பிரமாண்டமான கல்வி புகட்டும் வேலை
பிரமாண்டமான கல்வி புகட்டும் வேலை
“கல்வி கற்றோரே உண்மையில் சுதந்திரம் பெற்றோர்.”—எபிக்டேடஸ், சுமார் பொ.ச. 100.
“பைபிளை எந்த அளவிற்கு ஜனங்கள் பின்பற்றுகிறார்களோ அந்த அளவிற்கு அவர்களது வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்” என்றார் வில்லியம் எச். ஸிவார்ட். இவர் 19-ம் நூற்றாண்டில் அடிமைத்தனத்தை எதிர்த்து போராடியவர்.
யெகோவாவின் சாட்சிகளும் பைபிளை மதிப்புமிக்க புத்தகமாகவே கருதுகின்றனர். ஏனென்றால், அதிலுள்ள புத்திமதிகளை கடைப்பிடிப்போர் சிறந்த மனிதராக, குறிப்பாக சொல்ல வேண்டுமானால், நல்ல கணவர்களாகவும், நல்ல மனைவிகளாகவும், நல்ல பிள்ளைகளாகவும் வாழ முடியும் என நம்புகின்றனர். அதனால்தான், “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என்ற இயேசு கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து இன்று எல்லோருக்கும் இதைக் குறித்து சொல்லி வருகின்றனர்.—மத்தேயு 28:19, 20.
மக்களுக்கு பைபிளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்காக யெகோவாவின் சாட்சிகள் மாபெரும் கல்வி புகட்டும் வேலையை செய்து வருகின்றனர். இந்த வேலை மனித சரித்திரத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகிறது. இது எவ்வளவு பிரமாண்டமானது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
உலகளாவிய பிரசுரிப்பு வேலை
யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் செய்து வரும் கல்வி புகட்டும் வேலையில் அல்லது பொது ஊழியத்தில், இன்று நூற்றுக்கணக்கான மொழிகளில் கிடைக்கப் பெறும் பைபிள்களை பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமா? அவர்கள்தாமே பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு என்ற பைபிளை 21 மொழிகளில் பிரசுரித்திருக்கின்றனர்; (புதிய ஏற்பாடு என அழைக்கப்படும்) கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பை கூடுதல் 16 மொழிகளில் பிரசுரித்திருக்கின்றனர். அத்துடன், வேறு 11 மொழிகளில் இப்போது மொழிபெயர்த்து வருகின்றனர். அதுமட்டுமல்ல, பைபிளை நன்கு புரிந்துகொள்வதற்கும், அதற்கான போற்றுதலை வளர்ப்பதற்கும் பெரும் உதவியாய் இருக்கும் மற்ற பிரசுரங்களையும் பிரசுரிக்கின்றனர்.
உதாரணமாக, நீங்கள் இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் இந்த விழித்தெழு!, 82 மொழிகளில் வெளிவருகிறது; இதன் ஒவ்வொரு இதழும் சுமார் 2,03,80,000 பிரதிகளுக்கும் அதிகமாக அச்சிடப்படுகிறது. இதனுடைய துணைப் பத்திரிகையான காவற்கோபுரம் 137 மொழிகளில் வெளிவருவதோடு அதன் ஒவ்வொரு இதழும் சுமார் 2,23,98,000 பிரதிகளுக்கும் அதிகமாக அச்சிடப்படுகிறது. இவற்றையெல்லாம் கணக்கிட்டு பார்த்தால், ஒவ்வொரு வருடமும் அச்சிடப்படும் இந்த பத்திரிகைகளின் எண்ணிக்கை
100 கோடிக்கும் அதிகம்! அதுமட்டுமல்ல, காவற்கோபுரம் 124 மொழிகளில் ஒரே சமயத்தில் வெளிவருகிறது; அதேபோல, விழித்தெழு!-வும் 58 மொழிகளில் ஒரே சமயத்தில் வெளிவருகிறது. இதனால், உலகம் முழுவதிலுமுள்ள அநேக மொழி பேசும் ஜனங்கள் இந்த பத்திரிகைகளிலுள்ள விஷயங்களை தங்கள் சொந்த மொழிகளில் ஒரே சமயத்தில் வாசித்து தெரிந்து கொள்கின்றனர்.பைபிளை எளிதில் புரிந்துகொள்வதற்காக மற்ற புத்தகங்களையும் யெகோவாவின் சாட்சிகள் பிரசுரிக்கின்றனர். அப்புத்தகங்களின் கோடிக்கணக்கான பிரதிகளை சமீப ஆண்டுகளில் அச்சிட்டிருக்கின்றனர். அவற்றில் சிலவற்றை கவனியுங்கள்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகம் 10.7 கோடிக்கும் அதிகமாக அச்சிடப்பட்டது. அதன்பின், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகம் 8.1 கோடிக்கும் அதிகமாக அச்சிடப்பட்டது. சமீபத்தில் வெளியிடப்பட்ட, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகம் 146 மொழிகளில் 7.5 கோடிக்கும் அதிகமாக அச்சிடப்பட்டது. அத்துடன், 240 மொழிகளில் வெளிவந்த கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற 32 பக்க சிற்றேடு 11.3 கோடிக்கும் அதிகம் அச்சிடப்பட்டது.
அதுமட்டுமா, பிள்ளைகள் இளைஞர்கள் பெரியவர்கள் என வித்தியாசப்பட்ட வயதினரின் தேவைகளுக்கேற்ற புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன. பிள்ளைகளுக்கென்று தயாரிக்கப்பட்ட என்னுடைய பைபிள் கதைப் புத்தகம் 5.1 கோடிக்கும் அதிகமாக அச்சிடப்பட்டது. இளைஞர்களுக்காக இரண்டு புத்தகங்கள் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டன. உன் இளமை அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் என்ற இவ்விரண்டும் சேர்ந்து 5.3 கோடிக்கும் அதிகமாக அச்சிடப்பட்டன. கோடிக்கணக்கான குடும்பங்கள் தங்கள் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு பெரும் உதவியாய் இருந்திருக்கும் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகம் 115 மொழியில் வெளிவந்தது.
1985-க்குப் பிறகு வெளியிடப்பட்ட நான்கு புத்தகங்கள், பைபிளையும், சிருஷ்டிகரையும், அவருடைய குமாரனையும் பற்றி கற்பித்து அவர்களை விசுவாசிக்க அநேகருக்கு உதவியிருக்கின்றன. உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?, எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர், பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா?, உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? என்ற அந்த புத்தகங்கள் மொத்தத்தில் 11.7 கோடிக்கும் அதிகமாக அச்சிடப்பட்டன.
யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டிருக்கும் பைபிள் சார்ந்த பிரசுரங்கள் 353 மொழிகளில் கிடைக்கின்றன. அவற்றில் சில விரைவிலேயே கூடுதல் 38 மொழிகளில் கிடைக்கும். 1970 முதற்கொண்டு அச்சிட்ட புத்தகங்கள், சிறு புத்தகங்கள், சிற்றேடுகள், பத்திரிகைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை மட்டும் 2,000 கோடிக்கும் அதிகமாகும்! அதுமட்டுமா, 230 நாடுகளுக்கும் மேலாக 60
லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பைபிள் சார்ந்த கல்வியை மற்றவர்களுக்கு அளிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவை எல்லாம் எப்படி சாத்தியமாயின? இதனால் மக்களின் வாழ்க்கையில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா?ஏன் பல மொழி பிரசுரங்கள்?
ஒரு பிரசுரத்தை தரமாகவும் ஒரே சமயத்தில் நூற்றுக்கும் அதிகமான மொழிகளிலும் வெளியிடுவது என்பது அவ்வளவு சுலபமான வேலையா என்ன! அதை செய்வதற்கு எவ்வளவு ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சி தேவை என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். பிரசுரங்களை தரமாகவும், துல்லியமாகவும், விரைவாகவும் மொழிபெயர்ப்பதற்காக கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் நேரத்தையும் திறமையையும் அர்ப்பணித்திருக்கின்றனர். சொற்ப மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்ட மொழிகளிலும், பிரசுரங்கள் விரைவிலேயே பிரசுரிக்கப்படுகின்றன. லாபத்திற்காக செய்யப்படாத இந்த உலகளாவிய மொழிபெயர்ப்பு வேலையில் தற்போது 1,950-க்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் குறைந்த எண்ணிக்கையானோர் பேசும் மொழியை தாய்மொழியாக கொண்ட நபர் நன்கு அறியப்பட்ட வேறொரு மொழியையும் பெரும்பாலும் தெரிந்து வைத்திருப்பார் அல்லவா? அப்படியிருக்கையில் எதற்காக இவ்வளவு முயற்சி எடுத்து இவ்வளவு மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது? இதனால் பிரயோஜனம் ஏதும் உண்டா?
யெகோவாவின் சாட்சிகள், தாங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் பிரயோஜனமானவையே என நன்கு அறிந்திருக்கின்றனர். பல மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான அவசியத்தை 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பைபிள் மொழிபெயர்ப்பாளரான வில்லியம் டின்டேலும் அறிந்திருந்தார். “பொது மக்களுக்கு பைபிள் வசனங்கள் அவர்களுடைய தாய் மொழியிலேயே கிடைத்தாலொழிய, அவர்களுக்கு பைபிள் சத்தியத்தை கற்றுக்கொடுப்பது அல்லது அவர்கள் வசனங்களின் கருத்தையும் அர்த்தத்தையும் ஒத்திசைவையும் புரிந்துகொள்வது கூடாத காரியம் என்பதை என் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டேன்” என அவர் எழுதினார்.
பைபிள் சார்ந்த பிரசுரங்கள் எல்லா மொழிகளிலும் கிடைப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் அவை ஒருவருடைய தாய்மொழியில் கிடைக்கும்போது, பைபிள் சத்தியங்கள் இதயத்தை விரைவாகவும் ஆழமாகவும் சென்றெட்டுகின்றன. இது உண்மை என முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து வரும் அனுபவங்கள் காட்டுகின்றன. அங்குள்ள பலதரப்பட்ட இனத்தவர்கள் வித்தியாசமான பாஷைகளில் பேசுகின்றனர். கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில், இவர்களில் அநேகர் சோவியத் யூனியனுடன் ஒன்று சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு ரஷ்ய மொழி கற்றுக் கொடுக்கப்பட்டதோடு, அந்த மொழியையே பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். இவ்வாறு அவர்கள் எழுதி படித்ததெல்லாம் ரஷ்ய மொழியில்தான், ஆனால் தங்கள் சொந்த பாஷையிலேயே பேசினர்.
1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் கலைக்கப்பட்டபோது அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் தாய் மொழியை பயன்படுத்துவதையே விரும்பினர். அடேஜீ, அல்டாய், பெலோரூசியன், ஜார்ஜியன், கையர்கிஸ், கோமி, ஆஸெஷியன், டுவினியன் போன்ற மற்ற அநேக மொழி பேசுபவர்களின் நிலையும் இதுதான். இவர்களில் அநேகருக்கு ரஷ்ய மொழி நன்கு தெரிந்திருக்கிறபோதிலும், அந்த மொழியில் வெளியாகும் பைபிள் இலக்கியங்கள் அவர்களுடைய மனதை அந்த அளவுக்கு கவருவதில்லை. மாறாக, அவர்களுடைய சொந்த பாஷையிலுள்ள பிரசுரங்களையே விரும்பிப் படிக்கின்றனர். “நீங்கள் பிரசுரங்களை எங்கள் மொழியில் வெளியிட துவங்கியிருப்பது மிகவும் நல்லது, அதற்கு மிக்க நன்றி” என அல்டாய் மொழியில் பைபிள் துண்டுப்பிரதியை பெற்றுக்கொண்ட ஒருவர் சொன்னார்.
கிரீன்லாந்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த ஆர்க்டிக் தீவிலுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையே சுமார் 60,000 தான். இருப்பினும், கிரீன்லான்டிக் மொழியில் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! இரண்டுமே பிரசுரிக்கப்படுகிறது. இவை இரண்டும் ஜனங்கள் மத்தியில் பிரபலமானவை. யெகோவாவின் சாட்சிகள் அந்த மொழியில் வெளியிடும் மற்ற பிரசுரங்களையும் ஜனங்கள் ஆவலோடு படிக்கின்றனர். அந்த தீவில் வெகுதொலைவிலுள்ள சிறிய சிறிய கிராமங்களிலும் இவற்றைக் காணலாம்.
தென் பசிபிக்கில், சுமார் 7,000 பேர் நௌருவான் மொழியையும், 4,500 பேர் டோகெலா மொழியையும், 12,000 பேர் ரோடுமேன் மொழியையும் பேசுகின்றனர். சாட்சிகள் அவர்களுடைய மொழியில் துண்டுப்பிரதிகளையும் சிற்றேடுகளையும் பிரசுரித்திருக்கின்றனர். இவற்றோடு சேர்த்து, சுமார் 8,000 பேரால் பேசப்படும் நியூயியென் மொழியிலும், சுமார் 11,000 பேரால் பேசப்படும் டுவாலுவான் மொழியிலும் மாதாந்தர காவற்கோபுரம் பத்திரிகைகளும் வெளிவருகின்றன. பிஸ்லேமா, ஹிரி மோடு, பாபியாமென்டோ, மாரிஷியன் கிரியோல், நியூ கினீ பிட்ஜின், சைசெலஸ்-கிரியோல், சாலமன் தீவுகள் பிட்ஜின் போன்ற மொழிகளிலும் பைபிள் பிரசுரங்கள் அச்சிடப்படுகின்றன. இவ்வாறு சிறிய சிறிய தொகுதியினர் பேசும் மொழிகளிலும் பிரசுரங்களை வெளியிடும் சொற்பமான பிரசுரிப்பாளர்களுள் யெகோவாவின் சாட்சிகளின் அமைப்பும் ஒன்று.
ஒரு மொழியை பேசும் தொகுதியினர் எந்தளவுக்கு குறைவாக இருக்கிறார்களோ, அந்தளவுக்கு அவர்களுடைய சமுதாயம் ஒதுக்கப்பட்டும் ஏழ்மை நிலையிலும் இருக்கும். ஒருவேளை அப்படிப்பட்ட பகுதிகளில் வாழ்பவர்களுள் படிப்பறிவுள்ளவர்கள் அநேகர் இருக்கலாம். அங்குள்ளவர்களுக்கு அவர்களுடைய மொழியில் கிடைக்கும் ஒருசில பிரசுரங்களில் பெரும்பாலும் பைபிளும் இருக்கும். ஆனால், அவற்றில் சில மொழிகளில் செய்தித்தாள்கூட
வருவதில்லை, ஏனென்றால் அது லாபத்தை ஈட்டாது.பாராட்டப்படும் வேலை
யெகோவாவின் சாட்சிகள் அளிக்கும் பிரசுரங்கள் மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவிக்கின்றன; இதனால், பிரசுரங்களை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளை அநேகர் பாராட்டுகின்றனர். “பசிபிக் பகுதியில் நடைபெறும் மிக ஆர்வத்திற்குரிய வேலை இது” என சாட்சிகளின் மொழிபெயர்ப்பு வேலையைக் குறித்து லின்டா க்ரௌல் சொன்னார். இவர் பிஜியிலுள்ள சுவாவில் இருக்கும் தென் பசிபிக் பல்கலைக்கழகத்தை சார்ந்த பசிபிக் கல்வி மையத்தில் வேலை செய்பவர். சாட்சிகளுடைய சிறப்பான மொழிபெயர்ப்பைப் பாராட்டி அவற்றை பரிந்துரை செய்கிறார்.
சமோவன் மொழியில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை விழித்தெழு! இதழ் வெளிவர ஆரம்பித்த செய்தி அவ்விடத்து செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் இடம்பெற்றது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விழித்தெழு!-வின் அட்டைப்படத்தையும் அதன் கட்டுரைகளையும் காட்டினர். பிறகு ஒவ்வொரு கட்டுரையைப் பற்றியும் எடுத்துரைத்தனர்.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சில நாடுகளில் அவற்றின் மொழியைக் கற்பிக்கும் நிறுவனங்கள்கூட சரியான இலக்கணம், எழுத்துமுறை, புதிய வார்த்தைகள் போன்றவை குறித்து சாட்சிகளின் மொழிபெயர்ப்பு
குழுவினரின் ஆலோசனைகளை கேட்கின்றன. யெகோவாவின் சாட்சிகள் செய்துவரும் இந்த இலவசமான கல்வி புகட்டும் வேலை அநேகரை கவர்ந்திருக்கிறது. அவர்களுடைய சபையின் அங்கத்தினர்களாக இருப்பவர்களை மட்டுமல்ல இன்னும் அநேகருடைய இருதயங்களையும் தொட்டிருக்கிறது.ஆனாலும், முந்தின கட்டுரையில் குறிப்பிட்ட பிரகாரம், சுமார் 100 கோடி மக்கள், அதாவது ஏறக்குறைய இவ்வுலக ஜனத்தொகையில் ஆறில் ஒரு பங்கினர் படிப்பறிவின்றி இருக்கின்றனர். வாசிப்பதன் மூலமும் படிப்பதன் மூலமும் கிடைக்கும் முக்கியமான செய்திகளை இவர்களும் பெற்றுக்கொள்ள என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன?
அடிப்படை கல்வி அளித்தல்
அநேக நாடுகளில், படிப்பறிவில்லாதவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுக்கொடுப்பதற்காக இலவச பாடத் திட்டத்தை சாட்சிகள் ஏற்படுத்தியிருக்கின்றனர். அதற்காக அவர்களே சில பாட புத்தகங்களையும் தயாரித்திருக்கின்றனர். உதாரணமாக, எழுதப் படிக்க முயற்சியுங்கள் என்ற ஒரு பாட புத்தகம் 28 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள், முதியோர் உட்பட ஆயிரக்கணக்கானோர் இப்படிப்பட்ட பாட திட்டத்தின்மூலம் எழுதப் படிக்க கற்றிருக்கின்றனர்.
புருண்டியில், இந்த பாட திட்டத்தின் வாயிலாக நூற்றுக்கணக்கானோருக்கு எழுதப் படிக்க கற்றுக்கொடுத்திருக்கின்றனர் யெகோவாவின் சாட்சிகள். இந்த ஏற்பாட்டால் விளைந்த நன்மைகளைக் கண்டு ஆச்சரியமடைந்த அந்நாட்டு முதியோர் கல்வித் திட்ட தேசிய அலுவலகம், சர்வதேச எழுத்தறிவு நாளான 1999, செப்டம்பர் 8 அன்று நான்கு சாட்சி ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கியது.
மொஸாம்பிக்கில் சுமார் 700 சபைகளில் இந்த கல்வித் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. அதைப் பற்றிய பின்வரும் அறிக்கையை கவனியுங்கள்: “கடந்த நான்கு ஆண்டுகளில், 5,089 பேர் படித்து முடித்துவிட்டனர், தற்போது 4,000 பேர் படித்துக் கொண்டிருக்கின்றனர்.” அவ்வாறு கல்வி
கற்ற மாணாக்கர்களுள் ஒருவர், “அந்த பள்ளிக்கு என் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். . . . முன்பு எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் இப்போது, என்னால் வாசிக்க முடிகிறது, சுமாராக எழுத முடிகிறது. அதனால் அந்த பள்ளிக்கு மிக்க நன்றி” என எழுதினார்.மெக்ஸிகோவில், பதிவுகள் எடுக்கத் துவங்கியதிலிருந்து, அதாவது 1946 முதற்கொண்டு, எழுதப் படிக்க கற்றுக்கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விசேஷ பள்ளிகள் வாயிலாக 1,43,000-த்திற்கும் அதிகமானோர் கற்பிக்கப்பட்டிருக்கின்றனர். இதிலிருந்து பயனடைந்த 63 வயது பெண்மணி எழுதினார்: “எனக்கு எழுதப் படிக்க கற்றுக்கொடுத்த யெகோவாவின் சாட்சிகளுக்கு மிக்க நன்றி. என் வாழ்க்கை துயரமே உருவாக இருந்திருக்கிறது. ஆனால் இப்போது, என்ன பிரச்சினையானாலும் அறிவுரைக்காக பைபிளை புரட்டுகிறேன்; அதிலுள்ள செய்திகள் எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது; மனதிற்கு நிம்மதி அளிக்கிறது.”
தென் அமெரிக்க நாடான பிரேஸிலிலும், ஆயிரக்கணக்கானோருக்கு சாட்சிகள் எழுதப் படிக்க கற்றுக்கொடுத்திருக்கின்றனர். “எழுதப் படிக்க கற்றுக்கொண்டது, அநேக வருட சிறைவாசத்திலிருந்து விடுதலையானது போல இருக்கிறது. என்னால் இப்போது எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது. முக்கியமாக, பைபிளை வாசிப்பதும் படிப்பதும், பொய் போதகங்களிலிருந்து விடுதலையை அளித்திருக்கிறது” என்றார் 64 வயது பெண்மணி ஒருவர்.
யெகோவாவின் சாட்சிகளான இந்த பைபிள் ஆசிரியர்கள், பெரும்பாலும் மாணாக்கர்களுக்கு தனித்தனியாக எழுதப் படிக்க கற்றுக்கொடுக்கின்றனர். பிலிப்பீன்ஸில், சாட்சி ஒருவர் மார்டினா என்ற 80 வயதுக்கு மேற்பட்ட பெண்மணியை சந்தித்தார். மார்டினா தொடர்ந்து பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்பட்டார், ஆனால் அவருக்கோ வாசிக்கத் தெரியாது. அந்த பைபிள் ஆசிரியரின் உதவியால், மார்டினா வாசிக்க ஆரம்பித்து முன்னேறினார். அங்கிருந்த சபையிலிருந்து கிடைத்த கூடுதல் பயிற்சியால் மற்றவர்களுக்கு பைபிளைப் பற்றி சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்தார். இன்று அவர் எழுதப் படிக்கத் தெரிந்தவர் மட்டுமல்ல முழுநேர பைபிள் ஆசிரியரும்கூட.
ஆம், படிப்பறிவு பெறுவதற்கான திறமையும் தகுதியும் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால், கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய பைபிள் அறிவு எவ்வாறு பிரயோஜனமளிக்கக்கூடும் என நீங்கள் ஒருவேளை கேட்கலாம். இந்த தொடர் கட்டுரையின் கடைசி கட்டுரை இந்த கேள்விக்கு பதிலளிக்கும்.
(g00 12/22)
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
“விவரிக்க வார்த்தைகளே இல்லை . . . ”
உலகம் முழுவதிலும் மக்களுக்கு கல்வி புகட்ட யெகோவாவின் சாட்சிகள் எடுத்திருக்கும் எல்லா முயற்சிகளையும் அரசாங்க அதிகாரிகளும், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், பொது மக்களும் பெரிதும் பாராட்டியிருக்கின்றனர். அப்படிப்பட்ட பாராட்டுகளில் சில:
“[டுவாலுவான் மொழியில், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்] இந்த புத்தகத்தைக் குறித்து என் அரசாங்கமும் நானும் அதிக சந்தோஷப்படுகிறோம். டுவாலுவில் முக்கியமான ‘பொக்கிஷங்கள்’ இருக்கின்றன; அவற்றின் பட்டியலில் இந்த புதிய ‘பொக்கிஷத்தையும்’ சேர்த்துக்கொள்ளலாம். உங்களுடைய சேவையை, அதாவது இந்நாட்டிலுள்ள மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு நீங்கள் செய்திருக்கும் மிகச் சிறந்த சேவையை குறித்து அதிக சந்தோஷப்பட வேண்டும். கல்வி புகட்டும் புத்தகங்கள் பற்றிய டுவாலுவின் சரித்திரத்தில் இதுவும் பதிவாகும் என்பது என்னுடைய நம்பிக்கை.”—டாக்டர் டி. பாப்புவா, தென் பசிபிக்கிலுள்ள டுவாலு நாட்டு முன்னாள் பிரதம மந்திரி.
“தென் பசிபிக்கில் யெகோவாவின் சாட்சிகள் மிகவும் சுறுசுறுப்பாக பிரசுரிப்பு வேலையை செய்து வருகின்றனர். அதற்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். . . . பசிபிக் தீவுகளில் . . . தகவல் தொடர்பில் இருக்கும் பிரச்சினைகளின் மத்தியிலும் சாதிக்கப்படும் இந்த வேலை இன்னும் அதிக பாராட்டிற்குரியது என சொல்லலாம்.”—லின்டா க்ரௌல், தென் பசிபிக் பல்கலைக்கழகம், சுவா, பிஜி.
“இசோக்கோ மொழியிலுள்ள குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகம் அருமையாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கிறது! அந்த புத்தகத்திலுள்ள விஷயங்கள் முழுவதையும் நாங்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் மொழிபெயர்த்திருக்கும் இசோக்கோ மொழிபெயர்ப்பு குழுவிலுள்ள வாலண்டியர்களுக்கு மிக்க நன்றி.”—சி.ஓ.ஏ., நைஜீரியா.
“நான் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலுள்ள இந்த புதிய பைபிள் மொழிபெயர்ப்பிற்காக [செர்பியன் மொழியிலுள்ள புதிய உலக மொழிபெயர்ப்பு] நன்றி நன்றி நன்றி; அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. முன்பெல்லாம், முழு பைபிளையும் படிக்க எவ்வளவோ முயற்சித்திருக்கிறேன், ஆனால் அதிலுள்ள கடினமான வார்த்தைகளை என்னால் புரிந்துகொள்ள முடியாததால் பைபிளை மூடி வைத்து விடுவேன். ஆனால் இந்த மொழிபெயர்ப்பை வாசித்து எல்லாவற்றையும் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.”—ஜெ. ஏ. யூகோஸ்லாவியா.
“டிவ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் அருமையான, கருத்தார்ந்த, கட்டியெழுப்பும் பிரசுரங்களுக்கு மிக்க நன்றி. இப்படிப்பட்ட புத்தகங்களிலிருந்தும் சிற்றேடுகளிலிருந்தும் பெற்ற நன்மைகளையும் உற்சாகத்தையும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. இன்று இந்த பிரசுரங்கள் ஆயிரக்கணக்கானோரை எட்டியிருக்கின்றன.”—பி.டி.ஸ்., நைஜீரியா.
[படம்]
115 மொழிகளில் 3.6 கோடி பிரதிகள்
[பக்கம் 4, 5-ன் படங்கள்]
37 மொழிகளில் “புதிய உலக மொழிபெயர்ப்பு” 10 கோடிக்கும் அதிகமாக அச்சிடப்பட்டுள்ளது
[பக்கம் 7-ன் படங்கள்]
யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களை மொழிபெயர்க்கும் வேலையில் உலகம் முழுவதிலும் சுமார் 2,000 பேர் ஈடுபடுகின்றனர். (இடது, தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜூலு மொழிபெயர்ப்புக் குழு; கீழே, ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர்)
[பக்கம் 7-ன் படம்]
ஒவ்வொரு வருடமும் 100 கோடிக்கும் அதிகமான “காவற்கோபுரம்,” “விழித்தெழு!” பத்திரிகைகள் அச்சிடப்படுகின்றன
[பக்கம் 8-ன் படங்கள்]
உலகம் முழுவதும் எழுதப் படிக்க கற்றுக்கொடுக்கும் பள்ளிகள் யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படுகின்றன. (வலது, மெக்ஸிகோ; கீழே, புருண்டி; அட்டைப் படத்தில், கானா)