ஏழை பணக்காரன் பிளவு விரிவாகிறது
ஏழை பணக்காரன் பிளவு விரிவாகிறது
“உலகளாவிய வறுமையைக் குறைப்பதற்காக கடந்த ஐம்பது ஆண்டுகளில் செய்த முன்னேற்றம் அதற்கு முந்திய ஐந்து நூற்றாண்டுகளில் செய்ததைவிட அதிகம்” என்று UNDP டுடே என்ற ஐக்கிய நாட்டுகள் முன்னேற்ற திட்டத்தின் ஒரு பிரசுரம் சொல்லியிருக்கிறது. “1960 முதல், முன்னேற்ற நாடுகள் சிறுபிள்ளை மரண வீதங்களை பாதியளவுக்குக் குறைத்திருக்கின்றன. உணவுப் பற்றாக்குறையை மூன்றில் ஒரு பாகமாக குறைத்திருக்கின்றன, பள்ளியில் சேர்க்கும் வீதங்களை நான்கில் ஒரு பங்காக உயர்த்தியிருக்கின்றன” என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால், இந்த முன்னேற்றத்தின் மத்தியிலும், உலகளாவிய வறுமை “தொடர்ந்து பரவலாக உள்ளது” என்று அதே பிரசுரம் குறிப்பிடுகிறது.
சமுதாயங்களுக்குள்ளும் இடையிலும் ஏற்ற தாழ்வு அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது கவலைக்குரிய விஷயம். ஐநா உலக உணவு திட்டத்தின் செயலாக்க இயக்குநர் காத்தெரீன் பெர்ட்டினி இவ்வாறு சொல்கிறார்: “ஓர் ஆண்டுக்கு முன்னிருந்த நிலைமையோடு ஒப்பிடும்போது உலகத்தில் மேலும் அதிகமான ஜனங்கள், ஊட்டச்சத்து குறைவான உணவினாலும் பசியினாலும் வாடுகிறார்கள்.” இன்று பின்தங்கிய நாடுகளில் கிட்டத்தட்ட 84 கோடி ஜனங்கள் தீராதப் பசியுடன் வாழ்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. 100 கோடிக்கும் மேலான ஜனங்களுக்கு குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான பணத்தில், ஏறக்குறைய 150 கோடி ஜனங்கள் காலம் கடத்துகிறார்கள். ஐநா-வில், மனித உரிமைக்கான பொறுப்பாண்மைக் குழுவின் ஆணையராகிய மேரி ராபின்ஸன் இவ்வாறு எச்சரிக்கிறார்: “வளரும் நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகள் என்ற வித்தியாசம் போய் மிதமீறி வளர்ச்சியடைந்த நாடுகள் ஒருபோதும் வளர முடியாத நாடுகள் என்ற நிலையை எட்டும் ஆபத்தில் இருக்கிறோம்.”
இன்றைய உலகில் 600 கோடி ஜனங்கள் இருக்கின்றனர்; பணக்காரருக்கும் ஏழைகளுக்கும் இடைப்பட்ட இடைவெளியை குறுக்குவதற்கு இந்த உலக சமுதாயத்திற்கு என்ன செலவாகும்? ஒருவர் நினைப்பதற்கும் குறைவான செலவேயாகும். உலகமெங்கும் சுகாதார ஏற்பாடுகள் செய்வதற்கும், சுத்தமான தண்ணீர் அளிப்பதற்கும் கூடுதலாக (ஓர் ஆளுக்கு 1.50 டாலர் வீதம்) 900 கோடி டாலர் ஆண்டுதோறும் தேவைப்படும் என்றும், பூமியிலுள்ள எல்லாருக்கும் அடிப்படையான உடல்நல வசதிக்கும் சத்துள்ள உணவை அளிப்பதற்கும் (ஓர் ஆளுக்கு ஏறக்குறைய 2 டாலர் வீதம்) கூடுதலாக 1,300 கோடி டாலர் ஆண்டுதோறும் தேவைப்படும் என்றும் ஐநா கணக்கிடுகிறது. இது பெரும் தொகைகளாக இருந்தாலும், மற்ற விஷயங்களுக்காக இந்த உலகம் செலவிடுகிறவற்றோடு ஒப்பிடும்போது இந்தத் தொகை அற்பமாகவே இருக்கின்றது. உதாரணமாக, சமீப ஆண்டில் விளம்பரம் செய்வதற்காக 43,500 கோடி டாலர் செலவு செய்யப்பட்டது (ஒரு நபருக்கு 70 டாலருக்கும் அதிகம்); இராணுவ விவகாரங்களுக்காக (ஒருவருக்கு 130 டாலர் வீதம்) 78,000 கோடி டாலரை இந்த உலகம் செலவிட்டது. இவ்வுலகத்தில் செல்வந்தருக்கும் ஏழைக்கும் இடையிலுள்ள பிளவை குறுக்குவதற்கு, போதிய பணவசதி இல்லாதது பிரச்சினை அல்ல; ஆனால் அதை எதற்கு செலவழிப்பது என்பதை தீர்மானிப்பதிலேயே பிரச்சினை.