கொலைகாரனின் கொட்டத்தை அடக்குதல்
கொலைகாரனின் கொட்டத்தை அடக்குதல்
கனடாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
காட்டில் வேட்டையாட அந்தக் கொலைகாரன் பதுங்கி பதுங்கி செல்கிறான், இளசுகளை கண்டுகொள்ளாமல் பெருசுகளையே குறிவைத்து தாக்குகிறான். பலியாளைவிட இந்தக் கொலைகாரன் சின்னஞ்சிறியவனே. விறுட்டென்று செல்கிறான், முற்றிலும் வீழ்த்தும்வரை திருப்தியடைவதில்லை. கொலைகாரனை விரட்டியடிக்க அந்தப் பலியாள் படாதபாடுபடுகையில், வாழ்வா சாவா என்ற போராட்டம் தொடருகிறது. கடைசியில் அந்தக் கொலைகாரன் வெற்றிபெறுகிறான்.
யார் இந்தக் கொலையாளி? மலைநாட்டு பைன் மரத்து சின்னஞ்சிறிய வண்டுதான் அந்தக் கொலையாளி. இவனுடைய சொந்த ஊர் மேற்கத்திய வட அமெரிக்கா. கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் உட்புறத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் லாட்ஜ்போல் பைன் மரம்தான் அவனுடைய பலியாள்.
இந்தப் பகுதியிலுள்ள கிட்டத்தட்ட 35 சதவீத காட்டுப் பகுதியில் லாட்ஜ்போல் பைன் மரம் வளருகிறது. இது, நீளுருளை வடிவான மலைநாட்டு பைன் வண்டுகளின் வளர்ச்சிக்கு உகந்த இடம். அதன் அளவோ வெறுமனே மூன்றிலிருந்து எட்டு மில்லிமீட்டர்தான். ஆரம்பத்தில் இது, நோஞ்சான், கிழட்டு பைன் மரங்களையே பதம் பார்க்கிறது. ஆனால் வண்டுகளின் வம்சம் பெருகப் பெருக, அவை ஆரோக்கியமான பெரிய மரங்களையும் பதம்பார்க்க ஆரம்பித்து விடுகின்றன. (“மலைநாட்டு பைன் வண்டின் வாழ்க்கை சுழற்சி” என்ற பெட்டியை காண்க.) சமீபத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட கொள்ளை நோயால் ஒரே வருஷத்தில் மூன்று கோடி பைன் மரங்கள் படுத்துவிட்டன. அடுத்த வருஷத்தில், நோய் தொற்றிய ஒரே மரத்திலிருந்து வெளிவரும் வண்டுகளே இதே அளவுடைய இரண்டு மரங்களை மாய்த்துவிடும் என கணக்கிடப்படுகிறது.
மலைநாட்டு பைன் வண்டு சூழியலின் ஓர் இயற்கை அங்கமாக திகழ்கிறது. காட்டுத்தீயும் இந்த வண்டுகளும் முதிரும் லாட்ஜ்போல் பைன் காடுகளின் மறுசுழற்சிக்கு துணைபுரிகின்றன. ஆனால் தீப்பொறியை கண்டுபிடித்து அதை அணைப்பதற்கு எடுத்த மனித முயற்சி முதிர்ந்த, மிகவும் முதிர்ந்த மரங்கள் பேரளவில் பாதுகாக்கப்படுவதற்கு பங்களித்திருக்கிறது. வன உயிர்களின் வாழிடங்களையும் இடப்பெயர்ச்சி வழிகளையும் பாதுகாக்கவும் பொழுதுபோக்கு, தொழில் துறைகளுக்கு காடுகளை பயன்படுத்தவும் இது உதவியபோதிலும், மலைநாட்டு பைன் வண்டுகளை சமாளிக்க வேண்டிய சவாலையும் இது உருவாக்கியிருக்கிறது. ஆனால், மிகவும் பரந்துவிரிந்த இந்தக் காடுகளில் எவ்வாறு இந்தச் சின்னஞ்சிறிய வண்டுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன? எந்த முறையிலும், அழிவை தடுக்க என்ன செய்யலாம்?
துப்பறிதலும் தடயம் கண்டறிதலும்
மலைநாட்டு பைன் வண்டுகளை சமாளிப்பது துப்பறிதலோடு துவங்குகிறது. மேல்பாகத்தில் சிவப்பாக மாறிய மரங்கள் பரந்துவிரிந்த காட்டில் பறந்தபடி ஆராய்ச்சி செய்யப்படுகின்றன. இப்படிப்பட்ட மரங்கள் நோய் தொற்றியிருப்பதை சுட்டிக்காட்டுகின்றன, பச்சை பசேலென்று படுதா அணிந்த இந்தக் காட்டில் இதைக் கண்டுபிடிப்பது எளிதே. குளோபல் பொஸிஷனிங் சிஸ்டத்தை (GPS) பயன்படுத்துவதன் மூலம் நோய் தொற்றிய பகுதிகளை அடையாளம் காண முடிகிறது; அதேபோல சிவப்பு மரங்களின் எண்ணிக்கையையும் அடையாளம் காண முடிகிறது. டேட்டா பதிவுசெய்யப்பட்டு கையடக்கமான கம்ப்யூட்டரில் கவனமாக பாதுகாத்து வைக்கப்படுகிறது. பின்பு அது ஆபீஸ் கம்ப்யூட்டர்களில்
“டவுன்லோடு” செய்யப்பட்டு வலிமைமிக்க ஜியோகிராஃபிக் இன்பார்மேஷன் சிஸ்டத்தின் வாயிலாக விலாவாரியான காட்டு வரைபடங்களில் பதிவு செய்யப்படுகிறது. நோய் தொற்றிய ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் நியமிக்கப்படுகிறது, பின்பு ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிடும் எண்களை கொண்ட ஒரு பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இது நிலப்பகுதியை ஆய்வு செய்யும் குழுவுக்கு மிகவும் இன்றியமையாதது. இந்தக் குழு நோய் தொற்றிய அளவை சரிபார்ப்பதற்கு அனுப்பப்படுகிறது.ஆனால், காடுகளுக்கு உண்மையிலேயே அச்சுறுத்தலாக இருப்பது, மரங்கள் சிவப்பாக இருப்பது அல்ல, பசுமையான மரங்கள் திடீரென தாக்கப்படுவதே. அந்த வண்டுகள் நுழைந்த துவாரத்தைச் சுற்றிலும் பொதுவாக காணப்படும் பிசின் போன்ற திரவத்தால் இவை அடையாளம் கண்டுபிடிக்கப்படுகின்றன. அந்த வண்டுகள் துளையிடுகையில் அந்த மரத்தின் அடியில் விழுந்த தூசிகளை அல்லது மரத்தூள்களை வைத்து இவை கண்டுபிடிக்கப்படுகின்றன. நோய் தொற்றிய மரங்களில் பிளாஸ்டிக் ரிப்பன்கள் கட்டப்பட்டு, பெயின்டால் எண்கள் போடப்படுகின்றன. நிலத்தின் தன்மைகளும் பாதிக்கப்பட்ட மரங்களின் எண்ணிக்கையும் குறித்துக்கொள்ளப்படுகின்றன; அதோடு, நோய் தொற்றுவதை தடுப்பதற்கு என்ன செய்யப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க உத்தரவாதமுள்ள ஏஜென்ஸிகளுக்கு உதவும் பிற தகவல்களும் குறித்துக்கொள்ளப்படுகின்றன.
தடுக்கும் முறைகள்
மரங்களை வெட்டும் அளவிற்கு அந்த இடம் பெரிதாக இருந்தால், அந்தப் பகுதியை ஆராய்வதற்கு மற்றொரு குழு அனுப்பப்படுகிறது. காடுகள் அமைச்சகத்தின் அங்கீகாரத்தைப் பெற வெட்டப்படுவதைப் பற்றிய திட்டம் அவர்களிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் மறுபடியும் மரங்களை வளர்ப்பதற்காக கன்றுகளை ஊன்றி அவை தானாகவே வளரும் வரை அவற்றை கவனித்துக்கொள்வதும் மரங்களை வெட்டும் கம்பெனியின் உத்தரவாதமாகும். இந்த முறையால் மரங்களை பயன்படுத்த முடிகிறது; அதோடு நோய் பரவுவதை தடுத்து புதிய மரங்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது.
ஆனால், மரத்தை வெட்டுவது நல்லதல்ல என்றால், தனி மரத்திற்கு சிகிச்சை என்ற முறை பரிந்துரை செய்யப்படுகிறது. இது, பூச்சிக்கொல்லி மருந்துகளை ஏற்றுவதை அல்லது நோய் தொற்றிய மரத்தை வெட்டி சுட்டெரித்துவிடுவதை உட்படுத்தலாம். இரண்டாவதாக சொல்லப்பட்ட முறை, வண்டுகள் வெளிப்படுவதற்கு முன்பு பிந்தைய குளிர்காலத்தில் அல்லது முந்தைய இளவேனிற்காலத்தில் செய்யப்படுகிறது. இது மிகவும் பயன்தரத்தக்கது ஆனால் அதிக வேலையானது. இப்படிப்பட்ட நோய் தொற்றை கண்டுபிடித்து சமாளிக்கும் நிபுணர் டேல், ஒரு நாளில் வழக்கமாக செய்யப்படும் வேலையை விழித்தெழு! பத்திரிகைக்காக விவரிக்கிறார்.
“முதல் ஸ்டேஜில், சிறிய ரோட்டில் திறமையோடு டிரக்குகளை ஓட்டிச்செல்ல வேண்டும். பெரிய பெரிய மரக்கட்டைகளை கொண்டு செல்லும் டிரக்குகளும் அதே ரோட்டைப் பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்புக்காக சாலை போக்குவரத்தை கண்காணிக்க ‘டூ-வே’ ரேடியோவை பயன்படுத்துகிறோம். சாலை முடியும்போது, பனிக்கட்டியில் செல்லும் வாகனங்களை இறக்கி அவற்றில் ஏறி காட்டுக்குள் செல்வோம். எங்களுடைய GPS மற்றும் காம்பஸ்களை கவனமாக ‘பேக்’ பண்ணி கொண்டு செல்வோம். அதோடு ‘செயின் சா,’ பெட்ரோல், எண்ணெய், கோடாலிகள், ரேடியோக்கள் ஸ்னோ-ஷூ, முதல் உதவிப் பெட்டி
ஆகியவற்றையும் எடுத்துச் செல்வோம். சகதியான இடங்களிலும் மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகளிலும் நாங்கள் பயணம் செய்வோம், பல மைல் தூரத்திற்கு பழைய வழித்தடங்களின் வழியாகவும் பயணம் செய்வோம். பனிக்கட்டியில் செல்லும் எங்களுடைய வாகனங்களில் இனிமேல் செல்ல முடியாத நிலை வரும்போது, நாங்கள் ஸ்னோ-ஷூக்களை போட்டுக்கொண்டு, சிரமப்பட்டு நடந்து செல்வோம். சில இடங்களில் பனி 120 சென்டிமீட்டர் ஆழம் இருக்கும்.“பாதை மோசமாக இருக்கும் நிலப்பகுதியில் 15 கிலோகிராம் எடையுள்ள கருவிகளை எடுத்துக்கொண்டு போவது ஓரளவு சவாலான விஷயம்தான். கஷ்டப்பட்டு செல்வதால் எங்களுடைய இருதயம் படபடக்கும். அந்தப் பகுதியை கண்டுபிடிக்கையில் எங்களுக்கு எவ்வளவு சந்தோஷம்! ஆனால் இப்பொழுதுதான் உண்மையிலேயே வேலை ஆரம்பமாகிறது. துல்லியமாக குறிபோடுபவரைப்போல, பயிற்சிபெற்ற, தகுதிவாய்ந்த ஒருவர் நோய் தொற்றிய மரங்களை வெட்டி சாய்க்கிறார். அதற்குப் பிறகு, எரிப்பதற்கு வசதியான அளவில் அந்த மரங்களை அக்குழுவினர் வெட்டுகின்றனர். கூட்டுப்புழுவை (லார்வா) அடியோடு ஒழிப்பதற்கு மரப்பட்டையை முற்றிலும் எரித்துவிட வேண்டும். மதிய உணவுக்காக வேலையை நிறுத்தும்போது, மைனஸ் 20 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருப்பதால் நெருப்பு எரிவது எங்களுக்கு இதமாக இருக்கிறது. நாங்கள் அதன் கதகதப்பில் குளிர்காய்வோம், உறைந்துபோன சான்ட்விச்சுகளை சூடாக்கி சாப்பிடுவோம். பிறகு மீண்டும் வேலையை ஆரம்பிப்போம். ஆனால் வெகு சீக்கிரத்திலேயே குளிர்கால வானம் இருட்ட ஆரம்பித்து விடுகிறது, வீட்டுக்குச் செல்ல நேரமாகிவிட்டது என்பதை இது எங்களுக்கு நினைப்பூட்டுகிறது.”
காட்டில் வேலை செய்தல்
காட்டு வேலையாட்களுடைய வேலை மிகவும் கடினமானது. திறமைமிக்க இந்த வேலையாட்கள் சவால்களை சந்திக்கிறார்கள், அதோடு அவர்களைச் சுற்றியுள்ள படைப்பைக் கண்டும் குதூகலம் அடைகிறார்கள். மலைக்க வைக்கும் இயற்கை காட்சிகளையும் நெஞ்சைவிட்டு நீங்கா வனவாழ்க்கையையும் பார்த்துப் பரவசம் அடைகிறார்கள். காலுக்கடியிலுள்ள பனியிலிருந்து கீறிச்சொலியுடன் கிரௌஸ் பறந்து வருவது அல்லது எதிர்பாராமல் அணில்கள் வளையிலிருந்து அங்குமிங்கும் ஓடுகையில் வேலை செய்பவருடைய பேண்ட் காலில் ஏறிவிடுவது பயத்தை ஏற்படுத்தினாலும் தீங்கற்றவைதான். சில சமயங்களில் உயிரையே பறிக்கும் ஆபத்துகளையும் சந்திக்கிறார்கள். உதாரணமாக, செங்கரடி அல்லது கருங்கரடி விரட்டி வரலாம். ஆனால் பொதுவாக வேலையாட்களுக்கு விழிப்புணர்வும் பயிற்சியும் இருந்தால் ஆபத்துகளை விரட்டியடிக்கலாம், தேவையில்லாத பயமின்றி வனத்தின் வனப்பை கண்டு ரசிக்கலாம்.
பூமியின் வளாதாரங்களைப் பயன்படுத்துவதில் பரவசமூட்டும் முன்னேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மலைநாட்டு பைன் வண்டுகள் போன்றவற்றை சமாளிப்பதன் மூலம் அநேகர் நம்முடைய விலையேறப் பெற்ற மரங்களை பாதுகாப்பதற்கு கடும் முயற்சி செய்கிறார்கள். நம்முடைய அற்புத காடுகளைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆதி திட்டத்தின்படி அவற்றை பூரண ஒத்திசைவுடன் நாம் கவனித்துக்கொள்ளும் காலத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கிறோம்.
[பக்கம் 22-ன் பெட்டி/படம்]
மலைநாட்டு பைன் வண்டின் வாழ்க்கை சுழற்சி
கோடையின் மத்திபத்தில் பருவமடைந்த பெண் வண்டு லாட்ஜ்போல் பைன் மரத்தின் மென்பகுதியை அடைய மரப்பட்டையில் துளையிடுகிறது. ஆணுடன் இணைசேர்ந்தவுடன், சுமார் 75 முட்டைகள் இடுகிறது. வண்டுகளை கொன்றுவிடும் பிசின் ஒழுகாமலிருக்க மரத்தின் மென்பகுதிக்குள் நீலநிற கறையுடைய பூஞ்சையை அனுப்புகிறது. அதன்பின்பு முட்டைகள் பொரித்து லார்வா பருவத்தில் இருக்கும்போது மரத்திலுள்ள ப்ளோயம் (சிக்கலான ஒருவகை திசு) என்பதை உட்கொள்கிறது. வண்டு வெற்றிகரமாக தாக்கிய சில வாரங்களில், மரத்திற்கு செல்ல வேண்டிய தண்ணீரும் போஷாக்கும் தடைபடுவதால் அந்த மரம் இறந்துவிடுகிறது. குளிர்காலத்தில் லார்வா வளர்ந்து ஜிவ்வென்று பறப்பதற்கு கோடையில் வெளியே வருகிறது, இப்போது அது புதிய மரங்களை “கொலை” செய்வதற்காக அதே சுழற்சியை ஆரம்பிக்கிறது.
[படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
வளர்ந்தது
முட்டைகள்
லார்வா
பியூப்பா
[பக்கம் 22, 23-ன் படங்கள்]
பாதிக்கப்பட்ட மரத்தின் குளோசப்
நோய் தொற்றிய மரங்கள்
பாப்கார்ன் வடிவ பிசின்