வாசா அன்று கடலுக்கு விருந்து இன்று கண்ணுக்கு விருந்து
வாசா அன்று கடலுக்கு விருந்து இன்று கண்ணுக்கு விருந்து
ஸ்வீடன் நாட்டு விழித்தெழு! நிருபர்
ஆகஸ்ட் 10, 1628, அழகிய காலை வேளை. ஸ்வீடன் நாட்டு தலைநகர் ஸ்டாக்ஹோம் துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ராஜ களையுடன் கம்பீரமாக காட்சியளித்தது வாசா. மூன்று ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்தப் போர்க் கப்பல் ஸ்வீடன் நாட்டு கப்பற்படைக்கு கைகொடுக்க அன்றைய தினம் முதன்முறையாக நீந்திச் சென்றது.
வாசா சாதாரண போர்க் கப்பலே அல்ல. அது உலகிலேயே பலமிக்க ஒன்றாக திகழ வேண்டுமென விரும்பினார் அரசர் இரண்டாம் கஸ்டாவஸ் அடால்ஃபஸ் வாசா. டென்மார்க்கினர் இரு அடுக்கு பீரங்கிகள்கொண்ட போர்க் கப்பலை உருவாக்குவதைக் கேள்விப்பட்ட அரசர், வாசாவுக்கும் இரண்டாவது பீரங்கி அடுக்கை கட்டும்படி ஆணையிட்டதாக சிலர் சொல்கின்றனர். தன் குடும்பப் பெயரை தாங்கவிருந்த கப்பல் எதற்கும் சளைக்காமல் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென விரும்பினார்.
அவரது ராஜரீக அதிகாரத்தையும் மகிமையையும் பகட்டாக பறைசாற்றவே வாசா முதன்முதலாக பயணித்ததாம். பலத்திற்கு 64 பீரங்கிகளும், அழகிற்கு 700-க்கும் அதிகமான சிற்பங்களும் அலங்காரப் பொருட்களும் தரித்தவாறு அதன் பயணம் துவங்கியது. அதற்கான செலவு, ஸ்வீடன் நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் 5 சதவீதத்திற்கும் அதிகம். இந்தப் பலமிக்க போர்க் கப்பல், இன்னும் சரியாக சொன்னால், “மிதக்கும் கலைக் கண்காட்சி,” அதுவரை கட்டப்பட்டதிலேயே நிகரற்று மிளிரியது. இதனால்தான் பெருமிதம் பொங்க, மகிழ்ச்சி ஆரவாரத்துடன் மக்கள் அதை வழியனுப்பி வைத்தனரோ!
அழிவும் அவமானமும்
வாசா ஒரு கிலோமீட்டர் தூரத்தைத்தான் தாண்டியிருக்கும். திடீரென பலத்த காற்று அடிக்க, கப்பல் ஒருபக்கமாக சாய, பீரங்கி துளைகளுக்குள் தண்ணீர் குபுகுபுவென புகுந்தது. மிதந்து பழகுவதற்கு முன்பாகவே மூழ்கிப்போனது வாசா. கப்பல்துறையின் சரித்திரத்திலேயே மிகக் குறுகிய தூரம் பிரயாணம் செய்த கப்பல் இதுவே.
பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஸ்வீடன் நாட்டு கப்பற்படையின் மானம், போரினாலும் அல்ல, புயல் அடித்து கடல் கொந்தளித்ததாலும் அல்ல, ஆனால் வெறும் காற்றினால் மூழ்கிப்போனது. பயணம் துவங்கிய அதே துறைமுகத்தில் பயணம் முடிந்தது. சுமார் 50 பேர் கப்பலோடு கப்பலாக சேர்ந்து மூழ்கியது கவலையை கூட்டியது. தேசம் தலைநிமிர்ந்து நிற்கும்படி கௌரவ சின்னமாக விளங்குவதற்குப் பதிலாக, வாசா தலைகுனிவிற்கும் நம்பிக்கைக் குலைவிற்கும் காரணமானது.
இந்த இழிவான அழிவிற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க விசாரணை நடந்தது. ஆனால் குறிப்பாக எவர்மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை. ஏனெனில் கிடைத்த அத்தாட்சிகள், ராஜாவும் ஸ்வீடன் நாட்டு கப்பற்படையின் துணைத் தலைவரான க்ளாஸ் ஃப்ளெமிங்குமே இந்த அழிவிற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று காட்டின.
ராஜாவின் கட்டளையின் பேரிலேயே கப்பலை கட்டியவர்கள் தங்களுக்கு பழக்கமில்லாத டிசைன்களை முயன்று பார்த்தனர். இப்படித்தான் வாசா சமச்சீரை இழந்தது. விபரீத சம்பவத்திற்கு முன்பு துணைத் தலைவர் ஃப்ளெமிங் கப்பலின் உறுதியை பரிசோதித்துப் பார்க்க சோதனை நடத்தினார். முப்பது ஆட்கள் வரிசையாக கப்பலின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு ஓடினர். மூன்றாம் முறையாக இவர்கள் ஓடியபின், சோதனை நிறுத்தப்பட்டது. ஏனெனில் இனியும் அவர்கள் ஓடினால் அத்தருணமே கப்பல் மூழ்கிவிடும் என்பதை ஃப்ளெமிங் உணர்ந்தார். ஆனாலும் அவர் அதன் முதல் பயணத்தைத் தடுக்கவில்லை. முக்கிய பிரமுகர்களான ராஜாவும் துணைத் தலைவருமே சம்பந்தப்பட்டிருந்ததால் வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.
1664-65-ல், ஸ்வீடன் நாட்டு முன்னாள் படைத்தலைவர் ஒருவர், சாதாரண டைவிங் பெல் (diving bell) கருவியின் மூலம் வாசாவின் பெரும்பாலான பீரங்கிகளை மீட்டுவிட்டார். அதன்பின் 30 மீட்டர் ஆழம் வரை மெதுமெதுவாய் படுகையின் சகதியில் மூழ்கிய வாசா, மக்களின் மனதிலிருந்தும் மெதுமெதுவாய் மறைந்தது.
சகதியிலிருந்து மீட்பு
ஆகஸ்ட் 1956-ல், புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஆன்டர்ஸ் ஃப்ரான்சேன், கோர் சாம்ப்ளர் (core sampler) என்ற கருவியால் கடல் படுகையிலிருந்து ஒரு மரத்துண்டை எடுத்தார். வாசாவை கண்டுபிடிக்க அவர் வருடக்கணக்காக பழைய ஆவணங்களை ஆராய்ந்து கடல் படுகையை அலசிப்பார்த்திருந்தார். இப்போது அவர் பட்ட பிரயாசத்திற்கு பலன் கிடைத்தது. வாசாவை கண்டுபிடித்துவிட்டார்! மிகக் கவனமான மீட்புப் பணிகள் கையாளப்பட்டு, வாசா அப்படியே அலாக்காக சகதியிலிருந்து எடுக்கப்பட்டு, தண்ணீருக்கு
அடியிலேயே இழுத்துவரப்பட்டு, துறைமுகத்தில் தூக்கி வைக்கப்பட்டது.ஏப்ரல் 24, 1961, ஸ்டாக்ஹோம் துறைமுகத்தில் மக்கள் கூட்டம் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது. 333 ஆண்டுகளாக கடலுக்குள் தலைமறைவான வாசா, மீண்டும் தலைகாட்டியது. இம்முறை சுற்றுலா பயணிகளுக்கு அழகுப் பொருளாகவும் கடல் சார்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு அரும்பொருளாகவும் ஆனது. 25,000-க்கும் அதிகமான கலைப்பொருட்கள், இந்த 17-ஆம் நூற்றாண்டு போர்க் கப்பலைக் குறித்து ஆச்சரியமான விவரங்களை அளித்தன. அக்காலத்து கப்பல் கட்டுமானப் பணியையும் சிற்பக் கலையையும் பற்றி புதுமையான விஷயங்களை வெளிப்படுத்தின.
வாசாவும் அது சுமந்து சென்ற கலைப்பொருட்களும் எப்படி அவ்வளவு காலமும் அழியாமல் இருந்தன? சில காரணங்கள்: அது மூழ்கியபோது புத்தம் புதிதாக இருந்தது, இற்றுப்போகாதபடி படுகையின் சேறு அதைப் பாதுகாத்தது, மேலும், உப்புக் குறைவான தண்ணீரில் மரக்கட்டையை அரிக்கும் கடல்புழு வாழ்வதில்லை.
வாசா சுமார் 120 டன் எடைபாரம் (ballast) மட்டுமே பெற்றிருந்தது. அது ஸ்திரமாக இருக்க, இதைவிட இரண்டு மடங்கிற்கும் அதிக எடை தேவைப்பட்டதாக நிபுணர்கள் கணக்கிடுகின்றனர். ஆனால் அந்த எடைபாரத்திற்கு போதுமான இடம் கப்பலில் இல்லை. ஒருவேளை அவ்வளவு அதிக பாரத்தை வைத்திருந்தால் கீழ் வரிசையிலிருந்த பீரங்கியின் துளைகள் தண்ணீரை தொட்டிருக்கும். அழகில் குறைவில்லாதிருந்தும், சமச்சீரில் குறையிருந்ததால் அழிவை சந்தித்தது வாசா.
உலகிலேயே மிகப் பழமையான, சேதமடையாத, தெளிவான அடையாளமுள்ள இந்த முழு கப்பல் இப்போது அதற்குரிய மியூஸியத்தில் சுகபத்திரமாக இருக்கிறது. 1628-ல் மூழ்கிப்போனதால் அன்றிருந்த மேனி அழியாமல், 17-ஆம் நூற்றாண்டின் ராஜ கம்பீரத்தோடு நிற்கும் இதைக் காண, ஆண்டுதோறும் 8,50,000 பார்வையாளர்கள் செல்கிறார்கள். அகங்காரத்தாலும் அலட்சியத்தாலும் சரியான கப்பல்கட்டும் முறைகளை வேண்டுமென்றே பின்பற்றாமல் போன அதிகாரிகளின் அறிவீனத்திற்கு இது ஞாபகச் சின்னம்.
[பக்கம் 24-ன் படம்]
அரசர் இரண்டாம் கஸ்டாவஸ் அடால்ஃபஸ் வாசா
[படத்திற்கான நன்றி]
Foto: Nationalmuseum, Stockholm
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
300 ஆண்டுகளுக்கும் மேல் கடலுக்கடியில் தூங்கிய வாசா இப்போது உலகின் கண்கவரும் காட்சி பொருள்
[பக்கம் 25-ன் படக்குறிப்பு]
Genom tillmötesgående från Vasamuseet, Stockholm
[பக்கம் 25-ல் உள்ள படத்திற்கான நன்றி]
Målning av det kapsejsande Vasa, av konstnär Nils Stödberg