ஒழுக்கநெறிகள் முன்னைவிட மோசமாகிவிட்டனவா?
ஒழுக்கநெறிகள் முன்னைவிட மோசமாகிவிட்டனவா?
“மக்களின் ஒழுக்கநெறிகள் கடந்த காலத்தில் இருந்ததைவிட இன்று மேம்பட்டதாக இருக்கிறதா அல்லது மோசமாக இருக்கிறதா?” என்ற இந்தக் கேள்வியை சரித்திராசிரியர்களைக் கேட்கிறீர்களென்று வைத்துக்கொள்ளுங்கள். வித்தியாசமான காலப்பகுதிகளில் இருக்கும் ஒழுக்கநெறிகளை ஒப்பிடுவது கடினமானது என சிலர் பதிலளிக்கலாம். அந்தந்த காலப்பகுதிக்குரிய சூழ்நிலைக்கேற்பவே அக்காலத்தில் இருந்த ஒழுக்கநெறிகள் மதிப்பிடப்பட வேண்டும் என அவர்கள் நினைக்கலாம்.
ஐரோப்பாவில், 16-ம் நூற்றாண்டு முதல் அதிகரித்துக்கொண்டே போகும் கொடூரமான குற்றச்செயல்களை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். 400 வருடங்களுக்கு முன்னும் கொலைகளுக்கு பஞ்சமே இல்லை. அதிகாரங்களுக்காக காத்திராமல் மக்கள் பெரும்பாலும் சட்டத்தைத் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்டனர். இனக்கலவரங்களால் சிந்தப்படும் இரத்தம் ஆகியவை சர்வசாதாரணமாய் இருந்தன.
எனினும், சில இடங்களில், 1600 முதல் 1850 வரையான காலப்பகுதி “சமுதாய வாழ்க்கை உண்மையிலேயே நாகரிகம் அடைந்தது” என்று சரித்திராசிரியர்கள் ஆர்னா யாரிக், யோஹான் சோடர்பர் என்பவர்கள் மானிஸ்கோவார்டட் ஆக் மாக்டன் (மனித கண்ணியமும் சக்தியும்) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகின்றனர். மற்றவர்களுடைய தேவைகளுக்கு மக்கள் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றனர். அதாவது, மற்றவர்களுடைய நிலையில் தங்களை வைத்துப் பார்க்கும் பண்பை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, 16-ம் நூற்றாண்டில் உடைமைகளை கொள்ளையடித்தலும் குற்றச்செயல்களும் இன்றிருப்பதுபோல் இந்தளவு அதிகமாக இல்லையென மற்ற சரித்திராசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, கிராமங்களில் கொள்ளைக்கூட்டங்களால் இழைக்கப்படும் அநீதிகள் அரிதாகவே இருந்தன.
அடிமைத்தனம் என்ற முறை இருந்தது உண்மையே. சரித்திரத்தின் மிக மோசமான குற்றச்செயல்களுக்கு வழிநடத்தியதும் இதுவே. ஆப்பிரிக்காவிலிருந்து அநேகர் ஐரோப்பிய வணிகர்களால் கடத்தப்பட்டனர். அவர்களை எங்கே கொண்டு சென்றார்களோ அந்த நாடுகளில், இந்த லட்சக்கணக்கான அடிமைகள் கொடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.
கடந்த நூற்றாண்டுகளை சரித்திர கண்ணோட்டத்தோடு சற்று பின்னோக்கி பார்ப்போமேயானால், சில நிலைமைகள் மேம்பட்டதாக இருந்திருக்கின்றன, மற்றவையோ மிக மோசமாக இருந்திருக்கின்றன. என்றபோதிலும், மிக வித்தியாசமான, மிக மோசமான ஒன்று, சொல்லப்போனால் முன்னொருபோதும் நிகழ்ந்திராத ஒன்று, இருபதாம் நூற்றாண்டில் நடந்தது. இப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
20-ம் நூற்றாண்டு—ஒரு திருப்புமுனை
“1930-களில் மனித படுகொலைகளின் எண்ணிக்கை மறுபடியும் உயர்ந்தது. விசனத்திற்குரிய விஷயம் என்னவெனில், அதுமுதல் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கின்றன” என சரித்திராசிரியர்கள் யாரிக், சோடர்பர் தெரிவிக்கின்றனர்.
இருபதாம் நூற்றாண்டின்போது, ஒழுக்கநெறிகள் பெருமளவில் சீர்கேடு அடைந்துள்ளன என அநேக விளக்கவுரையாளர்களும் ஒத்துக்கொள்கின்றனர்.
ஒழுக்க தத்துவத்தைப் பற்றிய ஒரு கட்டுரை இவ்வாறாக சொல்கிறது: “கடந்த 30 முதல் 40 வருடங்களில், பாலுறவு குறித்து சமுதாயத்தின் நோக்குநிலையும் ஒழுக்கமென கருதப்பட்டவை எவையோ அவையும் அதிகளவில் மாறியுள்ளன. கட்டுத்திட்டமான வரம்புகளின்மூலம் ஒழுக்கரீதியாக சரியானது எது என்பதை தெளிவாக்கும் சமுதாயத்திலிருந்து, இப்போது கட்டுப்பாடு ஏதுமற்ற தாராளமான நிலைக்கும் தனிப்பட்ட கருத்துக்கும் மாறியுள்ளது.”பாலுறவு நடத்தையானாலும்சரி ஒழுக்கநெறிகளின் மற்ற அம்சங்களானாலும்சரி தாங்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்று அநேகர் இப்போது நினைக்கின்றனர் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது. இதை விளக்க, சில புள்ளிவிவரங்களை அந்தக் கட்டுரை தருகிறது. அமெரிக்க மாகாணங்களில், 1960-ல், 5.3 சதவீத பிள்ளைகள் திருமண பந்தத்திற்கு வெளியே பிறந்தவர்கள். 1990-ல், இந்த எண்ணிக்கை 28 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நோடர் டேம் பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்பட்ட ஓர் உரையில், ஐ.மா. சட்டமன்ற உறுப்பினர் ஜோ லீபர்மான் என்பவர் நம் காலங்களில் இருக்கும் ஒழுக்கத்தை இப்படியாக விவரிக்கிறார்: “ஒழுக்கநெறிகளின் வெற்றிடம் . . . சரி எது தவறு எது என வழிவழியாக வந்த கருத்துக்கள் படிப்படியாக உருத்தெரியாமல் போய்விட்டன.” இந்த மாற்றம், “இரண்டு தலைமுறைகளாக படிப்படியாக நிகழ்ந்து வருகிறது” என லீபர்மான் தெரிவிக்கிறார்.
மதசார்பற்ற நிலை
இருபதாம் நூற்றாண்டின்போது நிகழ்ந்திருக்கும் இந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு எது காரணமென சரித்திராசிரியர்களும் மற்ற ஆய்வாளர்களும் சொல்கின்றனர்? “கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களுள் மிக முக்கியமானது மதசார்பற்ற நிலையே” என மானிஸ்கோவார்டட் ஆக் மாக்டன் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. மதசார்பற்ற நிலை என்பது “பல விஷயங்களில் தங்களுக்கு விருப்பமான வித்தியாசமான தீர்மானங்களை எடுக்க மக்களுக்கு வாய்ப்பு அளிப்பதே. இந்தக் கருத்து . . . 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த என்லைடன்மென்ட் எனும் இயக்கத்தின் தத்துவ மேதைகளால் தோற்றுவிக்கப்பட்டது. பைபிளை சத்தியத்தின் ஒரே ஆதாரமாக ஏற்க மறுத்தவர்களில் . . . இவர்களே முதன்மையானவர்கள்.” எனவே, கடந்த காலங்களில் இருந்ததுபோல் மதங்களை ஒழுக்கநெறிகளுக்கான வழிகாட்டிகளாக எண்ணவில்லை. மிக முக்கியமாக கடந்த காலத்தைப்போல் கிறிஸ்தவமண்டல மதங்கள், ஒழுக்கநெறிகளின் வழிகாட்டிகளாக கருதப்படவில்லை.
அப்படியென்றால், 18-ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு தத்துவம் சூடுபிடிக்க ஏன் இருநூறு ஆண்டுகளுக்கும் அதிகம் எடுத்தது? “இந்தக் கருத்துக்கள் மக்களிடையே அவ்வளவு எளிதில் பரவவில்லை. மதசார்பற்ற நிலையை பற்றிய மாற்றம் மிக மந்தமாகவே இருந்தது” என மேலே குறிப்பிடப்பட்ட புத்தகம் சொல்கிறது.
பாரம்பரிய ஒழுக்க தராதரங்களையும் கிறிஸ்தவ நெறிகளையும் கைவிடும் போக்கு கடந்த இருநூறு வருடங்களாக மந்தநிலையில் இருந்தது. என்றபோதிலும், இருபதாம் நூற்றாண்டின்போதோ அது ராக்கெட் வேகத்தில் நிகழ்ந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த சில ஆண்டுகளாக இந்த மாற்றம் துரிதகதியில் இருக்கிறது. ஏன்?
தன்னலமும் பேராசையும்
இருபதாம் நூற்றாண்டின்போது, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள படுவேகமான முன்னேற்றங்களே இதற்கு முக்கிய காரணம். “கடந்த நூற்றாண்டுகளில், உலக நிகழ்ச்சிகளில் பெரிதளவில் மாற்றங்கள் ஏதுமில்லை. ஆனால், நிமிஷத்துக்கு நிமிஷம் மாறுகிற உலகில்தான்” இன்று நாம் வாழ்கிறோம் என டீ ட்ஸீட் என்ற ஜெர்மானிய செய்திப்பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது. இது, போட்டியும் தன்னலமும் நிறைந்த கட்டுப்பாடுகளில்லாத
ஒரு பொருளாதார முறைமைக்கே வழிநடத்தியுள்ளதென அக்கட்டுரை விளக்கியது.“இந்த தன்னலத்தை எதுவுமே தடுத்து நிறுத்த முடியவில்லை. அதன் காரணமே, மனிதப்பண்பற்ற ஈனச்செயல்களாலும் ஊழலாலும் நிறைந்த இன்றைய வாழ்க்கை. பல நாடுகளில் இது அன்றாட வாழ்க்கையை மட்டுமல்ல அரசாங்கத்தையும் பாதித்திருக்கிறது. மக்கள் தங்களைப் பற்றியும் தங்கள் ஆசைகளை எவ்வளவு அதிகமாக திருப்திப்படுத்திக் கொள்ள முடியும் என்பதைப் பற்றியும் மட்டுமே நினைக்கின்றனர்” என்று அதே கட்டுரை தொடர்ந்து விவரிக்கிறது.
ஒரு தலைமுறைக்கு முன் இருந்ததைவிட இன்று அமெரிக்கர்கள் பணத்திற்குத்தான் அதிக கவனம் செலுத்துகின்றனரென ஓர் ஆய்வு சுட்டிக்காட்டுவதாக பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியலாளர் ராபர்ட் ஊத்நவ் கண்டார். அந்த ஆய்வின்படி, “மற்றவர்களுக்கு காட்டும் மரியாதை, வேலையில் நேர்மை, சமூக செயல்களில் ஈடுபடுதல் போன்ற மற்ற மதிப்பீடுகளைவிட பணத்திற்கான பற்றுதான் இன்று உயர்ந்தோங்கி நிற்பதாக அநேக அமெரிக்கர்கள் பயப்படுகின்றனர்.”
சமுதாயத்தில் பேராசை என்பது அளவிட முடியாதபடி வளர்ந்திருக்கிறது. ஏனென்றால், அநேக பிஸினஸ் எக்ஸிக்யூட்டிவ்கள் அதிகப்படியான ஊதிய உயர்வு, ஆதாயமிக்க ஓய்வூதிய நலன்கள் போன்ற சலுகைகளை தாங்கள் பெற்றுக்கொள்ள வழிசெய்கின்றனர். ஆனால், தங்களுடைய ஊழியர்களையோ ஊதிய உயர்வுக்கான தங்களது கோரிக்கைகளில் மிதமாக இருக்கும்படி வற்புறுத்துகின்றனர். “கொள்ளை லாபம் ஈட்டுவதிலேயே கண்ணாய் இருக்கும் தொழிலதிபர்கள் மத்தியில் இருக்கும் பிரச்சினை என்னவெனில் அவர்களுடைய இந்த மனநிலை தொற்றுநோய் போன்றது. மேலும், பொதுவில் மக்களின் ஒழுக்க தரத்தை தாழ்த்துகின்றனர்” என செல் ஊவ் நில்சன் தெரிவிக்கிறார். கிறிஸ்டியன் கவுன்சில் ஆஃப் ஸ்வீடனில் அறவியல் துணைப் பேராசிரியரும் இறையியல் இயக்குநருமாய் இவர் இருக்கிறார். “சமுதாய அளவிலும் தனிநபர் அளவிலும் ஒழுக்கநெறிகள்மீது இது சொல்லொணா பாதகங்களை வருவித்துள்ளது.”
மீடியா கலாச்சாரம்
இருபதாம் நூற்றாண்டின் பிந்தைய ஆண்டுகளில், ஒழுக்க தராதரங்கள் படுவேகமாய் சீர்குலைந்ததற்கு மற்றொரு காரணம் மீடியா கலாச்சாரமே. “டெலிவிஷன் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், சினிமா பெரும்புள்ளிகள், நவீன பாணி விளம்பரதாரர்கள், ‘காங்ஸ்டா’ ராப் பாடகர்கள், எலக்ட்ரானிக் மீடியா-கலாச்சார கட்டமைப்பில் இருக்கும் பெருந்தலைகள் போன்றவர்களே புதிய நெறிமுறைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்துபவர்கள்” என சட்டமன்ற உறுப்பினர் லீபர்மான் சொல்கிறார். “இப்படிப்பட்ட மனப்போக்கை முன்னேற்றி வைப்பவர்கள், நம் பண்பாட்டின்மீதும் குறிப்பாக நம் பிள்ளைகள்மீதும் அதிக செல்வாக்கு செலுத்துகின்றனர். மேலும், அவர்கள் பரப்பும் கேடான நெறிமுறைகளுக்கு அவர்கள் பொறுப்பேற்பதேயில்லை.”
கேனிபல் கார்ப்ஸ் என்றழைக்கப்படும் ராக் இசைக் குழுவால் தயாரிக்கப்பட்ட இசைத்தட்டை லீபர்மான் உதாரணம் காட்டுகிறார். கத்தி முனையில் ஒரு
பெண்ணை கற்பழிப்பதை விலாவாரியாக பாடகர்கள் அந்தப் பாட்டில் விவரிக்கின்றனர். அந்த இசைத்தட்டை விநியோகிப்பதை தடைசெய்யுமாறு அதை தயாரித்த கம்பெனிக்கு லீபர்மானும் அவருடைய நண்பரும் சேர்ந்து முறையீடு செய்தனர். ஆனால் லீபர்மான் குறிப்பிடுகிறபடி, மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலானது.பிள்ளைகள்மீது செல்வாக்கு செலுத்தி அவர்களை வளர்ப்பது பெற்றோராகிய தாங்களா அல்லது மீடியா கலாச்சாரமா என்ற கடுமையான போட்டியில் இன்று பொறுப்புள்ள பெற்றோர் மாட்டித் தவிக்கின்றனர். இதைப் பற்றி சற்றேனும் கவலைப்படாத, பொறுப்பற்ற பெற்றோரின் பிள்ளைகளைப் பற்றியதென்ன? “அந்த சந்தர்ப்பங்களில், எந்தவிதக் கேள்விக்கும் இடமின்றி தரத்தை நிர்ணயிக்கும் அளவுகோலாக இருப்பது மீடியா கலாச்சாரமே. டெலிவிஷன், சினிமா, சிடி பிளேயர் மூலமாக பிள்ளைகள் அநேக விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். அவைதான், வாழ்க்கையில் பிரதானமானது என்ன என்பதிலும் சரியெது தவறெது என்று பாகுபடுத்தும் பிள்ளைகளின் உணர்வுகளிலும் செல்வாக்கு செலுத்தி வடிவமைக்கிறது” என லீபர்மான் சொல்கிறார். இந்தப் பட்டியலில் இன்று இன்டர்நெட்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மறுபடியும் ‘ஒழுக்கத்தின் கற்காலத்திற்கே’
பாதகமான இந்த செல்வாக்குகள் இளைஞர் மத்தியில் ஏற்படுத்திய விளைவுகள் என்ன? சமீப ஆண்டுகளில், அதிகமதிகமான பிள்ளைகளும் இளைஞர்களும் மற்ற பிள்ளைகளுக்கும் ஏன் பெரியவர்களுக்கும் எதிராக குரூரமான வன்முறை செயல்களில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயமே.
1998-ல், ஸ்வீடனில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஐந்து, ஏழு வயதுடைய இரண்டு பையன்கள் நான்கு வயது பையனின் கழுத்தை நெறித்து கொன்றனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு அநேகர் எழுப்பிய கேள்வியானது: அளவுக்குமீறி போகும்போது அவர்களைக் கட்டுப்படுத்தும் உள்ளுணர்வே பிள்ளைகளுக்கு கிடையாதா? குழந்தை மனநல மருத்துவர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் பின்வரும் தகவலை சொன்னார்: “மிதமிஞ்சிப் போகும்போது அதைக் கட்டுப்படுத்தும் உணர்வு கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. யாரைத் தங்களுக்கு மாதிரிகளாக வைத்திருக்கிறார்களோ, தங்களைச் சுற்றியுள்ள பெரியவர்களிடமிருந்து எதைக் கற்றுக்கொள்கிறார்களோ . . . அதைச் சார்ந்தே இது இருக்கிறது.”
கொடூரமான குற்றவாளிகளைக் குறித்தும் இதுவே உண்மை. ஸ்வீடனிலுள்ள மனநல மருத்துவப் பேராசிரியர் ஸ்டேன் லேவான்டர் சொல்லும் கருத்தை கவனிப்போம்: இன்று சிறையிலிருப்போரில் 15 முதல் 20 சதவீதத்தினர் மனநோயாளிகளே. அதாவது, தன்னலமிக்கவர்களாக, மற்றவர்களுடைய கஷ்டங்களை உணராதவர்களாக, சரியெது தவறெது என்பதை புரிந்துகொள்ள முடியாதவர்களாக அல்லது விரும்பாதவர்களாக அவர்கள் இருக்கின்றனர். நார்மலாக இருப்பதுபோல் தோன்றும் பிள்ளைகள் மற்றும் இளைஞர்களிடையேயும் ஒழுக்கநெறிகளைப் பற்றிய உணர்வு மழுங்கலாகத்தான் இருக்கிறது என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். “ஒழுக்கத்தின் கற்காலத்திற்குதான் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்” என தத்துவப் பேராசிரியை கிறிஸ்டீனா ஹாஃப் சாமர்ஸ் குறிப்பிடுகிறார். எது சரி எது தவறென கேட்கப்படுகையில் அவருடைய இளம் மாணவர்களில் பலர் திணறிப்போகின்றனர். எது சரி எது தவறு என்ற ஒன்று இல்லவே இல்லை என அவர்கள் பதிலளிக்கின்றனர். ஒவ்வொருவருமே தங்களுக்கு சிறந்தது எதுவோ அதைத்தான் யோசிக்க வேண்டுமென அவர்கள் கருதுகின்றனர்.
சமீப காலங்களில், தனிச்சிறப்புமிக்க விஷயங்களான மனித உயிருக்கு மதிப்பையும் கண்ணியத்தையும் காட்டுவது போன்றவற்றை அவருடைய மாணவர்களில் பலர் எதிர்த்தனர். உதாரணமாக, அவர்களுடைய செல்லப் பிராணியின் உயிரைக் காப்பாற்றுவது அல்லது முன்பின் தெரியாத ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றுவது, இதில் எதைச் செய்வீர்கள் என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்களில் பலர் அளித்த பதில் பிராணியைக் காப்பாற்றுவதே.
“இளைஞர்கள் மடமையானவர்களாகவோ, அவநம்பிக்கையுடையவர்களாகவோ, கொடூரமானவர்களாகவோ, அல்லது வஞ்சகர்களாகவோ இருக்கிறார்கள் என்பது பிரச்சினை அல்ல. வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், எது சரி எது தவறென்பதன் நியதியே தெரியாதவர்களாக இருக்கின்றனர்” என பேராசிரியை சாமர்ஸ் கூறுகிறார். இளைஞர்களில் அநேகர் சரி அல்லது தவறு என்று ஏதாவது உண்மையிலேயே இருக்கிறதா என இன்று கேட்கின்றனர் என அவர் குறிப்பிடுகிறார். மேலும், இப்படிப்பட்ட மனநிலை சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் மிகப் பெரிய ஆபத்துகளில் ஒன்று எனவும் அந்தப் பேராசிரியை கூறுகிறார்.
நம் காலங்களில் ஒழுக்கநெறிகள் அடிமட்டத்திற்கு சென்றுகொண்டிருக்கின்றன. அதுதான் உண்மை. அதன் விளைவு படுபயங்கரமானதாக இருக்கும் என அநேகர் பயப்படுகின்றனர். “சமீப காலங்களில் பொதுவுடைமை ஆட்சி வீழ்ச்சியடைந்ததுபோலவே” இன்றிருக்கும் பொருளாதார முறைமையும் மெதுமெதுவாக “சீர்கெட்டு, என்றைக்காவது ஒரு நாள் வீழ்ச்சியடையும்” என ஆரம்பத்தில் குறிப்பிட்ட டீ ட்ஸீட் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
இவை எல்லாம் உண்மையிலேயே எதை அர்த்தப்படுத்துகின்றன? என்ன வகையான எதிர்காலத்தை நாம் எதிர்பார்க்கலாம்?
[பக்கம் 6, 7-ன் படம்]
“டெலிவிஷன் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், சினிமா பெரும்புள்ளிகள், நவீன பாணி விளம்பரதாரர்கள், ‘காங்ஸ்டா’ ராப் பாடகர்கள்தான் . . . புதிய நெறிமுறைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்துபவர்கள்”