எப்பிடாரஸ் அரங்கம்—காலத்தால் அழியாதது
எப்பிடாரஸ் அரங்கம்—காலத்தால் அழியாதது
கிரீஸிலுள்ள விழித்தெழு! நிருபர்
நாடக அரங்கிற்குப் போக உங்களுக்கு ஆசையா? நகைச்சுவை நாடகத்தைப் பார்த்து வாய்விட்டு சிரித்திருக்கிறீர்களா? உள்ளத்தை உருக்கும் அல்லது கருத்தாழமிக்க சமூக நாடகத்தைப் பார்க்கும்போது உங்களுக்கு உணர்ச்சி பொங்கியிருக்கிறதா? அல்லது அறிவொளி கிடைத்திருக்கிறதா? அப்படியென்றால் எப்பிடாரஸ் நாடக அரங்கைப் பற்றி அறிந்துகொள்வதில் நீங்கள் ஆனந்தம் அடைவீர்கள். பண்டைய கிரீஸில் தோன்றிய நாடகங்களுக்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
பொ.ச. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க புவியியல் ஆய்வாளர் பாஸனியஸ் இவ்வாறு எழுதினார்: எப்பிடாரஸில் “பண்டைய உலகின் மிகச் சிறந்த நாடக அரங்கம் உள்ளது. ரோமர்களின் அரங்கங்கள் உயரமாகவும் பகட்டாகவும் இருந்தபோதிலும் அவை அழகிலும் அளவிலும் எப்பிடாரஸ் நாடக அரங்கிற்கு பக்கத்தில்கூட வரமுடியாது.”
மண்ணில் புதைந்ததால் சிறப்பான பாதுகாப்பு
கொரிந்து என்ற கிரேக்க நகரத்துக்கு தெற்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் எப்பிடாரஸ் என்ற குக்கிராமம் அமைந்திருக்கிறது. இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு அது வியாபாரத்திற்கும் ஆன்மீகத்திற்கும் முக்கிய மையமாக விளங்கியது.
பிற்காலங்களில், சீராகவும் அடுக்கடுக்காகவும் அமைந்திருந்த குன்றுகளையும் பயிர் செய்யப்பட்ட நிலங்களையும் ஒலிவ மரத் தோப்புகளையும் பார்த்தபோது அங்கே ஒரு பெரிய நாடக அரங்கு இருந்திருக்கும் என்று யாரும் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் 19-வது நூற்றாண்டைச் சேர்ந்த பனாயிஸ் காவாடியஸ் என்ற புகழ்பெற்ற கிரேக்க புதைப்பொருள் ஆய்வாளர், அந்தக் குன்றுகளின் கீழ் ஏதோ மர்மம் மறைந்திருப்பதாக உறுதியாக நம்பினார். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாஸனிஸின் வர்ணனை இவர் ஆவலை இன்னும் தூண்டியது. இயல்பாக காட்சியளித்த இந்த இயற்கை வனப்புக்குக் கீழே பிரம்மாண்டமான ஒரு நாடக அரங்கை கண்டுபிடிக்கும் நம்பிக்கை இவருக்கு இருந்தது. 1881-ம் ஆண்டு வசந்த காலத்தில் அந்த நம்பிக்கை கைகூடியது!
ஆறுவருட கால அயராத உழைப்பிற்கு பின், காலத்தால் அழிந்துவிடாத கவர்ச்சியான தோற்றமுடைய ஒரு
நாடக அரங்கை அங்கே கண்டுபிடித்தார். இந்த அரங்கம் சுமார் பொ.ச.மு. 330-ல் இளைய பாலிக்கிளிட்டஸால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இவர் அருகிலிருந்த ஆர்காஸ் நகரில் வாழ்ந்துவந்த பிரசித்திபெற்ற சிற்பியும் கட்டட கலைஞருமாவார். நவீன கால கட்டட கலைஞர் மானோஸ் பாரகீஸ் என்பவர் எப்பிடாரஸை “மிகப் பிரபலமான, மிகச் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட கிரேக்க அரங்கம்” என்று அழைத்து, ஆய்வாளர்களின் பொது கருத்தையே ஆமோதிக்கிறார்.இந்தக் கண்டுபிடிப்பு, புதைப்பொருள் ஆய்வு, கட்டட கலை ஆகிய இரண்டுக்கும் கிடைத்திருக்கும் வெற்றி. எஞ்சிய பண்டைய அரங்கங்களில் பல ஓரளவு அழிந்துவிட்டிருக்கின்றன. சில அரங்கங்கள் மீண்டும் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் பல நூற்றாண்டுகள் கடந்துசென்றபோதிலும் எப்பிடாரஸ் அரங்கம் மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் அப்படியே இருக்கிறது. இந்த அரங்கத்தை ஆறு மீட்டருக்கும் மேல் பத்திரமாக மூடியிருந்த மண்ணே இந்த பாதுகாப்பிற்கு காரணம்.
இன்று இந்த அரங்கை பார்க்கச் செல்லும் ஒருவரால் அரங்கில் எது எங்கே இருந்தது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டிட முடியும். வாத்தியக்குழு, பாடகர்குழு, நடனக்குழு இவர்களுக்காக ஒரு வட்டமான பகுதி. பளிங்கில் இதைச் சுற்றி ஒரு வட்டம். தரைப்பகுதியில் இறுக்கமாக மண் அமுக்கி அமுக்கி நிரப்பப்பட்டுள்ளது. நடுவில் ஒரு மேடை. இந்த மேடைக்கு பின்புறத்தில் நாடகத்துக்கு பயன்படும் பொருட்களை வைப்பதற்கு இருந்த அறையின் அஸ்திபாரம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஆரம்பத்தில் வாத்திய குழுவுக்கு அளிக்கப்பட்ட மேடையில்தான் நடிகர்கள் நாடகம் நடத்தினர். காட்சி அமைப்புக்கு மேடையில் பொருத்தப்பட்ட, சுற்றி சுற்றி வரும் முக்கோண வடிவ மரத்தட்டின்மீது மரப்பலகைகளில் வரையப்பட்ட காட்சிகள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் மேடையை பாடகர்களுக்கு விட்டுவிட்டு நடிகர்கள் அரங்கின் தரைப்பகுதியில் நடிக்க ஆரம்பித்தனர். காட்சி அமைப்பு சுவரில் அமைக்கப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் எப்பிடாரஸ் நாடக அரங்கம் 6,000 பேர் அமர்ந்து கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில் கூடுதலாக 21 வரிசைகளை போடுவதற்காக மேல்பகுதி விரிவுபடுத்தப்பட்ட போது இருக்கைகளின் மொத்த எண்ணிக்கை 13,000 ஆக உயர்ந்தது. முன்பக்க இருக்கைகள் பிரபலங்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவை வித்தியாசமாக, சாய்ந்து அமரும் வகையில் சிவப்புநிற கல்லால் அமைக்கப்பட்டிருந்தன.
மலைக்க வைக்கும் ஒலி அமைப்பு
அரங்கின் ஒலி அமைப்பே எப்பிடாரஸ் அரங்கத்தின் தனிச்சிறப்பு. “மெல்லிய ஓசையும் மிகத் துல்லியமாக கேட்கும், அதாவது பெருமூச்சுவிடும் சத்தம் அல்லது ஒரு காகிதத்தை கிழிக்கும் சத்தம்கூட அரங்கின் கடைசி இருக்கையில் இருப்பவருக்கும் கேட்கும்” என்கிறார் புதைப்பொருளியல் பேராசிரியர் எஸ். இ. யாக்கோவிடிஸ்.
இந்த அரங்கைக் காணச்செல்லும் சுற்றுலா பயணிகள் மேடையின் நடுவில் நின்றுகொண்டு கவிதைகளைச் சொல்லிப்பார்க்கின்றனர், பாடிப் பார்க்கின்றனர், அல்லது மேலே கடைசியில் அமர்ந்திருக்கும் நண்பரிடம் மெல்லிய குரலில் பேசிப்பார்க்க ஆசைப்படுகின்றனர். இந்தப் பெரிய அரங்கத்தின் ஒவ்வொரு மூலைக்கும் ஒலி பரவும் விதத்தைப் பார்த்து வியந்து நிற்கின்றனர்.
இந்த அரங்கம் மேல் நோக்கியவாறு அரைவட்ட வடிவில் கட்டப்பட்டிருப்பதே ஒலி மிகச் சிறப்பாக எதிரொலிப்பதற்குக் காரணம். இயற்கையிலேயே இவ்வாறு அமைந்துவிட்ட அரங்கங்களில்—பெரும்பாலும் மலைச்சரிவுகளில்—ஒவ்வொருவருக்கும் தெளிவாக கேட்கும் விதமாக இயேசு திரளான ஜனங்களிடம் பிரசங்கித்ததை இது நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது.—மத்தேயு 5:1, 2; 13:1, 2.
இருக்கை வரிசை இங்கே செங்குத்தாக இருப்பதால் மேடையிலிருந்து மேலே இருக்கும் கடைசி வரிசையின் தூரம் குறைவே. ஒலி இந்த கடைசி வரிசையை அடையும்போது கொஞ்சம்கூட குறையவே இல்லை.
ஒலி நன்றாக பரவுவதற்கு உதவியாக இருக்கும் மற்றொரு விஷயம் வரிசைகளுக்கிடையில் பொருத்தமான இடைவெளி. இதனால் ஒலி ஒரே அளவிலும் தெளிவாகவும் எல்லா இடங்களுக்கும் பரவியது. மேடையின் ஊடுருவ முடியாத உறுதியான மேற்பரப்பு, இருக்கைகள் ஆகியவற்றின்மீது ஒலி பட்டு அது சீராக பிரதிபலித்தது. அப்போது பயன்படுத்தப்பட்ட பளிங்கு தரமானதாக இருந்தது, இயற்கையாகவே அங்கு அமைதி நிலவியது, மேடையிலிருந்து பார்வையாளர்களை நோக்கி எப்போதும் காற்று வீசியது. இவை அனைத்தும் சேர்ந்து ஒலி அமைப்பை மேலும் சிறப்பாக்கிற்று.
நாடகத்துக்கு ஏற்ற அரங்கம்
எப்பிடாரஸ் போன்ற அரங்கங்களை பண்டைய கிரேக்கர் கலை நுணுக்கத்துடனும் கவனமாகவும் கட்டியதால்
பார்வையாளர்கள் வசதியாக உட்கார்ந்து நாடகங்களைப் பார்க்க முடிந்தது. கருவள தேவதைக்கு படைக்கும் விருந்தில் திராட்சை அறுவடையைக் கொண்டாடுவது, மரணம், உயிர் புதுப்பிப்பு ஆகியவை நாடகமாக்கப்பட்டன. இப்படிப்பட்ட கேளிக்கை விருந்துகள் புராணக் கடவுளாகிய திராட்சை மற்றும் கருவள தெய்வம் டயனாசியஸை கெளரவித்தன. இந்த நிகழ்ச்சிகள் புராணக் கடவுளுக்கு நன்றி செலுத்துவதாக இருந்தன. ஒரு கதையும் இதில் இருந்தது. மூன்று விதமான கதைகள் நாடகமாக்கப்பட்டன: சோக நாடகங்கள், இன்ப நாடகங்கள், கேலி நாடகங்கள். இந்த நிகழ்ச்சிகளை மக்கள் பெரிதும் விரும்பியதால் நகரின் ஆட்சியாளர்கள் இவற்றை ஆதரித்தனர்; தங்கள் அரசியல் செல்வாக்கை பெருக்கிகொள்ள இவற்றை சாதகமாக்கிகொண்டனர்.காலப்போக்கில், இந்தக் கொண்டாட்டங்களிலும் கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் மக்களுக்கு இருந்த ஆர்வம் குறைந்துபோனது. பொ.ச.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஸ்கிலஸ், சோபோகில்ஸ், யூரிபைடெஸ் போன்ற புகழ்பெற்ற நாடக ஆசிரியர்கள் தங்கள் நாடகங்களுக்கு புதிய கதைகளைத் தேடியபோது இவர்களின் கவனம் கிரேக்க வரலாற்றுக்கும் தொன்மத்துக்கும் திரும்பியது. மக்களுக்கு நாடகங்களின்மீது இருந்த மோகம் அதிகரித்தபோது எப்பிடாரஸ் போன்ற நாடக அரங்கங்களைக் கட்டுவது அவசியமாயிற்று. இந்த நாடகங்களில் வார்த்தை ஜாலங்களும் விகடங்களும் இடம்பெற்றிருந்தன. நாடகம் பார்க்கப் போவோருக்கு ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாக கேட்க வேண்டும். ஆகவே அரங்கங்களைக் கட்டும்போது மிகுந்த கவனத்தோடும் திறமையோடும் அவர்கள் கட்டவேண்டி இருந்தது.
ஒவ்வொரு நாடகத்திற்கும் பாடற்குழுவும் (பொதுவாக, 10 முதல் 15 வரையான ஆட்கள்) நடிகர்களும் (ஒவ்வொரு காட்சிக்கும் 3 பேருக்கு மேற்பட்ட காட்சியமைப்பு இருக்காது) தேவைப்பட்டார்கள். ஒவ்வொரு காட்சியிலும் பேசி நடிப்பவர்கள் மூன்று கதாபாத்திரங்களுக்கு மேல் இருக்கவில்லை. இசைக்கு ஏற்ப நடிக்கும் நடிகர்கள் ஹிப்போகிரிட்டிஸ் என்றழைக்கப்பட்டனர். காலம் சென்றபோது ஏமாற்றுக்காரரை அல்லது பாசாங்கு செய்பவரை விவரிக்க இந்த வார்த்தையை உருவகமாக பயன்படுத்தினார்கள். இயேசு அவருடைய நாளில் இருந்த தந்திரமான வேதபாரகரையும் பரிசேயரையும் விவரிக்க இந்த வார்த்தையை பயன்படுத்தினார்.—மத்தேயு 23:13.
எப்பிடாரஸும் இன்று பண்டைய நாடகமும்
கிரீஸிலுள்ள எப்பிடாரஸிலும் மற்ற இடங்களிலும் பண்டைய கால நாடகங்கள் மீண்டும் நடத்தப்படுகின்றன. 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையிலும் பண்டைய கிரேக்க நாடகங்கள், குறிப்பாக சோக நாடகங்கள், கல்வி பாடத்திட்டத்தில் மாத்திரமே இருந்தன. ஆனால் 1932-ஆம் ஆண்டு கிரீஸில் நேஷனல் தியேட்டர் நிறுவப்பட்டது, அதுமுதல் பண்டைய நாடக ஆசிரியர்களின் படைப்புகள் நவீன கிரேக்க மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன.
1954 முதல் எப்பிடாரஸ் நாடக விழா வருடாந்தர நிகழ்ச்சியாக ஆகிவிட்டிருக்கிறது. ஒவ்வொரு கோடையிலும் எப்பிடாரஸ் அரங்கில் அநேக கிரேக்க மற்றும் அயல்நாட்டு நாடக கம்பெனிகள் வந்து பண்டைய நாடகங்களை நடத்துகின்றன. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் நாடகப் பிரியர்களும் இந்த இடத்துக்கு வந்து சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட நாடகங்களை நவீன நாளைய நடிகர்கள் நடித்துக்காட்டுவதைக் கண்டுகளிக்கின்றனர்.
அடுத்தமுறை நீங்கள் கிரீஸுக்குச் சென்றால் எப்பிடாரஸுக்கு விஜயம் செய்ய மறக்காதீர்கள். கண்ணைக்கவரும் அந்தத் தியேட்டரை கண்டபின், பாஸனியஸ் கூறியது உண்மை என்று நீங்கள் சொல்வீர்கள்: “எந்தக் கட்டடக் கலை நிபுணரும் எப்பிடாரஸ் தியேட்டரின் அழகையும் அளவையும் மிஞ்சிவிட முடியாது.”
[பக்கம் -ன் பெட்டி13]
அரங்கமும் ஆரம்ப கால கிறிஸ்தவர்களும்
எப்பிடாரஸுக்கு அருகே கொரிந்துவில் வாழ்ந்துவந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதுகையில் “நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்” என்றார். (1 கொரிந்தியர் 4:9; எபிரெயர் 10:33) அவரும் அவருடைய நண்பர்களும் நிந்திக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதன் காரணமாக, சர்வலோக பார்வையாளர்கள் முன்பாக அவர்கள் ஒரு அரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டவர்கள் போலிருக்கிறார்கள் என்று கூறினார். பவுலின் நாட்களில் அரங்கத்தில் நாடகம் பார்ப்பது மக்கள் மிகவும் விரும்பிய பொழுதுபோக்கு. ஆனால் நாடக நிகழ்ச்சிகளில் அடிக்கடி இடம்பெற்ற ஒழுக்கயீனம், கொடூரமான வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்தார்கள். (எபேசியர் 5:3-5) சில சமயம் கிறிஸ்தவர்களே இந்த நாடக அரங்கங்களுக்கு அல்லது ரோம விளையாட்டு அரங்குகளுக்கு வலுகட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு வேடிக்கைப் பொருளாக்கப்பட்டனர், காட்டு மிருகங்களுக்கு மத்தியிலும்கூட தூக்கியெறியப்பட்டனர்.
[பக்கம் 12-ன் படங்கள்]
சோபோகில்ஸ்
அஸ்கிலஸ்
யூரிபைடெஸ்
[படங்களுக்கான நன்றி]
கிரேக்க நாடக ஆசிரியர்கள்: Musei Capitolini, Roma
[பக்கம் 11-ல் உள்ள படத்திற்கான நன்றி]
நன்றி: GNTO