ஸோலோட்ஸ்க்வின்ட்லியை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா?
ஸோலோட்ஸ்க்வின்ட்லியை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா?
மெக்ஸிகோவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
ஸோலோஸ்க்வின்ட்லியை a சுருக்கமாக, ஸோலோவை நான் முதன்முறையாக தொட்டேன், அதிர்ச்சியடைந்தேன், காய்ச்சல் அடிப்பதைப் போல் அதன் உடல் கொதித்தது! மிக மிக மிருதுவான அதன் கறுத்த உடலில் மருந்துக்குக்கூட முடி கிடையாது! நாய்களுக்கான எக்ஸிபிஷனில் இந்த நாய் தன் எஜமானோடு ராஜநடைபோட்டு நடந்து வந்தது; அதற்கு கொடி போன்ற உடல், மேனியின் நிறமோ கறுப்பு, ஆனால் வாலின் நுனியில் மட்டும் ‘குஞ்சத்தைப்’ போன்ற வெள்ளை வெளேர் முடி. இந்த மாறுபாடுகளின் கதம்பத்தைப் பார்ப்பதற்கென்றே வந்த என்னைப் போன்ற ரசிகர்கள்!
மெக்ஸிக்க அமெரிக்கப் பகுதிகளில் ஸ்பானியர்கள் குடியேறுவதற்கு முன்பு அங்கே நாய்கள் செல்லப்பிராணிகளாக வீடுகளில் மதிப்போடு வளர்ந்து வந்தன. எஜமானர்கள் இறந்தபோது அவர்களுக்கு துணையாக இருக்கட்டுமே என்று இந்தச் செல்லப் பிராணிகளையும் புதைத்து ‘உடன்கட்டை’ ஏற்றிவிட்டனர். எனவே அந்த சமுதாயத்தில் ஸோலோக்களுக்கு தனி மரியாதைதான். அவற்றிற்கு நோய்தீர்க்கும் பண்புகளும் இருந்ததாக நம்பினர். வாதநோயால் வேதனைப்படுபவர்களுக்கு இந்த சூடான நாய் உதவியளிப்பதாக தோன்றியது; வேதனை தரும் பகுதிகளில் நெருக்கமாக இந்த நாயை அணைத்துக்கொள்வதன் மூலம் வலி குறைந்ததாக நினைத்தவர்கள் பலர். அது உண்மையோ இல்லையோ விறைக்கும் குளிர்கால இரவுகளில் உங்கள் பாதங்கள் அனலாக இருப்பதற்கு ஸோலோ உதவும் என்பது முற்றிலும் உண்மை!
இன்று செல்லப்பிராணியாக வீட்டில் வளர்ப்பதற்கு ஸோலோவே சிறந்தது என்பது அநேகருடைய முடிவு. இது பொமரேனியன் நாயைப்போல ‘பொம்மை’ போன்ற ஸைசிலும் இருக்கிறது, பெரிய ஸைசிலும் இருக்கிறது. மற்ற நாய்களைப் போலவே ஸோலோவுக்கும் நன்கு பயிற்சி அளிக்க முடியும். நாய் முடி சிலருக்கு ஒத்துக்கொள்ளாது, ஆனால் இதற்கு முடியே இல்லை என்பதால் வளர்ப்பவர்களுக்கு உபத்திரவம் குறைவு. நாய் உண்ணி பிரச்சினையும் கிடையாது. ஸோலோவைப் பராமரிப்பதும் சுலபம். அதனுடைய உடலை மிருதுவாக வைப்பதற்கு அவ்வப்போது சில கிரீம்களை அல்லது எண்ணெய்யை தேய்த்துவிட்டால் போதும். மீகல் ஆன்கில் மொரேனோ என்பவர் இவற்றை இனவிருத்தி செய்து விற்பதில் புகழ்பெற்றவர். இதை வளர்ப்பதில் இருக்கும் இன்னொரு அனுகூலத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ஸோலோவை “குளிப்பாட்டுவதற்கு ஒரே ஒரு நிமிடம் போதும், உடல் காய்வதற்கோ இரண்டு நிமிடங்கள்தான்.” ஸோலோவுக்கு நோய் தீர்க்கும் பண்புகள் இருப்பதாக சொல்லப்படுவதை பற்றியதென்ன? இன்றும்கூட வாத நோயால் வேதனைப்படுபவர்கள், வலியிருக்கும் பகுதியில் ஸோலோவை அணைத்துக்கொள்வதன் மூலம் நிவாரணம் பெற்றதாக சொல்கின்றனர். “சுடு தண்ணீர் பாட்டிலால்” ஒருவருக்கு ஒத்தடம் கொடுத்தால் எந்தளவிற்கு பிரயோஜனமாக இருக்குமோ அதே விளைவைத்தான் ஸோலோவும் அளிக்கிறது என்றார் மொரேனோ. b
இவற்றைக் காப்பாற்றுவதற்கு அநேகர் பாடுபட்டிருக்கின்றனர், ஏனெனில் கொஞ்சகாலத்திற்கு முன் இந்த நாய் வகை அழிவின் விளிம்பிற்கு வந்துவிட்டது. ஆனால் இன்றோ ஸோலோக்களை மெக்ஸிகோவில் மட்டுமல்ல, பெரு, அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் போன்றவற்றிலும் காண முடியும். அப்படியென்றால் நீங்கள் ஸோலோஸ்ட்க்வின்ட்லியை சந்திக்க விரும்புகிறீர்களா? சந்தித்தால் இப்படிப்பட்ட விநோதப் பிறவியை வாழ்க்கையில் மறக்கவே மாட்டீர்கள்.
(g01 1/08)
[அடிக்குறிப்புகள்]
a சோலோயிட்ஸ்குவின்ட்லி என்று உச்சரிக்கப்படுகிறது.
b ஸோலோ-வின் உடல் வெப்பம் மற்ற நாய்களுடைய உடல் வெப்பத்தைவிட அதிகம் அல்ல. அதன் உடலில் ரோமம் இல்லாததால் சூடாக இருப்பதாக தோன்றுகிறது.