Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“மரண கலாச்சாரம்” எப்படி பரவுகிறது?

“மரண கலாச்சாரம்” எப்படி பரவுகிறது?

“மரண கலாச்சாரம்” எப்படி பரவுகிறது?

“கொசோவோவில் உள்ள இளம் அகதிகளும், அமெரிக்காவில் உள்ள பிள்ளைகளும் வன்முறையாலும் கொடுமையாலும் வேதனையில் வெதும்புகின்றனர். ஊரளவில் ஆயிரக்கணக்கான மைல் பிரிந்திருந்தாலும் இவர்களது உள்ளக் குமுறல் ஒன்றே.”—மார்க் கௌஃப்மேன், த வாஷிங்டன் போஸ்ட்.

நாம் எங்கு வாழ்ந்தாலும், தீவிர போர் நடந்துகொண்டிருக்கும் நாட்டில் வாழ்ந்தாலும்சரி அமைதி நிலவும் நாட்டில் வாழ்ந்தாலும்சரி மரணம் ஒவ்வொருவரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ விரட்டிக்கொண்டே இருக்கிறது.

போதைப்பொருளுக்கு அடிமையாதல், கருக்கலைப்பு, உயிருக்கு உலை வைக்கும் தீய பழக்கங்கள், தற்கொலை, படுகொலை ஆகியவை இன்று அதிகரித்துள்ளன. இவை “மரண கலாச்சாரத்தின்” வெளிப்பாடுகள். மனச் சோர்வும் மன வேதனையும்கூட மரணத்திற்கு வழிநடத்தலாம். அமெரிக்காவிலுள்ள சான் ஆன்டோனியோவின் ட்ரினிடி யூனிவர்ஸிட்டியில் சமூகவியல் மற்றும் மனிதவியல் பேராசிரியராக பணிபுரியும் மைக்கேல் கேர்ல் சொன்னதாவது: “இந்த 20-ஆம் நூற்றாண்டின் முடிவில் பார்க்கையில் . . . மரணம் சமூகத்தின் உயிர்நாடியாக முக்கியத்துவம் பெற்றிருப்பது தெரிகிறது. மதங்களுக்கும் தத்துவங்களுக்கும் மையமாக இருப்பது மரணமே. அரசியல் கட்சிக் கோட்பாடுகளுக்கும் கலைகளுக்கும்கூட கருப்பொருளாக அமைகிறது. மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதுவே தூண்டுகோல். அது செய்தித்தாள்களின், இன்ஷூரன்ஸ் பாலிஸிகளின் விற்பனையை உயர்த்துகிறது. டிவி புரோகிராம்களை சக்கைப்போடு போட வைக்கிறது. . . . இவ்வளவு ஏன், [தாவரங்களின்] மரணத்தால்தான் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய எரிசக்தியே கிடைக்கிறது.” ஆகவே மரணம் முகம் காட்டாத துறைகளே இல்லை போலும். சிலவற்றை கொஞ்சம் விவரமாக பார்க்கலாம்.

ஆயுத விற்பனை

“மரண கலாச்சாரம்” நாள்தோறும் ஆயுதங்களை விற்பனையாக்குகிறது. போர்ப்படைகளுக்காக உருவாக்கப்படும் ஆயுதங்கள் முடிவில் பொதுமக்களுக்கு பாடை கட்டுகின்றன. அப்பாவி பெண்களும் பிள்ளைகளும்கூட பலியாகின்றனர். போர் என்றாலே உயிருக்கு ஒரு துப்பாக்கி குண்டின் விலைதான், அவ்வளவு துச்சமாக மதிக்கப்படுகிறது!

சில நாடுகளில் பொதுமக்களுக்கு ஆயுதங்களைப் பயன்படுத்த தடை இல்லாததால் எப்போதும் கொலை விழுகிறது, ஒருவர் இருவர் மட்டுமல்ல கும்பல் கும்பலாகவும் படுகொலை செய்யப்படும் பயங்கரம் நாளுக்குநாள் அதிகரிக்கிறது. லிட்டில்டன் ஹை ஸ்கூலில் நடந்த பயங்கர சம்பவத்திற்குப் பிறகு, கண்டனக் குரல்கள் எழும்பின; ஆயுதங்கள் பரவலாக விற்பனை செய்யப்படுவதையும் சிறுவர்களுக்கு எளிதாக கிடைப்பதையும் எதிர்த்து கண்டனம் தெரிவிக்கப்பட்டன. ஐக்கிய மாகாணங்களில் கொல்லப்படும் இளைஞர்களின் எண்ணிக்கையை கேட்டால் திடுக்கிட்டுப் போவீர்கள்—வாரத்திற்கு சுமார் 40 என்கிறது நியூஸ்வீக். இவர்களில் 90 சதவீதத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்படியென்றால் லிட்டில்டனில் நடந்ததுபோல் வருடாவருடம் 150 கொலை சம்பவங்கள் நடக்கின்றன!

பொழுதுபோக்கு உலகம்

சினிமாக்களும் சாவை வைத்து லாபம் சம்பாதிக்கின்றன. உதாரணத்திற்கு, ஒரு சினிமா, ஒழுக்கக்கேடு, வன்முறை, போதைப்பொருள் கடத்தல், குற்றச்செயல்கள் போன்றவற்றை ‘க்ளாமராக’ காட்டலாம். இவ்வாறு உயிருக்கும் ஒழுக்கத்திற்கும் மதிப்பைக் குறைக்கலாம். இறந்தபின் வாழ்க்கை உண்டு என்றும் இறந்தவர்கள் நம்மைப் பார்க்க வருவதுண்டு என்றும் கதை கட்டும் சினிமாக்களும் உண்டு. இதனால் சாவு அற்பமாக நினைக்கப்படுகிறது.

இசையும்கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. செய்தி அறிக்கைகளின்படி, லிட்டில்டன் கொலையாளிகள், ஒரு ராக் இசைப்பாடகரின் பரம விசிறிகளாம். அவர் “பேய் பிசாசு போல் வேஷம் போட்டுக்கொண்டு கலகத்தனத்தையும் சாவையும்” பற்றி பாடுவதற்கு பெயர்போனவராம்.

அமெரிக்காவில் டிவி புரோகிராம்களை தரம் பிரிக்கும் முறை மாற்றப்பட்டது. இளைஞர்களின் பாதுகாப்பிற்காகவே, அதாவது அவர்கள் படுமோசமான புரோகிராம்களைப் பார்த்து கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றாலும் கிணறு வெட்டப்போய் பூதம் வந்த கதையாகிவிட்டது. “பார்க்கக்கூடாது எனும்போதுதான் பார்த்தே தீரவேண்டுமென்ற வெறி பிள்ளைகளுக்கு வருகிறது” என நியூஸ்வீக்கில் எழுதுகிறார் ஜோனாதன் ஆல்டர். வெட்டு குத்து கொலை என சினிமா எடுக்கும் கம்பெனிகள், ‘காங்ஸ்ட்ரா ராப்’ டிஸ்குகளை வெளியிடும் கம்பெனிகள், பிள்ளைகளை “கொலை” செய்ய வைக்கும் கம்ப்யூட்டர் கேம்ஸுகளை தயாரிக்கும் கம்பெனிகள் என “எல்லா பிரபல கம்பெனிகளின் பெயர்களையும் (அவற்றின் நிர்வாக இயக்குநர்களின் பெயர்களையும்) பிரெஸிடென்ட் க்ளின்டன் பகிரங்கமாக வெளியிட வேண்டும்,” அப்போதுதான் அவர்கள் வெட்கப்பட்டுபோய் வன்முறையைக் குறைப்பார்கள் என்கிறார் ஆல்டர்.

மரணத்துடன் விளையாட்டு

வீடியோ கேம்ஸிலும் இன்டர்நெட்டிலும்கூட “மரண கலாச்சாரம்” முகங்காட்டுகிறது. டெத்மாட்ச் மானிஃபெஸ்டோ என்ற புத்தகத்தில் ராபர்ட் வாரிங், இளைஞர்களிடையே பிரபலமாகியிருக்கும் டெத்மாட்ச் என்ற கேம்ஸுகளைக் குறித்து அலசி ஆராய்ந்தார். a இப்போது, இந்த மரண விளையாட்டை விளையாடுவோர் சிலர், ரகசியமான குழுக்களை ஆரம்பித்திருக்கின்றனர் என்கிறார் திரு. வாரிங். இந்த விளையாட்டுக்கள் மிகவும் சக்திவாய்ந்தவை—கல்விபுகட்டுவதில் அல்ல, ஆனால் கொலைசெய்ய கற்றுக்கொடுப்பதில். “உலகிலிருக்கும் எவரோடும் போட்டிபோட்டு ஜெயித்து உங்கள் திறமையை நிரூபிக்க முயல்வது சுவாரஸ்யமான அனுபவம். அதோடு ஒன்றிப்போய் உலகையே மறந்துவிடுவது மிக எளிது” என்கிறார் வாரிங். இப்படிப்பட்ட கொலை விளையாட்டுகளின் த்ரீ-டைமென்ஷனல் பின்னணி காட்சிகள் இளைஞர்களை அப்படியே வசியப்படுத்திவிடுகின்றன. இன்டர்நெட் கனெக்‍ஷன் இல்லையென்றாலும் சிலர் தங்கள் வீட்டு டிவியில் போட்டு விளையாட வீடியோ கேம்ஸுகளை வாங்குகின்றனர். இன்னும் சிலர் தவறாமல் வீடியோ கேம்ஸ் கடைகளுக்குச் சென்று விளையாடுகின்றனர், சரியாகச் சொன்னால் ‘சண்டையிட்டு கொலை’ செய்கின்றனர்.

“டெத்மாட்ச்” கேம்ஸுகள், விளையாடுவோரின் வயதிற்கேற்ப வகைப்படுத்தப்படுகின்றன என்றாலும், உண்மையில் கண்ட்ரோலே கிடையாது. “உனக்கு வயசு போதாது என்று சொல்வார்கள், ஆனால் கேமை வாங்கும்போது தடுக்க மாட்டார்கள்” என்கிறான், ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த 14 வயது எட்டி. அவனுக்கு துப்பாக்கிச் சண்டை கேம்ஸுகள் என்றால் கொள்ளை பிரியம். இது அவன் அம்மா அப்பாவிற்கு தெரியும், அவர்களுக்கு அந்த மாதிரி கேம்ஸுகள் பிடிக்காதுகூட. இருந்தாலும் அவன் விளையாடுகிறானா இல்லையா என பார்ப்பதே கிடையாது. “நம்ம காலத்திலதான் குத்து கொலையை பார்த்து பார்த்து இந்தளவு மரத்துப்போய் கிடக்கிறோம். இன்று பிள்ளைகளை அம்மா அப்பா எங்கே வளர்க்கிறார்கள், டிவிதான் வளர்க்கிறது. ஆசைதீர அடிதடி சண்டையைக் காட்டி வளர்க்கிறது” என்றான் ஓர் இளைஞன். நியூஸ்வீக்கில் ஜான் லேலாண்ட் இப்படி எழுதினார்: ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே “1 கோடியே பத்து லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு இன்டர்நெட் கனெக்‍ஷன் உண்டு. அப்படியென்றால் இன்றைய இளைஞர்கள் பெற்றோரின் கன்ட்ரோலுக்கு அப்பாற்பட்ட உலகில் சஞ்சரிக்கின்றனர்.”

சாவுக்கு மணியடிக்கும் வாழ்க்கைமுறை

கேம்ஸுகளிலும் சினிமாக்களிலும் மட்டுமா வன்முறை நிறைந்திருக்கிறது, நிஜ வாழ்க்கையிலும்தான். உண்மையில் யாரும் விசித்திரமான உயிரினங்களோடு சண்டையிட்டு சாவதில்லை. ஆனால் பலரது வாழ்க்கைமுறையே அவர்களது சாவுக்கு மணியடிக்கிறது. உதாரணத்திற்கு, உடல்நல நிறுவனங்களும் மற்ற அமைப்புகளும், ஏன் குடும்பத்தினரும்கூட சிகரெட்டையும் போதைப்பொருளையும் குறித்து எச்சரித்தாலும் இந்தப் பழக்கவழக்கங்கள் குறைந்தபாடில்லை. இப்படித்தான் அநேகர் இளவயதிலேயே சாவைத் தேடிக்கொள்கின்றனர். மக்களின் கவலையையும், விரக்தியையும், ஆன்மீக பஞ்சத்தையும் சாதகமாக்கிக்கொண்டு வியாபாரிகளும் போதைப்பொருள் விற்பனையாளர்களும் கத்தை கத்தையாக பணத்தை சுருட்டுகின்றனர்.

காரணம் யார்?

பைபிளின் கண்ணோட்டத்தில் மரணம் விளையாட்டுப் பொருளா? மரணத்தை வரவழைக்கும் பழக்கங்களுக்கு சாக்குப்போக்கு சொல்ல முடியுமா? முடியாது. அப்போஸ்தலன் பவுல் சொன்ன விதமாகவே, உண்மை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் மரணம் ஒரு “சத்துரு.” (1 கொரிந்தியர் 15:26) ஆகவே அவர்களுக்கு மரணம் கேளிக்கைப் பொருள் அல்ல, அதை அவர்கள் ரசிப்பதும் இல்லை. மனிதன் சாக வேண்டும் என்பது கடவுளுடைய எண்ணமே அல்ல. கடவுளது சொல் கேளாமல் அவருக்கு விரோதமாக மனிதன் செயல்பட்டதால் கொடுக்கப்பட்ட தண்டனையே மரணம். (ரோமர் 5:12; 6:23) ஆகவே மரணம் இயற்கையானது அல்ல.

மனிதனை தவறுசெய்ய தூண்டி, அவனது ‘சாவுக்கு வழிவகுக்கும்’ சாத்தானை பைபிள் “மனுஷகொலைபாதகன்” என்று அழைக்கிறது. அவன் மக்களை நேரடியாக இல்லாவிட்டாலும் வஞ்சகமாக சாகடிக்கிறான். மக்களை பாவம் செய்யும்படி வசப்படுத்தி, சாவுக்கு வழிநடத்தும் பழக்கங்களில் தள்ளிவிட்டு குரூர இன்பம் காண்கிறான். ஆண்கள் பெண்கள் பிள்ளைகள் என அனைவரது மனதிலும் கொலை வெறியை மூட்டுவதும் இவனே. ஆகவே சாத்தானுக்கு “கொலைப்பாதகன்” என்ற பெயர் கனகச்சிதமாக பொருந்துகிறது. (எபிரெயர் 2:14, 15, NW; யோவான் 8:44; 2 கொரிந்தியர் 11:3; யாக்கோபு 4:1, 2) விசேஷமாக இளைஞர்கள் சாத்தானின் வலையில் விழுவது ஏன்? அவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?

[அடிக்குறிப்பு]

a “டெத்மாட்ச்” என்பது, “ஒருவரையொருவர் கொல்லத் தூண்டும் த்ரீ-டைமென்ஷனல் நெட்வர்க் கேம்ஸுகள்” என்கிறது அப்புத்தகம்.

[பக்கம் 7-ன் படம்]

“நம்ம காலத்திலதான் குத்து கொலையை பார்த்து பார்த்து இந்தளவு மரத்துப்போய் கிடக்கிறோம்”