Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அப்பாக்கள்—தலைமறைவாவது ஏன்?

அப்பாக்கள்—தலைமறைவாவது ஏன்?

அப்பாக்கள்—தலைமறைவாவது ஏன்?

“அப்பாவும் அம்மாவும் அடித்துக்கொண்டதோ சண்டை போட்டதோ எனக்கு ஞாபகமில்லை. எனக்கு தெரிஞ்சதெல்லாம், அப்பா எங்ககூடத்தான் இருந்தார், திடீரென்று ஒரு நாள் அவரை காணோம். இன்னைக்கு வரைக்கும் என் அப்பா எங்கேயிருக்கார் என்று எனக்கு தெரியாது. அவர் எங்கிருந்தா எனக்கென்ன.”​—⁠பூரூஸ்.

“ஸ்கூல்ல நான் மட்டும்தான் அப்பா அம்மா இல்லாத அநாதை. எனக்கு வீடுன்னு ஒண்ணு இருந்ததில்லை. . . . எப்போதுமே நான் தனியா இருந்தேன். என் வயசுல உள்ளவங்க மாதிரி இல்லாம நான் மட்டும் வித்தியாசமாக இருக்கிறதா எப்போதும் நினைப்பேன்.”​—⁠பெட்ரீஷியா.

அப்பாக்கள் இல்லா குடும்பங்கள் உருவாக தொழிற்புரட்சிதான் காரணம். தொழிற்சாலை வேலைகள் ஆண்களைக் கவர்ந்திழுக்க, அவர்கள் வீட்டைவிட்டு வெகுதூரம் செல்ல வேண்டியதாயிற்று. இதனால் குடும்பத்தில் அப்பாவின் செல்வாக்கு குறைந்துவிட்டது; குழந்தைகளை வளர்ப்பதில் அம்மாக்களின் பங்கு கூடியது a ஆனாலும் பெரும்பாலான குடும்பங்களில் அப்பாக்கள் இருந்தார்கள். 1960-களின் மத்தியிலோ விவாகரத்து விகிதம் ஐக்கிய மாகாணங்களில் திடுதிப்பென அதிகரிக்கத் தொடங்கியது. விவாகரத்துக்கு எதிரான சமய, பொருளாதார, சமுதாய தடைகள் நொறுங்கிவிழ ஆரம்பித்தன. போதாக்குறைக்கு, சில ‘மேதாவிகள்’ விவாகரத்தினால் பிள்ளைகளுக்கு எந்தக் கெடுதியும் ஏற்படாது, அதனால் அவர்களுக்கு நன்மையே என்று அடித்துக் கூறினார்கள். இவர்கள் பேச்சைக் கேட்டு எக்கச்சக்கமான தம்பதிகள் விவாகரத்து செய்தனர். ஃப்ராங்க் எப். ஃபர்ஸ்டன்பர்க் ஜூனியரும் ஆன்ட்ரு ஜே. செர்லின் என்பவரும் எழுதிய பிரிந்த குடும்பங்கள்​—⁠பெற்றோர் விலகினால் பிள்ளைகளுக்கு என்ன ஆகும் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்கிறது: 1960 முதற்கொண்டு “பெல்ஜியம், பிரான்சு, ஸ்விட்ஸர்லாந்து ஆகிய இடங்களில் [விவாகரத்து] இரண்டு மடங்காகியிருக்கிறது. கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய இடங்களிலோ மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.”

பொதுவாக, விவாகரத்து ஆனபின் பிள்ளைகள் அம்மாக்களோடுதான் இருக்கிறார்கள். ஆனால் பிரிந்து சென்ற பெரும்பாலான அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளோடு தொடர்பு வைத்துக்கொள்ளவே விரும்புகிறார்கள். கோர்ட் விதிப்படி அம்மாவும் அப்பாவும் பிள்ளை பராமரிப்பை பங்குபோட்டால் (Joint custody) பிள்ளையோடு தொடர்புகொள்ள அப்பாவால் முடியும். இருந்தாலும், விவாகரத்து ஆன பிறகு பெரும்பாலான அப்பாக்கள் பிள்ளைகளை பார்க்க வராமலிருப்பது ஆச்சரியமாயிருக்கிறது. விவாகரத்து ஆன தன் அப்பாவை வாரந்தோறும் பார்க்கும் வாய்ப்பு 6 பிள்ளைகளில் ஒன்றுக்குத்தான் கிடைக்கிறது என்றும், பாதிபேர் ஒரு வருடம் முழுவதும் தங்களுடைய அப்பாவை பார்க்கவே இல்லை என்றும் ஒரு சுற்றாய்வு காட்டியது!

பங்குபோட்டு பராமரிப்பதில் தோல்வி

விவாகரத்து செய்துகொண்ட தம்பதிகள் குழந்தைகள் பராமரிப்பை பங்குபோட்டு செய்ய வேண்டுமானால் ஒத்துழைப்பு, நம்பிக்கை போன்ற பண்புகள் தேவை. இவை குதிரை கொம்பாயிற்றே! ஆராய்ச்சியாளர்கள் ஃபர்ஸ்டன்பர்க்கும், செர்லினும் இவ்வாறு சொல்கிறார்கள்: “தங்களுடைய முன்னாள் மனைவியோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பாத காரணத்தால்தான் அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளைப் போய் பார்ப்பதை நிறுத்திக்கொள்கிறார்கள். இதேபோல்தான் அநேக பெண்களும் தங்கள் முன்னாள் கணவனை அடியோடு வெறுக்கிறார்கள்.”

விவாகரத்து ஆனபின் அநேக அப்பாக்கள் தவறாமல் தங்கள் பிள்ளைகளை வந்து பார்க்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் இப்போது பிள்ளைகளின் தினசரி வாழ்க்கையில் அப்பா இல்லை. இதனால், பிள்ளைகளோடு இருக்கும் கொஞ்ச நேரத்தில் அப்பாவாக தன் கடமையை செய்வது கஷ்டம். ஆகவே, பெரும்பாலான அப்பாக்கள் கிடைக்கும் நேரத்தை எல்லாம் பிள்ளைகளோடு விளையாடுவதிலும், பொழுதுபோக்கிலும் ஷாப்பிங் செல்வதிலும் செலவழிக்கவே விரும்புகின்றனர். வார இறுதி நாட்களை தன் அப்பாவோடு செலவிடும் பதினான்கு வயது ஆரி இவ்வாறு சொல்கிறான்: “இதைச் செய்யணும் அதைச் செய்யணும் என்று எதுவும் இல்லை, ‘ஐந்தரை மணிக்கு வீட்டுக்கு வந்துடணும்’ என்று எதுவும் இல்லை. எந்தக் கண்காணிப்பும் இல்லை. எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அப்பா எனக்கு எப்போதும் ஏதாவது ‘கிஃப்ட்’ கொடுத்துக்கிட்டே இருப்பார்.”​—⁠ஜில் க்ரெமன்ஸ் எழுதிய பெற்றோர் விவாகரத்து செய்கையில் (ஆங்கிலம்).

அன்புள்ள அப்பா ‘தன் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளை எவ்வாறு கொடுப்பதென்பதை அறிந்திருக்க’ வேண்டும். (மத்தேயு 7:11) ஆனால் முக்கியமாய் தேவைப்படுவதோ வழிநடத்துதலும் சிட்சையும். இவற்றிற்கு பதிலாக பரிசுகளைக் கொடுத்து ஈடு செய்திட முடியாது. (நீதிமொழிகள் 3:12; 13:1) அப்பா அப்பாவாக இருப்பதற்கு பதில் விளையாட்டுத் தோழராக அல்லது வீட்டுக்கு வந்த விருந்தினர் போல் இருந்தால் அப்பா-பிள்ளை உறவு கெட்டு குட்டிச் சுவராகிவிடும். ஒரு ஆய்வின் முடிவு இதுவே: “விவாகரத்தினால் அப்பா-பிள்ளை உறவு நிரந்தரமாக முறிந்துபோகலாம்.”​—⁠ஜர்னல் ஆஃப் மேரேஜ் அண்ட் ஃபேமிலி, மே 1994.

சில ஆண்கள் ஜீவனாம்சம்கூட  b கொடுக்காமல் தங்கள் குடும்பங்களை அம்போவென விட்டுவிடுகின்றனர். காரணம், பிள்ளைகளின் வாழ்க்கையில் நமக்கு இடமில்லாமல் போயிற்றே என்ற வேதனை, ஆத்திரம். அல்லது பாசமே இல்லாத கல்நெஞ்சம் படைத்தவர்களாய் இருக்கலாம். (1 தீமோத்தேயு 5:8) “என் அப்பாவைப்பத்தி நல்லதா சொல்றத்துக்கு ஒண்ணுமில்லை” என்று மிகவும் வேதனையாக கூறுகிறான் ஒரு பருவ வயது பையன். “அவர் எதிலும் தலையிட்டுக்க மாட்டார், எங்களுக்கு எதுவும் செய்யமாட்டார். அவரை நினைத்தாலே எனக்கு வெறுப்புதான் வருது.”

திருமணம் செய்யாத பெற்றோர்

முறைகேடாக அநேக பிள்ளைகள் பிறப்பதால்தான் அப்பாக்கள் இல்லாத பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. “[ஐக்கிய மாகாணங்களில்] பிறக்கும் குழந்தைகளில் சுமார் மூன்றில் ஒரு பகுதி திருமணம் ஆகாத பெற்றோருக்கு பிறப்பவர்கள்” என்பதாக அப்பாக்கள் இல்லாத அமெரிக்கா என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது. 15-லிருந்து 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5,00,000 குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 78 சதவீதத்தினர் திருமணம் ஆகாதவர்கள். பருவ வயது கருத்தரிப்பு உலகெங்கிலும் காணப்படும் பிரச்சினை. கருத்தடை முறைகளை பயன்படுத்துவதைப் பற்றி எவ்வளவுதான் கல்வி புகட்டினாலும் அல்லது பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறினாலும் பருவ வயதினர் காதில் வாங்கிக்கொள்வதே இல்லை.

பிரையன் இ. ராபின்சன் எழுதிய டீன்ஏஜ் அப்பாக்கள் (ஆங்கிலம்) இவ்வாறு விளக்குகிறது: “1960-களில் திருமணமாகாமல் கர்ப்பமாயிருந்தால் குற்றவுணர்வினாலும் அவமானத்தாலும் வெளியே தலைக்காட்டவே முடியாது. இப்போதோ திருமணத்துக்கு முன் செக்ஸ், கர்ப்பமாதல் ஆகியவற்றை சமுதாயம் ‘பரந்த’ நோக்குடன் கருத ஆரம்பித்துவிட்டதால் வெட்கம், அவமானம் எல்லாவற்றையும் மூட்டைகட்டி வைத்துவிட்டார்கள். . . . இன்றைய இளைஞன் விளம்பரத்திலும் இசையிலும் திரைப்படத்திலும் டெலிவிஷனிலும் எப்போதும் பாலியல் நடவடிக்கையைத்தான் பார்க்கிறான்/கேட்கிறான். அமெரிக்காவில், செக்ஸ் மிகவும் கவர்ச்சியானது, கிளர்ச்சியூட்டுவது, இன்பமானது என்றெல்லாம் சொல்லுகிற மீடியா, உணர்ச்சிவயப்பட்டு மனம்போல் பாலுறவு கொள்வதால் நிஜ வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றி ஒன்றுமே சொல்வது கிடையாது.”

முறைகேடான பாலுறவினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றி அநேக இளைஞர்கள் அறியாமலே இருக்கின்றனர். எழுத்தாளர் ராபின்சன் காதில் விழுந்த சில வார்த்தைகள் இவை: “ ‘அவளைப் பார்த்தால் கர்ப்பமாகிவிடுவாள் என்று தோன்றவில்லை’; ‘நாங்கள் வாரம் ஒரு முறை மாத்திரமே உடலுறவு கொண்டோம்’; அல்லது ‘முதல் தடவையிலேயே கர்ப்பமாகிவிட முடியும் என்பது எனக்குத் தெரியாது.’ ” ஆனால் சில இளைஞரோ உடலுறவு கொண்டால் கர்ப்பமாகிவிட முடியும் என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். திருமணம் செய்யாத இளம் அப்பாக்கள் (ஆங்கிலம்) புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “நகர்புறங்களில் இருக்கும் அநேக பையன்களுக்கு செக்ஸ் என்பது சமுதாய அந்தஸ்துக்கு ஒரு முக்கியமான அடையாளமாக உள்ளது; பலரிடம் செக்ஸ் வைத்துக்கொள்வது அவர்களின் சாதனையாக கருதப்படுகிறது. இளம் ஆண்களின் கவனத்தைப் பெறுவதற்கு பல பெண்கள் செக்ஸை ஒரு பரிசு பொருளாக கருதுகின்றனர்.” நகர்புறங்களில், இன்னும் அப்பாவாகாத பையன்களை “பேடி” என்றுகூட கேலி செய்கிறார்கள்!

1993-⁠ல் கலிபோர்னியாவில் பள்ளி-வயது அம்மாக்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின் கண்டுபிடிப்புகள் இன்னும் அதிர்ச்சியைத் தருகிறது. இப்பெண்களில் மூன்றில் இரண்டு பங்கினர், டீன்ஏஜ் பாய் பிரண்ட்ஸால் கர்ப்பமாகவில்லை, ஆனால் 20 வயதிற்கு மேற்பட்ட ஆண்களால் கர்ப்பமாகி இருந்தார்கள்! சொல்லப்போனால், இவர்களை பலவந்தமாக கற்பழித்திருக்கிறார்கள் அல்லது சிதைத்திருக்கிறார்கள் என்பதையே சில ஆய்வுகள் காட்டுகின்றன. எல்லா இடங்களிலும் நடக்கும் இத்தகைய சம்பவங்கள் நவீன சமுதாயம் எத்தனை சீரழிந்துவிட்டது, எத்தனை கீழ்த்தரமாகிவிட்டது என்பதையே படம்பிடித்துக் காட்டுகிறது.​—2 தீமோத்தேயு 3:⁠13.

இளம் அப்பாக்கள் கைவிட்டுவிடுவது ஏன்

பருவ வயதிலேயே அப்பாவாகி விடுபவர்கள் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதே இல்லை. தன் காதலி கர்ப்பமானபோது ஒரு பையன் அவளிடம் “குட்-பை” சொல்லி உறவை முறித்துக்கொண்டான். ஆனால் “பெரும்பாலான இளம் அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளோடு நெருக்கமான உறவை வைத்துக்கொள்ள மிகவும் ஆசைப்படுவதாக” குடும்ப ஆலோசகர் என்ற ஆங்கில பத்திரிகையில் ஒரு கட்டுரை கூறுகிறது. திருமணம் செய்யாத இளம் அப்பாக்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் 70 சதவீதத்தினர் தங்கள் பிள்ளையை வாரத்துக்கு ஒரு முறை சென்று பார்த்தார்கள். “ஆனால் பிள்ளைகளுக்கு வயதாக ஆக அவர்களைச் சென்று பார்ப்பது குறைந்துகொண்டே வந்தது” என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.

இப்படி நடப்பதற்கு காரணம் என்ன என்பதை 17 வயது அப்பா இவ்வாறு கூறுகிறார்: “இதிலே இவ்வளவு கஷ்டம் இருக்குன்னு தெரிஞ்சிருந்தா அத செஞ்சிருக்கவே மாட்டேன்.” சில இளைஞர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான முதிர்ச்சியும் இல்லை, ஒரு பெற்றோராக செய்ய வேண்டியதை செய்வதற்கு அனுபவமும் இல்லை. வேலை செய்து பிழைத்துக் கொள்வதற்கு தேவையான கல்வியோ அல்லது வேலை திறமைகளோகூட அநேகருக்கு இல்லை. பிள்ளைகளை வளர்க்க முடியாமல் அவமானப்படுவதைவிட அவர்களை கைவிடுவதே மேல் என்று இளம் அப்பாக்கள் பலர் நினைக்கிறார்கள். “என்னோட வாழ்க்கையில் சிக்கல்களும் பிரச்சினைகளும்தான் அதிகம்” என்று ஒரு இளம் அப்பா ஒப்புக்கொள்கிறார். “என்னால் என்னையே கவனிச்சிக்க முடியாது; இந்த லட்சணத்தில் என்னுடைய மகனையும் நான் கவனிச்சிக்க வேண்டுமென்றால் எப்படி” என்று மற்றொருவர் புலம்புகிறார்.

புளிப்பான பழம்

“பெற்றோர் திராட்சக்காய்களைத் தின்றார்கள்; பிள்ளைகளின் வாய் புளித்தது” என்ற ஒரு பழமொழி பைபிள் காலங்களில் யூதர்கள் மத்தியில் இருந்தது. (எசேக்கியேல் 18:2, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) இது இப்படி இருக்கவேண்டியதில்லை, கடந்தகாலத்தில் செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கடவுள் யூதர்களிடம் சொன்னார். (எசேக்கியேல் 18:3) ஆனால் இன்று பெற்றோர் சாப்பிட்ட “திராட்சக்காய்களினால்” லட்சக்கணக்கான பிள்ளைகளின் பற்கள் கூசிக்கொண்டிருக்கின்றன​—⁠பெற்றோர் முதிர்ச்சியில்லாமலும் பொறுப்பில்லாமலும் நடந்து, மணவாழ்க்கையில் கண்ட தோல்விக்கு பிள்ளைகள் இப்போது அனுபவிக்கிறார்கள். அப்பா இல்லாமல் வளரும் பிள்ளைகள் உடல் ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமென ஆய்வு காட்டுகிறது. (பக்கம் 7-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.) அதிக வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், அப்பா இல்லாத இந்த நிலைமை தலைமுறை தலைமுறையாக தொடர்ந்துவந்து வேதனையும் துயரமும் மாறி மாறிவரும் ஒரு சுழற்சியாக அமைந்துவிடுகிறது.

அப்படியென்றால், அப்பா இல்லாத குடும்பம் உருப்படவே உருப்படாது என்பது அர்த்தமாகுமா? நிச்சயமாக இல்லை. மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், அப்பா இல்லா குடும்பங்கள் என்ற இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். எப்படி என்பதை எமது அடுத்த கட்டுரையை வாசித்தால் தெரிந்துவிடும்.

[அடிக்குறிப்புகள்]

a தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்பு, பிள்ளைகளை வளர்ப்பது பற்றி ஐக்கிய மாகாணங்களில் எழுதப்பட்ட கையேடுகள் பொதுவாக அம்மாக்களை அல்ல, அப்பாக்களை முகவரியிட்டே எழுதப்பட்டிருந்தன என்பது ஒரு சுவாரசியமான விஷயம்.

b ஐக்கிய மாகாணங்களில் “ஜீவனாம்சம் பெற தகுதியுள்ள பிள்ளைகளில் சுமார் 40 சதவீதத்தினருக்கு அதைப் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்ற உத்தரவு கையில் இல்லை. அப்படி அதை வைத்திருப்பவர்களிலும்கூட நான்கில் ஒரு பகுதியினருக்கு எதுவுமே கிடைப்பதில்லை. மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவான பிள்ளைகளே தங்களுக்கு வரவேண்டிய முழு தொகையையும் பெற்றுக்கொள்கின்றனர்” என்பதாக ஆராய்ச்சியாளர்கள் சாரா மெக்லென்ஹனும் கேரி சாண்டபர் என்பவரும் கூறுகிறார்கள்.

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

அப்பா இல்லாமல் வளர்வதால் வரும் ஆபத்துகள்

அப்பா இல்லாமல் வளரும் பிள்ளைகளுக்கு சில பேராபத்துகள் இருக்கின்றன. பின்வரும் தகவலை வாசித்தால் சிலருக்கு மிகவும் வேதனையாக இருக்கும், என்றாலும் ஆபத்துகளை அறிந்திருப்பதுதான் ஏற்படக்கூடிய இன்னல்களை தவிர்ப்பதற்கு அல்லது குறைப்பதற்கு முதல் படியாக இருக்கும். புள்ளியியல் ஆய்வுகள் பொதுவாக நிலவும் நிலையையே சுட்டிக்காட்டுகின்றன, தனிப்பட்டவர்களுக்கு பொருந்தாது என்பதை நினைவில் வைக்கவும். அப்பா இல்லாமலேயே பல பிள்ளைகள் இத்தகைய பிரச்சினைகளின்றி வளர்ந்துவருகிறார்கள். பெற்றோரின் சரியான வளர்ப்பும் பைபிள் நியமங்களைப் பின்பற்றுவதும் இன்னல்களை பெருமளவு குறைக்க உதவும் என்பதையே எமது கடைசி கட்டுரையில் காண்போம். அப்பா இல்லாத பிள்ளை எதிர்ப்படும் ஆபத்துகள் சிலவற்றை சிந்தித்துப் பாருங்கள்.

பாலியல் பலாத்காரம் செய்யப்படும் ஆபத்து அதிகம்

அப்பா இல்லாவிட்டால் பிள்ளைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் ஆபத்து அதிகம் என்பதை ஆய்வு தெளிவாக காட்டுகிறது. பலாத்காரம் செய்யப்பட்ட 52,000 பிள்ளைகளில் “72 சதவிகிதம் அப்பா அம்மா இல்லாத அநாதைகள் அல்லது ஒரேவொரு பெற்றோரோடு வசிப்பவர்கள்” என்பதை ஒரு ஆய்வு காட்டியது. அப்பாக்கள் இல்லாத அமெரிக்கா என்ற புத்தகம் இவ்வாறு உறுதியாக கூறுகிறது: “அப்பாக்கள் இல்லா குடும்பங்களின் அதிகரிப்பே நம் சமுதாயத்தில் பிள்ளைகள் அதிகளவில் சீரழிக்கப்படுவதற்கு முக்கிய காரணம். அதோடு மாற்றான் தந்தைகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆண் துணை இல்லாத வீடுகளுக்கு முன்பின் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நண்பர்கள் என ஆண்கள் அடிக்கடி வந்துபோவதாலும் பிள்ளைகள் சிதைக்கப்படுகிறார்கள்.”

பிஞ்சிலேயே பழுத்தால் ஆபத்து அதிகம்

ஒற்றை பெற்றோர் குடும்பத்தில் பெற்றோர் மேற்பார்வை அதிகம் இருப்பதில்லை. அதனால் இளம் பிள்ளைகள் முறைதவறி நடந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம். பெற்றோர் சரியானதை சொல்லிக் கொடுக்கத் தவறுவதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு முறைதவறி “கர்ப்பமான பெண்களில் பாதிக்கும் மேல் அப்பா இல்லா குடும்பங்களில் வாழ்பவர்கள்” என்று ஐ.மா. சுகாதார மற்றும் மனித சேவை இலாக்கா கூறுகிறது.

வறுமை

தென் ஆப்பிரிக்காவில் கருப்பு நிற டீன்ஏஜ் பெண்கள் மத்தியில் சர்வே நடத்தியபோது, திருமணம் ஆகாதோருக்கு பிறந்த பிள்ளைகள் வறுமையில் வாடுகிற உண்மை தெரியவந்தது. “இப்படி பள்ளிப் பருவத்தில் கர்ப்பமானவர்கள் பாதிக்கு மேல் மறுபடியும் படிப்பை தொடரவேயில்லை.” பல பெண்கள் முறைதவறி பிள்ளையை பெற்றெடுப்பதோடு, தங்கள் உடலை விற்று வயிற்றைக் கழுவ வேண்டிய அல்லது போதைப் பொருள் கடத்தி பிழைக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று ஆய்வு நடத்தினவர்கள் கூறுகின்றனர். மேற்கத்திய நாடுகளிலும் இதே நிலைதான். ஐக்கிய மாகாணங்களில் “[1995-⁠ல்] அம்மாவும் அப்பாவும் இருக்கும் குடும்பங்களில்கூட 10 சதவீதம் வறுமையில் இருந்தனர். ஆனால், அம்மா மட்டுமே இருக்கும் குடும்பங்களில் 50 சதவீதம் வறுமையில் இருந்தனர்.”​—⁠அமெரிக்க பிள்ளைகள்; நாட்டின் சுகநலத்திற்கு முக்கிய அறிகுறிகள் 1997 (ஆங்கிலம்).

புறக்கணிப்பு

வேலைசெய்து பிழைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் ஒருசில ஒற்றைப் பெற்றோரால் பொறுப்புகளை சுமக்க முடிவதில்லை. அவர்களால் போதிய அளவு நேரத்தை தங்களுடைய பிள்ளைகளோடு செலவழிக்க முடிவதில்லை. விவாகரத்து செய்துகொண்ட ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “பகல் நேரத்தில் வேலை செய்தேன், இரவு நேரத்தில் ஸ்கூலுக்கு போனேன்​—⁠படாத பாடுபட்டேன். என்னுடைய பிள்ளைகளை நான் கவனிச்சுக்கவே இல்லை.”

புண்ணான இதயம்

விவாகரத்து ஆனபின் பிள்ளைகள் சீக்கிரமாகவே சகஜ நிலைக்குத் திரும்பிவிடுகின்றனர் என்பது ஒருசில வல்லுநர்களின் கருத்து. ஆனால் இதற்கு நேர் எதிர்மாறாக, விவாகரத்து ஏற்படும் மனப்புண் நீண்ட காலம் நீடிக்கும் என்பதை டாக்டர் ஜுடித் வாலர்ஸ்டீன் போன்ற ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். “பத்தொன்பது முதல் இருபத்தொன்பது வயதுக்கு உட்பட்ட ஆண் பெண்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவர்கள், பெற்றோர் விவாகரத்து செய்துகொண்ட பிறகு பத்து ஆண்டுகளுக்கு வாழ்க்கையில் எந்தக் குறிக்கோளும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். எந்த ஒரு இலக்குமின்றி . . . விரக்தியாக வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.” (ஜுடித் வாலர்ஸ்டீன் மற்றும் சாண்ட்ரா ப்ளாக்ஸிலி எழுதிய இரண்டாவது வாய்ப்புகள் [ஆங்கிலம்]) விவாகரத்தான குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் சுயமரியாதை குன்றியவர்களாய், மனச்சோர்வோடு இருப்பார்கள். எதையும் எதிர்க்கும் அல்லது எதற்கும் எரிச்சல்படும் குணம் இருக்கும்.

ஒற்றை பெற்றோர் குடும்பம் (ஆங்கிலம்) புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “பார்த்து பின்பற்றுவதற்கு ஒரு அப்பா இல்லாமல் வளரும் பையன்களுக்கு தங்கள் ஆண்மையைக் குறித்து பாதுகாப்பற்ற உணர்வும், சுய மரியாதைக் குறைவும் இருக்கும். பின்னால் தாம்பத்திய உறவுகளில் பிரச்சினைகளை எதிர்ப்படுவார்கள் என்பதை எண்ணற்ற ஆய்வுகள் காட்டுகின்றன. அப்பா இல்லாமல் வளரும் பெண் பிள்ளைகளுக்கு வரும் பிரச்சினை பொதுவாக வளர்ந்த பிறகுதான் தலைதூக்குகிறது. அப்போது இவர்களுக்கு ஆண்களோடு/பெண்களோடு உறவுகளை வளர்த்துக்கொள்வது கஷ்டமாக ஆகலாம்.”