Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

சிறியதா? நான் ஒரு நரம்பியல் அறுவை மருத்துவன். “உங்கள் மூளை​—⁠சிக்கலான அற்புதம்” (மே 8, 1999) என்ற கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த படத்தில் ஒரு தவறு இருப்பதை கவனித்தேன். மூளையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிட்யூட்டரி சுரப்பியை புள்ளிக்கோட்டினால் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். ஆனால் அந்த கோடு சிறியதாக இருப்பதால் ஆப்டிக் கயாஸ்மாவை சுட்டிக்காட்டுவது போன்று எனக்கு தோன்றுகிறது.

எ. டபிள்யூ., ஜப்பான்

கழுகுப்பார்வையுடைய நம் வாசகர் சொல்வது சரியே, அந்த தவறுக்காக வருந்துகிறோம்.​—⁠ED.

சூறாவளி மிட்ச் “சூறையாடும் சூறாவளியில் இருந்து மீட்கப்படுதல்!” (ஜூன் 8, 1999) என்ற உணர்ச்சி பொங்கும் கட்டுரைக்கு மிக்க நன்றி. துன்பத்திலும் வருத்தத்திலும் நம் சகோதரர்களை ஆழ்த்திவிடும் பேரழிவுகளைப் பற்றிய செய்திகளை ஈ-மெயில் மூலமாக நான் அடிக்கடி பெறுவதுண்டு; இருப்பினும் அவை எந்தளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது. ஆனால் இது பற்றிய விஷயங்கள் அந்த கட்டுரையில் அளிக்கப்பட்ட விதம் அதிக உற்சாகத்தைத் தந்து என்னை பலப்படுத்தியது. நாம் வாழ்ந்துகொண்டிருப்பது கொடிய காலம் என்பதை அந்த கட்டுரை சொல்லாமல் சொல்லி நினைப்பூட்டியது.

சி. பி., ஐக்கிய மாகாணங்கள்

இந்தக் கொடிய சம்பவத்தில் அநேகர் தங்களுடைய எல்லா உடைமைகளையும் பறிகொடுத்திருப்பர் என்பதை என்னால் உணரமுடிகிறது. இருப்பினும் நம் உலகளாவிய சகோதரத்துவம், ஆபத்துகளின் மத்தியிலும் செயலில் இறங்கியதை வாசித்து மெய்சிலிர்த்துப் போனேன். சூறாவளிக்கு ஈடுகொடுக்க முடியாமல் தரையில் படுத்துவிட்ட தன் வீட்டிற்கு முன்பு நின்றுகொண்டிருந்த அந்த சகோதரரின் படம் என் சிந்தனைக்கு கொஞ்சம் வேலை கொடுத்தது. சில விஷயங்களைப் பற்றி குறைகூறுவதற்கு எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

ஆர். கே. என்., பிரேஸில்

க்வாரானா “காபியா, டீயா, அல்லது க்வாரானாவா?” (ஜூன் 8, 1999) என்ற கட்டுரை எனக்கு ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறது. முழுநேர ஊழியக்காரனாக அமேசான் ஆற்று கரையோரங்களில் சேவை செய்யும் நான், க்வாரானா பயிர்செய்யப்படும் இடங்களிலும் பிரசங்கிப்பதுண்டு. அது தயாரிக்கப்படுவதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகவே அடுத்தமுறை யாராவது க்வாரானா சாப்பிடுகிறீர்களா என்று கேட்டால்போதும், ‘வேண்டாம்’ என்ற வார்த்தையையே அப்போதைக்கு மறந்துவிடுவேன்.

ஜே. ஆர். எஸ். எம்., பிரேஸில்

அண்டம் “நமது அண்டம் நோக்கத்தோடு படைக்கப்பட்டதா?” (ஜூன் 22, 1999) என்ற தொடர்கட்டுரைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் ஒரு பொழுதுபோக்கு வானியலாளனாக, இந்த கட்டுரைகளை வாசித்து மகிழ்ந்தேன். ஒவ்வொரு இரவும் நடக்கும் இந்த வியக்கவைக்கும் அற்புதங்கள், நம் சிருஷ்டிகரின் அளவுகடந்த வல்லமையையும், அறிவையும், அன்பையும் பற்றி ஆழ்ந்து தியானிக்க உதவுகின்றன.

வி. வி., ஸ்பெய்ன்

அந்த கட்டுரைகள், அறிவியலில் ஏ பி சி டி தெரியாத ஆட்கள்கூட எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் இருந்தன. யெகோவாவை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள எனக்கு மற்றொரு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி. 58 வருடகால இல்லற வாழ்க்கைக்கு பிறகு, சமீபத்தில் என் மனைவி கண் மூடிவிட்டாள். தக்க சமயத்தில் சிருஷ்டிகரைப் பற்றிய அற்புதமான விஷயங்களை புரிந்துகொள்ள முடிந்தது.

எஃப். டபிள்யூ., ஐக்கிய மாகாணங்கள்

பெண் கட்டுமான பணியாட்கள் “மகளிரின் மாபெரும் பங்கு” (ஜூன் 22, 1999) என்ற கட்டுரைக்கு மிக்க நன்றி. சுமார் ஒரு வருடத்திற்கு முன், நான் கலிபோர்னியாவிலிருந்து தாய்லாந்திற்கு வீடுமாறி வந்தேன். சமீபத்தில் ஒரு சொந்த ராஜ்ய மன்றத்தை கட்டும் பாக்கியம் பெற்றோம். ஜிம்பாப்வியிலுள்ள சகோதரிகளைப் போலவே, சகோதரிகளாக நாங்களும் சிமெண்ட் கலப்பது, ஸ்டீல் கம்பிகளை கட்டுவது, டைல்ஸ் போடுவது மற்றும் அதுபோன்ற மற்ற அநேக வேலைகளை செய்ய உதவினோம். யெகோவாவின் உதவியுடன் அந்த வேலையை மூன்றே மாதங்களில் முடிக்க முடிந்தது. உலகளாவிய கட்டுமான வேலையில், மகளிரின் பங்கை மதித்து ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

ஆர். ஜி., தாய்லாந்து

விரைவாக கட்டப்படும் ராஜ்ய மன்ற திட்டத்தில் உதவி செய்யும் பாக்கியம் எனக்கும் என் பெற்றோருக்கும் முதல் தடவையாக கிடைத்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள் மற்றும் ராஜ்ய மன்றங்களின் கட்டுமான வேலையில் உலகெங்கும் பெண்கள் ஈடுபடுவதைப் பார்த்து எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா! ஜிம்பாப்வியில் நடந்தது போன்ற கட்டுமான திட்டங்களெல்லாம் புதிய உலகத்தில் நாம் செய்யப்போகும் வேலைக்கு நம்மை தயார்படுத்துகிறது. இப்போதே நாம் இப்படிப்பட்ட வேலைகளை அனுபவித்து மகிழ்கிறோம் என்றால், அப்போது எல்லோருமே பரிபூரணர்களாக ஒற்றுமையாக யெகோவாவை சேவிக்கும்போது எப்படி இருக்கும்!

எஸ். டபிள்யூ. எஸ்., பிரேஸில்