ஸ்பிரிங் ஆக்ஷன் கங்காரு
ஸ்பிரிங் ஆக்ஷன் கங்காரு
ஆஸ்திரேலியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
“தினமும் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வரும்போது, வீட்டு வாசற்படியில் என்னுடைய செல்லமான குட்டிக் கங்காரு ஜோய் என்னை எதிர்பார்த்து காத்திருப்பான்” என்று சொல்கிறார் ஜான். “நான் கதவை திறந்தவுடன், துள்ளிக்குதித்து வந்து முன்னங்கால்களால் அப்படியே என்னை கட்டிப் பிடித்துக்கொள்வான், நானும் அவனை கட்டிப் பிடித்துக்கொள்வேன். “‘உங்களை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!’ என்பதுபோல நாங்கள் இருவரும் பரிபாஷையில் பேசிக்கொள்வோம். பிறகு குதூகலிக்கும் நாயைப் போல கொஞ்சம் தூரம் ஓடுவான், பிறகு திரும்பி வந்து என்னை கட்டிக்கொள்ளுவான்; இவ்வாறு நாங்கள் வீட்டுக்குள் நுழையும்வரை ஜோய் அங்குமிங்கும் துள்ளிக் குதித்துக்கொண்டே வருவான்.”
ஜான் குடும்பத்தைப் போலவே, ஆஸ்திரேலிய புதர்காடுகளில் வசிப்பவர்கள் குட்டி கங்காருகளை வளர்ப்பதற்கு சட்டப்பூர்வ அனுமதி பெற்றிருக்கிறார்கள். பொதுவாக, இந்தக் கங்காருகள் அநாதைகள்—ஒருவேளை சாலையை கடக்கும்போது அம்மா கங்காருகள் சாவை தழுவியதால் குழந்தைகளாக தத்தெடுத்து வளர்க்கப்படுகிறவை. இந்தச் செல்லப்பிராணிக்கு “ஜோய்” என்று ஜான் பெயரிட்டபோதிலும், சொல்லப்போனால், ‘பேபி’ கங்காருகளுக்கு பொதுவாக வழங்கப்படும் வார்த்தையே இதுதான்.
சாதாரணமாகவே, ஜோயை தத்தெடுத்த குடும்பத்தினர் “காட்டில்” வசிப்பது போன்ற உணர்வை சீக்கிரத்திலேயே அதற்கு ஊட்டிவிடுகிறார்கள். அதற்காக எடுக்கும் முயற்சிகளில் முதலாவது ‘பௌச்’ ‘பரிசளிப்பது’—அதாவது தாயின் வயிற்றில் இருப்பதைப் போன்ற ஒரு பையை அவற்றிற்கு வீடாக்கி கொடுப்பது. குடியிருக்கும் இடத்திலிருந்து சற்று தள்ளி
—அதற்கு கதகதப்பூட்டுவதற்கு அடுப்பிலிருந்து சற்று தூரத்தில்—ஒரு பெரிய, கெட்டியான பையை மாட்டிவிடுகிறார்கள். தாய் கங்காருவின் வயிற்றிலிருக்கும் பை போல அந்தப் பையிலும் குறுக்காக வெட்டப்பட்டிருக்கும். பின்பு ஜோயை அந்தப் பையில் போட்டு, அதற்காகவே விசேஷமாக தயாரிக்கப்பட்ட பாலை இளம்சூட்டில் புட்டியில் கொடுக்கிறார்கள். இந்த முறையில் அநேக “ஜோய்”கள் உயிர் பிழைக்க முடிகிறது. விரைவிலேயே அவை தங்களுடைய புதிய பைகளுக்கு பழக்கப்பட்டு விடுகின்றன, அது தங்களுடைய தாயின் மடி-பை என நினைத்துக்கொண்டு அதற்குள் முதலில் தலை நுழையுமாறு ‘டைவ்’ அடிக்கின்றன.ஒரு கங்காருவை நீங்கள் எப்படி வருணிப்பீர்கள்?
அடிவயிற்றிலுள்ள பையில் குட்டிகளை வளர்க்கும் பிராணிகள் ஆங்கிலத்தில் ‘மார்ஸுபியல்ஸ்’ (marsupials) என அழைக்கப்படுகின்றன. ‘மார்ஸுபியல்ஸ்’ பிராணிகளில் சுமார் 260 வகைகள் இருக்கின்றன; அவற்றில் கங்காரு, கோலா, ‘வாம்பேட்,’ ‘பேன்டிகூட்,’ ‘ஆப்போஸம்’ ஆகியவை அடங்கும். இவற்றில் ‘ஆப்போஸம்’ மட்டுமே வட அமெரிக்காவுக்குரியது. வினோதமான இந்த விலங்குகளை, முக்கியமாக கங்காருவை, ஆரம்பகால ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தபோது, வீட்டிற்கு வந்து மக்களுக்கு அதை விவரிப்பதற்கு படாதபாடுபட்டதில் ஆச்சரியமில்லை. “கங்காரு” என்ற வார்த்தையை எழுத்து வடிவில் ஆங்கிலத்தில் முதன்முதல் கொடுத்தது பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் கேப்டன் ஜேம்ஸ் குக். ‘முயல் அல்லது மான்போல துள்ளும் உயரமான ஒருவகை நாய்க்கு’ அந்த விலங்கை அவர் ஒப்பிட்டார். பிற்பாடு உயிருள்ள கங்காருவை லண்டனில் பார்வைக்கு வைத்தபோது, அது மெய்சிலிர்க்க வைத்தது.
கங்காருவுக்கு பெரிய காதுகள் இருக்கின்றன, மான்போன்ற தலையில் அவை அழகாக சுழலுகின்றன. சிறிய ஆனால் வலிமைமிக்க முன்னங்கால்கள் மனித கைகளைப் போலவே இருக்கின்றன—முக்கியமாக அவை நேராக நிற்கும்போது. கங்காருவுக்கு பெரிய, தசைப்பற்றுள்ள இடைகளும் இருக்கின்றன; பாம்புபோல வளையும் நீளமான, தடித்த வால் இருக்கிறது; பெரிய பாதங்களும் இருக்கின்றன—இவை நீண்ட பாதங்கள் என அர்த்தத்தைத் தரும் “மேக்ரோபோடிடே” என்ற மற்றொரு பெயரையும் கங்காருவுக்கு பெற்றுத் தந்திருக்கின்றன.
மேக்ரோபோடிடேவில் சுமார் 55 வகைகள் இருக்கின்றன. மனிதனுடைய அளவிலிருந்து எலியின் அளவு வரை வித்தியாசமான உடல்வாகில் இருக்கின்றன. அனைத்து மேக்ரோபோடிடேவிற்கும் குட்டையான முன்னங்கால்களும் குதிப்பதற்கு நெட்டையான பின்னங்கால்களும் இருக்கின்றன. சிகப்பு நிற கங்காருகள், சாம்பல் நிற கங்காருகள், வாலரூஸ் அல்லது யூரோஸ் ஆகியவை மிகப் பெரியவை. மூக்கிலிருந்து வாலின் நுனிவரை ஒரு சிகப்பு நிற ஆண் கங்காருவின் அளவு 200 சென்டிமீட்டருக்கு அதிகம், அது 77 கிலோகிராம் எடையுடையதாக இருந்தது. கங்காருகளில் சிறிய வகைகள் ‘வாலபீஸ்’ என அழைக்கப்படுகின்றன.
மரங்களில் வசிக்கும் கங்காருவை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா அல்லது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்சரி, கங்காருகளின் குடும்பத்தில் “குரங்கு” கங்காருகள்—மர கங்காருகள்—இருக்கின்றன. நியூ கினியிலும் ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதிகளின் வெப்பமண்டல மழைக் காடுகளிலும் இவை காணப்படுகின்றன; குட்டையான கால்களுடைய, லாவகமாகவும் வேகமாகவும் துள்ளும் இந்த விலங்குகள் அவற்றிற்கு அதிக பழக்கமான இடமாகிய மரங்களில் ஒரு கிளையிலிருந்து அல்லது ஒரு மரத்திலிருந்து மற்றொன்றுக்கு சுமார் 9 மீட்டர் தூரம் வரை தாவும் திறமை பெற்றவை. இரவு நேரத்தில் மரத்திலிருந்து கீழே இறங்கிவந்து, அங்கே முக்கியமாக புற்பூண்டுகளையும் சிலவகை புழுப்பூச்சிகளையும் சாப்பிடுகின்றன.
வேகம், நளினம், திறமை
மெதுவாக செல்லும்போது கங்காரு அசிங்கமாகவும் அலங்கோலமாகவும் காட்சியளிக்கிறது. பின்னங்கால்களை முன்னால் தூக்கும்போது அதன் எடையை தாங்குவதற்கு வாலும் குட்டையான முன்னங்கால்களும் முக்காலிபோல அமைகின்றன. மெதுவாக நடக்கும்போதுதான் இப்படி, ஓடும்போது நளினமாக இருக்கும். மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் குதித்துச் செல்லும்போது, பெரிய வாலினால் தங்களை சமநிலைப்படுத்திக்
கொள்கின்றன. அவை “அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோமீட்டர் [38 மைல்] வேகத்தில் செல்ல முடியும்” என்று த உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. பெரிய கங்காருவின் விஷயத்தில், அது வேகமான ஒரே துள்ளலில் 9 முதல் 13.5 மீட்டர் தூரத்திற்கு தாவிச்செல்ல முடியும்—இது கிட்டத்தட்ட பறப்பதற்கு சமமான பாய்ச்சல்!கங்காருகள் வேகத்தில் மட்டுமல்ல, ஆற்றலை பயன்படுத்துவதிலும் திறம் படைத்தவை. கங்காரு குறைந்த வேகத்தில் தாவிச்செல்லும்போது பயன்படுத்தும் ஆக்ஸிஜனைவிட அதிவேகத்தில் தாவிச்செல்லும்போது குறைவாக உபயோகித்து ஆற்றலை திறமையாக பயன்படுத்துகிறது என ஆஸ்திரேலியா, மெல்போர்னில் உள்ள மோனாஷ் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் யூவ் புரோஸ்க் சொல்கிறார். மணிக்கு 20 கிலோமீட்டர் [12 மைல்] அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் செல்லும்போது, இதுபோன்ற எடையுடைய நாலு கால் பிளாசன்டல் பாலூட்டியைவிட [அதாவது, முழு வளர்ச்சியடைந்த நிலையில் பிறக்கும் நாய் அல்லது மான் போன்ற பாலூட்டியைவிட] தாவிச்செல்லும் இந்தக் கங்காரு பயன்படுத்தும் ஆற்றல் குறைவே என புரோஸ்க் கணக்கிட்டார்.” கங்காரு ஆற்றலை திறமையாக பயன்படுத்துவதன் காரணமாக, களைப்படையாமலேயே நெடுந்தூரத்திற்குப் பயணம் செய்ய முடியும். ஆனால் எப்படி இந்தக் கங்காருவால் அதிக ஆற்றலை விரயமாக்காமலேயே ஓட முடிகிறது?
இதன் இரகசியம் அதன் நீண்ட ‘ஆகிலஸ்’ தசைநாண்களில் இருக்கிறது. “கங்காருகள் கால்களில் இரண்டு ஸ்பிரிங் வைக்கப்பட்டிருப்பதுபோல குதித்து செல்கின்றன” என்று சொல்கிறார் புரோஸ்க். மனிதனுடைய பின்னங்காலின் சதைப்பகுதியில் இணைக்கப்பட்டிருப்பதைப் போல, கங்காருவின் தசைநாண்கள் கீழே ஊன்றும்போது மீளுகின்றன, எழும்பும்போது சுருங்குகின்றன. வித்தியாசமான வேகத்தில் சென்றாலும் ஒவ்வொரு வினாடிக்கும் (சிகப்பு கங்காரு கிட்டத்தட்ட இரண்டுமுறை) ஒரே அளவாகவே கங்காருகள் துள்ளுகின்றன. வேகமாக செல்வதற்கு அவை வெறுமனே குதிக்கும் தூரத்தை அதிகப்படுத்துகின்றன. கங்காரு திடுக்கிடும் சமயம் மாத்திரமே இதற்கு விதிவிலக்கு. அச்சமயத்தில் நன்கு விரைவுபடுத்துவதற்காக சிறிய, வேகமான சில துள்ளல்களில் ஓட ஆரம்பிக்கின்றன.
கங்காருகள் நீந்துவதிலும் கில்லாடிகள். அவற்றின் வலிமைமிக்க கால்களைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், வாலை அங்குமிங்கும் சுழற்றுவதன் மூலமும் கூடுதலான உந்துவிசையைப் பெறுகின்றன. நாய்கள் துரத்தும்போது, குளத்திலோ ஆற்றிலோ குதிப்பதன் மூலம் அவற்றின் திறமையை பயன்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது. இதையும் மீறி கங்காருவை ஒரு நாய் பிடிக்க துணிந்தால், கங்காரு தன்னுடைய தசைப்பற்றுள்ள முன்னங்கால்களாலும் ஐந்து விரல்களைக் கொண்ட கூர்மையான நகங்களாலும் சட்டென்று அதை தண்ணீருக்குள் தள்ளிவிடும். ஜானுடைய குடும்பத்திற்கு சொந்தமான சிறிய தண்ணீர் தேக்கத்தில் காட்டிலிருந்து வந்த ஒரு ஆண்
கங்காருவுடன் இரண்டு நாய்கள் மல்லுக்கட்டியபோது இவை இரண்டும் கிட்டத்தட்ட மூழ்கியேவிட்டன.மார்ஸுபியல் பிறப்பின் அதிசயம்
பெரிய கங்காருகள் பலமாகவும் கட்டுறுதியுடனும் இருந்தாலும், பிறக்கும்போது அவை வளர்ச்சியடையாமலும் மிக மென்மையாகவும் இருக்கின்றன. சுமார் இரண்டரை சென்டிமீட்டர் நீளமும் சில கிராம் எடையும் கொண்ட இளஞ்சிவப்பு புழுவைப் போலவே, அவை முடியில்லாமலும் கண் திறக்காமலும் செவிடாகவுமே பிறக்கின்றன. ஆனால், நகங்களைக் கொண்ட வளர்ச்சியடைந்த முன்னங்கால்களாலும் முகரும் புலனுணர்வாலும் இந்தச் சிறிய “புழு” இயல்புணர்ச்சியால் தாயின் உரோமத்தில் ஊர்ந்துசென்று அதன் பைக்குள் செல்கிறது. பைக்குள் இருக்கும்போது, நான்கு முலைக் காம்புகளில் ஒன்றை கவ்விக்கொள்கிறது. உடனே அந்த முலைக்காம்பு அந்தக் குட்டியின் வாயில் உப்பிக்கொண்டு, பல வாரங்களுக்கு அதை உறுதியாக பிடித்துக்கொள்கிறது. தாய் பயணிக்கும் விதத்தைப் பார்க்கையில், உறுதியான பிடிப்பு நிச்சயமாகவே ஓர் உறுதுணையே! சொல்லப்போனால், அந்த முலைக் காம்பிலிருந்தே அந்தக் குட்டி வளருகிறது என்பதாக அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் நினைத்தனர்; ஏனெனில் அந்த அளவுக்கு அந்தப் பிடிப்பு பயனுள்ளதாக இருக்கிறது!
கூடிய விரைவில் அந்த குட்டி வளர்ந்துவிடும், பிறகு அந்தப் “பையிலிருந்து” தற்காலிகமாக வெளியே வரும், பிறகு அந்தப் பையை பயன்படுத்த வேண்டியிராத ஒருநாள் வரும். ஆனால், ஏழு முதல் பத்து மாதங்களுக்குப்பின், அது முழுமையாக பால் மறந்தப்பின், அந்தப் பையை நிரந்தரமாக மறந்துவிடும். ஜோய் முதலில் முலைக்காம்பை உறுதியாக பிடித்துக்கொண்டிருந்த காலத்திற்கு மீண்டும் சென்று, கங்காருவின் மற்றொரு இனப்பெருக்க அதிசயத்தைப் பார்க்கலாம்.
புதிதாக பிறந்த அந்த கங்காரு தாயின் முலைக்காம்பை பிடித்துக்கொண்ட சிலநாட்களுக்குப்பின், அந்தத் தாய் மறுபடியும் உறவுகொள்கிறாள். இந்த உறவினால் வந்த கரு ஒரு வாரத்திற்கு வளருகிறது, அதன்பின் அது வளர்ச்சியடையாமல் அப்படியே கிடப்பில் இருந்துவிடுகிறது. இதற்கிடையில், மூத்த கங்காரு அந்தப் பையில் தொடர்ந்து வளருகிறது. பெரிய ஆனால் பால்மறக்காத “குழந்தை” அந்தப் பையை விட்டுவிடும்போது, அந்தக் கரு மீண்டும் கருப்பையில் வளரத் தொடங்குகிறது. 30 நாள் கர்ப்ப காலத்திற்குப்பின், அதுவும் ஒரு முலைக்காம்பை பிடித்துக்கொள்கிறது, ஆனால் மூத்த கங்காரு பால்குடிக்கும் காம்பை இது பற்றிக்கொள்வதில்லை.
அங்குதான் கங்காருவின் மற்றொரு உயிரியல் அதிசயம் நடைபெறுகிறது. கடைக்குட்டிக்கு ஒருவகையான பாலையும் முதல் குட்டிக்கு ஒரு வகையான பாலையும் அந்தத் தாய் தருகிறாள். இதைப் பற்றி சயன்டிஃபிக் அமெரிக்கன் இவ்வாறு சொல்கிறது: “இரண்டு தனித்தனி பால் சுரப்பிகளில் சுரக்கப்படும் பால், அளவிலும் ஆக்கப்பொருள்களிலும் முற்றிலும் வித்தியாசப்படுகின்றன. ஒரே விதமான ஹார்மோன் சூழ்நிலைமைகளில் இது எப்படி சாத்தியம் என்பது சிக்கலான கேள்வி.”
கங்காருகளை எங்கே பார்க்கலாம்
கங்காருகளை இயற்கை சூழலில் நீங்கள் பார்க்க விரும்பினால், நகர்ப்புறங்களை விட்டு ஆஸ்திரேலிய புதர் காடுகளுக்குள், அல்லது மிக தொலைவிலுள்ள குடியேற்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். தனித்தனியாகவும் சிறு கூட்டங்களாகவும் பெருங்கூட்டங்களாகவும் புல்லையும் சிறுசெடிகளையும் தேடி செல்லும் கங்காருகளை பார்க்கலாம். அவற்றை பெரிய ஆண் கங்காருகள் தலைமைதாங்கி வழிநடத்துகின்றன. கங்காருகள் முக்கியமாக இரவில் சாப்பிட்டு, சுட்டுப் பொசுக்கும் பகல்வேளையில் நிழலில் ஓய்வெடுக்கின்றன. ஆகவே அதிகாலை வேளையே அல்லது அந்திவேளையே அவற்றை பார்ப்பதற்கு தகுந்த வேளை. ஆனால் குளிர்காலத்தில் பகல் பூராவும் சூட்டிப்பாக இருக்கலாம். எப்படியிருந்தாலும்சரி, டெலிஃபோட்டோ லென்ஸ்களையும் பைனாகுலர்களையும் கொண்டுவர மறவாதீர்கள்—காட்டு கங்காருகள் மனிதர்களை தவிர்த்து ஒதுங்கும் விலங்குகள்.
பொதுவாக, ஆஸ்திரேலியா அல்லது மற்ற நாடுகளில் பெரும்பாலும் மிருகக் காட்சி சாலைகளில், வனவிலங்கு சரணாலயங்களில், தேசிய பூங்காக்களில் கங்காருவை நீங்கள் பார்க்கலாம். அடிக்கடி மனிதர்களைப் பார்ப்பதால் இந்தக் கங்காருகள் வெட்கப்படாமல் இருக்க பழகிக்கொண்டுவிட்டன. ஆகவே உங்களுக்கு குளோசப் காட்சிகள் கிடைக்கலாம். தாயின் மடியிலிருந்து எட்டிப் பார்த்தவாறு இருக்கும் சேயின் ‘போஸ்’கூட உங்களுக்கு கிடைக்கலாம். பெரிய ‘ஜோய்கள்’ தாயின் மடிக்குள் ‘டைவ்’ அடிக்கையில் நம் முகத்தில் புன்னகை மலரை விரியச் செய்கிறது. தாயின் மடிக்குள் ‘டைவ்’ அடிக்கையில் நீண்ட பின்னங்கால்கள் அசிங்கமாக வெளியில் துருத்திக்கொண்டிருப்பதைக் காணும்போது, ஷாப்பிங் பேக்கில் நிறைய பொருட்களை திணித்து வைத்தது போல தாய் கங்காரு காட்சியளிக்கிறாள். (குட்டி கங்காருகளின் உடல் முழுவதும் கால்கள்தான் போலும்!) அழகிய ஆண் கங்காரு உங்களுக்கு நிமிர்ந்த, கம்பீரமான தோரணையில் ‘போஸ்’ கொடுக்கலாம். யாருக்குத் தெரியும்? நீங்கள் ஒருவேளை விளையாட்டுக்கு சண்டை போட தயாராக நிற்கும் இரண்டு பெரிய ஆண் கங்காருக்களை காணலாம், தொடர்ந்து அவை சண்டை போட்டால் அவை குத்துச் சண்டை ‘வீரர்களே’!
ஆனால் அநேகருக்கு, அருமையான காட்சி என்றால் அதிவேகத்தில் துள்ளிச் செல்லும் சிவப்பு அல்லது சாம்பல் நிற பெரிய ஆண் கங்காருவை பார்ப்பதுதான். உண்மைதான், பிற விலங்குகளும் வேகமாக ஓடலாம் அல்லது குதிக்கலாம், ஆனால் வேறெந்த விலங்கிலும் இப்பேர்ப்பட்ட அழகையும் ஆற்றலையும் வலிமைமிக்க இரண்டு கால்களில் ஸ்பிரிங் போல் துள்ளிச் செல்வதையும் ஒருங்கே நீங்கள் காண முடியாது.
[பக்கம் 17-ன் படம்]
ஸ்பிரிங் போன்ற பாதங்களின் இரகசியம் அதன் நீண்ட ‘ஆகிலஸ்’ தசைநாண்களில் இருக்கிறது