Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நவீனகால குகை வாசிகள்

நவீனகால குகை வாசிகள்

நவீனகால குகை வாசிகள்

லெஸ்தோவிலுள்ள விழித்தெழு! நிருபர்

நம்முடைய காலத்தில் குகை வாசிகளா? மலைப்பாங்கான தென் ஆப்பிரிக்காவிலுள்ள லெஸ்தோவில் இந்த குகைவாசிகள் சிலரை நாங்கள் சந்தித்தோம். அவர்கள் வாழும் கிராமத்தின் பெயர் ஹா கோம். இது லெஸ்தோவின் தலைநகரான மசேறுவிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில், கம்பீரமாக உயர்ந்து நிற்கும் மாலுதி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கோடைக்காலம் வந்தால் போதும். இந்த மலைச்சரிவுகளை கண்ணைப்பறிக்கும் சிவப்பு நிற பூக்கள் அப்படியே மூடிக்கொண்டுவிடுகின்றன. “பழுக்க காய்ச்சிய துடுப்புகள்” என இவை பொதுவாக அழைக்கப்படுகின்றன. பச்சை பசேலென்றிருக்கும் செழிப்பான தாவரங்கள் நடுவில் இந்த அழகிய மலர்கள் எடுப்பாக கண்ணுக்கு விருந்தாக காட்சியளிக்கின்றன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக மக்கள் வாழ்ந்த விதமாகத்தான் இங்கே பல குடும்பங்கள் இன்னும் வாழ்ந்துவருகின்றன. மலைச் சரிவுகளிலுள்ள குகைகளுக்குள் இவர்கள் தங்கள் வீட்டை கட்டுகிறார்கள். மரக்கம்புகளையும் நாணலையும் வைத்து கனமான முன்பக்க சுவருக்கு சட்டத்தை செய்திருக்கிறார்கள். வெப்பத்தைத் தடுப்பதற்காக ஈர மண்ணையும் மாட்டுச் சாணத்தையும் கலந்து சுவரில் பூசியிருக்கிறார்கள். லெஸ்தோவில் குளிர் காலங்களில் சீதோஷண அளவு உறைநிலைக்கும் கீழே போய்விடும்போது இது ஓரளவு பாதுகாப்பையும் அளிக்கிறது. வீட்டின் உள்ளே குளிர் காய்வதற்கு பள்ளமான இடம் உண்டு. இதற்கு பெயர் இஃபோ. இதன் அர்த்தம் “குளிர்காயும் இடம்.”

குகையின் பாறைதான் கூரையாகவும், பின்பக்க சுவராகவும் பக்கவாட்டு சுவர்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மீது ஈரமான மண்ணையும் மாட்டு சாணத்தையும் கலந்து இவர்கள் பூசுகின்றனர். இதை ஒவ்வொரு வருடமும் செய்கின்றனர். இதனால் பாறைக்கு ஒரு வண்ணமும் வழவழப்பான ஒரு தோற்றமும் கிடைக்கிறது. பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோல் வீட்டின் உட்புறத்தை அலங்கரிக்கிறது. இதுவே தூங்குவதற்கு படுக்கையாகவும்கூட பயன்படுத்தப்படுகிறது.

மேற்கத்திய பார்வையாளருக்கு இந்தப் பாரம்பரியமான வாழ்க்கைமுறை புத்துணர்ச்சியளிப்பதாக, வித்தியாசமாக இருக்கிறது. பல வண்ண சால்வைகளையும் கூம்பு வடிவ புல் தொப்பிகளையுமே இவர்கள் விரும்பி அணிகிறார்கள். வெறுங்காலோடு மந்தைகளை மேய்த்துக்கொண்டிருக்கும் சிறுவர்களை எல்லா இடங்களிலும் நீங்கள் பார்க்கலாம். கிராமத்திலுள்ள ஆண்கள் மக்கா சோள வயல்களில் வேலை செய்துகொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால் மற்ற ஆண்களோடு அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள்.

நவீன தொழில்நுட்பம் எப்போதாவது தலைகாட்டுகிறது. எப்போதாவது மேலே பறக்கும் சிறிய விமானத்தையும், பார்வையாளர்களை அழைத்துவரும் நான்கு சக்கர வாகனங்களையும் பார்க்கையில் கிராமத்திலுள்ள பெருசுகளுக்கும் சிறுசுகளுக்கும் வேடிக்கையாக இருக்கிறது. நெருப்பை மூட்டி மூன்று காலுள்ள கறுப்புநிற இரும்பு பாத்திரங்களில் செய்யும் சமையல் எல்லாம் வீட்டுக்கு வெளியில்தான் நடக்கிறது. விறகு கிடையாது. ஆகவே வறட்டி, நாணல், மரக் கிளைகள் எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றன. மக்கா சோளத்தை அரைக்க ஏந்திர கல்லையும் சோளக் கஞ்சியைக் கிளறிவிட மரத்தாலான ஒரு கம்பையும் எல்லா குகை வீடுகளிலும் பார்க்க முடிகிறது.

லெஸ்தோவில் வேட்டுவ இனத்தவரின் (Bushmen) வர்ண சித்திரங்கள் பிரபலம். தேசம் முழுவதிலும் நிறைய குகைகளிலும் பாறைகளிலும் இவற்றைக் காணமுடிகிறது. ஹா கோம் குகைகளில் வேட்டுவ இனத்தவர்தான் முதலில் வாழ்ந்து வந்தனர். படகுகளையும் வலைகளையும் வைத்து மீன்பிடிப்பது முதல், விலங்கு முக மூடிகளை அணிந்து நடனங்கள் ஆடுவது வரை பல விஷயங்கள் சித்திரமாக வரையப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. வாலில்லா குரங்குகள், சிங்கங்கள், நீர் யானைகள், பெரிய மறிமான்கள் ஆகியவையும் சித்திரங்களாக தீட்டப்பட்டுள்ளன. ஹா கோம் குகைகளிலுள்ள பெரும்பாலான சித்திரங்கள் மறைந்துவிட்டன. இந்த வேட்டுவ இனத்தவரின் கலையுணர்வின் ஞாபகச் சின்னமாக எஞ்சியிருப்பது கொஞ்சமே.

ஹா கோமுக்கு அருகிலுள்ள இடத்தில் யெகோவாவின் சாட்சிகள் ஒரு தொகுதியாக பிரசங்க வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். விருந்தோம்பலுக்குப் பேர் போன குகைவாசிகளையும் அவர்கள் அவ்வப்போது சென்று பார்க்கின்றனர். சாட்சிகளை மொட்டஹோ எனப்படும் ஒரு கோப்பை மக்கா சோள கஞ்சியை கொடுத்து இவர்கள் வரவேற்கிறார்கள். ஹா கோமிலிருக்கும் அனேகர் ஆவலாக பைபிள் பிரசுரங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். சாட்சிகள் செய்யும் கல்விபுகட்டும் வேலைக்கு நன்கொடையாக காய்கறிகளையும் முட்டைகளையும் மற்ற பொருட்களையும் கொடுத்து போற்றுதலை காண்பிக்கிறார்கள்.

நவீன நாளைய குகைவாசிகளுக்கு பைபிள்மீது மதிப்பு அதிகமுண்டு. அவர்கள் உயிர், மரணம், பாரம்பரிய நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பற்றி கேள்விகளைக் கேட்கிறார்கள். வைராக்கியமுள்ள சாட்சிகளுக்கு அந்தப் பகுதியில் பல பைபிள் படிப்புகள் கிடைத்திருக்கின்றன. இவ்விதமாக சத்தியத்தின் விதைகளுக்கு இந்த மனத்தாழ்மையுள்ள ஆட்களின் இருதயங்கள் வளமான விளைநிலமாக அமைந்துவிட்டன.—மத்தேயு 13:8.

[பக்கம் -ன் தேசப்படம்26]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஹா கோம்