யுத்தத்தின் புதிய பலியாடுகள்
யுத்தத்தின் புதிய பலியாடுகள்
“இன்று நடக்கும் போர்களுக்கும் அன்று நடந்த போர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்! . . . இன்று இராணுவ வீரர்களுக்கு மாறாக சாதாரண குடிமக்களே,” போரினால் பலியாகின்றனர். இவ்வாறு தங்கள் உயிரை தொலைத்துவிட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவே, ஐநா ரேடியோ ஒலிபரப்பிய நிகழ்ச்சியான “பர்ஸ்பெக்டிவ்”-ன் அறிக்கை. உதாரணத்திற்கு, முதல் உலக யுத்தத்தின்போது ஏற்பட்ட பூதாகரமான உயிர் சேதத்தில், வெறும் 5 சதவீத பொதுமக்களே தங்கள் உயிரை பறிகொடுத்தனர். ஆனால் பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவெனில், இரண்டாம் உலக யுத்தத்தின்போது உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 48 சதவீதத்தை எட்டியது. அதே ஐநா ரேடியோ தொடர்ந்து சொல்கிறது, இன்றோ “போரால் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் பொதுமக்களே—90 சதவீதத்தினர்—இவர்களில் பெரும்பாலோர் பெண்கள், பிள்ளைகள், வயதானவர்களே.”
ஐநா பொதுச் செயலரின் பிரதிநிதியான ஓலோரா ஒட்டுன்னு, பிள்ளைகள் மற்றும் ஆயுதம் ஏந்திய சண்டைகளின் விசேஷ பிரதிநிதியாவார். அவர் சொல்கிறார், “கணக்கிடப்பட்ட வரையில், 1987 முதற்கொண்டு ஆயுதமேந்திய சண்டைகளில் சுமார் இருபது லட்சம் பிள்ளைகள் உயிரிழந்திருக்கின்றனர்.” அதாவது, கடந்த 12 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் போரினால் 450-க்கும் அதிகமான பிள்ளைகள் மரித்திருக்கின்றனர். இன்னும் சொல்ல வேண்டுமானால், இதே காலப்பகுதியில், 60 லட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் மோசமாக காயப்படுத்தப்பட்டுள்ளனர் அல்லது நிரந்தரமாக ஊனப்படுத்தப்பட்டுள்ளனர்.
போரால் பிள்ளைகள் கொல்லப்படும் இந்த அவலநிலையை எதிர்த்துப் போராட ஐநாவிற்கு இருக்கும் ஒரு வழி சமாதான பகுதிகளை முன்னேற்றுவிப்பதே என்று ஒட்டுன்னு கருத்து தெரிவிக்கிறார். போர் நடக்கும்போது குறிப்பிட்ட இடங்களை எதிரி தாக்கக்கூடாது என்ற சட்டம் உள்ளது, அப்படிப்பட்ட இடங்களே சமாதான பகுதிகள். “பிள்ளைகள் தங்களுடைய பெரும்பாலான நேரத்தை செலவழிக்கும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் போரின் வாசனையே வீசக்கூடாது.” இருப்பினும் உயிர் குடிக்கும் போர்களிலிருந்து சாதாரண குடிமக்களை காப்பாற்ற ஐநா செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வேலை, “சண்டைகள் அல்லது போர்கள் தொடங்குவதற்கு முன்பே தடுத்து நிறுத்துவது” என தொடர்கிறது ஐநா ரேடியோ. போர் ஏற்படுத்தும் அழிவுகளை அல்லது உயிர்ச் சேதங்களை முற்றிலும் நீக்க வேண்டுமானால் போரை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். எப்போதாவது இந்தக் கனவு நிஜமாகுமா?
மனித சரித்திரத்தில் நடந்த போர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போவதால், மனிதர்களால் உலகளாவிய சமாதானத்தை ஒருபோதும் கொண்டுவர முடியாது என்ற உண்மையை அநேகர் அறிந்திருக்கின்றனர். இருப்பினும், யெகோவா தேவன் இந்த உலகளாவிய சமாதானத்தை நிச்சயம் கொண்டுவருவார் என்று கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் வாக்களிக்கிறது. அது இவ்வாறு சொல்கிறது: “அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்.” (சங்கீதம் 46:9) இது எப்போது நடக்கும்? உலகளாவிய சமாதானத்தைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதி நிச்சயம் நடந்தேறும் என்று நீங்கள் ஏன் உறுதியாக இருக்கலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதிலை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், பக்கம் 5-க்குத் திருப்புங்கள்; அங்கு கொடுக்கப்பட்டுள்ள, உங்களுக்கு அருகாமையிலுள்ள விலாசத்தைக்கொண்டு, இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளர்களுக்கு கடிதம் எழுதுங்கள். அல்லது அருகிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். கட்டாயமோ காசோ பணமோ ஏதும் இல்லை, தயங்காதீர்கள்.
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
UN PHOTO 156450/J. Isaac