யப்பட்ட தாடியை வளர்த்திருப்பதை பார்க்கிறோம். இருப்பினும், 20-⁠ம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஷேவ் செய்யும் பழக்கம் மீண்டும் உயிர் பெற்றது; இந்தப் பழக்கம் இன்றும் அநேக நாடுகளில் வீறுநடை போடுகிறது.

தினமும் காலை எழுந்து கண்ணாடி முன் நின்று, முகத்தில் பிளேடு செய்யும் அட்டகாசங்களை பார்த்து மகிழும் லட்சக்கணக்கான ஆண்களுள் நீங்களும் ஒருவரா? அப்படியானால், முடிந்தவரை வலியின்றி ரத்தமின்றி துல்லியமாகவும் அழகாகவும் ஷேவ் செய்ய விரும்புவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அவ்வாறு செய்ய “பிளேடினால் ஷேவ் செய்வோருக்கு சில டிப்ஸ்” என்ற பெட்டியைப் பாருங்கள். அவற்றுள் சில குறிப்புகளை ஏற்கெனவே ஒருவேளை செய்துவருவீர்கள். எப்படியிருந்தாலும், ஜோராக ஷேவிங் செய்து அசத்தலான ஆண்மகனாக வலம்வாருங்கள்.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட, வேதாகமங்களின்பேரில் உட்பார்வை, (ஆங்கிலம்) தொகுதி 1, பக்கங்கள் 266-ஐயும் 1021-ஐயும் காண்க.

[பக்கம் -ன் பெட்டி/படம்23]

பிளேடினால் ஷேவ் செய்வோருக்கு சில டிப்ஸ்

ஆடவரின் முடி (ஆங்கிலம்) என்ற புத்தகம், மழு மழுவென ஷேவ் செய்ய சில அருமையான ஆலோசனைகளை கொடுக்கிறது.  b

1. முக‘முடியை’ மிருதுவாக்க: முகத்திலுள்ள முடியை நன்கு மிருதுவாக்க ஒரே வழி, வெந்நீரினால் முகத்தை கழுவுவதே. முடிந்தால், குளித்தபிறகு ஷேவ் செய்யவும்; அப்பொழுது முடி மென்மையாக இருக்கும்.

2. ஷேவிங்கிற்கு முன்: சோப்பு, லேதர், கிரீம், ஜெல் போன்றவையெல்லாம் முக்கியமாக மூன்று வேலைகளை செய்கின்றன. (1) முடிக்கு ஈரத்தன்மை தருகிறது, (2) முடியை விறைப்பாக்குகிறது (3) தோலை வழுவழுப்பாக்குகிறது, அதனால் ரேஸர் தோலில் புகுந்துவிளையாடுகிறது. உங்களுக்கேற்ற தரமான பொருளை தேர்ந்தெடுங்கள். நீங்கள் எப்போதாவது ஹேர் கண்டிஷனரை உபயோகித்திருக்கிறீர்களா? அதுவும் உங்கள் முடியை மிருதுவாக்குவதற்கு தயாரிக்கப்படுவதே.

3. சரியான ரேஸர் சரியான முறையில்: இங்கே சரியான ரேஸர் என்று சொல்லும்போது கூர்மையான ரேஸரை குறிப்பிடுகிறோம். மழுங்கிப்போன ரேஸர்கள் உங்கள் தோலை பதம்பார்த்துவிடலாம். முடி எந்தத் திசையில் வளர்கிறதோ அதே திசையில் ஷேவ் செய்யவும். ஒருவேளை எதிர் திசையில் ஷேவ் செய்தால் நெருக்கமாக, சுத்தமாக ஷேவ் செய்யலாம்; ஆனால் அது உங்கள் தோலிற்கு கீழ் உள்ள முடிகளையும் வெட்டிவிடக்கூடும். இதனால் முடி, தோலிலுள்ள நுண்துளைமூலம் வெளியே வளராமல் அதைச் சுற்றியுள்ள திசுக்களுள் வளரும். கவனமில்லாமல் ஷேவ் செய்யும் பழக்கமுடைய ஆண்கள் மற்றும் பெண்களை வைரஸ் தொற்றிக்கொள்வதோடு மருக்களை உண்டுபண்ணக்கூடும் என்பது சிலரின் கருத்து.

4. ஷேவிங்கிற்கு பின்: நீங்கள் ஒவ்வொருமுறை ஷேவ் செய்யும்போதும் பார்க்க முடியாத மெல்லிய தோலை எடுத்துவிடுவதால் உங்கள் தோல் எளிதில் காயப்பட வாய்ப்பிருக்கிறது. அதனால், உங்கள் முகத்தில் மீதமுள்ள அழுக்கையெல்லாம் சுத்தமான தண்ணீரால் கழுவிட வேண்டும். முதலில் சுடுதண்ணீராலும் பின்பு குளிர்ந்த தண்ணீராலும் கழுவவேண்டும், அப்போதுதான் அந்த நுண்துளைகள் நீரால் மூடிக்கொள்ளும். நீங்கள் விரும்பினால், உங்கள் சருமத்தை பாதுகாக்கவும் புத்துயிரூட்டவும் ஷேவ் செய்தபிறகு பயன்படுத்தும் ஈரப்பசையுடைய லோஷனை பயன்படுத்தவும்.

[அடிக்குறிப்பு]

b இந்தக் கட்டுரை முக்கியமாக ஆண்களுக்காக, இருந்தாலும் அநேக நாடுகளில் பெண்களும் சிலசமயம் முடியை ஷேவ் செய்வதுண்டு, ஆகவே இதில் கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகள் அவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

[பக்கம் 24-ன் பெட்டி/படம்]

முக‘முடியின்’ இரகசியம்!

நம் முகத்தில் வளரும் முடியையே ஆங்கிலத்தில் விஸ்க்கர்ஸ் (Whiskers) என்கிறோம். இந்த முடி கெரட்டின் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட புரதங்களால் ஆனவை. மனித மற்றும் மிருக உடலில் உற்பத்தி செய்யப்படும் நார்ச்சத்துமிக்க சல்பர் கலந்த புரதமே இந்த கெரட்டின். முடி, நகம், இறக்கைகள், குளம்புகள், கொம்புகள் ஆகியவை வளர்வதற்கு இதுவே அடிப்படைக்கூறாகும். மனித உடலிலுள்ள முடிகளிலேயே, முகத்திலுள்ள முடிதான் அதிக வலிமை வாய்ந்தது; இருப்பினும் இது நன்றாக வளைந்துகொடுக்கும் தன்மையுடையதால் எளிதில் சேதமடைவதில்லை. இந்த முடியின் அளவிலுள்ள ஒரு செம்பு கம்பியை வெட்டுவது எவ்வளவு கடினமோ அதேபோன்று இதையும் வெட்டுவது கடினம். ஒரு சராசரி மனிதனின் முகத்தில் சுமார் 25,000 முடிகள் வளர்கின்றன. அவை ஒரு நாளைக்கு, அதாவது 24 மணிநேரத்திற்கு அரைமில்லிமீட்டர் என்ற வீதத்தில் வளர்கின்றன.

[படத்திற்கான நன்றி]

Men: A Pictorial Archive from Nineteenth-Century Sources/ Dover Publications, Inc.

[பக்கம் 24-ன் படங்கள்]

ஷேவிங் வந்துபோகும் பேஷன்

அசீரியன்

எகிப்தியன்

ரோமன்

[படங்களுக்கான நன்றி]

Museo Egizio di Torino

Photographs taken by courtesy of the British Museum