Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

அதிகாரத்தை மதிக்க கற்றுக்கொடுத்தல்

“பெற்றோரின் அதிகாரத்துக்கு பிள்ளைகள் மரியாதை கொடுக்க வேண்டும் என்று இன்றைய பெற்றோர் அதிகம் வற்புறுத்துவதில்லை, ஆகவே நம்முடைய பிள்ளைகளின் சுய மரியாதை குறைவதற்கு நாமே காரணமாக இருக்கக்கூடும்” என்பதாக த டோரன்டோ ஸ்டார்-⁠ல் ஒரு அறிக்கை கூறுகிறது. “எந்த அளவிற்கு எதிர்பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வதும் குடும்பத்தில் பாதுகாப்பாக உணருவதும் பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகள்; ஆகவே தங்கள் வரம்புகளை பிள்ளைகள் அறிந்திருக்க வேண்டும். இந்தத் தேவை பூர்த்தி செய்யப்பட்டால் அவர்களுடைய சுய மரியாதை உயர்கிறது” என்பதாக நடத்தை நிபுணர் ரோனால்ட் மாரிஷ் குறிப்பிடுகிறார். “எந்தக் கட்டுப்பாடும் பொறுப்பும் இல்லாமல் வளரும் பிள்ளைகளுக்குத்தான் பாதுகாப்பும் நம்பிக்கையும் குறைவுபடுகிறது.” அவர் மேலும் இவ்வாறு சொல்கிறார்: “எப்போது படுக்கச் செல்வது என்பதை 6 வயது சிறுவன் தானாக தீர்மானிக்கிறான். 3 வயது பிள்ளைகளிடம் அம்மாக்கள் அப்படி செய்யாதே, இப்படி செய்யாதே, அம்மாவுக்கு வருத்தமாக இருக்கும் என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.” குடும்பத்தில் சில சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிய பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும். வயதாகும்போது இயல்பாகவே அவர்களுடைய ஒத்துழைப்பு குறைந்துவிடுகிறது என்று சொல்வதெல்லாம் தவறு என்று மாரிஷ் கூறுகிறார். “கல்வி அறிவில் பிள்ளைகள் ஒவ்வொரு வருடமும் வளரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அப்படியென்றால் அவர்களுடைய நடத்தையும் ஒவ்வொரு வருடமும் முன்னேற வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கக்கூடாது?” என்று அவர் கேட்கிறார். “பெற்றோராக உங்களுக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, பிள்ளையை அவனுடைய விளையாட்டுச் சாமானை எடுத்துவைக்கும்படி செய்ய முடியாவிட்டால், பருவ வயதில் நீங்கள் சொல்லும் நேரத்தில் அவன் வீட்டில் இருப்பான் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது.”

பசியைத் தூண்ட இசை

கேஸட்டை போட்டால் பண்ணையில் வளரும் பிராணிகளை சாப்பிட வைக்கலாம் என்று கனடா நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதாக நியூ சயன்டிஸ்ட் அறிவிப்பு செய்கிறது. “குஞ்சுகள் சாப்பிடுவதற்கு எதையாவது தாய்க்கோழி கண்டுபிடித்துவிட்டால் செய்யும் சப்தத்தை நாங்கள் பதிவு செய்துகொண்டோம்” என்று பிரின்ஸ் எட்வர்ட் ஐலண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லூயிஸ் பேட் கூறுகிறார். உணவுக்கு பக்கத்தில் வைத்திருந்த ஒலிப்பெருக்கிகளில் பதிவுசெய்து வைத்திருந்த சப்தங்களை கேட்டபோது தாய்க்கோழி அருகில் இல்லாவிட்டாலும் குஞ்சுகள் சாப்பிட்டன. ஆனால் அந்த சப்தம் அப்படியே மாறாமல் சரியானதாக இருக்க வேண்டும். பேய்ட் இவ்வாறு கூறுகிறார்: “குஞ்சுகளை பொரித்தபின் தாய்க்கோழி செய்த சப்தம், சாப்பிடுவதற்காக அழைக்கும் சப்தம் போலத்தான் என் காதுகளுக்கு இருந்தது. ஆனால் அதை போட்டபோது குஞ்சுகள் அசையாமல் இருந்தன.” இந்தப் பிராணிகள் வேகமாக வளர வேண்டும் என்பதே விஞ்ஞானிகளின் குறிக்கோள். ஆரம்பப் பரிசோதனையில், குஞ்சுகள் முதல் மூன்று வாரங்களில் சாதாரணமாக வளருவதைவிட 20 சதவீதம் வேகமாக வளர்ந்தன. இதைப் போலவே வான்கோழி குஞ்சுகளையும் பன்றிகுட்டிகளையும் அதிகமாக சாப்பிடும்படி செய்ய முடியும்.

அழுத்தத்தின்கீழ்

“வீட்டிலும் வேலைசெய்து வெளியிலும் போய் வேலைசெய்து இரண்டையும் சமாளிக்க முயற்சி செய்கையில், சராசரியிலிருந்து உச்ச அளவு வரை அழுத்தத்தை அனுபவிப்பதாக கனடா நாட்டவரில் ஏறக்குறைய பாதிபேர் புகார்” செய்வதாக வான்கோவர் சன் செய்தித்தாள் அறிவிப்பு செய்கிறது. “பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்ததைவிட இது இரண்டு மடங்கு அதிகம்.” ஏன் இந்த அதிகரிப்பு? கனடாவில் வேலைக்குச் செல்பவர்களில், குடும்ப அங்கத்தினர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய நிலையிலிருப்பவர்களின் சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதைத்தான் கனடாவின் மாநாட்டு மன்றக்குழு வெளியிட்ட ஒரு சுற்றாய்வு காண்பித்தது. நிறைய பேர் வயதானபின் பிள்ளைகளை பெற்றுக்கொள்கிறார்கள், ஆகவே இவர்கள் “பிள்ளைகளையும் பெற்றோரையும் ஒரே சமயத்தில் கவனித்துக்கொள்ள வேண்டிய” இக்கட்டான நிலை ஏற்படுகிறது. சுற்றாய்வில் பங்குகொண்டவர்களில் 84 சதவீதத்தினர் தங்கள் வேலை திருப்தியளிப்பதாக கூறியிருக்கிறார்கள்; ஆனால் வீட்டு வேலையையும் வெளி வேலையையும் சமாளிப்பது கடினமாகும்போது “தூங்கும் நேரம் உட்பட, தங்களுக்கென்று ஒதுக்கப்படும் நேரத்தைத்தான் முதலில் குறைத்துக்கொள்கிறார்கள்” என்று அறிக்கை கூறுகிறது. மாநாட்டு மன்றக்குழு இவ்வாறு குறிப்பிடுகிறது: “இதனால் அழுத்தம் அதிகமாகிறது, உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.”

ஆபத்தான மருந்து சீட்டு

“கடந்த வருடம் ஜெர்மனியில் சாலை விபத்துக்களில் இறந்தவர்களைவிட மருந்துகளினால் இறந்தவர்கள்தான் அதிகம்” என ஸ்டட்கார்ட்ட நாக்ரிக்டன் என்ற செய்தித்தாள் அறிவித்தது. 1998-⁠ல் டாக்டர் எழுதிக் கொடுத்த தவறான மருந்தினால் சுமார் 25,000 பேர் இறந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதே காலப்பகுதியில் சாலை விபத்துக்களில் இறந்தவர்களைவிட இது மூன்று மடங்கு அதிகம். சுய-மருத்துவம் எல்லாம் இரண்டாவதாகத்தான் வருகிறது. மருந்துகளைப் பற்றியும் அவற்றின் பாதிப்புகளைப் பற்றியும் மருத்துவர்கள் விஷயமறியாதவர்களாயும் பயிற்சி பெறாதவர்களாயும் இருப்பதுதான் முக்கிய பிரச்சினை. ஒரு மதிப்பீட்டின்படி, “ஆராய்ச்சியையும் பயிற்சியையும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டிருந்தால் ஜெர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் நிகழும் 10,000 சாவுகளையும் 2,50,000 பேருக்கு மருந்துகளால் வரும் கவலைக்கிடமான பக்க விளைவுகளையும் தவிர்க்க முடியும்” என்கிறார் மருந்தியல் நிபுணர் இன்கால்ஃப் காஸ்கோர்பி.

அதே போலத்தான், பிரான்ஸில் சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட 1,50,000 மருந்து சீட்டுகளில் சுமார் 10,700 சீட்டுகளில் தவறான அல்லது வேலை செய்யாத மருந்துகள் எழுதப்பட்டிருந்தன என பிரெஞ்சு பத்திரிகை சயன்ஸ் அ அவனிர் அறிக்கை செய்கிறது. ஏறக்குறைய 50-⁠ல் ஒன்று மிகவும் ஆபத்தான மருந்தாக இருந்தது. இவை எழுதிக் கொடுக்கப்பட்ட மற்ற மருந்துகளோடு சேர்த்து சாப்பிடும்போது ரியாக்‍ஷனாவதால் ஆபத்து இருந்தது. மற்ற ஆபத்துக்களும் இருந்தன. மருந்துகளால் ஏற்படும் ரியாக்‍ஷனின் காரணமாக பிரான்ஸில் வயதான ஆட்கள் ஒவ்வொரு வருடமும் பத்து லட்சம் நாட்களை ஆஸ்பத்திரியில் செலவழிக்கிறார்கள்.