மாயமாக மறைந்த பிரிட்டன் சிட்டுக்குருவிகள்
மாயமாக மறைந்த பிரிட்டன் சிட்டுக்குருவிகள்
பிரிட்டனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
‘கிரீச் கிரீச்’ என்று கீதம்பாடி உல்லாசமாக அலைந்து திரியும் சிட்டுக்குருவி பிரிட்டனில் காலங்காலமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது நகர்ப்புறங்களிலிருந்து மறைந்துவருகிறது—அதுவும் திடீரென்று—இதற்கு காரணம் என்னவென்று யாருக்குமே தெரியாது. இந்தப் புதிரை முதன்முதலில் விஞ்ஞானப்பூர்வமாக விடுவிக்கும் ஆய்வுக் கட்டுரைக்கு £5,000 (ரூ. 3.5 லட்சம்) பரிசாக வழங்கப்படும் என லண்டனிலிருந்து வெளிவரும் இன்டிபென்டன்ட் என்ற செய்தித்தாள் அறிவித்திருக்கிறது. பறவைகள் பாதுகாப்பு ராயல் சொஸைட்டியும் பறவையியல் பிரிட்டிஷ் டிரஸ்டும் அந்த விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுக் கட்டுரையை பரிசீலனை செய்து தீர்ப்பு வழங்கும். இத்திட்டம் முழுமையாக நிறைவுபெற இரண்டு ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டணங்களிலும் நகரங்களிலும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையில் பயங்கர வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை சுற்றாய்வுகள் காட்டுகின்றன. சில இடங்களில் அவை அடியோடு மறைந்துவிட்டன. ஆனால், பாரிஸ், மாட்ரிட் போன்ற மற்ற ஐரோப்பிய நகரங்களில் இன்னும் ஏராளமான அளவில் இந்தச் சிட்டுக்குருவிகள் சிறகடித்து பறந்து திரிகின்றன. இந்தச் சிட்டுக்குருவிகள் ஆராய்ச்சியில் சர்வதேச நிபுணரான டாக்டர் டெனிஸ் சம்மர்ஸ்-ஸ்மித் இவ்வாறு சொல்கிறார்: ‘கடந்த 50 வருடங்களில் ஏற்பட்ட வனவிலங்கு புதிர்களில் இது மிகப் பெரிய புதிர்.’
கிராமப் புறங்களில் இந்தச் சிட்டுக்குருவிகளின் ஜனத்தொகையில் 65-சதவீத வீழ்ச்சிக்கு காரணம் தீவிர விவசாயமே என எண்ணப்படுகிறது. இதுபோல கிராமப் புறங்களில் மற்ற பறவை இனங்களிலும் பயங்கர சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நகர்ப்புறங்கள் 92 சதவீத சிட்டுக்குருவிகளை இழந்ததற்கு என்ன காரணம் என்பதற்கு இது விளக்கம் அளிப்பதில்லை. சிட்டுக்குருவிகள் பெருமளவில் மறைவது, ‘சிட்டுக்குருவிகளின் சுற்றுச்சூழலில்—ஒருவேளை நம்முடைய சுற்றுச்சூழலிலும்—ஏதோ பயங்கரமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதற்கு மறுக்க முடியாத அறிகுறி’ என்ற முடிவுக்கு வருகிறார் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் மைக்கேல் மெக்கேர்த்தி. என்ன தவறு ஏற்பட்டிருக்கிறது, அது எந்தளவுக்கு மோசமானது என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
(g01 2/08)