மத சுதந்திரம் ரஷ்யருக்கு பொக்கிஷம்!
மத சுதந்திரம் ரஷ்யருக்கு பொக்கிஷம்!
சோவியத் யூனியன் சட்டமன்றம் 1991-ல் கலைக்கப்பட்டது. அது முதல் அங்கு வாழ்ந்துவரும் மக்களுக்கு கடவுளை வணங்க அதிக சுதந்திரம் கிடைத்திருக்கிறது. பிற தேசங்களுக்கு குடிபெயர்ந்து சென்ற பிறரும்கூட இந்த மத சுதந்திரத்தை பொக்கிஷமாக கருதுகின்றனர்.
கடவுளை வணங்குவதற்கு வெளிப்படையாக கூடிவர கிடைத்திருக்கும் இந்தச் சுதந்திரம் முன்னாள் சோவியத் யூனியனில் வாழ்ந்துவரும் அநேகருடைய நெடுநாளைய கனவு. பல ஆண்டுகள் காத்திருந்த பெற்ற ஒரு பொக்கிஷம்.
1917-ல் ஏற்பட்ட போல்ஷ்விக் ரஷ்ய புரட்சிக்குப்பின், ரஷ்யாவில் பைபிளை வாசிப்பது ஆபத்தான காரியமாயிற்று, எனவே யாரும் இதை துணிந்து செய்யவில்லை. யெகோவாவின் சாட்சிகள் இதற்கு விதிவிலக்கு. சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்னால், ஏப்ரல் 16, 1956 தேதியிட்ட நியூஸ்வீக் பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டது; கிழக்கு ஜெர்மனியில் ஒரு இளைஞன் இவ்வாறு சொன்னதாக மேற்கோள் காண்பித்தது: “யெகோவாவின் சாட்சிகளைத் தவிர யாரும் பைபிளை வாசிப்பதில்லை.” ஆனால் பைபிள் படிப்பு கூட்டங்களை நடத்தி, பைபிள் செய்தியை பிரசங்கித்ததற்காக சாட்சிகள் சிறைச்சாலைகளிலும் தொழிலாளர் முகாம்களிலும் போடப்பட்டார்கள். இருந்தாலும் அவர்கள் எங்கு போடப்பட்டாலும், பைபிள் அடிப்படையிலான நம்பிக்கையை உறுதியாக பற்றியிருந்தனர். பெட்டியிலுள்ள செய்தியில் இதன் விவரத்தைக் காணலாம்.
1991-ல் சோவியத் யூனியன் கலைக்கப்பட ஆரம்பித்தபோது சாட்சிகள் ஏழு மாநாடுகளை நடத்தினர். பைபிள் அறிவுரைகள் வழங்கப்பட்டன. மொத்தம் 74,252 பேர் இவற்றில் கலந்துகொண்டார்கள். இரண்டு வருடங்களுக்குப்பின் 1993-ல் 1,12,326 பேர் இதுபோன்ற எட்டு மாநாடுகளில் கலந்துகொண்டார்கள். முன்னாள் சோவியத் யூனியன் குடியரசாக இருந்த 15 நாடுகளில் 4 நாடுகளில் இந்த மாநாடுகள் நடைபெற்றன. a இந்த ஆயிரக்கணக்கானோரில் அநேகர் பல வருடங்களாக சோவியத் சிறைச்சாலைகளிலும் தொழிலாளர் முகாம்களிலும் இருந்தவர்கள். இந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் தடையின்றி கடவுளை வணங்குவதற்கு கிடைத்த சுதந்திரத்துக்கு எத்தனை நன்றியுள்ளவர்களாய் இருந்தார்கள் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
1993 முதற்கொண்டு ஒவ்வொரு வருடமும் முன்னாள் சோவியத் குடியரசு மக்களால் தங்கள் சொந்த நாட்டிலேயே கிறிஸ்தவ கூட்டங்களுக்காக வெளிப்படையாக கூடிவர முடிகிறது. இந்தப் பாக்கியத்தை அவர்கள் மிக உயர்வாக மதித்துவருகின்றனர். உதாரணமாக, கடந்த வருடம் 2,82,333 யெகோவாவின் சாட்சிகளும் அவர்களுடைய நண்பர்களும் முன்னாள் சோவியத்
குடியரசில் நடைபெற்ற 80 “கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை” மாவட்ட மாநாட்டில் வணக்கத்திற்காக ஒன்றுகூடிவந்து பேரானந்தம் கொண்டனர். இந்த மாநாடுகளில் மொத்தம் 13,452 பேர் முழுக்காட்டப்பட்டார்கள்.கடந்த வருடத்தில் உலகில் மற்ற நாடுகளில் ரஷ்ய-மொழி மாநாடுகள் நடத்தப்பட்டது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். முன்னாள் சோவியத் யூனியனுக்கு வெளியே நான்கு மாநாடுகள் நடத்தப்பட்டன, இதில் மொத்தம் 6,336 பேர் கலந்துகொண்டனர்! இவை எங்கே நடத்தப்பட்டன? ரஷ்ய மொழி பேசும் இத்தனை அநேகர் பைபிளில் தீவிரமாக ஆர்வம் காட்டுவதேன்? பின்னால் கேட்கப்பட்ட கேள்வியை நாம் முதலில் ஆராயலாம்.
ஆவிக்குரிய தேவையை உணருகின்றனர்
சிறப்பான சமய வரலாறு ரஷ்யாவுக்கு உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட ஆடம்பரமான கத்தீட்ரல்கள் கிறிஸ்தவமண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆனால், ரோமன் கத்தோலிக்க சர்ச்சை போலவே ரஷ்யன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சும் பொதுமக்களிடமிருந்து பைபிளை மறைத்தே வைத்திருந்தது.
“ரஷ்யன் ஆர்த்தடாக்ஸியில் பைபிள் ஒருபோதும் முக்கியமானதாக இருந்ததே கிடையாது” என்பதாக சமீபத்தில் வெளியான ரஷ்யாவின் துன்பம்—சரித்திரத்தின் பாரம் என்ற ஆங்கில புத்தகம் விளக்குகிறது. விளைவு? “ஆர்த்தடாக்ஸ் விசுவாசிகளுக்கு பைபிள் அறிவு இல்லாத காரணத்தால், அவிசுவாசிகளைவிட இவர்களே மூட நம்பிக்கைகள், மாய மந்திரம், பில்லிசூனியம் ஆகியவற்றின் செல்வாக்கில் எளிதில் விழுந்து விடுகின்றனர்” என்பது ரஷ்ய சமய கல்விமான் செர்கி ஐவாநென்கோவின் கருத்து.
பிரபல எழுத்தாளர் டால்ஸ்டாய் இதேபோன்ற ஒரு கருத்தையே வெளியிட்டார். அவர் இவ்வாறு எழுதினார்: “[ரஷ்யன் ஆர்த்தடாக்ஸ்] சர்ச்சின் கோட்பாடு கொள்கையளவில் தந்திரமானதாயும் தீங்குவிளைவிக்கும் சூழ்ச்சியாகவும் இருக்கிறது; அது செயலளவில் மிகவும் மோசமான மூடநம்பிக்கைகளும் மாந்திரீகமும் சேர்ந்தது. இது கிறிஸ்தவ போதனையின் அர்த்தத்தை முழுவதுமாக மறைத்துவிடுகிறது என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.”
“மதம்தான் ஜனங்களின் போதைப் பொருள்” என்ற பிரசித்தமான பல்லவியோடு கடவுள் இல்லை என்ற பிரசாரமும் சேர்ந்த சோவியத்தின் கம்யூனிஸ கொள்கை வேகமாக பரவுவதற்கு இந்த நிலைமை மிகவும் சாதகமாக இருந்தது. ஆனால் சீக்கிரத்தில் கம்யூனிஸமே ஒரு வகையான மதமாயிற்று. இது சிவப்பு மதம் என்றழைக்கப்பட்டது. ஆனால் இந்த சிவப்பு மதம் அதிக நாட்கள் நிலைக்கவில்லை. 1991-ல் சோவியத் அரசு சிதறியபோது லட்சக்கணக்கான ஆட்கள் மிகவும் குழம்பிப் போனார்கள். எங்கே செல்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே, யெகோவாவின் சாட்சிகள் கொடுத்த ஊக்குவிப்பால் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் பதில்களை பைபிளில் தேடினர்.
உலகிலேயே அதிக கல்வியறிவு படைத்தவர்களில் ரஷ்ய மக்களும் அடங்குவர்; இதற்குக் காரணம் இவர்களின் சிறப்பான கல்வி திட்டம். ஆகவே அநேக ரஷ்யர்கள் பைபிள் வாசகர்களாக மட்டுமல்லாமல் அதன் போதனைகளை நேசிக்கிறவர்களாகவும் ஆனார்கள். அதே சமயத்தில், குறிப்பாக 1990-களில், முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் ஜெர்மனி, கிரீஸ், ஐக்கிய மாகாணங்கள் போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து சென்றிருக்கிறார்கள். இதன் விளைவு என்ன?
ஜெர்மனியில் மத சுதந்திரம்
18-வது 19-வது நூற்றாண்டுகளில் ஜெர்மானியர்களில் பலர் ரஷ்யாவுக்கு குடிபெயர்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவள் 15 வயதுள்ள சோபி. ரஷ்யாவின் மாமன்னரான அவளுடைய கணவனின் மரணத்துக்குப்பின் 1762-ல் அரியணையில் அமர்ந்தாள். பின்னால் மகா காதரின் என்று போற்றப்பட்டாள். அவளுடைய நீண்ட கால ஆட்சியின்போது ஜெர்மன் விவசாயிகளை ரஷ்யாவில் வந்து வாழும்படி அழைத்தாள். அதற்குப்பின் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி, சோவியத் யூனியனைத் தாக்கியபோது பூர்வீக ஜெர்மானியர்கள் சைபீரியாவுக்கும் கஸகஸ்தான், கையர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற சோவியத் குடியரசுகளுக்கும் நாடு கடத்தப்பட்டார்கள். சமீப காலத்தில் ரஷ்ய மொழி பேசும் ஜெர்மானியர்களும் முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து வந்த மற்றவர்களும் வசதியாக வாழவேண்டும் என்ற விருப்பத்தினால் ஜெர்மனிக்கு இடம் மாறிவந்திருக்கின்றனர்.
டிசம்பர் 1992-ல் ஜெர்மனியில் முதல் ரஷ்ய மொழி சபை பெர்லினில் ஸ்தாபிக்கப்பட்டது. கடந்த வருடத்துக்குள், ஜெர்மனியில் ரஷ்ய மொழி பேசும் மூன்று வட்டாரங்களில் 52 சபைகளும் 43 சிறிய தொகுதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை கொலோனியில் ரஷ்ய மொழியில் நடந்த “கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை” மாவட்ட மாநாட்டில் உச்ச எண்ணிக்கையாக 4,920 பேர் கலந்துகொண்டார்கள். யெகோவாவுக்கு தங்களுடைய ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக 164 பேர் முழுக்காட்டப்பட்டனர். இதற்கு முன்னால், ஏப்ரல் 1 அன்று ஜெர்மனியின் ரஷ்ய மொழி பேசும் சபைகளில் இயேசுவின் மரண நினைவு ஆசரிப்புக்கு 6,175 பேர் வந்திருந்தார்கள்.
ஐக்கிய மாகாணங்களில் ரஷ்யர்கள்
முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து ரஷ்ய மொழிபேசும் ஆட்கள் ஐக்கிய மாகாணங்களுக்கும் சென்றிருக்கிறார்கள். த நியூ யார்க் டைம்ஸ் இவ்வாறு அறிக்கை செய்தது: “1991 மற்றும் 1996 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளிநாடுகளிலிருந்து புரூக்ளினிற்கு அதிகமாக குடிபெயர்ந்து வந்தவர்கள் ரஷ்யர்களே.” குடியேற்றம் மற்றும் நாட்டுரிமை சேவை, இதே காலப்பகுதியில் முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து ஐக்கிய மாகாணங்களுக்கு குடிபெயர்ந்து வர 3,39,000-க்கும் அதிகமானோருக்கு அனுமதி அளித்திருக்கிறது.
முந்தைய பத்தாண்டில் முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து சுமார் 4,00,000 யூதர்கள் நியூ யார்க் நகருக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிக்கும் குடிபெயர்ந்து சென்றிருக்கிறார்கள் என்று ஜனவரி 1999 டைம்ஸ் கூறுகிறது. அதோடு, சமீப ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் ரஷ்யர்கள் ஐக்கிய மாகாணங்களின் மற்ற பகுதிகளிலும் வந்து குடியேறியிருக்கிறார்கள். உதாரணமாக, வட கலிபோர்னியாவில் புதிதாக வந்து குடியேறிய ரஷ்யர்கள் சுமார் 35,000 பேர். இது, நியூ யார்க், லாஸ் ஏஞ்சலிஸுக்கு அடுத்ததாக ரஷ்யாவிலிருந்து வந்து குடியேறியவர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடம். ரஷ்ய மொழி பேசும் இந்த மக்கள் பைபிளை படிப்பதற்கு கிடைக்கும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டு அவர்களில்
நூற்றுக்கணக்கானோர் உண்மை கடவுளாகிய யெகோவாவின் வணக்கத்தாராக மாறியிருக்கிறார்கள்.ஐக்கிய மாகாணங்களில், ஏப்ரல் 1, 1994-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய முதல் ரஷ்ய மொழி சபை நியூ யார்க் புரூக்ளினில் ஏற்படுத்தப்பட்டது. ரஷ்ய மொழி சபைகள் பென்ஸில்வேனியா, கலிபோர்னியா, வாஷிங்டன் ஆகிய இடங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பைபிள் படிப்பு கூட்டங்கள் தேசத்தின் பல பகுதிகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மாகாணங்களில் முதன்முறையாக
கடந்த ஆகஸ்ட் 20 முதல் 22 வரை, ஐக்கிய மாகாணங்கள், கனடா முழுவதிலுமிருந்தும் வந்திருந்த 670 பேர் நியூ யார்க் நகரில் முதல் ரஷ்ய மொழி மாவட்ட மாநாட்டில் சந்தோஷமாக கலந்துகொண்டனர். பேச்சுகள் அனைத்தும் ரஷ்ய மொழியில் கொடுக்கப்பட்டன. யாக்கோபு, ஈசா ஆகியோரைப் பற்றிய பைபிள் பதிவை, அருமையான ஒப்பனையோடு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்ஜலிஸில் உள்ள ரஷ்ய மொழி சபையின் அங்கத்தினர்கள் நாடகமாக நடித்துக் காட்டினார்கள். இது உண்மையில் மாநாட்டின் சிறப்பு அம்சமாக விளங்கியது.
மாநாட்டின் மற்றொரு சிறப்பு அம்சம் 14 பேர் முழுக்காட்டப்பட்டதாகும். இவர்கள் அனைவரையும் இங்கே புகைப்படத்தில் காணலாம். நியூ யார்க் நகரில் நடந்த மாநாட்டில் முழுக்காட்டப்படுவதற்காக போர்ட்லண்ட், ஆரிகான், லாஸ் ஏஞ்ஜலிஸ், சான் பிரான்ஸிஸ்கோ, கலிபோர்னியா ஆகிய இடங்களிலிருந்து பலர் சுமார் 4,000 கிலோமீட்டர் பயணம் செய்து வந்திருந்தனர். இந்த 14 பேரும் முன்னாள் சோவியத் குடியரசை சேர்ந்த அர்மீனியா, அஜர்பைஜன், பெலாரூஸ், மால்டோவா, ரஷ்யா, உக்ரேன் ஆகிய இடங்களில் வாழ்ந்தவர்கள். தேவனைப் பற்றிய அறிவையும் அவரை வணங்குவதற்கான சுதந்தரத்தையும் எவ்வளவு உயர்வாக மதிக்கின்றனர் என்பதை அவர்களுடைய அனுபவங்கள் காட்டுகின்றன.
சுவட்லானா (முன் வரிசை, இடமிருந்து மூன்றாவது) வளர்ந்தது மாஸ்கோவில். 17 வயதாக இருந்தபோது தன்னைவிட பல வருடங்கள் மூத்தவரான பிரபல பாடகர் ஒருவரை மணந்தாள். 1989-ல் அவர்கள் கைக்குழந்தையோடு ஐக்கிய மாகாணங்களுக்கு வந்தார்கள். அவளுடைய கணவர் பல இடங்களுக்கும் பிரயாணம் செய்தார், ஐந்து வருடங்கள் கழித்து அவர்கள் மணவிலக்கு செய்துகொண்டார்கள்.
சுவட்லானா தன்னுடன் வேலைபார்த்து வந்த ஒரு சாட்சியை சந்தித்து அவளுடன் பழக ஆரம்பித்தாள். அவளுடைய “மதத்தில்” போய் மாட்டிக்கொள்ளாதே, “அவர்கள் உன்னை கைக்குள் போட்டுக்கொண்டு உன்னுடைய பணத்தையும் பறித்துக்கொள்ளுவார்கள்” என அவளுடைய சிநேகிதிகள் அவளை எச்சரித்தனர். ஆனாலும் பைபிள் என்ன போதிக்கிறது என்பதை அவள் கற்றுக்கொள்ள விரும்பினாள். பைபிளிலிருந்து கடவுளுடைய பெயர் காண்பிக்கப்பட்டபோது, “எனக்கு ஆச்சரியமாக இருந்தது, ஏனெனில் சாட்சிகள் மட்டுமே இதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறார்கள்” என்றாள்.
ஆன்டிரியா (பின்வரிசை, இடமிருந்து மூன்றாவது) சைபீரியாவிலிருந்து உடற்பயிற்சி போட்டியாளராக பயிற்சிபெறும் பொருட்டு இன்றைய செயின்ட் பீட்டர்ஸ்பர்க்குக்கு வந்திருந்தார். அதன்பின் சோவியத் யூனியன் சிதறியது. ஆகவே 1993-ல் ஆன்டிரியா 22-வது வயதில் ஐக்கிய மாகாணங்களில் குடியேறினார். அவர் இவ்வாறு விளக்குகிறார்: “கடவுளைப்
பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். அதற்கு பிறகு ரஷ்யன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்கு போக ஆரம்பித்தேன். ஒரு சமயம் ஈஸ்டர் பண்டிகையின்போது கடவுளிடம் நெருங்கிவர வேண்டும் என்ற எண்ணத்தில் முழு இரவும் சர்ச்சிலேயே இருந்துவிட்டேன்.”இந்தச் சமயத்தில் சுவட்லானா ஆன்டிரியாவை சந்திக்க நேர்ந்தது. அப்போது பைபிள் படிப்பில் கற்றுக்கொண்ட காரியங்களை அவரிடம் சொன்னாள். அவளோடு யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு கூட்டத்துக்கு வர அவர் சம்மதித்தார், அதன்பிறகு ஒரு பைபிள் படிப்பையும் ஏற்றுக்கொண்டார். ஜனவரி 1999-ல் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். மாநாட்டில் அவர்கள் முழுக்காட்டப்பட்டபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பேவல் (பின்வரிசை, இடமிருந்து நான்காவது) பிறந்தது கஸகஸ்தானில் உள்ள காரகாண்டா அருகில். ஆனால் பிற்பாடு ரஷ்யாவில் நால்சிக் என்ற இடத்துக்கு இடமாறி வந்திருந்தான். இந்தப் பெரிய நகரம், அடிக்கடி சண்டை நடைபெறும் இடங்களாகிய செக்னியாவுக்கும் டாகெஸ்தானுக்கும் அருகே உள்ளது. இங்கேதான் பேவல் முதல் முறையாக சாட்சிகளை ஆகஸ்ட் 1996-ல் சந்தித்தான். ஆனால் அதற்கு அடுத்த மாதமே சான் பிரான்ஸிஸ்கோவுக்கு வந்துவிட்டான். இவனுக்கு போதைப் பொருள் பழக்கமிருந்தது; ஒரு பெண் குழந்தைக்குத் தகப்பனாக இருந்தான், காதலியையும் மகளையும் ரஷ்யாவில் விட்டுவந்திருந்தான்.
ஐக்கிய மாகாணங்களில் வந்திறங்கிய உடனே பேவல் யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புகொண்டு ஒரு பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டான். அவன் தன் வாழ்க்கையை சரிப்படுத்திக்கொண்டு, காதலிக்கு புதிதாக தான் தெரிந்துகொண்ட நம்பிக்கைகளைப் பற்றி கடிதத்தில் எழுதினான். இப்போது அவள் சாட்சிகளோடு படித்துக்கொண்டிருக்கிறாள். ஐக்கிய மாகாணங்களுக்கு அவளை வரவழைத்து, திருமணம் செய்துகொண்டு, தங்கள் மகளோடு சேர்ந்து கலிபோர்னியாவில் யெகோவாவை சேவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம்.
ஜார்ஜ் (பின்வரிசை, இடமிருந்து இரண்டாவது) மாஸ்கோவில் பிறந்து வளர்ந்தவர். இவர் 1996-ல் ஐக்கிய மாகாணங்களுக்கு வந்து அடுத்த வருடமே அஜர்பைஜனிலிருந்து வந்திருந்த ஃப்ளோராவை திருமணம் செய்தார். ஜார்ஜ் ரஷ்யன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்கு சென்றுவந்தார். ஆனால் ஒரு காவற்கோபுரம் பத்திரிகையை வாசித்தப்பின், அவருக்கு திரித்துவ கோட்பாட்டைப் பற்றி கேள்விகள் எழும்பின. உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு அவர் கடிதம் எழுதினார்; நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? என்ற சிற்றேட்டை அவருக்கு அனுப்பினர். 1998-ல் அவரும் ஃப்ளோராவும் பைபிளை படிக்க ஆரம்பித்தனர். இப்போது ஃப்ளோராவும் முழுக்காட்டுதல் எடுப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறாள்.
அதே சமயத்தில் மாஸ்கோவில் நடந்த மாநாட்டில்
15,108 பேர் கூடிவந்திருந்தனர்; அவர்கள் அமெரிக்காவில் நடந்த மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு வாழ்த்துதலை அனுப்பினர், இது மாநாட்டின் மற்றொரு சிறப்பு அம்சம். மாநாட்டுக்கு முந்தின வாரம் ஐக்கிய மாகாணங்களிலும் மற்ற இடங்களிலும், செய்தித்தாள்களிலும் டெலிவிஷனிலும் மோசமான அறிக்கைகள் வந்தவண்ணம் இருந்தபோதிலும், அங்கே 600 பேர் முழுக்காட்டப்பட்டார்கள் என்பதைக் கேட்டபோது நியூ யார்க் நகரில் கூடிவந்திருந்தவர்கள் எவ்வளவு பூரிப்படைந்தனர்!மாஸ்கோவில் என்ன நடந்தது
ஜூலை 21, 1999-ல் மாஸ்கோவின் நடுவில், பெரிய ரஷ்யன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்கு அருகில் இருந்த ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் மாநாட்டை நடத்துவதற்காக சாட்சிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். ஆனால் மாநாடு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன் இதற்கு எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்தது. புதன்கிழமை, ஆகஸ்ட் 18 வரை, வாடகைப் பணம் ஏற்கெனவே செலுத்தப்பட்டிருந்த போதும் ஸ்டேடியத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ரஷ்யாவில், யெகோவாவின் சாட்சிகள் சட்டப்படி அங்கீகாரம் பெற்ற மத அமைப்பு என்பது அதிகாரிகளுக்கு வலியுறுத்தி சொல்லப்பட்டது; இதைப் பற்றி பக்கம் 28-ல் உள்ள பெட்டிச் செய்தியை காண்க.
வெள்ளி காலை சுமார் 15,000 பேர் மாநாட்டில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தபடியால் சாட்சிகளின் பிரதிநிதிகளுக்கு கவலையாக இருந்தது. பல மைல் தொலைவிலிருந்த நகரங்களிலும் பட்டணங்களிலும் இருந்து பிரதிநிதிகள் மாஸ்கோவுக்கு வந்துகொண்டிருந்தார்கள். கடைசியாக, பல மணிநேர பேச்சு வார்த்தைக்குப்பின், ஆகஸ்ட் 19, வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு ஸ்டேடியம் நிர்வாகிகள் மாநாட்டை நடத்தலாம் என்று சாட்சிகளின் பிரதிநிதிகளிடம் மகிழ்ச்சியோடு சொன்னார்கள். மாநாடு நடத்துவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று நகரின் நிர்வாகிகள் தெரியப்படுத்தினார்கள்.
அடுத்த நாள் காலை மக்கள் கூட்டம் ஸ்டேடியத்தில் அலை மோதியது. வாலண்டியர்கள் இரவு முழுவதும் தயாரிப்பு வேலைகளைச் செய்திருந்தார்கள். முதல் நாள் காலை அங்கே கூடிவந்திருந்தவர்களில் நிருபர்களும் இருந்தனர், மாநாட்டை நடத்துவதற்கு எதிர்ப்பு இருந்தது என்பது இவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. “உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்! உங்கள் மாநாடு திட்டமிட்டப்படி நடப்பது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சி” என்று நிருபர் ஒருவர் சொன்னார்.
ஒழுங்கான நடத்தைக்கு முன்மாதிரி
பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது விவேகமாக இருக்கும் என்பதாக ஸ்டேடியத்தின் நிர்வாகிகள் நினைத்தார்கள். விமான நிலையங்களில் பயன்படுத்தப்படுவது போன்ற மெட்டல் டிடெக்டர்களை எல்லா
வாசல்களிலும் பாதுகாப்பு படையினர் வைத்திருந்தனர். ஸ்டேடியத்திற்குள்ளும் எங்கும் போலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். பயங்கரமான மிரட்டல்கள் வந்தபோதிலும் மாநாடு மிகவும் சுமுகமாக நடந்தது.சனிக்கிழமை பிற்பகல் ஸ்டேடியத்தில் குண்டு வைத்திருப்பதாக யாரோ ஒருவர் போன் செய்தார். அந்த நாளின் கடைசி பேச்சுக்கு முந்தின பேச்சு நடந்துகொண்டிருந்தபோது இந்த மிரட்டல் வந்தது. ஆகவே ஸ்டேடியத்தின் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டபடி, ஸ்டேடியத்தை உடனடியாக காலிசெய்துவிடும்படி சுருக்கமாக ஒரு அறிவிப்பு செய்யப்பட்டது. எல்லாரும் மிகவும் ஒழுங்காக ஸ்டேடியத்தைக் காலிசெய்தபோது அதிகாரிகளும் போலீஸும் ஆச்சரியப்பட்டு போனார்கள். இது மாதிரி எதையும் அவர்கள் இதற்கு முன்னால் பார்த்ததே கிடையாது! இதற்கு ஒத்திகை பார்க்கப்பட்டதா என்றுகூட அவர்கள் கேட்டார்கள்.
குண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அடுத்த நாள் நிகழ்ச்சிநிரலில் சனிக்கிழமை விடுபட்ட பேச்சு சேர்க்கப்பட்டது, ஆகவே இதனால் கொஞ்சம் கூடுதலாக நேரமெடுத்தது. ஸ்டேடியத்தின் நிர்வாகிகள் மாநாடு குறித்து திருப்தியை தெரிவித்தார்கள்.
கிரீஸிலும் மற்ற இடங்களிலும்
ஆகஸ்ட் மாத கடைசி வாரத்திலும் செப்டம்பர் மாத முதல் வாரத்திலும் ரஷ்ய மொழி மாவட்ட மாநாடுகள் கிரீஸிலும்கூட நடத்தப்பட்டன—ஆதன்ஸிலும் பின்னர் தெஸ்ஸலோனிகியிலும் நடத்தப்பட்டன. மொத்தம் 746 பேர் ஆஜராயிருந்தனர், 34 பேர் முழுக்காட்டப்பட்டனர். கிரீஸில் 8 ரஷ்ய மொழி சபைகளும் 17 சிறிய தொகுதிகளும் உள்ளன. இந்தச் சிறிய தொகுதிகளில் இருப்பவர்கள் முன்னாள் சோவியத் யூனியனின் தெற்கு பகுதிகளிலிருந்து வந்த குடியேறிகள். இவர்கள் ரஷ்ய மொழியிலும் குடியேறிகள் பேசும் மற்ற மொழிகளிலும் கூட்டங்களை நடத்துகின்றனர்.
ஆதன்ஸில் முழுக்காட்டப்பட்டவர்களில் ஒருவர் விக்டர் என்பவர். அவர் ஒரு நாத்திகராக இருந்தவர். ஆகஸ்ட் 1998-ல் ஆதன்ஸில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாட்டுக்கு சென்றிருந்தார். அங்கே, அவருடைய மனைவி முழுக்காட்டப்பட்டார். அந்த மாநாட்டுக்கு வந்தவர்கள் மத்தியில் நிலவிய அன்பை பார்த்து, பைபிளை படிக்க ஆரம்பித்தார்.
நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை எகேரி என்பவர் வாசித்தப் பிறகு தான் வைத்திருந்த விக்கிரகங்களைத் தூக்கியெறிந்தார். அவர் தன்னை ஒரு யெகோவாவின் சாட்சி என்றுகூட அறிமுகம் செய்ய ஆரம்பித்தார். அவர் ஆதன்ஸிலிருந்த கிளை அலுவலகத்துக்கு எழுதினார், நவம்பர் 1998-ல் ஒரு சாட்சி அவரை வந்து சந்தித்தார். உடனடியாக அவர் சபை கூட்டத்துக்குச் சென்றார், அன்று முதல் இன்றுவரை அவர் ஒரு கூட்டத்தைக்கூட தவறவிட்டது கிடையாது. யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டப்பட்ட பின்பு முழுநேர ஊழியராக வேண்டும் என்பதே இப்போது அவருடைய இலக்கு.
ரஷ்ய மொழிபேசும் மக்கள் இங்கு குறிப்பிடாத உலகின் மற்ற பல நாடுகளிலும் குடியேறி இருக்கின்றனர். இவர்களில் அனேகரும்கூட பைபிளை படிக்கவும் கடவுளை வெளிப்படையாக வணங்கவும் இப்போது அவர்களுக்கு இருக்கும் சுதந்திரத்தைக் குறித்து களிகூறுகிறார்கள். இவர்கள் இந்தப் பொக்கிஷத்தை நெஞ்சார நேசித்து ஆனந்தம் கொள்கிறார்கள்!
[அடிக்குறிப்புகள்]
a இப்போது சுதந்திரம் பெற்று தனி நாடுகளான 15 குடியரசுகள்: அமீனியா, அஜர்பைஜன், பெலாரூஸ், எஸ்டோனியா, ஜார்ஜியா, கஸகஸ்தான், கையர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மால்டோவா, ரஷ்யா, தாஜிகிஸ்தான், துருக்மனிஸ்தான், உக்ரேன், உஸ்பெகிஸ்தான்.
[பக்கம் -ன் பெட்டி22]
பைபிளை நேசிக்கும் ரஷ்யர்கள்
பைபிளைப் படிப்பதற்கென்றே பிறந்தவர்கள் என்பதாக யெகோவாவின் சாட்சிகளை, மதிப்புக்குரிய ரஷ்ய சமய பேராசிரியர் செர்கி ஐவன்னென்கோ விவரித்தார். அண்மையில், ரஷ்ய மொழியில் அவர் எழுதிய எப்போதுமே பைபிளை வைத்திருக்கும் ஒரு ஜனம் என்ற புத்தகத்தில் சோவியத் யூனியனில் இவர்களுடைய ஆரம்ப கால வரலாற்றைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “யெகோவாவின் சாட்சிகள் தங்கள் நம்பிக்கைகளுக்காக சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டபோதிலும் எப்படியாவது பைபிளை படிக்க வழிகளை கண்டுபிடித்தார்கள்.” இதை விளக்குவதற்கு அவர் இந்த அனுபவத்தைக் கூறுகிறார்.
“சிறைக் கைதிகள் பைபிள் வைத்திருப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. பைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வடக்கே இருந்த தொழிலாளர் முகாம் ஒன்றில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் எலக்டிரிஷனாக இருந்தார், அவர் பைபிள் புத்தகங்களை வோல்டேஜ் மிகவும் அதிகமாக இருந்த ஒரு டிரான்ஸ்பார்மர் யூனிட்டில் வைத்திருந்தார். பைபிளின் ஒவ்வொரு பகுதியையும் ஒரு நூலினால் குறிப்பிட்ட ஒரு வையரோடு கட்டிவைத்திருந்தார். ஷாக் அடிக்காதவாறு எந்த நூலை இழுத்தால் எதைப் பெற முடியும் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்—உதாரணமாக மத்தேயு சுவிசேஷத்தை எடுக்க அவருக்கு மட்டுமே தெரியும். காவலர்கள் எவ்வளவு தேடியும் பயனில்லை, அவர்களால் இந்த பைபிளை கண்டுபிடிக்க முடியவே இல்லை.”
[பக்கம் -ன் பெட்டி28]
ரஷ்யாவில் யெகோவாவின் சாட்சிகள் மறுபடியும் மறுஅங்கீகாரம் பெறுகின்றனர்
யெகோவாவின் சாட்சிகள் நூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ரஷ்யாவில் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி சுறுசுறுப்பாக அறிவித்துவருகிறார்கள். ஆனால் அரசாங்க தடைகளின் காரணமாக மார்ச் 27, 1991 வரையாக யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அந்தச் சமயத்தில் அவர்கள் அட்மினிஸ்ட்ரேட்டிவ் சென்டர் ஆஃப் த ரிலிஜியஸ் ஆர்கனைஸேஷன்ஸ் ஆஃப் ஜெகோவாஸ் விட்னஸஸ் இன் தி யு.எஸ்.எஸ்.ஆர் என்ற பெயரில் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருந்தார்கள்.
செப்டம்பர் 26, 1997 அன்று “மனசாட்சி மற்றும் சமய சங்க சுதந்திரம்” (“On Freedom of Conscience and Religious Association”) என்ற தலைப்பில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இந்தப் புதிய சட்டத்துக்கு செய்தித் துறை உலகம் முழுவதிலும் அதிகமான விளம்பரத்தைக் கொடுத்தது. ஏன்? ஏனென்றால் ரஷ்யாவில் சிறுபான்மை சமயங்களை கட்டுப்படுத்துவதற்கென்றே இந்த முயற்சி என்பதாக அநேகர் கருதினர்.
ஆகவே யெகோவாவின் சாட்சிகள் 1991-ல் மிகவும் சிரமப்பட்டு ரெஜிஸ்டர் செய்திருந்தபோதிலும், மனசாட்சி சுதந்திரத்தின் சம்பந்தமாக இயற்றப்பட்ட ரஷ்யாவின் இந்தப் புதிய சட்டப்படி, இவர்களையும் மற்ற எல்லா மத அமைப்புகளையும் போலவே மறுபடியும் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டனர். இது பல கேள்விகளை எழுப்பியது. ரஷ்ய நாட்டு அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளை மறுபடியும் ஒடுக்கவேண்டும் என்று நினைக்கிறார்களா? அல்லது ரஷ்யன் பெடரேஷன் அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்டிருக்கும் சமய சகிப்புத்தன்மையும் வணக்க சுதந்திரமும் காப்பாற்றப்படுமா?
கடைசியாக பதில் கிடைத்தது. ரஷ்யாவின் நீதித்துறை அமைச்சகம் 1999, ஏப்ரல் 29 அன்று “அட்மினிஸ்ட்ரேட்டிவ் சென்டர் ஃபார் ஜெகோவாஸ் விட்னஸஸ் இன் ரஷ்யா” என்பதாக பதிவு சான்றிதழை வழங்கியது. மறுபடியுமாக சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைத்தபோது சாட்சிகள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை!
[பக்கம் 23-ன் படம்]
ஐக்கிய மாகாணங்களில் நடந்த முதல் ரஷ்ய மொழி மாவட்ட மாநாடு
[பக்கம் 24-ன் படம்]
லாஸ் ஏஞ்ஜலிஸ் ரஷ்ய மொழி சபை நியூ யார்க்கில் நடத்திக்காட்டும் பைபிள் நாடகம்
[பக்கம் 25-ன் படம்]
நியூ யார்க்கில் முழுக்காட்டப்பட்ட இந்த 14 பேர் முன்னாள் சோவியத் யூனியனின் ஆறு குடியரசுகளிலிருந்து வந்தவர்கள்
[பக்கம் 26, 27-ன் படம்]
15,000-க்கும் மேலானவர்கள் மாஸ்கோவின் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் கூடிவந்தார்கள்