எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
கிளாக்கோமா “உலகை கவனித்தல்” பகுதியில் வெளிவந்திருந்த “கண்கெடும் முன்!” என்ற தலைப்பிடப்பட்ட தகவலை நான் வாசித்தேன். (நவம்பர் 22, 1999) நான் கிளாக்கோமாவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது ஆறு வருடத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. உங்கள் துணுக்கு செய்தி சொன்ன விதமாக, அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவேளை அநேகருக்கு வலி இல்லாமல் இருக்கலாம். ஆனால், எனக்கு அவ்வாறு இல்லை. நான் என் கண்ணில் தினமும் சொட்டு மருந்து போடுகிறேன். இருப்பினும், அவ்வப்போது கடுமையான கண் வலி, தலைவலியால் அவதிப்படுகிறேன். வலி இருக்காது என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதால், கிளாக்கோமா வந்தால் வலியே எடுக்காது என சில வாசகர்கள் தவறாக நினைத்துக்கொள்வார்கள் அல்லவா?
ஹெச். எம்., ஜப்பான்
அங்கு வெளியிடப்பட்டிருந்த துணுக்குச் செய்தி, இந்த வியாதியைப் பற்றி விலாவாரியாக விளக்கிய ஒரு கட்டுரை அல்ல. ஆனால் மே 8, 1989 தேதியிட்ட இதழில், “கண்விழி விறைப்பு நோய் பார்வையை தந்திரமாக மறைத்திடும் கள்வன்!” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை, இந்த வியாதியைக் குறித்து விலாவாரியாக கலந்தாலோசித்தது. இந்த வியாதியால் பாதிக்கப்பட்ட சிலருக்கு வலி ஏற்படலாம் என அந்த கட்டுரை விளக்கியது.—ED.
இருபதாம் நூற்றாண்டு “20-ம் நூற்றாண்டு—சரித்திரம் படைத்த வருடங்கள்” என்ற தொடர் கட்டுரையைக் குறித்து இதை எழுதுகிறேன். (டிசம்பர் 8, 1999) 20-ம் நூற்றாண்டில் நாம் அனுபவித்திருக்கும் கஷ்டங்கள் நிறைந்த காலத்தைக் குறித்து நீங்கள் அளித்த தெளிவான தகவல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அத்துடன் வன்முறை என்ற கறையான் எவ்வாறு மனிதகுலம் என்ற ஆலமரத்தை கொஞ்சம் கொஞ்சமாய் அரித்து அழித்துவருகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நீங்கள் செய்துவரும் சிறப்பான வேலைக்காக உங்களை நான் பாராட்டுகிறேன்.
டபிள்யூ. ஜி., பியூர்டோ ரிகோ
மூடநம்பிக்கை நான் ஒரு யெகோவாவின் சாட்சி அல்ல, இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டு காலமாக உங்கள் பத்திரிகைகளை வாசித்து வந்திருக்கிறேன். குறிப்பாக “விதியின் கையிலா உங்கள் வாழ்க்கை?” (ஆகஸ்ட் 8, 1999) “மூடநம்பிக்கை ஏன் ஆபத்தானது?” (அக்டோபர் 22, 1999) போன்ற தொடர் கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, அவற்றிற்காக நன்றி. நான் சிறுவயது முதல் விதி, மூடநம்பிக்கை போன்றவற்றை உறுதியாக நம்பிவந்தேன். ஆனால், நீங்கள்தான் உண்மை கிறிஸ்தவத்தைக் குறித்த விஷயங்களை சொல்கிறீர்கள் என்பது இப்போது எனக்கு புரிகிறது.
என். டி., பிரான்ஸ்
மூடநம்பிக்கையைப் பற்றி நீங்கள் வெளியிட்ட கட்டுரை என் மனதை புண்படுத்தியது. நான் ரோமன் கத்தோலிக்க மதத்தில் அதிக பற்றுள்ள பெண், உங்கள் கட்டுரையில், பயணத்தின்போது பலர் ‘சிலுவை போடுகிறார்கள்’ என்றும் அது மூடநம்பிக்கை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் கத்தோலிக்கர், பயணம் பத்திரமாக இருக்க வேண்டும் என்ற தங்கள் ஜெபத்தின் பாகமாகவே சிலுவை போடுகிறார்கள். இது எங்கள் நம்பிக்கையின் ஒரு முக்கிய அம்சமும்கூட, அதனால் இதை மூடநம்பிக்கை என நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எஸ். டபிள்யூ., ஐக்கிய மாகாணங்கள்
இன்று அநேகர் சிலுவை போடுகிறார்கள் என்பது உண்மைதான், ஆனால், அநேகர் மத நம்பிக்கையுடன் அவ்வாறு செய்வதில்லை என்பதை நம்மால் மறுக்க முடியாது. உதாரணத்திற்கு, ஒரு ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட வீரர் ஆட்டக்களத்தில் இருக்கும்போது சிலுவை போட்டார், ஏன் அவ்வாறு செய்தார் என்று கேட்டபோது, “அது ஒருவகை மூடநம்பிக்கை என்று நினைக்கிறேன்” என்று சொன்னார். முற்காலங்களிலிருந்தே, இந்த சிலுவை போடும் பழக்கம் மூடநம்பிக்கையோடு ஒட்டி உறவாடியிருக்கிறது. “முற்காலங்களிலிருந்தே மந்திர செய்கைகளை செய்யும்போது கெட்ட ஆவியை துரத்தும் ஒரு கருவியாக இது [சிலுவை போடுவது] பயன்படுத்தப்பட்டிருக்கிறது” என “த கத்தோலிக்க என்ஸைக்ளோப்பீடியா” குறிப்பிடுகிறது.—ED.
ஊனமுற்ற குழந்தை “கஷ்டத்திலும் கடவுளையே அண்டியிருக்க கற்றுக்கொண்டோம்” (நவம்பர் 22, 1999) என்ற கட்டுரையில் வெளிவந்த ரோஸி மேஜரைப் பற்றிய கதை என்னை நெகிழ வைத்தது. நாங்கள் முன்பு ஒரு நகரத்தில் வசித்து வந்தோம், அங்கிருந்த நிலைமை என் மூத்த மகளின் போக்கை அதிகம் பாதித்தது. அதனால் ஒரு கிராமப் பகுதிக்கு இடம் மாறி வந்தோம். இங்கு நிலைமை நல்ல படியாகத்தான் இருந்தது, ஆனால் திடீரென நான் என் வேலையை இழக்க நேர்ந்தது. வேலையில் இருந்தபோது வருடத்திற்கு 56,000 டாலர் சம்பாதித்து வந்தேன். இது என் வாழ்க்கையில் நான் எதிர்ப்பட்ட பெரிய அடி. இப்போது மூன்று குழந்தைகளுடன் இந்த கிராமத்தில் வசித்து வருகிறோம். போதாகுறைக்கு கடன் தொல்லை வேறு. எப்படியிருக்கும் என சற்று சிந்தித்துப்பாருங்கள்! ஆனால் ரோஸி மேஜரின் வாழ்க்கையைப் பற்றிய அந்த கட்டுரையை வாசித்த பிறகு, ஒரு விஷயம் புரிந்தது. மலைபோல் என் முன் நின்ற பணப் பிரச்சினை உண்மையில் ஒன்றுமே இல்லை, இவ்வளவு நாட்களாக தேவையில்லாமல் வேதனைப்பட்டிருக்கிறேன் என்பது விளங்கியது. உண்மையாகவே கடவுளுடைய உதவி நிச்சயம் தேவைப்படும் மற்ற அநேகர் இந்த உலகத்தில் இருக்கின்றனர் என்பதை உணர்ந்தேன். நான் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தா பெற விரும்புகிறேன்.
எம். எஃப்., ஐக்கிய மாகாணங்கள்
இந்த வாசகரின் விருப்பத்தை பூர்த்தி செய்வது எங்கள் பாக்கியம்.—ED.