மரணம் உங்களை ‘முத்தமிடாமலிருக்க’
மரணம் உங்களை ‘முத்தமிடாமலிருக்க’
பிரேஸிலிலிருந்து விழித்தெழு! நிருபர்
ஊரே ஆடி அடங்கிவிட்ட இரவு நேரம், நீங்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த சமயத்தில்தான் அது உங்களை நெருங்கி, மேனியை தொடுகிறது. உங்கள் நித்திரை கலைவதில்லை. இது உங்களை ‘முத்தமிடும்போதுகூட’ உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் அதன் மென்மையான “முத்தம்” உங்கள் உயிரையும் குடிக்கலாம்.
இரவு நேரத்தில் ஓசையின்றி உங்களை நெருங்கும் இந்த கள்வன் யார்? முத்தமிடும் பூச்சி என்றும் அழைக்கப்படும் பார்பர் பீட்டில்தான் அது. தென் அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்ட இவை, அங்கே தன் இனத்தை பெருக்கி குடியும் குடித்தனமுமாக வாழ்கின்றன. இந்தப் பூச்சியின் “முத்தம்” சுமார் 15 நிமிடங்களுக்கு நீடிக்கலாம், அவை முத்தத்திற்கு விலையாக உங்கள் இரத்தத்தை உறிஞ்சிக்கொள்கிறது. உண்மையில் அதன் முத்தத்தால் எந்த ஆபத்தும் இல்லை என சொல்லலாம். ஆனால் அதன் உடலிலிருந்து வெளிவரும் கழிவுப்பொருட்களில் ட்ரைபனோசோமா க்ருசி, சுருக்கமாக டி. க்ருசி என அழைக்கப்படும் ஒருவகை நுண்ணுயிர் இருக்கலாம்; இதுவே ஆபத்தானது. கண், வாய் அல்லது காயங்கள் வழியாக உடலுக்குள் நுழையும் இந்த ஒட்டுண்ணி, அமெரிக்க ட்ரைபனோசோமியாசிஸ் என்ற வியாதியை ஏற்படுத்தலாம். இந்த வியாதி சாகஸ் நோய் என அழைக்கப்படுகிறது.
இந்த சாகஸ் நோயின் அறிகுறிகள் யாவை? பெரும்பாலும் கண் வீங்கிவிடும்; அதன் பிறகு, களைப்பு, ஜூரம், பசியின்மை, வயிற்றுப்போக்கு போன்றவையும் ஏற்படலாம். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு இவையெல்லாம் தானாகவே எந்த சிகிச்சையுமின்றிகூட மறைந்துவிடும். ஆனால் பிரச்சினையே அப்புறம்தான். இந்த நோய் தாக்கி சுமார் 10 முதல் 20 வருடங்கள் கழித்து, இருதயக் கோளாறுகள் ஏற்படலாம். உதாரணமாக, இதயத்துடிப்பில் கோளாறு, சில சமயம் மாரடைப்பேகூட ஏற்படலாம். a
சாகஸ் வியாதியால், சுமார் 1.8 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் ஒவ்வொரு வருடமும் சுமார் 50,000 பேர் இறப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு இரையான எல்லாருக்குமே அந்தப் பூச்சின் ‘முத்தத்தால்’ இந்த வியாதி வரவில்லை. உதாரணமாக, இந்த வியாதியால் பாதிக்கப்பட்ட தாயிடம் பால் குடித்த குழந்தைகளுக்கு இந்த வியாதி தொற்றிக்கொண்டது. கர்ப்பமாயிருக்கும் பெண்ணுக்கு இந்த வியாதி இருந்தால், குழந்தை வயிற்றிலிருக்கும்போது அல்லது பிறக்கும்போது இந்த வியாதி கடத்தப்படலாம். இரத்தம் ஏற்றிக்கொள்வதன் மூலமாகவும், டி. க்ருசியுள்ள உணவை சரியாக வேகவைக்காமல் சாப்பிடுவதன் மூலமாகவும் இது வரலாம். b
சாகஸ் வியாதி வராமலிருக்க என்ன செய்யப்படுகிறது? ‘முத்தமிடும் பூச்சியின்’ எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் பூச்சிக்கொல்லிகள் நன்கு வேலை செய்கின்றன. ஆனால் பூச்சிக்கொல்லியை வீட்டில் பயன்படுத்துவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு, அதை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும். ரியோ டி ஜனீரோவின் ஃபெடரல் பல்கலைக்கழகம் மற்றொரு ஐடியா சொன்னது. அது பூச்சிக்கொல்லி கலந்த பெயிண்டை பயன்படுத்துவது. இது 4,800 வீடுகளில் பயன்படுத்தி சோதிக்கப்பட்டது. முடிவு என்ன? இரண்டு வருடங்களுக்குப் பிறகும் 80 சதவீத வீடுகளில் அந்த பூச்சிகளால் காலெடுத்துகூட வைக்க முடியவில்லை! பிரேஸிலிலுள்ள சினமோமோ என்ற வேப்ப மரத்தின் இலையிலுள்ள அசாடிராச்டின் எனும் பொருள் நோய்கிருமியுடைய பூச்சியை சுகப்படுத்துவது மட்டுமல்லாமல், அந்த நோய்கிருமி இல்லாத பூச்சிகளுக்கு அவை வராமலும் தடுக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வியாதியஸ்தருக்கு உதவி
சாகஸ் வியாதியால் அவதிப்படும் இலட்சக்கணக்கான மக்களுக்கு இதிலிருந்து நிவாரணம் ஏதும் உண்டா? ஆம், இருக்கிறது என்பது சந்தோஷமான விஷயம் அல்லவா! டி. க்ருசி-யின் 10,000 மரபணுக்களில் ஒளிந்திருக்கும் இரகசியங்களை கண்டுபிடிக்க, விஞ்ஞானிகளின் ஓர் சர்வதேச குழு முயற்சி செய்து வருகிறது. இது வெற்றியடைந்துவிட்டால், வியாதியை
எளிதில் கண்டுபிடிக்கும் முறையை உருவாக்கலாம், சரியான தடுப்பு முறைகளை கொண்டுவரலாம், இவற்றுக்கு சரியான மருந்துகளை தயாரிக்கலாம்.புவியீர்ப்பு குறைவாக இருக்கும் இடத்தில் அணுக்களின் அமைப்பை நன்கு ஆராயலாம் என்பதால் 1997-ம் ஆண்டு டி. க்ருசியின் முக்கியமான புரதங்களுள் ஒன்றை, கொலம்பியா என்ற விண்வெளி ஓடத்தில் விஞ்ஞானிகள் அனுப்பிவைத்தனர். டி. க்ருசிக்கு ஏற்ற மருந்தை தயாரிப்பதற்கு இதுவே முக்கிய படியாகும். புதிய மருந்துகளை உடனடியாக கண்டுபிடிப்பது மிக முக்கியம், ஏனென்றால் வியாதி முற்றி இறுதிக் கட்டத்திற்கு சென்றுவிட்டால், இன்றுள்ள எந்த மருத்துவத்தாலும் காப்பாற்ற முடியாது. c
இந்த வியாதியை துவக்கத்திலேயே கவனித்துவிடுவதுதான் நல்லது என்பதை உணர்ந்த கான்ஸ்டேன்ஸா ப்ரிட்டோ என்ற பிரேஸிலைச் சேர்ந்த உயிரியலாளர், போலிமெரேஸ் செயின் ரியாக்ஷன் என்ற சோதனை முறையை உருவாக்கினார். இதன் மூலம் இரண்டே நாட்களில் இந்த வியாதியை கண்டுபிடித்துவிடலாம். ஆனால் வருத்தகரமாக, இந்த வியாதி துவக்க நிலையில் இருக்கும்போது, தங்களுக்கு இந்த வியாதி இருக்கிறது என்பதே அநேகருக்கு தெரிவதில்லை.
வரும்முன் காப்பதே சிறந்த மருந்து
சரி, பார்பர் பீட்டில் அதிகம் இருக்கும் இடத்தில் நீங்கள் வாழ்ந்துவந்தால், என்ன தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்?
▪ கூரை வீட்டிலோ அல்லது மண் சுவர் கொண்ட வீட்டிலோ நீங்கள் இருந்தால், கொசு வலையை பயன்படுத்த முயற்சியுங்கள்.
▪ பூச்சிக்கொல்லியை பயன்படுத்துங்கள். நோய் தொற்றுவதை இது குறைக்கும்.
▪ சுவர்களில் விரிசல்களோ, வெடிப்புகளோ இருந்தால் அவற்றை உடனே சரி செய்துவிடுங்கள். ஏனென்றால், இவற்றில் பார்பர் பீட்டில் குடிபுகுந்து இனவிருத்தி செய்யலாம்.
▪ வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். படங்கள், மேஜைகள் போன்றவற்றுக்கு பின்புறத்தையும் அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.
▪ படுக்கைகளையும், கம்பளங்களையும் அவ்வப்போது வெயிலில் காய வையுங்கள்.
▪ வீட்டு விலங்கினாலும் சரி காட்டு விலங்கினாலும் சரி இந்த வியாதி தொற்றலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
▪ ஏதாவது ஒரு பூச்சி, பார்பர் பீட்டிலாக இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால், அதைப் பிடித்து, ஆராய்ச்சிக்காக அருகிலுள்ள சுகாதார மையத்திடம் ஒப்படையுங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a சாகஸ் நோயின் அறிகுறிகள் வேறுபடுகின்றன, இதற்கு மட்டுமே வரும் அறிகுறி என எதையும் சொல்ல முடியாது. அதனால்தான், இதில் பொதுவான சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன, இந்த வியாதி இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிப்பதற்காக இவை கொடுக்கப்படவில்லை. அநேகருக்கு, இந்த வியாதி முற்றும் வரையில் எந்த அறிகுறியுமே இருக்காது.
b இரத்தத்தை ஒருவருக்கு ஏற்றுவதற்கு முன் அந்த இரத்தத்தில் சாகஸ் வியாதிக்குரிய அறிகுறிகள் இருக்கிறதா இல்லையா என சில நாடுகளில் சோதிக்கப்படுவதில்லை என்கிறது ஐ.மா. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்.
c டி. க்ருசியால் பாதிக்கப்பட்டவருக்கு டாக்டர்கள் நிஃப்ர்டிமோக்ஸ்-ஐ பயன்படுத்துகின்றனர், ஆனால் அது பெரும்பாலும் பயங்கரமான பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
[பக்கம் 13-ன் பெட்டி]
சாகஸ் வியாதி கண்டுபிடிப்பு
1909-ம் ஆண்டு, பிரேஸிலிலுள்ள மீனஸ் ஸெரிஸ் மாநிலத்தில் ஒரு ரயில் பாதை அமைக்கும் பணியில் அநேகர் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் அநேகர் மலேரியாவால் பாதிக்கப்பட்டதால், அந்த வேலை பாதிக்கப்பட்டது. எனவே கார்லோஸ் சாகஸ் என்ற பிரேஸிலைச் சேர்ந்த மருத்துவர் அவர்களுக்கு உதவ அங்கு அனுப்பப்பட்டார். ஆனால் அநேகருக்கு வந்த அறிகுறிகள், பொதுவாக மற்ற நோய்களுக்கு வரும் அறிகுறிகளிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்ததை அவர் கவனித்தார். அத்துடன் மனிதனின் இரத்தத்தை குடித்து உயிர் வாழும் பார்பர் பீட்டில் என்ற பூச்சிகள் அப்பகுதி வீடுகளில் அதிகம் இருப்பதை கவனித்தார். அதை ஆராய ஆரம்பித்தார். அந்த பூச்சியின் குடலில் இருக்கும் உட்பொருட்களை ஆராயும்போது, அதில் ஒரு புதிய ப்ரோட்டோசோவன் நுண்ணுயிர் இருப்பதை சாகஸ் கண்டுபிடித்தார். தன் நண்பனான ஓஸ்வால்டோ க்ருஸ் என்ற விஞ்ஞானியின் நினைவாக அதற்கு ட்ரைபனோசோமா க்ருசி என பெயரிட்டார். கார்லோஸ் சாகஸ் கஷ்டப்பட்டு நுணுக்கமாக ஆராய்ச்சி செய்து இந்த வியாதியை கண்டுபிடித்ததால், அவர் இறந்த பிறகு இதற்கு சாகஸ் வியாதி என பொருத்தமாகவே பெயரிடப்பட்டது.
[பக்கம் 12, 13-ன் படம்]
பெரும்பாலும் கிராமப் புறங்களில்தான் பார்பர் பீட்டில் அதிகம் விருத்தியடைகின்றன
[படத்திற்கான நன்றி]
படங்கள்: PAHO/WHO/P. ALMASY