நீண்ட வரலாறுடைய ஒரு வணிகம்
நீண்ட வரலாறுடைய ஒரு வணிகம்
அந்தப் பகுதியிலேயே பலமாக கட்டப்பட்டதும், வேண்டிய அத்தனை சாதனங்களை உடையதும் ஜானின் தச்சுப் பட்டறைதான். அதனால் அவருக்கு ஒரே பெருமிதம். ஆனால் ஒருநாள் இரவு திடீரென்று தீப்பிடித்துவிட்டது. ஒருசில மணிநேரத்திற்குள் அவருடைய அழகிய பட்டறை கருகி சாம்பலாகிவிட்டது.
ஜான் தன் பட்டறையை கட்டுவதற்காக ஒதுக்கிய தொகையில் கொஞ்சத்தை வைத்து தீக் காப்பீடு செய்துவிடலாம் என முதலில் யோசித்திருந்தார். என்றாலும், பின்னர், ‘நான் ரொம்ப பத்திரமா கவனிச்சுக்குவேன். ஒருவேளை தீப்பிடிக்கவே இல்லன்னா, காப்பீடு செய்றதுனால என் பணம்தானே நஷ்டமாகும்’ என்று காரணங்காட்டி விட்டுவிட்டார். ஆனால் திடீரென்று ஒருநாள் தீப்பிடித்துவிட்டது. ஜானின் பட்டறை காப்பீடு செய்யப்பட்டிருந்தால், அதை எளிதில் திரும்பக் கட்டியிருக்கலாம். காப்பீடு இல்லாததால் அவரால் கட்ட முடியவில்லை.
காப்பீடு என்றால் என்ன?
காப்பீடு என்பது ஒருவருடைய பணத்தை திரும்ப பெறத்தக்க முதலீடு என சொல்லிவிட முடியாது. அது சூதாட்டமும் அல்ல. சூதாடுகிறவர் இடர்ப்பாடுகளுக்கு அல்லது இழப்புக்கு ஆளாகிறார். ஆனால் காப்பீடு, இடர்ப்பாடுகளுக்கு எதிராக பாதுகாப்பை தருகிறது. இழப்பை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஒரு வழி காப்பீடு.
பண்டைய காலந்தொட்டே, சில சமுதாயங்களில் எல்லாராலும் ஆதரிக்கப்பட்ட பொதுநிதி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இழப்பை அனுபவிப்பவர்களுக்கு அதிலிருந்து உதவி அளிக்கப்படும். ‘பரதேசிக்காகவும் திக்கற்றவனுக்காகவும் விதவைக்காகவும்’ தங்களுடைய பலனில் ஒரு பகுதியை தவறாமல் கொடுக்கும்படி மோசே இஸ்ரவேலரிடம் சுமார் 3,500 வருடங்களுக்கு முன் கட்டளையிட்டார்.—உபாகமம் 14:28, 29.
காப்பீட்டின் ஆரம்பம்
பல்லாயிரம் ஆண்டுகளாக காப்பீடு இருந்துவருகிறது. மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கும் முற்பட்டதாக கருதப்படும் பாபிலோனிய சட்டங்களடங்கிய ஹமுராபியின் சட்டத்தொகுப்பிலும் ஒரு வகையான கடன் காப்பீடு குறிப்பிடப்பட்டிருந்தது. பண்டைய காலத்தில் தங்கள் வணிக பயணங்களுக்காக கப்பல் உடைமையாளர்கள் பண முதலீட்டாளர்களிடமிருந்து கடன் வாங்கினர். கப்பல் திரும்பி வரவில்லை என்றால், உடைமையாளர்கள் கடனை திருப்பி கொடுக்க வேண்டியதில்லை. அநேக கப்பல்கள் பத்திரமாக திரும்பி வந்ததால், அனைத்து கப்பல்களின் உடைமையாளர்கள் கொடுத்த வட்டியை வைத்து கடன் கொடுத்தவர்கள் அந்த இழப்பை ஈடுசெய்துகொள்ள முடிந்தது.
இதுபோன்ற கடல்சார்ந்த சூழமைவில்தான் உலகின் மிகப் பிரபலமான காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான லாயிட்ஸ் லண்டனில் உருவானது. 1688-ல் எட்வர்ட் லாயிட், லண்டனில் காப்பிக்கடை வைத்திருந்தார். அங்கு வியாபார விஷயமாக லண்டனிலுள்ள வணிகர்களும் வங்கிதாரரும் கூடுவது வழக்கம். கடலில் செல்கிறவர்களுக்கு காப்பீடு அளித்து நிதி வழங்குகிறவர்கள் அங்குதான் அதற்கான எழுத்து வேலைகளை செய்தார்கள். குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்தினால், இழப்பு நேரிடும்போது அதற்கு ஈடாக எவ்வளவு தொகையை
பெறுவார்கள் என்பது அவர்களுடைய பெயருக்குக் கீழ் எழுதி வைக்கப்படும். கடைசியாக, 1769-ல், லாயிட்ஸ் என்பது காப்பீடு வழங்கும் ஒரு குழுவாக ஆனது. இது வளர்ந்துவந்து காலப்போக்கில் கடல்சார்ந்த காப்பீடு வழங்கும் மிகப் பிரபல அமைப்பானது.இன்று காப்பீடு
இன்றும் மக்கள் காப்பீடை பெறும்போது இழப்பை பகிர்ந்துகொள்ளவே செய்கிறார்கள். நவீன காப்பீட்டு நிறுவனங்கள், கடந்த காலத்தில் இழப்புகள் எவ்வளவு அடிக்கடி ஏற்பட்டிருக்கின்றன என்ற புள்ளிவிவரங்களை ஆராய்ந்து பார்க்கின்றன. உதாரணமாக, பட்டறைகள் தீக்கிரையானதால் ஏற்பட்ட இழப்புகள் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு, வருங்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன இழப்புகள் ஏற்பட சாத்தியமிருக்கிறது என்பதை முன்கணிக்க முயலுகின்றன. அநேக வாடிக்கையாளர்கள் கட்டிய தொகையை பயன்படுத்தி காப்பீட்டு நிறுவனம், இழப்பு ஏற்பட்ட வாடிக்கையாளருக்கு ஈடு செய்கிறது.
உங்களுக்கு காப்பீடு தேவையா? தேவையென்றால், உங்கள் சூழ்நிலைக்கு எந்த வகையான காப்பீடு பொருத்தமாக இருக்கும்? உங்களுக்கு காப்பீடு இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும் சரி, வாழ்க்கையில் சந்திக்கும் இழப்புகளைச் சமாளிக்க முன்னெச்சரிக்கையான என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?
(g01 2/22)
[பக்கம் 3-ன் படம்]
உலகப் புகழ்பெற்ற ஒரு காப்பீட்டு அமைப்பு உருவானது காப்பிக்கடையில்
[படத்திற்கான நன்றி]
Courtesy of Lloyd’s of London