ஊழியர் என்பவர் யார்?
பைபிளின் கருத்து
ஊழியர் என்பவர் யார்?
இயேசு தம் உயிரை பலியாக கொடுக்கப் போகிறார். இதற்கு முந்தைய நாள் அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் மத்தியில் கடுமையான விவாதம் நடைபெறுகிறது. “தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று” என லூக்கா 22:24 சொல்கிறது. இயேசுவின் அப்போஸ்தலர்கள் இப்படி வாக்குவாதம் செய்வது முதல் தடவை அல்ல. இதற்கு முன்னால் இயேசு அவர்களுடைய சிந்தனையை குறைந்தபட்சம் இரண்டு சந்தர்ப்பங்களிலாவது திருத்தியிருப்பார்.
இந்த நெருக்கடியான இரவில் ஒரு கிறிஸ்தவ ஊழியன் உண்மையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு மறுபடியும் ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது எத்தனை வருத்தமான விஷயம்! அவர் இவ்வாறு சொன்னார்: “உங்களில் பெரியவன் சிறியவனைப் போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப் போலவும் இருக்கக்கடவன்.”—லூக்கா 22:26.
அந்தஸ்து, பதவி ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி அப்போஸ்தலர்கள் தவறான கருத்துடையவர்களாய் இருந்தது நமக்கு ஆச்சரியமாக இருக்க வேண்டுமா? வேண்டியதில்லை. இயேசு வருவதற்கு முன்னால், மதத் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாக இருந்தவர்கள் வேதபாரகரும் பரிசேயருமே. மக்களுக்கு ஆன்மீக வழிநடத்துதலையும் அறிவுரைகளையும் கொடுப்பதற்கு பதிலாக இந்தப் பொய்யான ஊழியர்கள் கடுமையான பாரம்பரியங்களுக்கும் சட்டங்களுக்குமே முக்கியத்துவம் கொடுத்தனர். அவற்றால், “மனுஷர் பிரவேசியாதபடி பரலோக ராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்” என்று இயேசு அவர்களை கடிந்துகொண்டார். அவர்கள் பதவி மோகம் பிடித்தவர்களாக, அந்தஸ்தை நாடுகிறவர்களாக, சுயநலவாதிகளாக இருந்தனர். அவர்கள் “தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்”தார்கள்.—மத்தேயு 23:4, 5, 13.
வித்தியாசமான ஊழியர்
ஆனால் இயேசுவோ ஆன்மீக ஊழியத்தைப் பற்றி ஒரு புதிய கருத்தை தம்முடைய சீஷர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் இவ்வாறு போதித்தார்: “நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள். கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார். நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். . . . உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.” (மத்தேயு 23:8-11) இயேசுவின் சீஷர்கள் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த மதத் தலைவர்களைப் போல இருக்கக்கூடாது. அவர்கள் உண்மையுள்ள ஊழியர்களாக இருக்க விரும்பினால், இயேசுவை பின்பற்ற வேண்டும். அவர் எந்த விதத்தில் முன்மாதிரியாக இருந்தார்?
பைபிள் “ஊழியர்” என்பதற்கு டையக்கோனாஸ் என்ற கிரேக்க வார்த்தையைப் அடிக்கடி பயன்படுத்துகிறது. சமய கலைக்களஞ்சியம் என்ற ஆங்கில நூல் இந்த வார்த்தையை இவ்வாறு விளக்குகிறது: “இது உயர்ந்த அந்தஸ்தை குறிப்பதில்லை. மற்றவர்களுக்கு சேவை செய்பவர் என்ற கருத்தையே கொடுக்கிறது; இயேசுவின்
முன்மாதிரியை பின்பற்றினால் மட்டுமே, . . . ஊழியம் என்ன என்பதை ஒரு கிறிஸ்தவர் சரியாக புரிந்துகொண்டிருக்கிறார் என அர்த்தம்.”“ஊழியர்” என்ற வார்த்தையின் சரியான விளக்கத்துக்கு இசைவாக, இயேசு மற்றவர்களுக்கு உதவிசெய்ய தம்மிடமிருந்த அனைத்தையும் கொடுத்தார். “மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.” (மத்தேயு 20:28) மற்றவர்களுக்கு சரீரப் பிரகாரமாயும் ஆன்மீகப் பிரகாரமாயும் உதவிசெய்ய இயேசு துளியும் தன்னலம் கருதாமல் தம்முடைய நேரம், சக்தி, திறமை ஆகிய அனைத்தையும் பயன்படுத்தினார். ஏன்? ஏனென்றால் அவரிடம் திரண்டுவந்த ஜனக்கூட்டத்தார் ஆன்மீக விஷயங்களில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து மனதுருகினார். அவர்களுக்கு உதவிசெய்ய விரும்பினார். அவர்களிடம் அவருக்கு அபரிமிதமான அன்பு இருந்ததால்தான் மனமுவந்து ஊழியம் செய்தார். அவரைப் போலவே, கொடுக்கும் மனப்பான்மையை சீஷர்களும் காட்ட வேண்டும் என்று விரும்பினார்.—மத்தேயு 9:36.
வருங்கால ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இயேசு தம்முடைய வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார். “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம். ஆதலால், அறுப்புக்கு . . . வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். (மத்தேயு 9:37, 38) ஆம், உலகம் இதுவரை கண்டிராத அளவில் மிகப் பெரிய ஒரு வேலையை, அதாவது கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை எல்லா மனிதவர்க்கத்துக்கும் பிரசங்கித்துப் போதிப்பதன் மூலம் ஆவிக்குரிய ஆறுதலை மக்களுக்கு அளிக்கும் வேலையை கிறிஸ்துவின் ஊழியர்கள் செய்ய வேண்டும்.—மத்தேயு 28:19, 20.
மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தன்னாலான அனைத்தையும் இயேசு செய்தார். இதுவே ஊழியத்தில் கிறிஸ்துவின் அணுகுமுறையை மிகவும் விசேஷமாக்கியது. அவர் தம்முடைய ஊழியர்களை வேலையாட்களாக, ஆவிக்குரிய மீன் பிடிப்பவர்களாக, மேய்ப்பர்களாக இருக்கும்படி கற்றுக்கொடுத்தார். மறைஞானிகளாகவோ விசேஷ உடைகளை அணிந்த பாதிரிகளாகவோ இருக்கும்படி கற்பிக்கவில்லை.—மத்தேயு 4:19; 23:5; யோவான் 21:15-17.
பைபிளின் கருத்து
நூற்றாண்டுகள் கடந்துசென்றபோது ஊழியர்கள் என்றால் தன்னலம் கருதாதவர்கள், தங்களையே தியாகம் செய்பவர்கள், பிரசங்கிப்பவர்கள், போதிப்பவர்கள் என்ற உயர்ந்த கருத்து மாறிவிட்டது. முதலில் கிறிஸ்தவ ஊழியம் என்பதாக ஆரம்பித்து போகப்போக சடங்குகளுக்கு முக்கியத்துவம் தந்து, குருக்கள் ஆட்சிசெய்யும் ஒரு நிறுவனமாக மாறிவிட்டது. சமய பணிக்குழுக்களும் உயர்ந்த பதவிகளும் ஏற்படுத்தப்பட்டன. இவர்களுக்கு கெளரவம், அதிகாரமெல்லாம் வழங்கப்பட்டது, மேலும் பெரும் செல்வத்தையும் குவித்தனர். இதனால் பிரிவினை உண்டாயிற்று. குருவர்க்கம் என்று ஒன்று உருவானது. மத சடங்குகளை கவனித்துக்கொள்வதும் தவறு செய்தவர்களுக்குப் புத்திமதி கூறுவதும் இவர்களின் வேலையாக இருந்தது. முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவம் தொடர்ந்துவந்த நூற்றாண்டுகளில் மாறிவிட்டது. கிறிஸ்தவ மதத்தைக் கடைப்பிடித்த ஒவ்வொருவரும் ஒரு ஊழியராக இருந்த அந்தக் காலம் மாறிவிட்டது. இப்போது சிறிய எண்ணிக்கையில் விசேஷமாக பயிற்சியும் சான்றிதழ்களும் பெற்றவர்களே பிரசங்கிக்கவும் போதிக்கவும் முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
ஓர் உண்மையுள்ள ஊழியனுக்கு அடையாளமாக பைபிள் சொல்வது, சுயநலமற்ற கடின உழைப்பைத்தான். விசேஷமான உடை, விரிவான சடங்குகள், சம்பளம், அரசாங்க ஆணை ஆகியவை அல்ல. கிறிஸ்தவ ஊழியர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய மனநிலையைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல் மனத்தாழ்மையினாலே ஒருவருக்கொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ண வேண்டும்.”—பிலிப்பியர் 2:3.
பவுல் சொன்னதை செய்தார். கிறிஸ்துவின் மாதிரியை நெருக்கமாக பின்பற்றி ‘சுயபிரயோஜனத்தைத் தேடாமல் அநேகர் இரட்சிக்கப்படும்படிக்கு அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடினார்.’ ‘சவிசேஷத்தை செலவில்லாமல் ஸ்தாபிக்க வேண்டிய’ பொறுப்பு தனக்கு இருப்பதை பவுல் புரிந்துகொண்டார். ஏனென்றால் அவர் சொன்னார்: ‘சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் என்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவில்லை.’ அவர் ‘மனுஷரால் வரும் மகிமையை தேடவில்லை.’—1 கொரிந்தியர் 9:16-18; 10:33; 1 தெசலோனிக்கேயர் 2:6.
உண்மையான ஒரு கிறிஸ்தவ ஊழியனுக்கு பவுல் என்னே ஒரு சிறந்த முன்மாதிரி! அவருடைய மிகச் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றி இயேசு கிறிஸ்து வாழ்ந்து காட்டிய அந்தச் சுயநலமற்ற வாழ்க்கையின்படி வாழ்கிறவர்கள் மற்றவர்களுக்கு ஆவிக்குரிய உதவியையும் நற்செய்தியின் ஆறுதலையும் தாராளமாக அளிக்கின்றார்கள். இவர்கள் தங்களைக் கடவுளின் உண்மையுள்ள ஊழியர்களாக காண்பிக்கிறார்கள்.—1 பேதுரு 2:21.