இன்டர்நெட்டில் ஆபாசம்
இன்டர்நெட்டில் ஆபாசம்
இன்று கோடிக்கணக்கானோர் இன்டர்நெட் உலகில் உல்லாசமாக உலவுகிறார்கள். பிஸினஸ் பண்ணுகிறார்கள். புதுப்புது செய்திகளைப் படித்து பரவசம் அடைகிறார்கள். வானிலையை அறிந்துகொள்கிறார்கள், பயணத் தகவல்களை தெரிந்துகொள்கிறார்கள். ஏன், உட்கார்ந்த இடத்திலிருந்தே பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலா சென்றுவந்து விடுகிறார்களே! உலக கிராமத்தில் ஆங்காங்கே குடியிருக்கும் குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் அரட்டையும் அடிக்கிறார்கள். ஆனால் மணமானவர்களும் மணமாகாதவர்களும்—ஆச்சரியப்படத்தக்க அளவில் சிறுவர்களும்—மிகவும் வித்தியாசமான ஒரு காரணத்துக்காக இன்டர்நெட்டில் நுழைகிறார்கள்: ஆபாசமான காட்சிகளை கண்டுகளிக்க.
கம்ப்யூட்டரில் ஆபாசம் (சைபர்போர்ன் என்றும் அழைக்கப்படுகிறது) மிகவும் பிரபலமாகி பல கோடி டாலர் மதிப்புள்ள வியாபாரமாக வளர்ந்திருக்கிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இவ்வாறு கூறியது: “கருப்பு [லாபகரமான] வெப்-சைட்டை தேடிப் பார்க்கப்போக, அந்தத் தொழிலும் அதிலுள்ள விஷயமும் நீலமாக [ஆபாசமாக] இருக்கலாம்.”
ஆபாசத்துக்காக மக்கள் ஏன் இன்டர்நெட்டுக்குள் நுழைகிறார்கள்? காரணத்தை அந்த ஜர்னல் தொடர்ந்து விளக்குகிறது: “இந்த மாதிரியான புத்தகங்கள் விற்கப்படும் கடைக்குள் அல்லது பின்பக்க வாசலைக் கொண்ட வீடியோ கடைக்குள் யாருக்கும் தெரியாமல் பயந்து பயந்து போகவேண்டும். ஆனால் இன்டர்நெட் இருப்பதால் வாடிக்கையாளர்கள் இதையெல்லாம் தனிமையில் வீட்டிலேயே அல்லது அலுவலகத்திலேயே எந்த சிரமமுமில்லாமல் பார்க்கலாமே.”
ஆபாசமும் அரும்புகளும்
வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், சைபர்போர்னை பார்க்கும் அநேகர் பிள்ளைகளே. வயது வராத பிள்ளைகள் ஆபாச புத்தகங்களை வாங்குவதையும் ஆபாச வீடியோக்களை வாடகைக்கு எடுப்பதையும் சட்டம் தடைசெய்கிறது; ஆனால் வீட்டிலிருந்தபடியே மவுஸை சில தடவைகள் கிளிக் செய்தால் போதும், இதெல்லாம் இவர்களுக்கு கிடைத்துவிடும். எதை வேண்டுமானாலும் தெரிந்தெடுக்கலாம், அளவே இல்லை.
அநேக பெற்றோருக்குத் தெரியாமலே பிள்ளைகள் அடிக்கடி இன்டர்நெட்டில் திரிகிறார்கள். தி டெட்ராய்ட் நியூஸ் இவ்வாறு கூறுவது உண்மை: “85 சதவீத பெற்றோர் தடை செய்திருந்தபோதிலும், ஐந்தில் இரண்டுக்கும் அதிகமான பிள்ளைகள் வெப்-ஸைட்டுக்கு அல்லது மற்ற ‘ஆன்லைன்’ கனெக்ஷன்களுக்கு சந்தா செலுத்தியிருக்கிறார்கள்.”
பெரும்பாலான பிள்ளைகள்—பெரியவர்களும்தான்—ஆபாசமானவற்றை பார்க்கும் பழக்கத்தை யாருக்கும் தெரியாமல் மூடிமறைப்பதில் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். ஆனால் எல்லாருமே அப்படி செய்வதில்லை. இதில் எந்தத் தீங்கும் இல்லை, ஒரு பொழுதுபோக்குதான் என சிலர் நினைக்கிறார்கள். மற்றவர்களோ அது பிள்ளைகளுக்கு நல்லதல்ல, ஆனால் பெரியவர்கள் பார்க்கலாம், அது அவர்களுடைய சொந்த விஷயம் என்கிறார்கள்.
சில தேசங்களில் ஆபாசம் என்ற இந்த விஷயம் அரசியல் களத்தில் சூடுபிடிக்கும் விவாதமாகியிருக்கிறது. ஒரு பக்கத்தில் பேச்சுரிமையை ஆதரிப்போர் ஆபாசத்தை ஆதரிக்கின்றனர். மறுபக்கத்தில் குடும்ப நெறிமுறைகளை ஆதரிப்போர் இதற்கு தடைபோடுங்கள் என அதிகாரிகளிடம் குரல்கொடுத்து வருகின்றனர்.
அரசியல் விவகாரங்களில் விழித்தெழு! எந்தப் பக்கத்தையும் ஆதரிப்பதில்லை. ஆபாச காட்சிகளைப் பார்ப்பதில் இருக்கும் ஆபத்துக்களை வாசகருக்குத் தெரிவிப்பதும் தங்களையும் தங்களுடைய அன்பானவர்களையும் என்னென்ன வழிகளில் பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதையும் ஆபாசம் என்ற வலையில் விழுந்துவிட்டு ஆனால் அதிலிருந்து விடுபட விரும்பும் எவருக்கும் பைபிள் அடிப்படையிலான ஆலோசனைகளை அளிப்பதுமே இத்தொடரின் நோக்கம்.