ப்ராக்கில் புதுமையான கடிகாரம்
ப்ராக்கில் புதுமையான கடிகாரம்
செக் குடியரசிலிருந்து விழித்தெழு! நிருபர்
சுற்றுலா பயணிகளின் கவனத்தைச் சுண்டி இழுப்பதற்கு தெரு வியாபாரிகள் போட்டா போட்டி போடுகிறார்கள். முச்சந்தியில் கலகலவென சிரிப்பொலி, பல பாஷைகளில் பேசிக்கொள்ளும் சத்தம், காதை துளைக்கும் இசை என ஒரே அமர்க்களம்தான். ஆனால்! திடீரென்று ஏன் இந்த நிசப்தம்? மணியோ பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எல்லாருடைய கண்களும் டவுன் ஹால் கோபுரத்தின் மீதுள்ள இரண்டு நீல நிற ஜன்னல்களின்மீது பதிந்திருக்கின்றன. திடீரென்று ஜன்னல்கள் திறக்கின்றன. வெளியே வருகின்றன கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களுடைய உருவங்கள். பெரிய சாவிகளை கையில் வைத்திருக்கும் பேதுரு ஊர்வலத்தில் முன் செல்கிறார். 12 பேருடைய உருவங்களும் ஜன்னலுக்கு அருகில் இரண்டிரண்டு பேராக வந்து நிற்கையில் அவர்கள் கீழே திரண்டு வந்திருக்கும் பெரும் கூட்டத்தைப் பார்ப்பது போல தோன்றுகிறது.
செ க் குடியரசிலுள்ள ப்ராக்கிலிருக்கும் பழைய டவுன் ஹால் கட்டடம் இது. நாம் காண்பது அதிலிருக்கும் வானசாஸ்திர கடிகாரம். காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒருமுறை இயங்கும் இக்கடிகாரத்தின் மெக்கானிஸம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. கடிகாரம் இயங்க ஆரம்பித்ததும் ஊர்வலமாக செல்லும் அப்போஸ்தலர்களைத் தவிர வேறு சில உருவங்களும் கடிகாரத்தின் வெளியே தென்படுகின்றன. ப்ராக் மக்கள் வாய்விட்டு பேசவே பயப்படும் விஷயங்கள் இங்கே சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒருபுறத்தில், பேராசைக்கு அடையாளமாக கனமான பணப்பையோடு ஒரு கஞ்சன். அவனுக்கு அருகில் மாயை—தன்னையே கண்ணாடியில் பார்த்து ரசித்து மகிழும் ஒருவன். இந்தக் கஞ்சனும் மாயையும் தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளும் பாவனையில் தலையசைக்கின்றனர். கடிகாரத்தின் மறுபுறத்தில் மரணத்தை அடையாளம் காட்டும் எலும்புக்கூடு. ஒரு கையால் மணி அடித்து மற்றொரு கையால் மணற்கடிகாரத்தை கவிழ்த்துப்போடுகிறது. எலும்புக்கூடு தன் வாயை திறந்தும் மூடியும் தன் அருகே நிற்கும் துருக்கிய மனிதனைப் பார்த்து தலை அசைக்கிறது. இது துருக்கியர்களின் படையெடுப்பைக் குறிக்கிறது. அந்தத் துருக்கியன் அதனோடு வர மறுக்கும் விதமாக தலை அசைக்கிறான்.
இப்படி செய்துகொண்டிருக்கையில் பறந்துவந்த ஒரு சிட்டுக்குருவி எலும்புக்கூடு கடைசியாக தன் வாயை மூடும்போது பரிதாபமாக அதனுள் மாட்டிக்கொண்டுவிட்டதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. மறுபடியும் ஒரு மணிநேரம் கழித்து எலும்புக்கூடு வாயைத் திறக்கும் வரை அந்தச் சிட்டுக்குருவிக்கு உள்ளே சிறைவாசமாம்! கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இன்றைய உலகில் இதைப் பார்த்து மலைத்து நிற்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியென்றால், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் இதைப் பார்த்து எந்தளவு அசந்துபோயிருப்பார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்.
கடிகாரத்தை கிட்டேபோய் பார்க்கலாம்
இந்தக் கடிகாரம் முதன்முதலாக இங்கே பொருத்தப்பட்ட சமயத்தில் இந்த நடமாடும் உருவங்கள் அதில் இல்லை. நூற்றாண்டுகளுக்குப் பிறகு இவை அதில் பொருத்தப்பட்டன. இயல்பாகவே சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு அதிக விருந்தளிப்பவையும் இவையே. ஆனால் கடிகாரத்தில் உள்ளதில் மிகப் பழமையானதும் மெச்சத்தக்க மதிநுட்பத்தை வெளிக்காட்டுவதும் அதன் வானசாஸ்திர டயலே; அதிலுள்ள அம்சங்கள் யாவை? முதலாவதாக நேரம். கறுப்புநிற வெளி வட்டத்தில் பொன் நிற ஜெர்மானிய எண்கள் குறிக்கப்பட்டுள்ளன. இந்த எண்கள் பழமையான செக் முறைப்படி 24 மணிநேரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி சூரிய அஸ்தமனத்தின்போதே ஒரு நாள் ஆரம்பமாகும். பருவ காலம் மாறினாலும், 24-வது மணிநேரம் சூரிய அஸ்தமனத்தோடு முடியும் விதமாக இந்த வட்டம் சுழல்கிறது. ரோமர்களின் எண் இலக்கங்களை வெளிவட்டத்துக்கு உட்புறத்தில் காணமுடிகிறது. இதன்படி ஒரு நாள் இரண்டு 12 மணிநேர காலப்பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலே நண்பகல், கீழே நள்ளிரவு. பொன்னாலான கடிகார முள்ளிலுள்ள மனித விரல்களே நேரங்காட்டிகள்.
வானசாஸ்திர டயலில் மற்றொரு விசேஷம், நகரும் பொன்னிற தட்டும் ஒரு சிறிய உருண்டையும் ஆகும். பொன்னிறதட்டு, சூரியனின் பாதையையும் சிறிய உருண்டை சந்திரனின் பாதையையும் காட்டுகிறது. அதிலுள்ள இன்னும் ஒரு சிறிய வட்டத்தில் பூமியை வலம்வரும் நட்சத்திர வானம் உள்ளது. நட்சத்திர கூட்டங்களின் சின்னங்கள் இதில் குறிக்கப்பட்டுள்ளது. கடிகாரத்தின் முகப்பின் நடுவில் உச்சங்கள், அட்சரேகைகள், துருவங்கள் ஆகியவற்றோடு பூமியும், மையத்தில் ப்ராக்கும் காணப்படுகிறது. பூமத்தியரேகை, கடக ரேகை, தென் அட்சமான மகரரேகை ஆகியவற்றை குறிக்கும் மூன்று வட்டங்கள் முகப்பில் உள்ளன. ஆகவே பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தும் வருடம் முழுவதும் எங்கெங்கே இருக்கின்றன என்பதை இந்த டயல் காட்டுகிறது. வானசாஸ்திர டயலுக்கு கீழே காலண்டர் தட்டு
உள்ளது. வருடத்தின் ஒவ்வொரு மாதத்தையும் சித்தரிக்கும் கிராமிய காட்சிகள் இதில் தீட்டப்பட்டுள்ளன. லீப் வருடத்தில் ஒரே ஒரு இரவை தவிர, ஒவ்வொரு நாளும் நள்ளிரவில், காலண்டர் தட்டில் உள்ள 365 அடிகளில் ஒவ்வொரு அடியாக நகருகிறது. இவ்வாறாக இது தேதியை சுட்டிக்காட்டுகிறது.கடிகாரத்தைத் திறந்து உள்ளே வரிசையாக இருக்கும் சிறிய, பெரிய சக்கரங்களைப் பார்க்கையில் தலையே சுற்றுகிறது. இந்தச் சிக்கலான கருவியை கவனித்துக்கொள்ள மெக்கானிக் ஒருவர் இருக்கிறார். இவர் வாரந்தவறாமல் இதை முழுவதுமாக செக் பண்ணுகிறார்.
வானசாஸ்திர கடிகாரத்தின் வரலாறு
ப்ராக்கிலுள்ள வானசாஸ்திர கடிகாரத்தைப் பற்றி அநேக கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஹானுஷ் என்ற ஒரு மாஸ்டர் அதைச் செய்ததாக ஒரு கதை உள்ளது. இந்தக் கடிகாரம் அத்தனை சிறப்புமிக்கதாக இருந்தபடியால் இதுபோன்ற கடிகாரங்களை அவர் மீண்டும் தயாரித்தால் ப்ராக்கின் புகழ் மங்கிவிடுமோ என்ற பயம் டவுன் அதிகாரிகளுக்கு வந்துவிட்டது. அப்படி எதுவும் நடக்காமலிருக்க ஆள் வைத்து மாஸ்டர் ஹானுஷை அடித்து குருடாக்கிவிட்டனர். குற்றுயிரும் குறையுயிருமாக கிடந்த ஹானுஷ் கடிகாரத்தின் சக்கரங்களை எட்டிப்பிடித்து இழுத்து அதை உடைத்துவிட்டார் என்பதோடு கதை முடிகிறது.
மிகைப்படுத்திக் கூறப்படும் இது நம்பமுடியாத வெறும் ஒரு கட்டுக்கதை என்பது ஆறுதலான விஷயம். ஆனால் ஹானுஷ் என்பவர் 1475-1497 வரை ப்ராக்கில் உண்மையில் வாழ்ந்தவர். கடிகாரம் செய்வது இவர் தொழில். இவர்தான் வானசாஸ்திர கடிகாரத்தை உருவாக்கியவர் என பல வருடங்களாக நிபுணர்கள் கருதி வந்தனர். ஆனால், மெக்குலாஷ் காதான் என்பவரே 1410-ல் இதை உருவாக்கினார் என்பது அண்மை கால ஆராய்ச்சியிலிருந்து தெரிய வந்துள்ளது. ஹானுஷ் 1490-ல் அதில் சில மாற்றங்களை செய்தார். 16-வது நூற்றாண்டு முதற்கொண்டு இந்த கடிகாரம் பல முறை பழுதுபார்த்து சீரமைக்கப்பட்டுள்ளது. மறுபடியும் 1865-ல் சீரமைக்கப்பட்டது முதல் அது அப்படியே உள்ளது.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் நாசி படைகள் ப்ராக்கிலிருந்து வெளியேறிய போது பழைய டவுன் ஹாலை கொளுத்திவிட்டன. அப்போது, வானசாஸ்திர கடிகாரம் மிக மோசமாக சேதமடைந்தது. போர் முடிந்தபின், கடிகாரத்தைப் பழுதுபார்த்து பழையபடி அதன் இடத்தில் வைக்க இரண்டு முக்கியமான யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று பழைய தோற்றத்துக்கு அதைக் கொண்டுவருவது அல்லது முற்றிலும் வித்தியாசமான அடையாள குறிகள்கொண்ட புதிய டயல்களையும் உருவங்களையும் அதில் சேர்ப்பது. அச்சமயத்தில் ப்ராக்கில் நாத்தீக சிந்தனை வேகமாக வளர்ந்துவந்தது. எனவே அப்போஸ்தலர்களின் உருவங்களை அதில் வைப்பதை கம்யூனிச அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கடிகாரத்தின் டிசைனை மாற்றுவதற்குள், கடிகார வல்லுநர்கள் மூவர் கடிகாரத்தைப் பழுதுபார்த்து போருக்கு முன் அதற்கிருந்த பழைய தோற்றத்தைக் கொடுப்பதில் முந்திக்கொண்டனர். ஆகவேதான் தச்சன், கொல்லன், தையல்காரன், வண்ணாத்தி ஆகியவர்களை இன்று பார்ப்பதற்கு பதிலாக இன்னும் கஞ்சனையும் எலும்புக்கூட்டையும் துருக்கியனையும் அப்போஸ்தலர்களையும் அதில் காண்கிறோம்.
கடைசியாக சேவல் கூவுகிறது
வானசாஸ்திர கடிகாரத்தில் தோன்றும் ஊர்வலத்தில் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் அணிவகுத்துச் செல்கின்றனர். ஆனால் இதிலுள்ள ஒரு சில விஷயங்கள் பைபிளிலிருந்து முரண்படுகின்றன. யூதாஸ் காரியோத்துவுக்கும் அல்பேயுவின் மகன் யாக்கோபுக்கும் பதிலாக பவுலும் பர்னபாவும் உள்ளனர். இவர்கள் இருவரும் பன்னிருவரில் இருந்ததாக பைபிள் சொல்வது கிடையாது. (அப்போஸ்தலர் 1:12-26) ஒவ்வொரு அப்போஸ்தலனின் தலைக்கு மேலும் காணப்படும் அந்த ஒளிவட்டம் ஒரு புறமத அடையாளம். பூர்வ கிறிஸ்தவர்கள் இதைப் பயன்படுத்தவில்லை.
கடைசி அப்போஸ்தலனின் உருவம் தோன்றியபின், ஜன்னலுக்கு மேலே அமர்ந்திருக்கும் பொன் தகட்டாலான ஒரு சேவல் தன் இறக்கைகள் படபடக்க கூவுகிறது. பின்னர் மணி அடிக்கிறது, ஜன்னல் மூடிக்கொள்கிறது. கூட்டமும் கலைந்துவிடுகிறது. இதெல்லாவற்றையும் மறுபடியும் பார்க்க உங்களுக்கு ஆசையா? அப்படியென்றால் இன்னும் ஒரு மணிநேரம் காத்திருங்கள். இதற்கிடையில், சுமார் 600 ஆண்டுகளாக ப்ராக்கின் பழைய டவுன் ஹாலுக்கு சுற்றுலா பயணிகளைச் சுண்டியிழுத்திருக்கும் இந்தக் கடிகாரத்தின் முகப்பை கொஞ்சம் ஆராய்ந்து பாருங்களேன்.
[பக்கம் 17-ன் படம்/தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
வானசாஸ்திர டயல்
நேரம் இப்போது நண்பகல் 12:57
சூரிய அஸ்தமனம் மாலை 5:21
[பக்கம் 18-ன் படம்/தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
காலண்டர் தட்டு
காட்டும் தேதி ஜனவரி 1
[பக்கம் 16-ன் படம்]
மாயையும் கஞ்சனும்
[பக்கம் 17-ன் படம்]
மரணமும் துருக்கியனும்